நட்டாற்றில் நாடு: அடுத்தது என்ன?
இலங்கை அரசியல் எனும் சூதாட்ட அரங்கின் புதியதொரு அத்தியாயம் கடந்த புதன்கிழமை அரங்கேறி இலங்கைக்கான புதிய ஜனாதிபதியைத் தெரிந்ததனூடு தொடங்கியது. நூறு நாட்களுக்கு மேலாகப் போராடுகின்ற போராட்டக்காரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் எட்டமுடியாத இடைவெளி உள்ளதை கடந்த ஒருவாரகால நடத்தைகள் மீண்டுமொருமுறை நிரூபித்தன. கடந்த வார நிகழ்வுகள் போராட்டக்காரர்களுக்கு மட்டுமன்றி மிகச்சாதாரண இலங்கைக் குடிமகனுக்கும் சில முக்கியமான செய்திகளைச் சொல்லிச் சென்றுள்ளன. அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் தெரிவைத் தொடர்ந்து பகடைகள் உருளத் தொடங்கியுள்ளன. அவை இலங்கையை எத்திசையில் நகர்த்தும் என்ற வினா ஒருபுறமும் போராட்டக்காரர்களின் திசைவழிகள் எவை என்பது மறுபுறமுமாக மிகுந்த நெருக்கடியான கட்டத்தை நோக்கி இலங்கை நகர்கின்றது. இதுவரை நடந்தது ஒரு ஒத்திகை என்பது போல இனிவரும் காலங்களில் நிகழ்வுகள் அரங்கேறும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லவியலும்.
பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதான அளவுகடந்த நம்பிக்கையும் விருப்பும் பெரும்பாலான இலங்கையர்களுக்கு உண்டு. ஆசியாவின் மிகப்பழைமையான ஜனநாயகம் என அறியப்பட்ட இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்திய அரசியல் வரலாற்றில் இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியமானவை. முதலாவது, மிகுந்த நெருக்கடியான காலங்களிலும் இலங்கை எப்போதும் முழமையான சர்வாதிகாரத்தை நோக்கியோ இராணுவ ஆட்சியை நோக்கியோ நகரவில்லை. மாறாக மென்மையான சர்வாதிகாரப் போக்குக்கு (soft authoritarianism) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாபதிப் பதவி வழியமைத்தபோதும் அது முழுமையான சர்வாதிகாரமாக முகிழ்க்கவில்லை. இரண்டாவது, அரசாங்கங்கள் மோசமான ஆட்சியை வழங்கியபோதும் மக்கள் தேர்தல் வரைப் பொறுமைகாத்து ஆட்சியாளர்களை மாற்றி வந்திருக்கிறார்கள். அவ்வகையில் தேர்தல்கள் என்பதே மக்கள் தங்கள் தீர்பை வழங்கும் களமாக இருந்துள்ள நிலையில் தேர்தல்களில் வாக்களிப்பது “ஜனநாயகக் கடமை” என்ற பொதுப்புத்தி மனநிலை ஆழப் பதியவைக்கப்பட்டுள்ளது.
இவை இரண்டும் சில அடிப்படையான சிக்கல்களைத் தன்னகத்தே கொண்டிருந்தன. முதலாவது, பாராளுமன்ற ஜனநாயகத்தின் போர்வையில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை கோலோட்சுகிறது. இதன்மூலம் நிறைவேற்று அதிகாரத்துக்கான ஜனநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது. இரண்டாவது, இந்த அந்தஸ்தானது நிறைவேற்று அதிகாரம் என்ற “ஜனநாயக முகமூடியின் கீழ்” சர்வாதிகாரத்தின் பண்புகளை பயன்படுத்த அனுமதித்தது. மூன்றாவது, மக்களால் நேரடியாகத் தெரிவான ஜனாதிபதி என்ற வாதம், சட்டத்திற்குப் புறம்பானவராக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராகவும் செயற்படுவதற்கான அறஞ்சார் வாதத்தை முன்மொழிந்தது. நான்காவது, தேர்தல்களே அனைத்துக்கும் தீர்வு என்ற முடிந்த முடிவுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் நடந்து கொண்டார்கள். இது தேர்தல்களில் பங்களிப்பாளர்களாகவும் ஏனைய நேரங்களில் பார்வையாளர்களாகவும் குடிமக்களை இயங்கக் கோரியது. ஐந்தாவது, தெரிவுசெய்த பிரதிநிதிகளிடம் அனைத்தும் ஒப்படைத்துவிடுவது என்பதனூடு “பாராளுமன்றின் மீஉயர் தன்மையை” பாதுகாக்க அனைவருக்கும் கடப்பாடு உண்டு என்ற கருத்துநிலை பொதுமைப்படுத்தப்பட்டது.
இந்தச் சிக்கல்களின் தீவிரத்தை கடந்த மூன்றுமாத இலங்கை அரசியலின் போக்கு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையின் ஆபத்துக்களை அண்மைக்கால நடத்தைகள் வெளிப்படுத்தின. 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது என்.எம். பெரேரா கேட்ட கேள்வி: “ஒருவேளை ஒரு பைத்தியக்காரனின் கைகளுக்கு ஜனாதிபதிப் பதவி சென்றால்?” அவ்வளவு இலகுவில் இக்கேள்வியைக் கடந்துவிட முடியாது. சோகம் யாதெனில் ஜனநாயகத்தின் பெயரால் இலங்கையர்கள் இதையும் அனுமதித்திருக்கிறார்கள். இதன் மிகப்பாதகமான விளைவுகளை கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேல் அனுபவித்த பிறகும் இந்த முறையை இல்லாதொழிப்பதில் நியாயமான அக்கறையை எந்தவொரு அரசியல்வாதியும் காட்டுவதில்லை. அந்தக் கதிரையில் எப்படியாவது அமர்ந்துவிட வேண்டும் என்பதே எல்லோருடைய அவாவாகவும் இருக்கிறது.
இரண்டாவது முறை ஜனாதிபதியாகலாம் என்ற மைத்திரிபால சிரிசேனவின் ஆசை இம்முறையை இல்லாமல் செய்வதைத் தடுத்தது. என்றாவது ஜனாதிபதியாகிவிடுவது என்ற ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க அனுமதிக்கவில்லை (நல்லகாலம் இல்லாதொழிக்கவில்லை என்று அவர் இப்போது மனதுக்குள் மகிழக்கூடும்). இப்போதும் பலர் ஜனாதிபதிக் கனவில் இருக்கிறார்கள். அந்தக் கதிரையின் வலிமையும் வசீகரமும் அத்தகையது. அது மிகப்பெரிய ஆபத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஜே.ஆர்;. ஜெயவர்தனவிற்குப் பிறகு அப்பதவியின் அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தியவர்கள் கிடையாது. அதை உருவாக்கியவர் என்றவகையில் அதன் சட்டரீதியான ஆழ அகலங்களை அவர் அறிந்திருந்தார். அதன் பின்னானவர்கள் அந்தப் பதவி வழங்குகின்ற அதிகாரத்தின் வழியே தம் பிடியை இறுக்கிக் கொண்டவர்களேயன்றி சட்டத்தின் இடுக்குகளைப் பயன்படுத்தி கேள்விகளிற்கு அப்பாற்பட்டு சட்டத்தின்வழி நின்று செயற்பட்டவர்கள் அல்லர். மாமனாரின் வழிமுறையை மருமகன் பின்பற்றினால் என்ன என்ற வினா இயல்பானது.
தேர்தல் காலங்களில் மட்டும் பங்காளர்களாகப் குடிமக்களைக் கருதுகின்ற அரசியல் பண்பாட்டின் ஆபத்துக்களை கடந்த சில தசாப்தங்களில் நாம் கண்டு வந்திருக்கின்றோம். இந்தப் பண்பாடே அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் விரும்பியது. இந்த முறையே அரசியல்வாதிகளுக்கான பிரதான பாதுகாப்புக் கவசமாகியது. பாராளுமன்றுக்குத் தெரிவானால் ஐந்து ஆண்டுகளுக்கு எதுவுமே செய்யவியலாது என்ற உத்தரவாதம் தருகின்ற அதிகாரபோதையின் சேதத்தை கடந்த புதன்கிழமை தேர்தல்கள் வரை நாம் கண்டுள்ளோம்.
அண்மைய மக்கள் போராட்டங்களின் முக்கியமான பணி, தேர்தல்களுக்கு அப்பாற்பட்டு மக்களை அரசியலில் பங்கேற்பாளர்களாக மாற்றியமையாகும். கேள்வி கேட்கவும், எதிர்த்து நிற்கவும் போராடவும் துணிவுள்ள ஒரு சமூகத்தை இந்த மக்கள் போராட்டங்கள் உருவாக்கியுள்ளன. இது முக்கியமானது. அரசியல்வாதிகளை பொறுப்பாளியாக்குவது என்பது முக்கிய கதையாடலாக உருவாகியுள்ளது. இது மட்டுமே போதுமானதா, குறிப்பாக ஜனாதிபதித் தெரிவையொட்டி நிகழ்ந்தவை உணர்த்துகின்ற பாடங்கள் என்ன என்பதை நோக்கியாக வேண்டும்.
கோத்தபாயவை வெளியேற்றுவதை நோக்காகக் கொண்ட போராட்டம் கருத்திலும் களத்திலும் விரிவடைய வேண்டும் என்பது நான் தொடர்ச்சியாக வலியுறுத்தியது. கடந்தவாரம் கோத்தபாய தனது பதவியை துறந்தமையானது மிக முக்கியமான வெற்றி. மக்கள் போராட்டத்திற்கும் நீண்ட நெடிய துயர்மிகுந்த போராட்டத்தின் முக்கிய மைல்கல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மக்கள் சக்தியின் மகிமையை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உணர்த்திய நிகழ்வது. ஆனால் அது முடிவல்ல. இது ஒரு இடைநிலைப்படி மட்டுமே. ஜனாதிபதியின் பதவிவிலகலைத் தொடர்ந்து ஏற்பட்ட மகிழ்ச்சியின் பின்னணியில் ‘பாராளுமன்றத்தைச் செயற்பட அனுமதியுங்கள்”, ‘பாராளுமன்றம் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றட்டும்” என்ற குரல்கள் வலுப்பட்டன. இவை பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலான குரல்கள். இந்தக் குரல்களின் பிரதிபலிப்புகளே ‘அரகலய’ வினரிடமிருந்தும் வந்தது.
அடுத்த ஜனாதிபதியைத் தெரிவதற்கான போட்டி தொடங்கிய நிலையில் வலுவான, தெளிவான அரசியல் நிலைப்பாடொன்றைப் போராட்டக்காரர்கள் எடுக்கத் தவறினார்கள். அவர்களது குறி ரணில் விக்கிரமசிங்க மீதே இருந்தது. போட்டியிடுவதாக அறிவித்த சஜித் பிரேமதாசவுடன் பேசினார்கள். டலஸ் அழகப்பெருமவை விமர்சிக்கவில்லை. போராட்டம் ஒருபுறம் பாராளுமன்றுக்கு அழுத்தம் தருவதாகவும் இன்னொருபுறம் எவ்வாறேனும் ரணில் ஜனாதிபதியாகாமல் பார்த்துக் கொள்வது என்று சுருங்கியது. இதன் பலன் யாதெனில் எந்தப் பாராளுமன்றத்தின் மீது அழுத்தங் கொடுப்பதன் ஊடு தாம் விரும்பிய பலனை அடைய நினைத்தார்களோ, அதே பாராளுமன்றமே ரணில் விக்கிரமசிங்கவை ஏக பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாகத் தெரிந்துள்ளது.
ஊழலும் அதிகாரவெறியும் துர்நடத்தையும் ஆழ ஊடுருவிப்போன இலங்கையின் அரசியல் பண்பாட்டில் மாற்றம் எளிதல்ல என்பது இன்னொருமுறை வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் இப்போது ரணில் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துள்ளார்கள். இது குறுகிய அரசியல்பார்வையின் விளைவிலானது. ஜனாதிபதியைத் தெரிவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் போராட்டக்காரர்கள் தெளிவான ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும். அதிகாரத் துஷ்பிரயோகத்தில் சஜித்தும், டலசும் ரணிலுக்கு சளைத்தவர்கள் அல்லர். டலஸ் அல்லது சஜித் வந்தால் பரவாயில்லை என்று கருதும் கருத்துநிலை கோளாறானது. பாராளுமன்றத்திடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு பாராளுமன்றம் தெரியும் ஒருவரை ஏற்கமறுப்பது சிக்கலானது. போராட்டங்கள் தவறுகளில் இருந்து பாடங்கற்கும் போது வீரியமுடன் முன்செல்லும். இலங்கையர்கள் வேண்டிநிற்கின்ற கட்டமைப்பு மாற்றத்தை இந்தப் பாராளுமன்றத்தால் தரவியலாது என்பது இப்போதாவது விளங்க வேண்டும்.
ரணில் தெரிவாகியதைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் பச்சைக்கொடி காட்டுகிறது. புதிய பொருளாதார அடியாள்கள் தயாராகிறார்கள். அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவின் கண்களுக்கு நேற்றுவரை வீரர்களாகத் தெரிந்த போராட்டக்காரர்கள் இப்போது வன்முறையாளர்களாகத் தெரிகிறார்கள். மக்களை அரசியல்ரீதியான விழிப்பூட்டும் கடமையை போராட்டக்காரர்கள் செய்தாக வேண்டும். இல்லாவிடின் நட்டாற்றில் நாமெல்லாம்.