அவுஸ்ட்விட்ச் 75: ஒடுக்கப்பட்டோரில் இருந்து ஒடுக்குவோராக
வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. ஆந்தப் பக்கங்கள் அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம் தேசியவெறியாக மாறுகின்ற போது நிகழக்கூடிய ஆபத்துக்களையும் இனவெறி ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களையும் காட்டும் குறிகாட்டிகள் வரலாறெங்கும் உண்டு. அவற்றை இன்று நாம் நினைவுகூரும் போது அந்த இருண்ட பக்கங்களுக்கு இட்டுச் சென்ற காரணிகளையும் கவனமாய் மனதிருத்தல் வேண்டும். ஏnனினில் அதேபோன்ற பயங்கரங்கள் இனியும் நிகழாது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. இதை ஈழத்தமிழர்களை விட நன்கறிந்தவர் யாருமில்லை.
அவுஸ்ட்விட்ச் விடுவிக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு கடந்த வாரம் நினைவுகூரப்பட்டது. அவுஸ்ட்விட்ச் ஒரு குறியீடு. உலக வரலாற்றின் மிக முக்கியமான பல பக்கங்களின் திறவுகோல் இந்த அவுஸ்ட்விட்ச். உலக அரசியலின், தேசியவாத இனவெறியின், கம்பெனிகளின் இலாபவெறியின், மருத்துவ விபரீதங்களின் எனப் பல்பக்கங்களைத் வெளிச்சமிட்டுக்க காட்டுவது அவுஸ்ட்விட்ச்.
இத்தனையும் உரிய அவுஸ்ட்விட்ச் போலந்து நாட்டின் ஒரு அழகிய நகரம், தலைநகர் வார்சோவில் இருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 1939ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஜேர்மன் நாட்டின் தலைவர் அடல்ப் ஹிட்லர் போலந்தின் மீது படையெடுத்தார். இது இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாகவும் அமைந்தது. போலந்தின் பெரும்பகுதியைக் ஜேர்மனி கைப்பற்றியது. அதனுள் அவுஸ்விட்ச்சும் அடக்கம். முதலில் அங்கு ஒரு இராணுவ அரண் நிர்மாணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1940ம் ஆண்டு போலிஸ் நாட்டு அரசியல் கைதிகளை சிறை வைப்பதற்கான சிறைக்கூடம் தயாரானது. இதற்கு ஜேர்மனியில் குற்றம் புரிந்து தண்டனை பெற்றவர்கள் கொண்டு வரப்பட்டு சிறைக்கூடம் உருவாக்கப்பட்டது. இது ஒரு பெரும் சித்திரவதைக் கூடமாக உருப்பெற்றது.
1941ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போரின்போது கைதான போலிஸ் மற்றும் சோவியத் படைவீரார்கள் இங்கு விஷவாயு செலுத்தப்பட்ட அறைக்குள் இடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இது தொடக்கம் மட்டுமே. இதைத் தொடர்ந்த நான்கு ஆண்டுகளில் 1.3 மில்லியன் மக்கள் அவுஸ்ட்விட்ச்க்கு அனுப்பப்பட்டார்கள். அதில் 1.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதில் பெரும்பான்மையோர் விஷவாயு செலுத்தப்பட்ட அறைக்குள் இடப்பட்டு கொல்லப்பட்டார்கள். மிகுதிப்பேர் மருத்துவப் பரிசோதனைகளில் இறந்து போனார்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 960,000 பேர் யூதர்கள். ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்த யூதர்களில் பெரும்பான்மையோர் ரயில் வண்டிகளில் அவுஸ்ட்விட்ச்க்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களை கொண்டுவருவதற்கான அவுஸ்ட்விட்ச் சிறைக்கூடம் வரை ரயில் பாதைகள் இடப்பட்டன.
இந்தக் கொடுமைகளை சோவியத் ரஷ்யாவின் செம்படை 1945ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி முடிவுக்குக் கொண்டு வந்தது. செம்படை ஜேர்மனியைத் தோற்கடித்து அவுஸ்ட்விட்ச்சை விடுவித்தது. அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களின் நெஞ்சை உறைய வைத்தது. பட்டினியால் மெலிந்த உடல்கள், எலும்புக்கூடுகள், 370,000 ஆண்களின் ஆடைகள், 837,000 பெண்களின் ஆடைகள், 7.7 தொன் அளவிலான மனிதத் தலைமயிர் ஆகியவற்றைக் கண்டெடுத்தனர். 7,000 பேர் மீட்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களுக்கு செம்படையின் மருத்துவப் பிரிவு மருத்துவர்களும் தாதிகளும் மருத்துவ உதவிகளையும் சிகிச்சைகளையும் வழங்கினார்கள்.
இதேபோல செம்படை ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்டதன் ஊடு பல சித்திரவதைக் கொலைக் கூடங்களையும் விடுவித்தது. பல்லாயிரக்கணக்கான யூதர்கள் மீட்கப்பட்டார்கள். இரண்டாம் உலகப் போரில் இந்தச் சித்திரவதைக் கூடங்களை விடுவித்ததன் மூலம் செம்படை ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இன்றும் அவுஸ்ட்விட்ச் பற்றிப் பேசுபவர்கள் அதை விடுவித்தது சோவியத் யூனியனின் செம்படை என்பதைச் சொல்லாமல் தவிர்கிறார்கள். இதன் பின்னால் உள்ள அரசியல் பெரிது. போலந்தில் இவ்வாறாதொரு பெரிய சித்திரவதைக் கூடம் அமைக்கப்படுகிறது என்ற தகவல் அமெரிக்க பிரித்தானிய பிரெஞ்சுக் கூட்டுப்படைகளுக்கு தெரிந்திருந்தது. அவற்றைக் குண்டு வீசி அழிக்கும்படியும் கேட்கப்பட்டது. ஆனால் இக்கோரிக்கை செவிடன் காதில் விழுந்த கதையாகியது. இந்த சிறைக்கூடங்கள் பற்றி அறிய ஆவல் உள்ளவர்கள் பேராசிரியர் Wachsmann Nikolaus எழுதிய KL: A History of the Nazi Concentration Camps நூலை வாசிக்கலாம்.
மருத்துவ பரிசோதனைகள் என்ற விஷப்பரீட்சை
அவுஸ்ட்விட்ச்சில் தெரியப்பட்ட சிறைவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறைவாசிகள் சம்மதம் தெரிவிக்காதபோதும் அவர்களுக்கு ஊசிகளும் பிற மருந்துகளும் கொடுக்கப்பட்டன. எடுவார்ட் வேர்ட்ஸ் (நுனரயசன றுசைவாள) என்ற வைத்தியரின் தலைமையில் 20 நாசி வைத்தியர்கள் இங்கு கடமையாற்றினார்கள். இதில் புகழ்பெற்றவர் ஜோசப் மெங்கலே (துழளநக ஆநபெநடந), மரணத்தின் தேவதை என அறியப்பட்ட இவர் மிக மோசமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டவர். மானிடவியலிலும் மருத்துவத்திலும் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனது ஆய்வுகளுக்கு சிறைவாசிகளைப் பயன்படுத்தினார். சிறைவாசிகளின் உடல்நலம், உளநளம் குறித்த எதுவித கவனத்தையும் அவர் செலுத்தவில்லை. மாறாக அவர்கள் சிறைவாசிகளைப் பொருட்கள் போல் பாவித்தார். இதில் வருத்தமான செய்தி யாதெனில் இவர் இறுதிவரைக் கைதுசெய்யப்படவில்லை. 1979ம் ஆண்டு பிரேசிலில் இவர் இயற்கை மரணம் அடையும்வரை இவரை ஜேர்மனியாலோ அல்லது உலகின் தலையாய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான இஸ்ரேலின் மொசாட்டாலோ கண்டு பிடிக்க முடியவில்லை.
இதில் எழுகின்ற கேள்வி யாதெனில் இத்தகைய கொடிய மருத்துவப் பரிசோதனைகளை மெங்கலே ஏன் செய்தார் என்பதே. அதேபோல் போரின் பின்னர் 34 ஆண்டுகள் அவர் வாழ்ந்தார். இது எப்படி முடிந்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று ஐபு குயசடிநn-டீயலநச. இரண்டாம் உலகப் போர் காலத்தில் உலகின் மிகப்பெரிய வேதியல் மற்றும் மருந்தாக்கக் கம்பெனியாக இது திகழ்ந்தது. இந்த நிறுவனத்தின் வேலைத்தளம் அவுஸ்ட்விட்ச் சிறைக்கூடங்களுக்கு அண்மையில் நிறுவப்பட்டது. சிறைவாசிகள் இந்த வேலைத்தளத்தில் கடமை புரிந்தார்கள். அவுஸ்ட்விட்ச்சில் பயன்படுத்தப்பட்ட விஷவாயுவை வழங்கியதும் இந்த நிறுவனம்தான். அதனிலும் மேலாக மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் மருந்துகளை சோதித்துப் பார்ப்பதற்காகவும் அவுஸ்ட்விட்ச் சிறைவாசிகள் பயன்படுத்தப்பட்டனர். குறிப்பாக டைபோயிட், காசநோய், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கான மருந்துகள் இங்கு சோதித்துப் பார்க்கப்பட்டன. அதேவேளை இந்த நிறுவனத்திற்கு வேண்டிய ஏராளமான மருத்துவ பரிசோதனைகளும் நிறுவனத்தின் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அனுமதியை வழங்கி அதை மேற்பார்வை பார்த்தவர் மெங்கலே.
இந்த விஷப்பரீட்சைகளால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் உடல் நலக் குறைவுக்கு மனநலம் சார் சிக்கல்களுக்கும் உள்ளானார்கள். இதற்குப் பொறுப்பான இந்த நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு மிகக்குறைந்தளவான சிறைத்தண்டனையே வழங்கப்பட்டது. சிறைவாசிகளை ‘அடிமைகளாக வேலைக்கு அமர்த்திய’ குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் மருத்துவப் பரிசோதனைகள் செய்தமைக்கோ அல்லது Zyklon B என்ற விஷவாயுவை விநியோகித்தமையோ குற்றங்களாகக் காணப்படவில்லை.
75 ஆண்டுகளின் பின்
இன்று அவுஸ்ட்விட்ச் நினைவுகூரப்படும் போது அத்தோடு சேர்ந்து நாசிசம், பாசிசம் ஆகியவற்றின் ஆபத்துக்களும் சேர்த்தே நினைவுகூரப்பட வேண்டும். யூதர்களே பிரதான இலக்காக இருந்தார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக இன்று யூதர்கள் உலகில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றில்லை. நினைவு நிகழ்வு அண்மையில் ஜெரூசலத்தில் நடந்தது. இதில் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகு ‘மனிதகுலத்திற்கு ஈரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று பேசினார். இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் இன்று உலகில் அமெரிக்காவுக்கு அடுத்தபடி அடாவடித்தனமாக இயங்கும் அரசாக இஸ்ரேலே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனமாக இருந்து இன்று ஏனைய இனங்களை ஒடுக்குகின்ற இனமாக யூதர்கள் மாறியிருக்கிறார்கள். இது ஒரு மோசமான உதாரணம். இன்று பலஸ்தீனப் பிரச்சனை இஸ்ரேலியர்களின் நிம்மதியைக் கெடுத்துள்ளது. பலஸ்தீனியர்களுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்காமல் இஸ்ரேல் என்றும் நிம்மதியாக இருக்க முடியாது. பாதுகாப்பின் பெயரால் ஒரு இராணுவமையப் பாதுகாப்பு அரசாக இஸ்ரேல் மாறியுள்ளது. இதை யூதத் தேசியவாதமும் தீவிரவாதமும் ஆதரிக்கின்றன.
யூதர்கட்கு எதிராகச் சென்ற நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் செய்யப்பட்ட கொடுமையைக் காரணங் காட்டி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்குகிற கருத்துக்குத் திரட்டப்பட்ட ஆதரவு, ஹிற்லரின் தலைமையின் கீழ் ஜேர்மன் தேசியவாதமும் இனவெறியும் நாற்ஸியம் என்கிற ஃபாஸிஸமாகி வெறித்தனமான யூத இன ஒழிப்பு நடவடிக்கைகளானதன் விளைவாக இரண்டாம் மதப் போரின் பின்பு இஸ்ரேலின் தோற்றத்துக்கு வழி செய்தது. அரபு மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த மண்ணில், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னால் இருந்து புலம்பெயர்ந்த யூதர்களின் வாரிசுகள் வந்து குடியேறக்கூடிய ஒரு இஸ்ரேலின் உருவாக்கம் வன்முறையால் அப்பாவி அரபு மக்களை விரட்டியும் வஞ்சகமாயும் மிரட்டல்களாலும் அவர்களது மண்ணை அடிமாட்டு விலைக்கு வாங்கியும் நடந்த நிலப்பறிப்பினால் இயலுமாக்கப்பட்டது. அந்த வன்முறைக் கலாசாரமே இஸ்ரேலிய அரசின் பிரகடனப்படுத்தப்படாத கொள்கையாகத் தொடர்ந்து விருத்தி பெற்றுள்ளது.
இஸ்ரேல் சமூகம் குறித்த பெறுமதியாக கண்ணோட்டமொன்றை மைக்கல் வார்ஷ்சாவ்ஸ்கி என்ற இஸ்ரேலியர் தனது ‘திறந்த கல்லறையை நோக்கி’ என்று நூலில் தருகிறார். ஆதில் அவர் ‘இஸ்ரேலிய அரசு நடத்துகிற கொடுமைகட்கு எதிரான குரல்கள் எப்போதுமே இஸ்ரேலுக்குள்ளிருந்து எழுந்து வந்துள்ளன.எனினும், சரிக்கும், பிழைக்கும், நியாயத்திற்கும், அநியாயத்திற்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமூகமாக இஸ்ரேல் சீரழிந்து வந்துள்ளது’ என்கிறார். யூதர்களை ஈழத்தமிழர்களுடன் ஒப்பிடும் அபத்தத்தைச் செய்பவர்கள் இந்த நூலைத் தேடி வாசிப்பது பயனுள்ளது.
இன்று அவுஸ்ட்விட்ச் யூதர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட சமூகம் எவ்வாறு மனிதாபிமான அடிப்படைகள், அறங்கள் அற்ற சமூகமாக இஸ்ரேலிய சமூகம் மாறியுள்ளது என்பதையும் காட்டியுள்ளது. அதனிலும் மேலாக ஃபாசிச அபாயத்தையும் உணர்த்தி நிற்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஃபாசிசம் போலன்றி, நவீன ஃபாசிசம் தனது வேலைத்திட்டத்தை அதிகாரத்திலுள்ள கட்சியாகவும் கூட்டரசாங்கத்திற் பங்காளியாகவும் பாராளுமன்றத்துள்ளும் வெளியிலும் இயங்கும் வலுவான அழுத்தக் குழுவாகவும் செயற்படுத்துகிறது. இதை விளங்குவதும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் காலத்தின் தேவையாகிறது.