கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்
உண்மை வலியது. அதளபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும் உண்மை ஒருநாள் வந்தே தீரும். உண்மைகள் வெளியாகிறபோது பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது உண்மையின் வலியையும்; ஆழத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன. பெரும்பாலும் நீண்ட முயற்சியின் பின் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள பொதுப்புத்தி மனநிலை தயாராக இருப்பதில்லை. ‘இப்படி நடந்திருக்காது’ என்ற ஆறுதலுடன் நாம் அப்பால் கடந்து போகிறோம். உண்மைகள் கொடியன. அவை எமது நம்பிக்கைகளில் தீவைப்பன, எதிர்பார்ப்புகளில் கல்லெறிவன.
‘கீனி மீனி’இ தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கக்கூடும். உலக அரங்கு பற்றிய கட்டுரைப் பகுதியில் இம்முறை இலங்கை பற்றி வருகிதே என்றும் நீங்கள் சிந்திப்பது புரிகிறது. இலங்கை, ஓமான், நிக்கரகுவா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இணைக்கும் கண்ணி இந்தக் கீனி மீனி. கீனி மீனி என்றால் என்ன? ஏன் இப்போது இது பற்றிப் பேச வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.
இது கொஞ்சம் பழைய கதை. பழையது கதை மட்டுந்தான் என்பதையும் கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன். கடந்த வாரம் மிகவும் சுவாரஸ்யமான புத்தகமொன்று வெளிவந்தது. அதன் தலைப்பு “கீனி மீனி: போர்க்குற்றங்களில் இருந்து தப்பிய பிரித்தானிய கூலிப்படைகள்” (Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes). பிரித்தானியாவின் முக்கியமான புலனாய்வு ஊடகவியலாளர்களில் ஒருவரான பில் மில்லர் (Phil Miller) எழுதிய இப்புத்தகம் இலங்கை வரலாற்றின் மறைக்கப்பட்ட சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக 1970-80களில் பிரித்தானிய தனது முன்னாள் கொலனிகளில் எவ்வாறு இயங்கியது என்பதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை சில உதாரணங்களுடன் காட்ட முற்படுகிறது.
சுருக்கமாகச் சொல்வதனால் கீனி மீனி பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் முழுமையாக ஆசீர்வாதத்துடனும் இயங்கிய ஒரு தனியார் நிறுவனம். சரியாகச் சொல்வதாயின் கூலிப்படை, ஏனெனில் அவர்கள் செய்த காரியங்கள் அந்த மாதிரி. அவை எந்த மாதிரி என்று பார்ப்பதற்கு முன்னர்…..
கீனி மீனியின் கதைக்கான முன்கதை
இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியது. ஆம், பிரித்தானியக் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் ஒவ்வொன்றாக விடுதலை பெற்றன. தனது முன்னாள் காலனிகள் மீதான காதலால் (செல்வத்தின் மீதான) பொம்மை அரசுகளை நிறுவியோ வேறு வழியிலோ கட்டுப்பாட்டை வைத்திருக்க விரும்பியது பிரித்தானியா. இதை நேரடியாகச் செய்வதற்குத் தடைகள் இருந்தன. சுதந்திர நாடுகளில் தலையிடுவது நன்மதிப்புடைய செயலாக இருக்காது, தப்பிதவறி யாராவது பாராளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டால் பதில் சொல்லியாக வேண்டும், ஊடகங்களின் கெட்டபெயருக்கு ஆளாகினால் ஆட்சியை இழக்க நேரிடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அனைத்தையும் மறைமுகமாகச் செய்ய பிரித்தானிய விரும்பியது.
இக்காலத்தில் எகிப்தில் ஜனாதிபதியாக கமல் அப்துல் நாசார் அமெரிக்கப் பிரித்தானியா எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்ததோடு பிரித்தானிய வர்த்தக நலன்களுக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து முன்னாள் பிரித்தானிய சிறப்பு விமான சேவையில் கொமாண்டராகப் பணியாற்றிய கர்னல் ஜிம் ஜோன்ஸன் தலைமையிலான கூலிப்படை 1960களில் யெமனில் நாசருக்கு எதிராகப் போரிட்டது. நாசருக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின்னர் இந்தக் கூலிப்படை நாடு திரும்பியது. இது பிரித்தானிய இராணுவ, அரசியல் உயரடுக்குகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தை பொறுப்பில் இருந்து அகற்றுவதால் இதற்கான கணிசமான ஆதரவு அரசாங்கத்தில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக 1970களில் ஜோன்சனால் Keenie Meenie Services (KMS) என்ற நிறுவனம் உருவானது. இது பிரித்தானிய விரும்புகின்ற வேலையை பிரித்தானியாவிற்காகச் செய்து முடித்தது. 1980களில் இது மிகப்பெரிய இலாபம் தருகிற வியாபாரமானது.
1975ம் ஆண்டு நான்கு முன்னாள் இராணுவ வீரர்களினால் கீனி மீனி உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆர்ஜென்டீனாவின் தலைநகர் பொர்ன்ஸ் அய்ரிஸில் இருந்த பிரித்தானிய இராஜதந்திரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கினர். இவ்வாறு தான் இந்த நிறுவனம் பிரித்தானியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார் வட்டங்களில் அறிமுகமானது.
பிரித்தானியப் பிரதமர் மார்க்கிரட் தச்சரின் அளவுகடந்த தனியார்மயமாக்கல் மற்றும் சுதந்திர சந்தை, அமெரிக்க ஜனாபதி ரொனால்ட் ரீகனின் கம்யூனத்திற்கெதிரான நிலைப்பாடும் இணைந்து இவ்வகையான நிறுவனங்களுக்கு செங்கம்பளம் விரித்துவைத்தன. இந்நிறுவனங்கள் பிரதானமாக இடதுசாரி ஆட்சிகளை அகற்றுவதற்கு வேலை செய்வது, அந்நாடுகளில் நாசகார வேலைகளில் ஈடுபடுவது, வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளை நிறுவவும் நிலைபெறவும் உதவிகள் செய்வது போன்ற திருப்பணிகளில் ஈடுபட்டன. சரி கீனி மீனி என்ற பெயர் ஏன் வைக்கப்பட்டது என்பதற்கு பல கதைகளும் கிளைக்கதைகளும் உண்டு. அதை இந்தப் புத்தகத்தில் பில் மில்லர் அழகாக எடுத்துரைக்கிறார்.
ஓமான் – நிகரகுவா – இலங்கை
1960களில் ஓமானில் புரட்சிகர விடுதலைப் போராட்டம் இயக்கம் ஒன்று வீரியத்துடன் இயங்கத் தொடங்கியது. எகிப்தின் நாசரின் ஆதரவு, யெமன் உள்ளிட்ட நாடுகளில் எழுச்சிபெற்ற இடதுசாரிச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக ஓமானின் டொவார் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் புரட்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஓமானின் சுல்தான் செயிட் பின் தைமூரின் ஆட்சியில் இருந்து பிரிந்து தனியான சுதந்திரமான ஆட்சியைக் கோரினர். இது பிரித்தானியாவிற்கு உவப்புடையதாக இருக்கவில்லை. 1962 முதல் ஆட்சிக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தப் போராளிகள் பிரித்தானிய நலன்களில் ஆப்பு வைத்துவிடுவார்கள் என்று பிரித்தானிய அஞ்சியது. பிரித்தானிய இராணுவக் கல்லூரியில் பயின்ற இளவரசர் கபூஸ் பின் சைட்டின் உதவியுடன் சதிப்புரட்சி அரங்கேறியது. பிரித்hதானிய இராணுவ வீரர்களின் உதவியுடன் மகன் தந்தையை பதவியை விட்டு அகற்றினார். இந்த மகன்தான் அண்மையில் காலமான ஓமானிய சுல்தான்.
புதிய சுல்தான் தனக்கென சிறப்புப் படைகளை உருவாக்க கீனி மீனியை நாடினார். அவற்றின் உதவியுடன் கிளர்ச்சி அடக்கப்பட்டது. தனது தந்தைக்கு நேர்ந்தது தனக்கும் நேரா வண்ணம் தனக்கெனப் பிரத்தேகப் படைகளை கீனி மீனியின் உதவியுடன் உருவாக்கினார்.
நிகரகுவாவில் ஆட்சிக்கு வந்த சன்டனிஸ்டாக்களுக்கு எதிரான போரில் நேரடியாக ஈடுபட விரும்பாத பிரித்தானிய கீனி மீனியை உதவிக்கு நாடியது. அவர்கள் நிகரகுவாவில் நேரடியாகப் போரில் பங்குபற்றினார்கள். வைத்தியசாலைகள் மீது குண்டு போடுவதில் தொடங்கி அனைத்தையும் செய்தார்கள் இதன் சான்றுகள் பல பக்கங்களில் விவரிக்கிறது.
இனி இலங்கைக்கு வருவோம். 1980ம் ஆண்டு முதல் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பிரித்தானியாவிடம் இராணுவ பயிற்சி உதவியைப் பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் 1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து நேரடியான இராணுவ உதவிக்கு பிரித்தானியா பின்னடித்தது. இதைத் தொடர்ந்து பிரித்தானிய அரசின் பரிந்துரையில் கீனி மீனி நிறுவனம் இலங்கையில் பாதுகாப்பு உதவிகளுக்கு தெரியப்பட்டது. கீனி மீனியே இலங்கையில் விஷேட அதிரடிப் படையினரை உருவாக்கிப் பயிற்சியளித்தது. இலங்கையின் மோசமான பொலிஸ் பிரிவாக விஷேட அதிரடிப் படையினர் உருவாகினர். இதற்கான பெருமையையே ஜே. ஆர். ஜெயவர்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன தனதாக்கிக் கொண்டார்.
1985ம் ஆண்டு இலங்கை விமானப் படை பெற்றிருந்த நவீனரகத் தாக்குதல் ஹெலிகொப்டர்களை சரியாகப் பயன்படுத்தக்கூடிய விமானிகள் இன்மையால் கீனி மீனி ஊழியர்கள் அப்பணியையும் செய்தார்கள். அவர்கள் அக்காலத்தில் இடம்பெற்ற பாதகச் செயல்களில் பங்காளியாக இருந்தார்கள். இவையனைத்தும் பிரித்தானியாவின் ஆசீர்வாதத்துடன் நடந்தது. இந்த உதவிகள் இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கையில் இருந்த போதும் தொடர்ந்தது என்பதை இந்நூல் ஆராய்ந்து ஆதாரங்களுடன் தருகிறது.
கற்காத பாடங்களுக்கு கொடுக்கும் விலை
இப்போதும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். டவுனிங் ஸ்ரீட் வாசலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இருக்கிறார்கள். மேற்குலகம் தான் தமிழ் மக்களுக்கான ஒரே போக்கிடம் என்பவர்கள் இவ்வாறான உண்மைகளின் பின்னரவாவது திருந்துவார்களா தெரியாது. மேற்குலகம் தொடர்ச்சியாக எம்மை ஏய்த்திருக்கிறது. எம்மை மட்டுமல்ல உலகில் உள்ள எத்தனையோ விடுதலைப் போராட்டங்களை தோற்கடித்திருக்கிறது. இந்த உண்மைகளை ஏற்காத வரை எமக்கு விடுதலை சாத்தியமில்லை. நல்லவேளை இந்த ஏற்கக் கடினமான உண்மைகளை ஒரு பிரித்தானியப் பத்திரிகையாளர் வெளிக்கொணர்ந்தார். அல்லாவிடின் இதற்கும் கதைகளையும் காரணங்களையும் கட்ட நாம் தயாராக இருப்போம்.
இந்த நூலின் சிறப்பு இது தேக்கி வைத்துள்ள தகவல்களும் சான்றாதாரங்களும். பில் மில்லர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இந்த நூலுக்காக உழைத்திருக்கிறார். ஆவணக் காப்பகங்கள் அனைத்திலும் பல நூறு மணித்தியாலங்கள் செலவிட்டிருக்கிறார். மேலும் பிரித்தானிய அரச ஆவணங்கள் 30 ஆண்டுகளின் பின்னரே பொதுவெளிக்கு அனுமதிக்கப்படுவதால் அதுவரைப் பொறுமை காத்திருக்கிறார். ஒரு புலனாய்வு ஊடகவியலானாக மிகச் சிறப்பான பணியை அவர் செய்திருக்கிறார்.
எம் வாழ்வில் எத்தனையோ விடயங்களைக் கடந்து போகிறோம். எத்தனையோ புத்தகங்களைக் கடந்து போகிறோம். பல எம் கண்களுக்குப் படாமலே போய்விடுகின்றன. அது எவ்வளவு அபத்தமானது. எம் சமூகத்தால் இந்தப் புத்தகமும் அவ்வாறே கடக்கப்படும். ஏனெனில் இன்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கீனி மீனி நிறுவனத்தில் விமானியான இருந்த ஒருவர் இலங்கையில் தனது அனுபங்களைப் புத்தகமாக வெளியிட்டார். அதன் பெயர் “தயங்கிய கூலிப்படையாள்: இலங்கையில் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் ஒரு பிரித்தானிய முன்னாள் இராணுவ வானூர்த்தி ஓட்டியின் நினைவுகள்” (The reluctant mercenary : the recollections of a British ex–Army helicopter pilot in the anti–terrorist war in Sri Lanka). இந்தப் புத்தகம் வந்தபோது இலங்கையில் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சமாதானம் குறித்து அதிகம் பேசப்பட்டது. இந்தப் புத்தகம் யார் கவனத்தையும் ஈர்க்காமல் போய்விட்டது.
இந்த நூலில் உள்ளவற்றுடன் நான் உடன்படாத விடயங்களும் உண்டு என்பதை நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். இங்கு வழங்கப்பட்டுள்ள ஆதாரங்கள், சாட்சிகள் போன்றவற்றை நான் ஏற்கிறேன். அதற்கான செலவழிக்கப்பட்ட உழைப்பை நான் மதிக்கிறேன். அதேவேளை தரவுகள் ஆதாரங்கள் சார்ந்து வைக்கப்பட்டுள்ள பகுப்பாய்வுடன் நான் முரண்படுகிறேன். அதுகுறித்து விரிவாகப் பேச இங்கு இடம் போதாமையால் தவிர்க்கிறேன்.
இந்தநூலில் பேசப்பட்ட விடயங்களில் இலங்கை ஒருபகுதி மட்டுமே. ஆனால் இன்று இலங்கையை முன்னிறுத்தியே இப்புத்தகம் பிரபல்யமாகிறது. உண்மைதான், இப்போது சன்டனிஸ்டாக்கள் பற்றியோ ஓமானின் புரட்சிகர இடதுசாரிகள் பற்றியோ முஜாகிதீன்கள் பற்றியோ அறியும் ஆவல் குறைவுதானே.