அரசியல்உள்ளூர்என் கண்களில்...

புதிய அரசாங்கமும் பழைய சவால்களும்

புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. புதிய முகங்களுடன் பாராளுமன்றம் தொடங்கியுள்ளது. அரசியல் குறித்த புதிய நம்பிக்கையும் உற்சாகமும் இலங்கையர்கள் மத்தியில் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளது. எதையுமே சாத்தியமாக்க வசதியான 2/3 பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டுள்ளது. செய்ய இயலாதது எதுவுமல்ல. இரண்டு முக்கியமான விடயங்களை இலகுவாகச் செய்வதற்கான வாய்ப்பு முதலாவது, தேசிய இனப்பிரச்சனைக்கான நின்றுநிலைக்கக்கூடிய தீர்வை எட்டுவது. இரண்டாவது, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது. இரண்டையும் செய்வதற்கு வாய்ப்பான அதிபெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களை ஜனாதிபதி திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இலங்கையர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

சுதந்திரத்துப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமானவை. பாரம்பரிய இரு அதிகாரத்துவக் கட்சிகள்ஃகூட்டணிகள் என்பவற்றுக்கு வெளியேயான ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருப்பது இதுவே முதன்முறை. இந்தத் தேர்தல் முடிவுகளின் வழி மக்கள் என்ன செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது முக்கியம். ஆதனூடாகவே புதிய அரசாங்கத்தை விளங்கவியலும். அதுவே புதிய அரசாங்கத்தின் திசைவழி குறித்த சில முன்னோட்டங்களை எதிர்வுகூற வழிசெய்யும்.

அரகலயவும் அதைத் தொடர்ந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மோசமான ஆட்சியும் மக்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்தின. “பாராளுமன்றம் சுத்தம் செய்யப்பட வேண்டியது” என்பதே அதுவாகும். ஜனாதிபதித் தேர்தலில் இதையே அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இதையே தேசிய மக்கள் சக்தி தங்கள் பாராளுமன்றத் தேர்தலின் முதன்மையான வேண்டுகோளாக முன்வைத்தனர். சீரழிந்த பழைய நிறுவனமயமாக்கப்பட்டு சிலருக்குரியதாக்கப்பட்டதாக இருந்த பாராளுமன்றம் என்ற பழைய ஸ்தாபனத்தை அகற்றுங்கள் என்ற கோரிக்கைக்கு வாக்காளர்கள் அதிரவைக்கும் வகையில் பதிலளித்துள்ளனர். பாராளுமன்றத்தில் பல தசாப்த கால முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்தனர், இன்னும் கொஞ்சம் பேர் தோல்வியடைவோம் என்று தெரிந்ததால் ஒதுங்கியிருந்தனர்.

அதேவேளை ஜே.ஆர். ஜெயவர்தனவினால் கட்டமைக்கப்பட்ட இந்தத் தேர்தல் முறையானது அனுசரணை அரசியலை தேர்தலின் தவிர்க்கவியலாத அம்சமாக மாற்றியது. குறிப்பாக 2005இல் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தது முதல் இந்த அனுசரணை அரசியல் தலையாய அரசியற் செல்நெறியாக முன்னேறியது. இதன் மோசமான சீரழிந்த பக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காட்டியது. இம்முறை அனுசரணை அரசியலின்றியே தேர்தல் அரசியலில் வெற்றியடைய முடியும் என்பதை தேசிய மக்கள் சக்தி காட்டியுள்ளது. இதைத் தக்க வைக்க வினைத்திறனான முறையில் அரசாங்கம் செயற்பட வேண்டும். இதன்மூலம் ஊழலுக்கும், அதிகாரத் துர்ப்பாவனைக்கும் வழிகோலும் அனுசரணை அரசியல் என்ற சீரழிவை இல்லாமலாக்க முடியும். கடந்த இரண்டு தசாப்தங்களில் அனைத்துப் பொதுச் சேவைக்கான அணுகலுக்கான மத்தியஸ்தராக அரசியல்வாதிகள் மாறியுள்ளனர். உதாரணமான ஒரு கிராமத்தின் பொதுவீதியின் மின்விளக்குகள் வேலை செய்யவில்லையாயின் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும், அல்லது முறைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆனால் கிராமத்தினர் மின்விளக்தை சரிசெய்வதற்குக் கூட தமது பகுதி அரசியல்வாதியை நாடுகின்றனர். அவரினூடகவே குறித்த அதிகாரியை அணுகுகின்றனர். அவ்வாறு அணுகுவதனூடே குறித்த பிரச்சனைக்கான தீர்வு கிட்டும் என்று மக்கள் நம்புகிறார். இவ்வளவு மோசமாகப் பொது நிர்வாகம் சீரழிக்கப்பட்டு அரசியலாக்கப்பட்டுள்ளது. நாடு இதிலிருந்து விடுபடுதல் அவசரமானதும், அவசியமானதும். அதைச் செய்வதற்கான பாராளுமன்ற வலிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

இம்முறை தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகளின் வழி மக்கள் ஒரு செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையேற்ற புதிய ஜனநாயக முன்னணி 4.49%மான வாக்குகளையே பெற்றுள்ளது. இது ஜனாதிபதித் தேர்தலில் அவர் பெற்ற 17.27%மான வாக்குகளோடு ஒப்பிடும் போது கடுமையான வீழ்ச்சியாகும். இம்முறை இவர்களின் தேர்தல் பிரச்சாரம் என்பது “பொருளாதார ஸ்திரத்தன்மையை” வழங்குவது என்பதே. ஆனால் இதை மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள். மறுபுறம் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயவையும் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் 32.76%மான வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதசா இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் 17.66%மான வாக்குகளையே பெற்றார்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் அளவு மிகப்பெரியது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ யுகத்தில், தேர்தல் கூட்டணி இல்லாமல் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையைப் பெற்ற முதல் கட்சி இதுவாகும். ஜனாதிபதித் தேர்தலில் 42.3% ஆக இருந்த அதன் வாக்குப் பங்கு, பொதுத் தேர்தலில் 61.56% ஆக உயர்ந்து 159 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அரசியலமைப்புத் திருத்தங்கள் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கை விட அதிகமான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. அறுதிப் பெரும்பான்மையை மிதப்படுத்தும் தேர்தல் முறையின் கீழ் இதை தேசிய மக்கள் சக்தியால் அடைய முடிந்தது என்பது உண்மையிலேயே விசித்திரமானது.

வாக்குப்பதிவு குறைந்த போதிலும், ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற 5.7 மில்லியன் வாக்காளர்களை தேசிய மக்கள் தக்க வைத்துக் கொண்டது. அத்தோடு மேலதிகமாக 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களை வென்றது. ஜனாதிபதித் தேர்தலில் புறநகர் நடுத்தர வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வாக்குகளே அவர்களுக்குக் கிடைத்தன். ஆனால் அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தி நகர்ப்புற ஏழைகளுடன் புதிய ஊடுருவலை இம்முறை ஏற்படுத்தியது. இதில் குறிப்பிடத்தக்க வகையில், அதன் புதிய வாக்காளர்களில் பலர் நாடு முழுவதும் உள்ள தமிழ் பேசும் சமூகங்களிலிருந்து வந்தவர்கள். வடக்கு, கிழக்கு மற்றும் மலையம் ஆகிய ஏழு தேர்தல் மாவட்டங்களில், தேசிய மக்கள் சக்தியின் வாக்கு விகிதம் சராசரியாக 103% அதிகரித்துள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் பேசும் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நோக்கி விரைவாக மாற்றியதைக் குறிக்கிறது. இரண்டு தேர்தல்களுக்கும் இடையே வெறும் 54 நாட்களே இருந்த நிலையில் வாக்காளர்களைத் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திருப்பியமையானது ஒரு சாதனையே. இதில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முக்கிய பங்காற்றியுள்ளார். இன்று தேசிய மக்கள் சக்திக்கு விழுந்த வாக்குகளில் பெரும்பான்மையானவை ஜனாதிபதி அனுரகுமாரவின் கைகளைப் பலப்படுத்த வழங்கப்பட்டவை. இப்போது ஜனாதிபதி பதவி மற்றும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இரண்டையும் தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ளது.

இந்த வெற்றியின் முக்கிய அம்சம் இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது. ஒன்று, தேர்தல் வெற்றிகளைப் பெறுவதற்காக கடந்த காலத்தில் அரசாங்கங்கள் வெளிப்படுத்திய இனவாதத்தை வெளித்தோற்றத்தில் தாண்டிய பிரச்சாரத்தை முன்வைத்தமை. இரண்டு, நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், சிறுபான்மை சமூகங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பிரதிநிதிகளை அரசாங்கம் கொண்டிருக்கின்றமை.

தேசிய மக்கள் சக்தியும் ஜனாதிபதி திசாநாயக்கவும் விளங்கிக் கொள்ள வேண்டிய மிகப் பிரதானமான விடயம் அரசியலும் ஆட்சியியலும் முற்றிலும் வேறானவை என்பதையே. ஆட்சியியல் என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் இலகுவில் வாய்ப்பதில்லை. நல்ல அரசியல்வாதிகள் நல்ல ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. அவ்வாறு நிகழ்வதுமில்லை. இலங்கையின் இன்றைய நெருக்கடி ஆட்சியியல் நெருக்கடி. இதை ஓரிரவிலோ, குறுகிய காலத்திலோ சரிசெய்துவிட முடியாது. இதை இலங்கையர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை அதைச் சரிசெய்வதற்கான முயற்சிகளையும் அதன் பலன்களையும் மக்கள் உணர வேண்டும். அதுவே இன்றைய அரசாங்கத்தின் முக்கிய சவால்.

இந்தச் சவால் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது. முதலாவது, பொதுத்துறை நிர்வாகம் தொடர்பானது. இலங்கையின் ஆட்சியியல் சீரழிவின் முக்கிய சாட்சி சீரழிந்துள்ள பொதுத்துறை நிர்வாகக் கட்டமைப்பும் அதன் வினைத்திறனற்ற இயங்கியலும். குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் பொதுத்துறை நிர்வாகம் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது. அதேபோல் ஊழலும் அதிகாரத் துர்நடத்தையும் நிறைந்த இடமாகவும் அது இருக்கிறது. இன்று உயர் பதவிகளில் இருக்கின்ற அனேகர் அரசியல் செல்வாக்குடையவர்கள் (பிரதான கட்சிகளின் ஆதரவாளர்). அதேவேளை ஊழலுக்கும் அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கும் பழக்கப்பட்டவர்கள். எனவே சீர்திருத்தங்களை அரசாங்கம் கொண்டுவரும் அதற்கான முதலாவது எதிர்வினை இவர்களிடமிருந்தே வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இலங்கையின் ஊழல் தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் இலங்கையின் பொதுத்துறை நிர்வாகத்தில் நடைபெறுகின்ற ஊழல்களே அனைத்தினதும் தோற்றுவாய் என்பதைத் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கின்றன. எந்தவொரு அமைச்சரும் பொதுத்துறை நிர்வாகத்தின் துணையின்றி ஊழலில் ஈடுபடுவது கடினம். வீதிகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், கட்டங்கள் எழுப்புதல், அனுமதி வழங்கல் எனப் பொதுமக்கள் நன்கறிந்த ஊழல்கள் அனைத்துக்கும் அச்சாணி பொதுத்துறை நிர்வாகமே. எனவே அதைச் சீர்ப்படுத்த வேண்டும். அதேவேளை நாட்டின் பொது நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுள்ளவர்களாக அதிகாரிகள் இருக்கிறார்கள். எந்தவொரு அரசாங்கத் திட்டத்தின் வெற்றியும் அது எவ்வாறு மக்களைச் சென்றடைகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது. அதில் பொதுத்துறை நிர்வாகத்தின் பங்கு பிரதானமானது. ஊழல்மிகுந்த வினைத்திறனற்ற பொதுத்துறையை எவ்வாறு கையாள்வது என்பதே அரசாங்கத்தின் முன்னுள்ள கேள்வி. குறிப்பதாக அனுபவமற்ற, முதன்முதலாக பாராளுமன்றம் தெரிவாகியுள்ள, அதிகாரத்தை முதன்முறையாக சுவைக்கின்ற நபர்கள் விரும்பியோ விரும்பாமலோ பொதுத்துறை நிர்வாகத்தில் தங்கியிருக்க வேண்டியவராகின்றனர். எனவே பொதுத்துறை நிர்வாகத்தை வினைத்திறனுள்ளதாக மாற்றுவது இலகுவானதல்ல. ஆனால் அதைச் செய்யாமல் பயனுறுதி வாய்ந்த ஒரு நிர்வாகத்தை இந்த அரசாங்கத்தால் வழங்க இயலாது.

அரசாங்கம் எதிர்நோக்கும் சவாலின் இரண்டாவது பகுதி, அமைச்சர்களும் அவர்தம் செயலாற்றுகையும் தொடர்பானது. ஒருநபர் ஒரு துறைசார்ந்த நிபுணர் என்பதற்காய் அவர் குறித்த துறைக்கு அமைச்சராக இருக்கத் தகுதியானவர் என்பது பொருளல்ல. ஏனெனில் அமைச்சர் என்பவர் துறைசார்ந்த நிபுணராக இருப்பதை விட துறைசார்ந்த நல்ல நிர்வாகியாகவும் தலைமைத்துவப் பண்புள்ளவராகவும் இருப்பது முக்கியம். அதேவேளை தனது அமைச்சால் மக்களுக்கு உச்சபட்ச பயனை விளைவிக்கக் கூடிய செயல்கள் என்னவென்பதை அறிந்தவராக இருப்பதும் அவசியம். “அறிவியல்பூர்வமான அமைச்சர் தெரிவு” என்று தேசிய மக்கள் சக்தியும் ஜனாதிபதியும் சொல்கிறார்கள். இது மீண்டும் “நிபுணத்துவ நிர்வாகம்” நோக்கி நகர்கிறதோ என்ற ஜயத்தை எழுப்புகிறது. நிபுணத்துவ நிர்வாகம் என்ன செய்யும் என்பது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின் ஆட்சிக்காலம் நல்லதொரு உதாரணம்.

இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். சிறந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் எப்போதுமே துணைவேந்தராவதற்குப் பொருத்தமானவரல்ல. ஏனெனில் அவர் துறை சார்ந்த நிபுணர், மாணவர்களுக்குச் செவ்வனே கற்பிக்கக் கூடியவர். ஆனால் அவரால் ஒரு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முடியாது. சிறந்த வினைத்திறனான அமைச்சர்கள் துறைசார்ந்தவர்களாகவோ, அதிகம் கற்றவர்களாகவோ இருந்ததில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி இதற்கு சிறந்த உதாரணம். அப்பால் அவர் ஒரு தலைசிறந்த நிர்வாகியாகவும், முன்னோக்கு உடையவராகவும் அறியப்பட்டவர். இந்திய புகையிரதச் சேவையை நவீனமயமப்படுத்தி நீண்டகாலத்துப் பிறகு அத்துறையை இலாபத்தில் இயங்க வைத்தவர் லல்லு பிரசாத் யாதவ். இருவரது வெற்றியின் பின்னால் இருப்பது அவர்களது நிர்வாகத்திறமை, தொலைநோக்கு, மக்களின் தேவை குறித்த தெளிவான புரிதல். இதையே இன்றைய புதிய அமைச்சர்களிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வெறுமனே துறைசார் நிபுணத்துவம் நல்ல அமைச்சர்களை உருவாக்காது என்பதையும் ஜனாதிபதி மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் வலுவற்ற அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்களிலும் ஏனைய கொள்கை வகுப்பாளர்களிலும் தங்கியிருக்க நேருகின்றது. இது பழைய நச்சுச்சுழலை மீண்டும் இயக்குவதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கும்.

இந்த ஆட்சி எப்போது கவிழும் என்று பலர் காத்திருக்கிறார்கள். இதை தேசிய மக்கள் சக்தியினரும் அறிவார்கள். நீண்டகாலத்திற்குப் பிறகு வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தபோது தமிழ் மக்களிடம் இருந்த எதிர்பார்ப்புக்கு நிகரானதே இப்போதைய தேசிய மக்கள் சக்தியின் வெற்றி. இறுதியில் வடமாகாண சபை செயலற்றுச் சீரழிந்ததுபோல இந்த அரசாங்கம் சீரழியக் கூடாது என்பதே எதிர்பார்ப்பு. ஏனெனில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்தால் தோற்பது மக்களே. இதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *