ஆசியாவிற்கான ஆதிக்கப் போட்டியும் இலங்கையும்
அறிமுகம்
இன்றைய உலக ஒழுங்கு முன்னறிந்திராத பாரிய மாற்றங்களைக் காண்கிறது. 2008இல் தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் வலுவான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அமெரிக்க‒ ஐரோப்பிய மையப் பொருளாதாரங்களை அவை மீளவியலா இடருக்கு உட்படுத்தியுள்ளன. அதன் விளைவாகச் சர்வதேச நிதி மூலதனம் புதிய களங்களைத் தேடுகிறது. எனவே, வேகமாக முன்னேறும் பொரு ளாதாரங்களைக் கொண்ட ஆசியா அரசியலிலும்; பொருளாதாரத்திலும் கவனிப்புக்காளாகியுள்ளது. பொருளாதார வல்லரசாகச் சீனாவின் எழுச்சியும் ஆசியாவின் இயற்கை வளங்களும் மலிவான மனித உழைப்பும் வளருகின்ற மத்திய தர வர்க்கமும் பொருளாதார நோக்கில் ஆசியாவை பெரியதொரு சந்தையாயும், அரசியல் நோக்கில் ஆதிக்கத்துக்குட்பட வேண்டிய பகுதியாயும் மாற்றியுள்ளன.
தவிர்க்கவியலாமல், இலங்கையின் புவிசார் அமைவிடம் ஆசியா மீது அதிகாரத்தை நிறுவுவதில் முக்கியமானது. நெடுங்காலமாக இந்தியா வுக்கும் அமெரிக்காவுக்கும் திருகோணமலைத் துறைமுகத்தின் மீது ஆவல் உள்ளமையை அறிவோம். அடுத்து அம்பாந்தோட்டையில் சீன உதவியோடு அமைந்த துறைமுகம் இலங்கையில் அமெரிக்க, இந்திய அக்கறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. இந்தியப் பிரதமரின் இலங்கை வருகையும் இலங்கைப் பிரதமரின் தொடரான அமெரிக்க, இந்திய, சீனப் பயணங்களும் சீனாவில் நடந்த சர்வதேச ஒத்துழைப் புக்கான ‘ஒரு வார் ஒரு பாதை’ (One Belt One Road) மாநாட்டில் இலங்கை பங்கேற்றமையும் இலங்கையை மையப்படுத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகளாம். இப் பின்ணணியில், ஆசியாவில் அதிகாரப் போட்டியில் இலங்கையின் இடம் இக் கட்டுரையிற் பேசப்படுகிறது.
வங்காள விரிகுடா எனும் புதிய களம்
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆசியா மீதான ஆதிக்க ஆவல் வலுத்துள்ளது. பொருளாதார வலிமையுடையதும் இளமையான துடிப்புள்ள உழைப்புச்சக்தியைக் கொண்டதுமான ஒரு பிராந்தியத்தின் வளர்ச்சி இயல்பானது. வளர்ந்த மேலை நாடுகட்கு இணையாகப் பொருளாதாரத்திலும் அரசியற் பங்குபற்றவிலும் ஆசிய நாடுகளின் முன் நகர்வால் ஆசியா மீதான கவனக்குவிப்பு வலுத்தது. இப்போது வங்காள விரிகுடா ஆசியாவின் முக்கியமான கேந்திரமாகி வருகிறது.
இலங்கை, இந்தியா, பங்ளாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளின் கரையோரங்களைக் கொண்டதும் உலகின் அதிபெரிய வளைகுடாவும் ஆன வங்காள விரிகுடா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகியனவுடன் கடல்வழித் தொடர்புடையது. ஆசியாவின் வர்த்தக, கேந்திர முக்கியமுள்ள பல முக்கிய துறைமுகங்கள் இவ் வளைகுடாவை அண்டியுள்ளன. இவை ஆசியாவின் முக்கியமான கடல் யை மையமாகக் கொண்ட புதியதொரு கூட்டிணைவுக்கும், அதே வேளை, இவ் வளைகுடாவில் ஆதிக்கத்துக்கான போட்டிக்கும் வழி செய்துள்ளன. பொருளாதார வளமிக்க சனத்தொகையைக் கொண்ட நாடுகளை நேரடியாயும் மறைமுகமாயும் இணைக்கும் ஒரு பகுதி பலர் கண்களையும் உறுத்துகிறது. யப்பான், அமெரிக்கா, சீனா ஆகியன இப் பகுதியிற் செல்வாக்கை விழைகின்றன.
ஆசியாவில் முன்னெடுக்கப்படும் சில முயற்சிகளின் பின்னணியில் வங்காள விரிகுடா என்ற களத்தை நோக்கலாம். 2013ம் ஆண்டு நடுவில், அமெரிக்கா ஆசியாவுக்கான தனது புதிய திட்டத்தை முன் வைத்தது. பொருளாதார, இராணுவ நோக்குகளில் ஆசியாவின் மீது முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அமெரிக்காவின் கவனம் செல்லும் வகையில் ஒபாமாவின் புதிய ‘ஆசியாவிற்கான திட்டம்” அமைந்தது. குறிப்பாக, ஆசிய நாடுகளுடன் உறவுகளைப் புதுப்பித்தல், பழைய உறவுகளை வலுப்படுத்தல், புதிய உறவுகளை உண்டாக்கல் என்பவற்றை முக்கிய அம்சங்களாகக் கொண்ட இத் திட்டம் ‘ஆசியாவை நோக்கிய மீள்சமநிலையாக்கம்” (rebalancing towards Asia) எனப்பட்டது. அமெரிக்காவுக்கு ஆசிய நாடுகள், குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகள், முக்கியமானவை. அவை, பொருளாதாரம் விரைவாக முன்னேறும் நாடுகளாயும் பெரும் எதிர்காலச் சந்தை வாய்ப்புகளையும் இயற்கை வளங்களையும் கொண்டவையாயும் உள்ளன. இப் பிராந்தியத்தில் வளரும் சீனச் செல்வாக்கிற்குத் தடையாயும் இராணுவ நோக்கில் அமெரிக்க நலன்கட்குச் சாதகமாயும் அமையக்கூடிய நாடுகளாகத் தென்கிழக்காசிய நாடுகளை அமெரிக்கா காண்கிறது.
அமெரிக்க அயலுறவுக் கொள்கையில், ஆசியாவுடன் உறவை மீள்சமநிலையாக்கம் என்பது, அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, இராணுவ, இராஜதந்திர நிலைகளில் அமெரிக்கக் கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் பேணும் உபாயமாகும். அவ் வகையில், இம் மீள் சமநிலையாக்கம், பரஸ்பர உறவுள்ள இரு விடயங்களை இணைக் கிறது. ஒன்று, புவியியல்சார் (geographical) மீள்சமநிலையாக்கம்;. மற்றது ஆற்றல்சார் (capacity) மீள்சமநிலையாக்கம்;. முதலாவதன் அடிப்படையில் பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், வியற்னாம் ஆகிய நாடுகளில் கட்டற்ற அமெரிக்க இராணுவ இருபபிற்கும் இராணுவத் தளங்களை நிறுவுதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆற்றல்சார் மீள்சமநிலை யாக்கத்தைப் பொறுத்தவரை, இப்போது மிகையான அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளன. அங்கிருந்து வெளியேறும் படைகள், குறிப்பாக கடற்படையின் 60மூ, ஏனைய தென்கிழக்காசிய நாடுகளின் தளங்களில் தங்களை மீளநிறுவும். அதை விடச் ~சீன மிரட்டலுக்குள்ளாகும்’ நாடுகளின் பாதுகாவலானத் தன்னைக் காட்ட அமெரிக்க முனைகிறது. உண்மையில், அது ஆசியப் பிராந்தியத்தில் தனது இருப்புக்கு ஒரு சாட்டாகச் சீன மிரட்டலைப் பாவிக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளாக அமைதியாக மோதல்களற்றிருந்த தென்கிழக்காசியா, இன்று, நாடுகட்கிடையே கடல், நில எல்லைத் தகராறுகள் முன்னிலை பெற்று, ஆயுதக் கொள்வனவுப் போட்டி மிகும் பிராந்தியமாகியுள்ளது. ஆசியாவிற்கான புதிய திட்டம் செலவுமிக்கது. அமெரிக்கா எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடருமிடத்து இத்தகைய திட்டமொன்றைத் தக்கவைத்தல் கடினம். எனவே அமெரிக்கா தென்கிழக்காசியப் பொருளாரத்திற் கண்வைக்கிறது. அது போதாது. அதற்குப் புதிய சந்தைகள் தேவை. அவ் வகையில் வங்காள விரிகுடா முக்கியமானது. ஒருபுறம் சீனாவின் பிராந்திய விரிவாக்கத்தை எதிர்க்கவும் மறுபுறம் தென்னாசியாவில் வலுவாகக் காலூன்றவும் வங்காள விரிகுடா அமெரிக்காவுக்குப் பல வழிகளிற் பயனுள்ள களமாகிறது.
மேற்குலகச் சந்தையை மையப்படுத்திய யப்பானியப்; பொருளாதாரம் மேற்குலகப் பொருளாதாரத் தேக்கத்தாற் புதிய சந்தைகளைத் தேடுங் கட்டாயத்திலுள்ளது. எனவே யப்பானின் கவனம் வங்காள விரி குடாவை நோக்கித் திரும்பியுள்ளது. அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய கையாளாக ஆசியாவில் செயற்படக்கூடியது என்பதாலும் சீனாவை வெளிப்படையாக எதிர்க்கக்கூடிய சக்தி என்பதாலும் ஆசியாவின் விருத்தியடைந்த ஓரே நாடு என்பதாலும் யப்பான் தன்னை பிராந்திய சக்தியாக நிலைநிறுத்த முனைகிறது. 2008ம் ஆண்டு முதல் 2016 வரை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த போர்க் கப்பல்களில் யப்பானுடையவையே அதிகம். யப்பான் இப் பிராந்தியத்தில் ஆதிக்கப் போட்டியில் இராணுவ முன்னிலையை விழைவதற்கு இது ஒரு சான்று.
2013இல் சீனா முன்மொழிந்த ‘பட்டுப் பாதைப் பொருளியல் வார்’ (Silk Road Economic Belt), ‘21ம் நூற்றாண்டுக்கான கடல்வழிப் பட்டுப் பாதை’ ஆகிய இரண்டு திட்டங்களையும் உள்ளடக்கிய ‘ஒரு வார் ஒரு பாதைத்’ (One Belt One Road) திட்டத்தை ஆசியாவிற்கான சீனத் திட்டமாகக் கருதுவர். அது, பண்டைய பட்டுப் பாதை இணைத்த நாடுகளையும் ஏனைய ஆசிய நாடுகளையும் ஐரோப்பா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் தரை வழியாயும் கடல் வழியாயும் இணைக்கும் திட்டமாகும்.
ஆபிரிக்கக் கரையோரம் முதல் மியான்மார் வரையான பகுதிகளின் நாடுகளிற் சீனா துறைமுக அபிவிருத்திக்கு உதவியுள்ளது. சீனாவுக்கு நோக்கங்கள் உள்ளன. சீன ஏற்றுமதிப் பொருளாதார வளர்ச்சியால் எண்ணெய் தொட்டுப் பல்வேறு மூல வளங்களின் இறக்குமதிக்குத் தேவை ஏற்பட்டது. அமெரிக்கச் சுற்றி வளைப்பு முயற்சிகள் சீனாவைச் சூழப் பல இடங்களிலும் வலுப்படுகின்றன. இதுவரை தனது பொருளாதாரச் செல்வாக்கிலேயே முக்கிய கவனங்காட்டிய சீனா, இந்துப் பெருங்கடற் பகுதியில் அமெரிக்கா தனது கடல்வழிப் பாதை எதையும் மறிக்க முற்பட்டாற் தனது கப்பல்கட்குத் துறைமுகங்களும் கடல்வழிகளும், வேண்டின், பண்டங்களைக் கொண்டுசெல்ல மாற்றுத் தரை வழிகளும் தேவை எனும் நோக்கிலேயே, இப் பிராந்தியத்திற் சில துறைமுகங்களை விருத்தி செய்ய உதவுதல் மூலம் தன் கப்பல்கட்குத் துறைமுக ஒரு உத்தரவாதம் பெறச் சீனா முயலுகிறது.
விருத்திபெறும் எத் துறைமுகந் தொடர்பாயும் உரிய நாட்டை வற்புறுத்தும் உடன்படிக்கை எதுவும் இல்லாததோடு சீனக் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தும் நோக்கத்துக்கு ஒரு சான்றும் இல்லை. மறு புறம் இந்திய, அமெரிக்க மேலாதிக்கங்கள் தமது இராணுவச் செயற்பாடுகள் மூலமும் பிற குறுக்கீடுகளின் மூலமும் சீனாவுடன் உறவுடைய நாடுகளைத் தமது ஆதிக்க மண்டலங்களுட் கொண்டுவர முற்படுகையிற் சீனாவும் தனது தேசிய நலன்களின் நோக்கில் அங்கு இழுபடுகிறது. இந் நிலையிற் சீனாவின் 21ம் நூற்றாண்டின் கடல்வழிப் பட்டுப் பாதையில் இணையும் பகுதியாயும் சீனக் கவனிப்புக்குட்பட்ட முக்கிய துறைமுகங்கள் சிலதையுங் கொண்ட வங்காள விரிகுடா, வணிகப் பாதைகள் மூலம் பொருளாதாரங்களை இணைக்கும் 21ம் நூற்றாண்டுப் பட்டுப் பாதை எனும் சீனக் கனவின் பகுதியாகவுள்ளது.
வல்லரசுக் கனவை நீண்டகாலமாக தன்னுட் பொதித்திருந்த இந்தியா தனது ஆதிக்கத்திலுள்ளஈ தான் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பகுதியாக வங்காள விரிகுடாவைக் கருதுகிறது. எனவே புதியதொரு கூட்டணியின் பகுதியாக வங்காள விரிகுடா நாடுகளைப் பாவிக்க முனைகிறது. கடந்தாண்டு சார்க் மாநாடு நடைபெறத் தவறியமை சார்க் அமைப்பு அதன் மரணப்படுக்கையில் இருப்பதை உறுதிப் படுத்தியதால் பாகிஸ்தானை விலக்கிய ஒரு கூட்டமைப்பை நிறுவி அவ்வழி தன் பிராந்திய முதன்மையை நிறுவ இந்தியா வேண்டுகிறது.
இதைக் கருதி, 1997ம் ஆண்டு உருவான பிம்ஸ்டெக் (BIMSTEC – Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்புக்குப் புத்துயிரூட்ட இந்தியா முனைகிறது. 1997ம் ஆண்டு, தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வங்காள விரிகுடா நாடுகளான இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ், மியன்மார், தாய்லாந்து மற்றும் தரை சூழ்ந்த நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இணைந்து பல்வேறு பொருளாதார, தொழிநுட்பத் துறைகளில் ஒத்துழைத்தற்கான முயற்சியான பிம்ஸ்டெக் உருவானது. இருபது ஆண்டுகளாக இயங்காத இவ்வமைப்பை இந்தியா கடந்தாண்டு உயிர்ப்பித்தது. கடந்தாண்டு இந்தியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டோடொட்டி பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் கூட்டமும் இடம்பெற்றது. இந்தியாவின் பிராந்திய ஆதிக்க முனைப்பாகஇந்தியப் பிரதமர் இதை வெளிப்படையாக அறிவித்தார். அதற்கு இலங்கையின் ஆதரவும் யப்பானும் அமெரிக்காவும் காட்டும் ஆர்வமும்; பிம்ஸ்டெக்கை ஒரு வகையில் சார்க்கிற்கு மாற்றான அமைப்பாக நிலைமாற்றியுள்ளன.
மேற்சொன்னவை வங்காள விரிகுடா எவ்வாறு ஆசியாவின் பிரதான களமாகிறது என உணர்த்துவன. இன்று ஆசியப் பொருளாதார விருத்தியைத் துரிதப்படுத்தும் இந்தியாவும் மியன்மாரும் உழைப்புச் சக்தியின் சராசரி வயதாக 23ஐக் கொண்ட பிரகாசமான பொருளாதா ரத்தையுடைய பங்ளாதேஷ{ம் சூழும் பிராந்தியமும் கிழக்காசியப் பொருளாதாரங்களை மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகியவற்றுடன் இணைக்கும் வர்த்தகப் போக்குவரத்து மையமுமான வங்காள விரிகுடாவின் முக்கியம் பெரிது.
இந்துப் பெருங்கடல்pல் ஓஙகும் இந்திய‒சீன செல்வாக்குப் போட்டியில் சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை கேந்திர முக்கியம் வாய்ந்தது. இதில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகமுஞ்; சேரும். எனவே சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றைத் விலக்கிய ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கல் மூலம் தன் ஆதிக்கத்தைத் தக்கவைக்க இந்தியா விழைகிறது. அதிற் பகுதியாக பிம்ஸ்டெக்கை இந்தியா பாவிக்கிறது. அதில் இடம்பெற விரும்பும் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தை மீண்டும் பூகோள ஆதிக்கப் போட்டியின் சதுரங்கமேடையில் அமர்த்த முயலுகிறது.
சீனாவின் ‘ஒரு வார் ஒரு பாதை’
அண்மையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற சர்வதேச ஒத்துழைப்புக்கான ‘ஒரு வார் ஒரு பாதை’ (One Belt One Road) மாநாடு உலகளாவிய அரசியல் அரங்கில் முக்கியமானது. மாறும் உலக அரசியல் அரங்கில் சீனாவின் புதிய வகிபாகத்தைக் கோடிகாட்டும் நிகழ்வாயும் எவர் வேண்டினும் வேண்டாவிடினும் திட்டமிட்டதை முன்னகர்த்துவதிற் தனது உறுதியைச் சீனா உலகுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வாயும் அது அமைந்தது. ஆசியாவையும் ஆபிரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் புதிய பட்டுப் பாதையை மையமாகக் கொண்டு மாநாட்டின் தொனிப்பொருளும் பேசுபொருட்களும் திட்டமிடப்பட்டன.
இம் மாநாடு இரண்டு காரணங்கட்காக முக்கியம் பெறுகிறது. ஓன்று, திறந்த சந்தையினதும் சுதந்திர வர்த்தகத்தினதும் பிதாமகனாக அரை நூற்றாண்டு காலமாகத் திகழ்ந்த அமெரிக்கா மெதுமெதுவாகப் பின்வாங்கித் தனித்திருத்தலையும் வர்த்தகப் பாதுகாப்பையும் நாடுகை யில் சுதந்திர வர்த்தகத்தின் புதிய மையமாயும் திறந்த சந்தையை முன்னோக்கித் உந்தும் சக்தியாயும் சீனா மாறுகிறதா? அவ் விருப்பு சீனாவிடம் உள்ளதா என்பதும் ‘ஒரு வார் ஒரு பாதை’ கூட்டில் இணைந்த நாடுகள் சீனாவுக்கு அவ் வாய்ப்பை வழங்க ஆயத்தமாக உள்ளனவா என்பதும் முக்கியமான வினாக்கள்.
மற்றது, ‘ஒரு வார் ஒரு பாதை’ திட்டத்தை முன்மொழிந்து மூன்றரை ஆண்டுகள் கடந்து திட்டம் எக் கட்டத்தில் உள்ளது, அதன் நிகழ் நிலை என்ன, அதிற் தொடர்புள்ள நாடுகளிடை திட்டம் பற்றிய கருத் தென்ன, திட்டத்தின் எதிர்காலமென்ன ஆதிய வினாக்கட்கு விடை தேடவும் திட்டத்தை மீளாயவும் மாநாடு வாய்ப்பு வழங்கியது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் செப்டெம்பர் 2013இல் பட்டுப் பாதைப் பொருளாதார வாரையும், அக்டோபர் 2013இல் பட்டுக் கடற் பாதையும் அறிவித்தார். அதை அறிவித்தபோது சீனா முன்னிராதளவுக்கு உலகளாவிய அலுவல்களிற் செல்வாக்கு செலுத்த எதிர்பார்க்கிறது என விளங்கியது. உலகின் பிரதான பொருளாதார வல்லரசாக சீனா முன்னேறிய நிலையிலும் ஜனாதிபதி ஷி ஜின்பிங்இற்கு முந்திய தலைவர் எவரும் இத்தகைய பெருந் திட்டமெதையும் முன்மொழிய வில்லை. இத்திட்ட முன்மொழிவு பலவகைகளில் புதிய திசையில் செல்லும் சீன அயலுறவுக் கொள்கையைக் கோடிகாட்டியது.
குறிப்பாக உலகளாவிய அரசியல் அரங்கில் தொடர்ந்து ஒதுங்கி நின்ற சீனா, பொருளாதார நலன்களை மட்டுமே மையப்படுத்திய― பல சந்தர்ப்பங்களில் அரசியல் நீக்கிய ―அயலுறவுக் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தி வந்தது. ஆனால் ஆழமடைந்த உலகப் பொருளாதார நெருக்கடியும் பொருளாதாரத்தின் இயங்கு சக்தியாகச் சீனாவின் தவிர்க்கவியலா அரசியற் பங்கும் அதன் அயலு றவுக் கொள்கையின் திசைவழியில் முக்கிய தாக்கஞ் செலுத்தின. அதன் விளைவாக மாறிய சீன அயலுறவுக் கொள்கையின் பகுதியாக ‘ஒரு வார் ஒரு பாதை’ திட்டத்தை நோக்கலாம்.
தொன்மையான பட்டுப் பாதையில் மத்திய ஆசியாவிலும் மேற்காசியா விலும் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் அமைந்த இடங்கள் வாரில் இடம்பெறுகின்றன. உட்கட்டமைப்பை மேம்படுத்தல், பண்பாட் டுப் பரிமாற்றங்களை அதிகரித்தல், வணிகத்தை விரிவாக்கல் ஆகிய வற்றின் வழி இப் பகுதியை ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலமாக மாற்றலை இத் திட்டம் முன்மொழிகிறது. தொன்மையான பட்டுப் பாதையில் அமைந்த பகுதிகட்கு மேலாகத் தென்னாசியாவும் தென்கிழக்காசியாவும் வாரின் விரிவாக்கமாக உள்ளடங்குகின்றன.
21ம் நூற்றாண்டுக் கடல்வழிப் பட்டுப் பாதை என்பது தரைவழிப் பட்டுப் பாதை திட்டத்தோடு தொடர்புடைய முன்னெடுப்பாகும். தொடர்புற அமைந்த நீர்நிலைகளான தென் சீனக் கடல், தென் பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் என்பன் வழியே தென்கிழக்காசியா விலும் ஓஷனியாவிலும் வட ஆபிரிக்காவிவிலும் முதலீடும் கூட்டுச் செயற்பாட்டு ஊக்குவிப்பும் இத் திட்டத்தின் நோக்கங்களாகும்.
இத் திட்டத்தின் முன்னெடுப்புக்காகச் சீனா 56 பிற நாடுகளுடன் இணைந்து அதனுடன் தொடர்புடைய திட்டங்கட்குக் கடன் வழங்கு தற்கு ‘ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை’ 2014 இல் தொடங்கியது. இவ் வாரின் வழியில் அமைந்த நாடுகள் இவ் வங்கி யின் உறுப்பு நாடுகளாகும்.
அதே ஆண்டு சீனா 40 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் ஒரு “பட்டுப் பாதை நிதியை” அறிவித்தது. இவ் வளர்ச்சி நிதி நேரடியாக ‘ஒரு வார் ஒரு பாதை’ திட்டத்துடன் தொடர்பின்றி, அதே வேளை, திட்டத்துடன் தொடர்புடைய நாடுகட்குப் பயனளிக்குமாறு அமையுமெனச் சீனா தெரிவித்தது. இந் நிதி செயற் திட்டங்களுக்கு கடன் வழங்கலோடன்றித் தொழில் வணிக முதலீட்டுக்கும் பயன்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வகையிற், பாகிஸ்தானின் கரோத் நீர்மின் நிலையத் திட்டம், சீன‒பாகிஸ்தான் பொருளாதார வார் முதலீடுகளுள் அடங்காத, பட்டுப் பாதை நிதியின் முதலாம் முதலீட்டுத் திட்டமாகும். பாகிஸ்தானின் மீது சீனக் கவனக் குவிப்பு இந்திய விருப்புக்கு உரியதல்ல. எனவே அண்மைய ‘ஒரு வார் ஒரு பாதை’ மாநாட்டில் இந்தியா பங்குபற்றவில்லை. இந்தியா, இத் திட்டத்தை எதிர்க்கும் ஒரு சக்தியாக அமெரிக்காவுடனும் யப்பானுடனும் ஒரு மாற்றுக் கூட்டிணை வுக்கு முனைகிறது. இவை தரையால்; ஒன்றிணைந்த ஆசிய‒ ஐரோப்பியக் கண்டப் பெருநிலமான யுரேசியாவில் (Eurasia) ஆதிக்கப் போட்டியை இன்னொரு தளத்திற்கு நகர்த்துகின்றன.
யுரேசியா, உலகச் சனத்தொகையில் 70%ஐயும் உலக நிலப் பரப்பில் 36மூஐயுங் கொண்டது. அதனுள் 90 நாடுகள் உள்ளன. அவை உலக ஆதிக்க அவாவின் மையமாக யுரேசியாவை நிலைநிறுத்துகின்றன. சீனாவின் “ஒரு வார் ஒரு வழி” முழு யுரேசியாவையும் இணைக்கிறது.
அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சீனாவைப் புறந்தள்ளி 2010இல் முன்மொழிந்த Trans-Pacific Partnership எனும் பசிபிக்கிற்குக் குறுக்கான பங்காண்மைக்கு எதிர்வினையாகச் சீனாவின் இத் திட்டத்தின் நோக்கைக் கொள்ளலாம். ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் ஆசியாவிற் புலனான மிகுந்த அமெரிக்கக் கவனக்குவிப்பும் அமெரிக்க இராணுவ நிலைகொள்ளல்களும் சீனாவின் புதிய அயலுறவுக் கொள்கை வடிவமைப்பைத் தூண்டின. கணிசமான உட்கட்டமைப்பு முதலீட்டை வழங்கியும் வர்த்தக, பொருளாதார நலன்களை அதிகரித்தும் யுரேஷிய, மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளை நட்பாக்கல் மூலம் அமெரிக்க மிரட்டலை எதிர்கொள்ளச் சீனா விழைந்தது. இவ் வழிமைந்ததொரு நீண்டகாலத் திட்டத்தின் விளைவென ‘ஒரு வார் ஒரு பாதை’ திட்டத்தை நோக்கலாம்.
திட்டம் பல்வேறு கூறுகளைக் கொண்டது. தென் சீனாவிலிருந்து தென் கிழக்கு ஆசியா பரவலும் தரைவழிப் போக்குவரத்து இணைப்புகளை நிறுவவும் கிழக்காசியாவிற் துறைமுக வசதிகளை மேம்படுத்தவும் சீனா உறுதியோடுள்ளது. இத் தரைவழி இணைப்புகள், சீனாவுக்கும் ஆசியானுக்கும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தலும் 2020க்கு முன் இருதரப்பு வர்த்தகத்தை வருடாந்தம் 1 ட்ரில்லியன் டொலரை எட்டச் செய்தலும் எனும் மூலோபாய நோக்குடையன. இவ்வாறு, மத்திய கிழக்கிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் எரிபொருளையும் மூலப்பொருட்களையும் தென்கிழக்காசியா வழியாகக் கொணரும் கப்பற் போக்குவரத்தின் மீது சீனா மிகையாகத் தங்கியிருப்பதை இது குறைக்கும். மலாக்கா நீரிணை மீது அமெரிக்கக் கட்டுப்பாடு வலுப் படின் சீனக் கடற் போக்குவரத்தை முற்றுகையிடவும் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவுக்கு இயலும் எனச் சீனா நன்கறியும். எனவே அது தரைப்போக்குவரத்து இணைப்பில் முன்னிற்பதோடு ‘ஒரு வார் ஒரு பாதை’ திட்டத்தின் ஒரு முக்கிய கூறாயும் அதைக் கொள்கிறது.
கிழக்கு ஐரோப்பிய, பால்கன், பால்ட்டிக் நாடுகள் ஐரோப்பாவின் கிழக்கு வாயில்களாகையால், ‘ஒரு வார் ஒரு பாதை’ திட்டத்தின் ஒரு பாகமாகப், பாதைகளில் அவற்றை உள்ளடக்கி, சீன‒ஐரோப்பிய தரை‒கடல்வழி விரைவு நெடுஞ்சாலையை நிர்மாணித்து ஐரோப்பா வுடன் இணைப்பை மேம்படுத்த இத் திட்டம் பயன்படும். அவ்வாறே, கிரேக்கத் துறைமுகமான பிரேயுஸ் வரையான விரிவான புகையிரத இணைப்புத் திட்டத்தின் பகுதியாக ஹங்கேரியினதும் சேர்பியாவினதும் தலைநகரங்கட்கு இடையே கடுகதிப் புகையிரதப் போக்குவரத்தைக் கட்டமைக்கும் உடன்படிக்கையிற் சீனா ஒப்பமிட்டுள்ளது. பால்டிக் கடல், ஏட்ரியாடிக் (Adriatic) கடல், கருங்கடல் துறைமுக வசதிக ளிலும் சீனா முதலிடுகிறது.
இவையனைத்தும் யுரேசியாவில் சீனச் செல்வாக்கைத் தக்கவைக்கும் நடவடிக்கைகளாம். அதேவேளை, அமெரிக்காவின் நேட்டோக் கூட்டாளிகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகட்கும் யுரேசியாவிற் செல்வாக்குக்கு அவா உள்ளமையை மறுக்கவியலாது. குறிப்பாக ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இதைச் செயல்கள் மூலம் வெளிப்படையாகப் புலப்படுத்தியுள்ளன. ஆனால் அதை இயலுமாக்க அமெரிக்காவுடனான கூட்டுப் உதவாது எனவும் அவை உணர்வன. முடிவுகாணா உலகப் பொருளாதார நெருக்கடியும், ஐரோப்பாவில் நிலைகொண்ட பொருளாதார மந்தமும், உலகப் பொருளாதாரத் தலைமையை அமெரிக்கா தொடர்ந்து வகிப்பதை மறிக்கும் அமெரிக்க அரசியற் பொருளாதாரச் சூழலும் உலகின் அதிபெரிய மலிவு உழைப்புக் களமாயும் இரண்டாவது அதிபெரிய பொருளாதாரமாயும் சீனாவின் எழுச்சியும் கவனிப்புக்குரியன. இவை ஐரோப்பிய நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பதைத் தவிர்க்கவியலாமற் செய்துள்ளன. எனவே அவை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்துள்ளன. இலங்கையும் அதில் இணைந்துள்ளது. அதில் இணையாத முக்கிய நாடுகள் அமெரிக்காவும் யப்பானுமே.
பட்டுப் பாதையை மையப்படுத்தும் இத்திட்டம் அமெரிக்க மைய புவிசார் அரசியலை இடம்பெயர்த்து யுரேசியாவைத் தன் மையமாக்கி உள்ளது. அவ்வகையிற் புவிசார் அரசியலின் மையத்தை அமெரிக்காவிலிருந்து இடம்பெயர்த்ததோடு அதை சீனாவில் அமையாமல் யுரேசியாவை மையமாக்கி ஐரோப்பாவின் முக்கிய அரங்காடிகளைப் பங்காளிகாக்கும் வகையில் இத் திட்டம் சீனாவுக்கு பாரிய மூலோபாய வெற்றியாகியுள்ளதெனலாம்.
சீன உள்நாட்டுப் பொருளாதார விருத்தியை மையப்படுத்தும் இத் திட்டத்தை உலகளாவிய கவனங்கொண்டு திட்டமிட்டுள்ளமையைக் கவனித்தல் தகும். திட்டத்தின் தரைவழி இணைப்பு, வரலாற்றிற் பட்டுப் பாதையின் தொடக்கப் புள்ளியாய் அமைந்த சீன நகரமான ஸியானில் தொடங்கிச் சீனாவின் மேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தின் உரும்சியூடு மத்திய ஆசிய வழியாக மொஸ்கோவுக்கும் ஐரோப்பாவுக்;கும் செல்லும் பிரதான பாதையுடன் இணைக்கும் 80,000 கிலோமீட்டர் நீள கடுகதிப் புகையிரதப் பாதைக் கட்டமைப்பை உள்ளடக்குகிறது. ஏனைய புகையிரதப் பாதைகளுள், தென் சீனா முதல் தென்கிழக்கு ஆசியா வழியே சிங்கப்பூர் வரையான பாதையும் ஷின்ஜியாங் முதல் பாகிஸ்தானுக்குக் குறுக்காக அரபுக் கடலிலை அண்டிய குவதாரில் சீனா அமைக்கும் துறைமுகம் வரையான பாதையும் அடங்கும்.
சாலைகளும் எண்ணெய், இயற்கை வாயுக் குழாய்களும் இலக்க வலையமைப்புகளின் விரிவாக்கமும் மின் உற்பத்தியும் மின் வட வலையமைப்புகளின் விரிவாக்கமும் அத் திட்டத்தில் உள்ளடங்குவன. அத்துடன் சீனாவின் வளர்ச்சி குன்றிய பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அது ஒரு தூண்டுதலாயும் அமையும். இவ் உட்கட்ட மைப்பு முன்மொழிவுகள் சீனாவின் மிகை உற்பத்தித் தகைமைக்கு ஒரு வடிகாலாயும் சீனப் பெருநிறுவனங்களுக்கு இலாப வாய்ப்புகளை வழங்கவும் அமைகின்றன.
பங்ளாதேஷ்‒சீனா‒இந்தியா‒மியன்மார், சீனா‒மங்கோலியா‒ரஷ்யா, சீனா‒மத்திய-ஆசியா‒மேற்காசியா, சீனா‒இந்தோசீன-வளைகுடா, சீனா‒பாகிஸ்தான், யுரோசிய தரைவழிப் பாலம் ஆகியன ‘ஒரு வார் ஒரு பாதை’ திட்டத்தின் ஆறு பொருளாதாரப் பாதைகளாம்.
இத் திட்டத்தின் கடற்போக்குவரத்துப் அம்சம், துறைமுக வசதிகளை விரிவாக்கலில், குறிப்பாக சீன‒ஐரோப்பபியக் கடற் போக்குவரத்து விருத்தியிலும் கென்யா மூலம் ஆபிரிக்காவை இணைத்தலிலும் தென்கிழக்கு ஆசிய இணைப்பிலும் கவனங் குவிக்கிறது.
அண்மையில் நடந்த மாநாட்டின்போதுஇத் திட்டத்தின் உறுப்பு நாடுகளுடனும் நிறுவனங்களுடனும் சீனா 68 உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இத் திட்டத்தின் பலன்கள் எவை என்ற வினாவுக்குரிய விடையும் இம் மாநாட்டில் கிடைத்தது. சீனா முன்னெடுக்கும் இத் திட்டத்தில் ஏலவே சீன நிறுவனங்கள் 50 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளதோடு பாதையில் உள்ள 20 நாடுகளில் 56 வர்த்தகப் பொருளாதார வலயங்களை நிறுவியுள்ளன. அதன் பயனாக, இதுவரை 180,000 தொழில்கள் உருவாகியுள்ளன. எனினும் எதிர்பார்த்த வேகத்தில் இத் திட்டம் முன்செல்லவில்லை என்பதையும் தெரிவித்த சீனா, அதன் செயற் படுத்தலில் பூகோள அரசியற் செல்வாக்கைத் தவிர்க்கவியலாது என வெளிப்பட ஒத்துக்கொண்டது.
அமெரிக்கா: புது வழிகளைத் தேடல்
தனித்து ஆசியா மீது ஆதிக்கத்தை உருவாக்கித் தக்கவைப்பது கடினம் என அமெரிக்கா இப்போது அறியும். எனவே மூலோபாயக் கூட்டாளிகளை இணைப்பதனூடு அதைச் சாதிக்க அமெரிக்கா விழைகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையில் இருபத்தோராம் நூற்றாண்டிற் கிழக்கு‒மேற்கு உறவு எவடவாறு அமையும் என்பதை அமெரிக்க வெளிவிவகாரக் குழுவின் அறிக்கை அண்மையில் வெளிப்படுத்தியது.
அதன்படி, ஆசியாவில் அமெரிக்காவும் இந்தியாவும் மூலோபாயப் பங்காளிகளாகக் (strategic partners) கைகோத்துள்ளன. இப் பங்காண்மை “பல வடிவங்களில்” அமையும் என்றும் அதன் வழி கூட்டு நடவடிக்கைகள் மூலம் அவை ஆசியப் பிராந்தியத்தையும் உலகத்தையும் “பொறுப்புணர்வுடன் கவனிக்கும்” எனவும் அறிக்கை குறிப்பிட்டது. அதிற் கூறியுள்ள ‘பல வடிவங்கள்’, இராஜதந்திர, இராணுவ, பொருளாதார வழிகளிற்” செயற்படுதலைக் குறிக்கும். அதைப் பின்வருமாறு விளங்கலாம்:
- சீனா அமெரிக்காவை மிஞ்சி உலகின் முதன்மை வல்லரசாவதால் ஏற்படவுள்ள “அபாய” நிலையைக் கருதித், தமது வளங்களை ஒருங்கிணைக்குந் தேவையை இந்தியாவும் அமெரிக்காவும் உணர்கின்றன.
- இரு நாடுகளதும் பொது நன்மைக்கு ஏற்ப உலகை அடக்குதற்கு கூட்டுச் சேருந் தேவையுள்ளது.
- இந்திய-அமெரிக்க நிலைப்பாட்டிற்கு இணங்க மறுக்கும் சிறிய அண்டை நாடுகளை மிரட்டவும் நிபந்தனைகட்கு உட்படுத்தவும், தண்டிக்கவும் வேண்டும்.
இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி இதைப் பச்சையாகவே தெரிவித்தார். அவர் “இந்த உறவு அமெரிக்காவினதும் தென் ஆசியப் பிராந்தியத்தினதும் உறுதிக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதமாய் அமையும்” எனக் கூறியதன் மூலம் அமெரிக்காவின் தென்னாசிய அடியாளாக இந்தியாவை நியமிப்பதை அறிவித்தார். அங்கு கருத்துரைத்த இந்தியப் பிரதமர் மோடி “இந்தியா அமெரிக்காவின் நம்பகமான பங்காளியாக இருப்பதில் எப்போதும் பெருமை கொள்கிறது” என அதை ஏற்றார்.
கிழக்கில் இந்தியா மட்டுமே சீனாவிற்கு எதிராக நிற்கக் கூடியதாக உள்ளதால், அமெரிக்காவைப் பொறுத்தமட்டில், இந்தியாவுடன் கூட்டுச் சேர்வது அவசியமாகிறது. புவிசார் அரசியலின் மையம் விரைந்து ஆசியாவை நோக்கிப் பெயர்வதால் இந்தியாவுக்கு ஒரு முக்கிய பாகமுள்ளது. கிழக்கில், யப்பானும் அவுஸ்திரேலியாவும் பெறுமதி மிக்க நண்பர்களாயினும் சீனாவை எதிர்கொள்ள அவை இந்தியாவை விட முக்கியமானவையல்ல. பாகிஸ்தான் முன்னர் போன்ற “மூலோபாய” முக்கிய பங்காளியல்ல. பாகிஸ்தானை அவ்வப்போது தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
சீன விரோதப் பெருஞ்சுவர் ஒன்றை எழுப்ப, அமெரிக்கா கைவிட முடியாத நாடாக இந்தியா உள்ளது. யப்பானும் அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவுக்கு உதவும் இரண்டாம் நிலைப் பங்காளிகளாம்.
இலங்கையின் எதிர்காலம் யாரிடம்?
இலங்கை மீது அந்நிய ஆதிக்கத்தின் புதிய காண்டம் 1987 இலங்கை இந்திய உடன்படிக்கையோடு தொடங்கியது. இந்திய‒இலங்கை உடன்படிக்கை 1987; யூலை 29ம் திகதி கைச்சாத்தானது. இந்தியா இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியமை இங்குள்ள தமிழரைக் காக்கவென்று பரப்புரை நடந்தது. இந்தியப் படைகள் இங்கு என்ன செய்தனவென்பது ஒருபுறமிருக்க, உண்மையில், இந்தியா தனது நலன் கருதியே உடன்படிக்கை நிறைவேற்றத்திற்கு உத்தரவாதமளிப்பதாகச்; (underwrite) சொன்னது.
உடன்படிக்கைப்படி இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றின. ஒன்று 13ம் அரசியலமைப்புத் திருத்தம், மற்றது மாகாண சபைகள் சட்டம். 13ம் அரசியலமைப்புத் திருத்தம் செயலிழந்த பின்னரும் இந்தியா மௌனம் காப்பது ஏன்? அதன் உத்தரவாதத்தின் பெறுமதி என்ன? உண்மையில் இந்திய நலன்களே உத்தரவாதப்பட்டன. அவையாவன:
- இலங்கையின் திருகோணமலைத் துறைமுகமோ வேறெந்தத் துறைமுகமுமோ வேறெந்த நாட்டிற்கும் இராணுவப் பாவனைக்குக் கொடுக்கப்பட மாட்டாது.
- திருகோணமலையில் உள்ள நிலத்தடி எண்ணெய்க் குதங்களைத் திருத்தல், இயக்குதல் ஆதியன இந்தியாவும் இலங்கையும் இணைந்த கூட்டு முயற்சியாய் இருத்தல் வேண்டும்.
- வெளிநாட்டு வானொலி அமைப்புகளுடன் இலங்கை செய்துள்ள ஒப்பத்தங்களை மீளாய வேண்டும். ஒலிபரப்பேதும் பொதுமக்களின் பாவனைக்காக மட்டுமே இருத்தல் வேண்டும். அது இராணுவப் புலனாய்வுக்குப் பயன்படக் கூடாது.
இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மிக முக்கியமான சரத்தாகக் கூறப்படும் வடக்கு-கிழக்கு இணைப்பு, இந்தியா தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விட்ட கதையை ஒத்தது.
இந்திய‒இலங்கை உடன்படிக்கை பற்றிப் பிரதமர் பிரேமதாசா 1987 யூலை 27ம் திகதி வெளியிட்ட அறிக்கையின் முக்கிய பகுதி வருமாறு:
“நியூ யோர்க்கில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தபோது வடக்கு‒கிழக்கு இணைப்புக்கான எக் கோரிக்கையையும் எதிர்க்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். இவ் இணைப்புத் தனது நாட்டிற்குப் (இந்தியாவுக்கு) பாதகமாய் அமையுமென அவர் ஏற்றுக் கொண்டார்.”
மேற்படி அறிக்கைக்கு இந்தியா மறுப்பெதையும் வெளியிடவில்லை என்பதைக் கவனித்தல் தகும்.
இந்தியா திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களைத் தன்னைத் தவிர வேறு யாரிடமும் கையளிக்காதபடி கவனித்தது. இந்திரா காந்தி இந்துப் பெருங்கடலைத் தனது தனிப்பட்ட நீச்சல் தடாகமாகக் கருதினார். 1977 முதல் இலங்கை அமெரிக்கா பக்கம் சாய்வதாக அவர் ஆதங்கப்பட்டனர். அப்போது இந்தியா சோவியத் ஒன்றியத்தைச் சார்ந்திருந்தது. இன்று இந்தியாவும் அமெரிக்காவும் ‘ஒரு மூலோபாய ரீதியில்” பங்காளிகளாகிய நிலையில் இலங்கை மீது இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க சட்டமன்றில் தென்னாசிய வெளியுறவுக் கொள்கை தொடர்பில் கருத்துரைத்த தென், மத்திய ஆசிய அலுவல்கட்கான பணிமனையின் உதவிச் செயலர் றொபேட் ஓ. ப்ளேக் பின்வருமாறு சொன்னார்:
“பெற்ரோலியப் பொருட்களையும், ஏனைய வர்த்தகப் பண்டங்களையும் வளைகுடாவிலிருந்து கிழக்காசியாவுக்குக் கொண்டு செல்லும் கடல் வழியில் இலங்கை அமெரிக்காவிற்குக் கேந்திர முக்கியமாய் உள்ளது. உலகளாவிய முறையில் அமைதிப் படைகளை வழங்கும் ஒரு முக்கிய நாடான இலங்கை பலாத்காரம், தீவிரவாதம், கடத்தல், கடற் கொள்ளை போன்றவற்றை எதிர்க்கும் தகுதியும் விருப்புமுடைய நாடாயும் பிராந்தியத்தின் கடற் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த உதவும் நாடாயும் விளங்கும்.”
திருகோணமலைத் துறைமுகம் இப்போது அதிகாரப் போட்டியின் மையமாகியுள்ளது. இலங்கைப் பிரதமரின் யப்பான் பயணத்தின் போது திருகோணமலைத் துறைமுகத்தின் கப்பற்துறை (dockyard) ஒன்றை யப்பான் அமைத்துத் தருதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்தியா அங்கு மேலதிக எண்ணெய்க் குதங்களை வேண்டுகிறது. அமெரிக்கா தனது இராணுவக் கப்பல்களைத் திருகோணமலைத் துறைமுகத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தும் பேச்சுகளை நடத்துகிறது.
கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த இராணுவக் கப்பல்களின் தொகை கடந்த மூன்றாண்டுகளில் அதிகரித்துள்ளது. வர்த்தகத் துறைமுகம் ஒன்றுக்குத் தொடரான இராணுவக் கலங்களின் வருகை சொல்லும் செய்தி என்ன? வந்த இராணுவக் கலங்களிற் பெரும்பாலானவை யப்பானுடையன, அடுத்து இந்தியாவுடையன, மூன்றாவதாக அமெரிக் காவுடையன. இலங்கையின் பிராந்திய முக்கியத்தையும் இலங்கை மீது ஆதிக்க ஆவல் யாருக்கு அதிகம் எனவும் இவை சுட்டுகின்றன.
நிறைவாக
இலங்கையின் புவிசார் அமைவிடமும் சுதந்திரமான அயலுறவுக் கொள்கையின்மையும் ஆசியப் பிராந்தியத்தின் மீதான வலுக்கும் ஆதிக்கப் போட்டியும் இன்று உலக அரங்கில் அதிகாரங்கள் களமாடும் சதுரங்கமாக இலங்கையை மாற்றியுள்ளன. இந்த சதுரங்கத்தில் அரங்காடிகள் பலர். ஒவ்வொருவரதும் நோக்கங்கள் வேறு@ ஒன்றுடனொன்று பொருந்தி வராதன. பொதுவான விதிகள் எதுவுமில்லை. உள்ள விதிகளை மதிக்குந் தேவையும் இல்லை. எனவே அராஜகம் கோலோச்சும் அரசியற் களத்தில் வெற்றி என்பது தோற்றகடிப்பதிலன்றித் தோற்காமல் இருப்பதிற் தங்கியுள்ளது. இந்த ஆடுகளம் ஆசியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதற்கு ஓரு உத்தரவாதமும் இல்லை. ஆனால் திமிங்கிலங்களுடன் சிக்கிச் சின்னாபின்னமாகும் நெத்தலிகள் போல் இதில் தொடர்புறும் சிறிய நாடுகள் சிதைவுறும் என உறுதியாகச் சொல்லவியலும். இந்த ஆட்டத்திற் சிறிய நாடுகள் விளங்க வேண்டிய செய்தியொன்றுண்டு. நண்பர்கள் யாருமில்லை, எல்லாரும் எதிரிகளுமில்லை. பெரிய நாடு எதையுஞ் சாராது தம்மைத் தற்காக்கும் உபாயங்களைத் தேடுவது உசிதம்.