அரசியல்உள்ளூர்என் கண்களில்...

இன்னொரு மீட்பருக்கான ஆவல்

அனுரகுமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இலங்கை இன்னொரு தேர்தலுக்குத் தயாராகிறது. மூன்று பேர் கொண்ட அமைச்சரவையுடன் இடைக்கால அரசு செயற்படப் போகிறது. இரண்டு மாதங்கள் மட்டுமே இயங்கவுள்ள இந்த இடைக்கால அமைச்சரவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிய சில நகர்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். அது கட்டாயமானது. ஏனெனில் இன்று ஜனாதிபதியின் மிகப்பிரதானமான சவால் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று தனக்கு வாய்ப்பான ஒரு அமைச்சரவையை உருவாக்குவதாகும். தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள வாக்குகளும் அனுரவின் தெரிவு ஏற்படுத்தியுள்ள மக்கள் அலையையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தவே ஜே.வி.பி முனையும். எதுநடந்தாலும் அனுர தொடர்ந்தும் ஜனாதிபதியாக நிலைப்பார் என்பது உறுதி.

அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்ற வினா பிரதானமானது. சுதந்திர இலங்கையின் பிரதான அரசியல் பாதைகளில் இருந்து விலகிய, பரம்பரை அரசியலோ மேல்தட்டு அதிகார வர்க்கத்தின் துணையோ இல்லாமல் “வெளிநபர்” ஒருவர் இலங்கையின் 9வது ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை ஜனநாயகத்தின் மிகவும் முக்கியமான திருப்புமுனை இது. இலங்கையின் அரசியல் அதிகாரம் – வர்க்க அடிப்படைகளில் – முதன்முறையாக உயரடுக்கு செல்வந்த பாரம்பரிய அரசியல் குடும்பங்களிற்கு வெளியே வந்துள்ளது.

ஏனைய தென்னாசிய, ஆசிய சமூகங்கள் போலன்றி இலங்கையின் ஜனநாயகம் சுதந்திரம் முதல் ஏதோ ஒருவகையில் தப்பிப் பிழைத்துத் தன்னைத் தகவமைத்து வந்துள்ளது. இதன் இன்னொரு கட்டமே கடந்த வாரம் அரங்கேறியது. ஆதிகாரவர்க்கம் விரும்பாத, ஏற்றுக்கொள்ளாத ஒரு தேர்தல் முடிவு வந்தபோதும் கூட அமைதியான, வன்முறையற்ற அதிகார மாற்றம் நிகழ்ந்தது. அரகலய போராட்டத்தின் மூலம் செய்ய முடியாததை வாக்குகளின் ஊடு இலங்கையர்கள் செய்து முடித்திருக்கிறார்கள்.

கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்து, சலுகை அரசியலையும் ஊழலையும் சீரழிந்த நிர்வாகத்தையும் நடத்திவந்த அதிகாரவர்க்கத்தை மக்கள் தங்கள் வாக்குப் பலத்தால் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மூலம் நிறுவனமயமாக்கப்பட்ட அரசியல் அதிகாரத்தின் ஏகபோகம் இப்போது உடைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது.

சாதாரண இலங்கையர்களைப் பொறுத்தவரையில் “அரசியல் அதிகாரத்தை எம்மால் எதிர்க்க முடியுமா?” என்ற ஐயம் எப்போதும் இருந்துவந்தது. இந்த ஐயத்தை 2022 அரகலய நீக்கியது. மக்கள் நினைத்தால் ஜனாதிபதியையே வீட்டுக்கு அனுப்பலாம் என்பதை மக்கள் போராட்டம் செய்து காட்டியது. இப்போது மக்கள் நினைத்தால் தமக்குரியவரை ஜனாதிபதியாகப் பதவிக்குக் கொண்டு வரலாம் என்பதை 2024 ஜனாதிபதித் தேர்தல் நிரூபித்துள்ளது. இந்நிலை தொடருமா அல்லது இலங்கையர்கள் தங்கள் வழமையான அனுசரணை அரசியலுக்கு மீள்வார்களா என்பதை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் உணர்த்தும்.

அரசியலில் மாற்றத்தைக் கோருகின்ற இலங்கையர்கள் தங்கள் அரசியல் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா என்பதை விளங்கிக்கொள்ள நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் உதவும். இலங்கை அரசியலின் மிகப்பெரிய சாபக்கேடுகளில் ஒன்று அனுசரணை அரசியல். தனக்குத் தெரிந்த அல்லது சலுகை பெறக்கூடிய அரசியல்வாதிக்கு வாக்களிப்பது, வாக்குச் சேகரிப்பது என்பதே கடந்த அரைநூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலாக உள்ளது. இதை எதிர்வரும் தேர்தல் மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இடதுசாரி ஜனாதிபதியாகியுள்ளார் என்று சில ஊடகங்களும் மார்க்சிய லெனினியர் ஜனாதிபதியாகியுள்ளார் என்று இன்னும் சிலவும் தொடர்ந்து எழுதுகின்றன. இவை அனுர குறித்தும் ஜே.வி.பி குறித்துமான மிகை மதிப்பீடுகள். இது குறித்து பேச எதுவுமில்லை. அனுர யார் என்பதையும் ஜே.வி.பி எதுவென்பதையும் எதிர்காலம் வெளிப்படுத்தும். அவ்வளவே.

இலங்கை அரசியலில் மீட்பர் அரசியலுக்கு ஒரு வலுவான பரிமாணமுண்டு. 1994இல் சந்திரிக்கா, 2005இல் மகிந்த, 2015 இல் மைத்திரி, 2019 இல் கோத்தபாய என ஒவ்வொருவரும் மீட்பர்களாக அவதரித்தவர்கள் தான். அதன் தொடர்ச்சியாகவே அனுரகுமாரவையும் நோக்க வேண்டியுள்ளது. ஆனால் வழமையான மீட்பர் அரசியலுக்கும் இம்முறைக்கும் வேறுபாடுகள் உண்டு. இம்முறை அரசியல் அதிகார உயரடுக்கில் இல்லாத, குடும்ப அரசியலின் பகுதியாகாத ஒருவரை மக்கள் தேர்ந்துள்ளார்கள்.

“எம்மில் ஒருவர்” என்ற பிம்பம் அனுரவுக்கு வாய்ப்பாகவிருந்தது. தனது குடும்பதையோ மனைவியையோ முன்னிறுத்தாத அரசியல் பிரச்சாரத்தை அவர் செய்தமை மெச்சத்தக்கது. இது புதிய அரசியல் கலாசாரமாகும். ஏனையோர் தங்கள் குடும்பத்தையும் அவர்தம் அரசியல் பின்னணியையும் முன்னிறுத்தினர். இம்முறை போட்டியிட்ட நான்கு பிரதான வேட்பாளர்களில் அனுரகுமார தவிர்ந்த மூவரும் குடும்ப அரசியலின் எச்சங்கள். இது அனுரவுக்கு வாய்ப்பானது, அவர் தனித்துத் தெரிந்தார். இலங்கையின் நிலைபெற்றுள்ள அரசியலின் நீட்சியாக அன்றி அதிலிருந்து விடுபட்ட புதிய அரசியலின் பிரதிநிதியாக அவர் தன்னைக் காட்டிக் கொண்டார். அது இலங்கையர்களைக் கவர்ந்தது.

2019 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய வென்ற தேர்தல் மாவட்டங்களையே அனுரகுமாரவும் வென்றுள்ளார். அவ்வகையில் சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு அவருக்குண்டு. முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாக அவரால் செயற்படமுடியுமா? இலங்கை அரசியலில் புரையோடிப்போயுள்ள சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அகங்காரத்திற்கு எதிராக அவரால் இயங்கமுடியுமா என்ற வினாவே அவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

ஊழலில்லாத, அதிகாரத் துஷ்பிரயோகம் இல்லாத, வினைத்திறனான ஆட்சியைத் தருவதாக அனுரகுமார உறுதியளித்திருக்கிறார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் இன்றைய பல்பரிமாண நெருக்கடிக்கும் இவையே காரணம் என்பதை இலங்கையர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதிலிருந்தான மீட்சியே இலங்கையின் மீட்சி என்பதை உணர்ந்தே தமது புதிய மீட்பராக அனுரகுமாரவைத் தேர்தெடுத்துள்ளார்கள்.

அரகலய ஆதரவாளர்கள், அனுரகுமாரவின் வெற்றியை அரகலயவின் நோக்கங்களின் முடிவு என்று வர்ணிக்கிறார்கள். அனுரகுமாரவின் வெற்றி மக்களின் வெற்றி என்று கொண்டாடுகிறார்கள். இவர்கள் விரைந்து தீர்ப்பெழுதுகிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியவுடனேயே அனுரகுமாரவுக்கு வெற்றி எனவும் அவர் 50%க்கு மேல் பெறுவார் என அறிவித்தவர்களும் இவர்கள் தான். இது மிகவும் ஆபத்தானது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிகாரவர்க்கம் பாராளுமன்றில் பெரும்பான்மை பெறாது என்பதற்கு நிச்சயமுண்டா.

இரண்டு விடயங்களை உலக அனுபங்களில் இருந்து இங்கே சொல்லியாக வேண்டும். முதலாவது 2009 மே இல் நேபாளத்தில் மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. இது மிகப்பெரிய புரட்சிகர மாற்றமாகப் பார்க்கப்பட்டது. பத்தாண்டுகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவோவாதிகள் கிட்டத்தட்ட 80%மான நேபாளத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கி தங்களை ஒரு அரசியல் கட்சியாக்கி தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார்கள். இக்காலப்பகுதியில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் எனது முதுதத்துவமானிப் பட்ட ஆய்வுக்கான கள ஆய்வில் இருந்தேன். மாவோவாதிகளின் வெற்றியைத் தொடர்ந்து அரசநிர்வாகத்தின் உயர் பதவிகளில் இருந்த பலரை நேர்கண்டேன். ஆவர்கள் எல்லோரும் இருபது முப்பது ஆண்டுகள் அரச சேவையில் இருக்கும் உயர் அதிகாரிகள். அவர்கள் எல்லோரும் சொன்ன ஒரு கருத்து முக்கியமானது: “ஆட்சியை அவர்கள் பிடித்திருக்கலாம். ஆனால் அரச நிர்வாகம் எங்கள் கைகளிலேயே இருக்கிறது. எங்களது ஒத்துழைப்பு இல்லாமல் எந்தவொரு புரட்சிகர மாற்றத்தையும் அரசாங்கத்தால் செய்ய இயலாது”. அவர்கள் சொன்னது உண்மை என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன். ஓன்றரை ஆண்டுகள் மட்டுமே அவ்வாட்சி நிலைத்தது.

இந்த நேபாள அனுபவம் முக்கியமானது. ஜனாதிபதி மாறியிருக்கிறார். ஆனால் வேறெதுவும் மாறவில்லை. பல தசாப்தகாலமாக பழகிப் போன அழுகிய அரசியல் நிர்வாகச் செயன்முறையை இலங்கை கொண்டுள்ளது. அதை ஓரிரவில் மாற்ற முடியாது. அதற்குக் காலமெடுக்கும். அந்தக் காலத்தைக் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்களா. அதேவேளை விரைந்து மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதி முனைவாராயின் அது ஏற்படும் தாக்கங்கள் நிர்வாகத்தைச் சீர்குலைக்க வல்லவை என்பதை ஜனாதிபதியும் ஜே.வி.பியும் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

இரண்டாவது, சிலியில் 2022ம் ஆண்டு இடதுசாரிக் கூட்டணியின் வேட்பாளரான கேப்ரியல் போரிக் ஜனாதிபதியானார். இலங்கை போன்று 2019இல் நிகழ்ந்த மக்கள் திரள் போராட்டச்  சூழலின் பின்புலத்தில், நவதாராளவாதத்திற்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தி ஆட்சிக்கு வந்தார். ஆனால்  இரண்டு ஆண்டுகால ஆட்சி மிகுந்த ஏமாற்றமளிப்பதாய் உள்ளது. அவர் மீதான அதீத எதிர்ப்பார்ப்பு அவருக்கு வினையாக முடிந்தது. பாராளுமன்றில் மீண்டும் அதிவலது சக்திகள் பெரும்பான்மை பெற்றுள்ளன. ஆட்சியைத் தக்கவைக்க அனைத்துச் சமரசங்களையும் அவர் செய்தார். இடது ஆட்சியிலிருந்து வலது ஆட்சியை நோக்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் நகர்ந்துள்ளார். சிலியின் அடித்தளமான தனியார்துறையை ஒழுங்குபடுத்தி தனியார்வசமிருந்த கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட அவரால் அரசுடமையாக்க இயலவில்லை.

சிலியின் அனுபவம் பல வகைகளில் இலங்கையுடன் ஒத்தது. கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கை சமூகநல அரசாக இல்லை. பல சமூகநலத் திட்டங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன, இன்னும் பல தனியார்மயமாக்கப்பட்டுள்ளன, சில பலத்த சீரழிவுக்குள்ளாகியுள்ளன (பாடசாலைகள், வைத்தியசாலைகள்). இதை மாற்றியாக வேண்டும். இதற்கு இலங்கையின் பொருளாதார முறைமையுடன் மல்லுக்கட்ட வேண்டும். அது இலகுவானதல்ல. அதேவேளை இயலாததுமல்ல.

இலங்கை இன்று பல்பரிமான மாற்றங்களைக் கோரி நிற்கிறது. குறிப்பாக அனுர உத்தரவாதமளித்தவற்றை நடைமுறைப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புண்டு. இலங்கையில் தேவைப்படும் மாற்றங்கள் அடிப்படையான கட்டமைப்பு மாற்றங்கள். அவை சிக்கலானவை, அதேவேளை அதைச் சாத்தியமாக்க அபரிமிதமான தொடர்ச்சியான உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அதேவேளை அவை நேரங்குறித்துச் செய்யக்கூடியவையுமல்ல. அதேவேளை அரசாங்கம் மேற்கொள்ளும் மாற்றங்களின் தாக்கங்களை மக்கள் உணர்ந்து கொள்ளவும் பங்களிக்கவும் வழி ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் வெறுமனே ஒரு ஜனாதிபதியை மட்டுமல்ல ஒரு மீட்பரைத் தெரிந்திருக்கிறார்கள். இன்று அவருக்கு வாக்களிக்காதவர்களில் பலருக்கு அவர் மீட்பராகத் தெரிகிறார். புதிய அரசியல் கலாசாரத்தின் தொடக்கப்புள்ளியாகவும் வினைத்திறனான நாட்டிற்கான திறவுகோலாகவும் புலப்படுகிறார். இலங்கையின் பொருளாதாரத்தை அவர் எவ்வாறு கையாளுகிறார் என்பதே அவரதும் நாட்டினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *