சொற்சிலம்பம் 2018: மீண்டும் தொடங்கும் மிடுக்கு
இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகம் எதிர்வரும் சனிக்கிழமை (22-09-2018) மாலை. 4.30க்கு கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் “சொற்சிலம்பம் 2018”யை அரங்கேற்ற இருக்கிறார்கள்.
பாடசாலை விவாதிகள் என்ற காலத்தைக் கடந்த பின்னரும் தமிழ் மீதும் சமூகம் மீதும் கொண்ட அக்கறையின் ஒரு விளைவாகத் தோற்றம் பெற்றதே தமிழ் விவாதிகள் கழகம். 2013ம் ஆண்டு கருக்கொண்ட இவ்வமைப்பு அவ்வாண்டு நிகழ்த்திய சொற்சிலம்பம் தலைநகர் கொழும்பில் ஒரு அசைவைத் தோற்றுவித்தது. கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபம் நிரம்பி வழிய, வந்தோர் பலர் நின்றபடியே முழு நிகழ்வையும் கண்டு களித்தமை அமைப்பின் உறுப்பினர்களிடையே மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.
இதன் தொடர்ச்சியாக கழகம் “மொழிமுனை 2014” என்ற அகில இலங்கை ரீதியலான விவாதப் போட்டிகளை நடாத்தத் திட்டமிட்டு அதை 167 பாடசாலைகளின் பங்குபற்றுதலுடன் வெற்றிகரமாக நடாத்தி முடித்தது. அதைத் தொடர்ந்து கழகத்தின் வருடாந்த நிகழ்வான “சொற்சிலம்பம் 2014” வெகு பிரமாண்டமாக 2014 ஆகஸ்ட் 10ம் திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடந்தேறியது. விமர்சனங்கள், வசைபாடல்கள், பாராட்டுக்கள் எனத் இலங்கை தமிழ் விவாதிகள் கழகத்தினை புதியதொரு தளத்திற்கு ‘சொற்சிலம்பம் 2014’ எடுத்துச் சென்றது.
சொற்சிலம்பம் 2014 இலங்கைத் தமிழ்ச் சூழலில் புதியதொரு கருத்தாடலுக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. அரசியலை அதுவும் குறிப்பாகத் தமிழர் அரசியலை மேடைகளில் விமர்சன ரீதியாகப் பேசமுடியும் என்பதை 2014ம் ஆண்டு சொற்சிலம்பமே காட்டி நின்றது.
ஒரு சிறிய இடைவெளியின் பின்னர் இப்போது புதியவர்கள், இளையவர்கள் சொற்சிலம்பம் நிகழ்வுடன் உங்களை நாடி வருகிறார்கள். விவாதிக்கவும், விமர்சிக்கவும், கலந்துபேசவும் முரண்படவும் வேண்டிய சூழலை நாம் உருவாக்கியாக வேண்டும். எல்லாவற்றுக்கும் வாய்பேச மௌனியாய் இருந்துவிட்டு நமது இருப்பே அசைக்கப்படும் போது நம்மிடம் எதுவுமே மிஞ்சி இருக்கப்போவதில்லை.
நிகழ்வுக்கு வாருங்கள்.
கலந்துபேசுவோம், உரையாடுவோம், விவாதிப்போம்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும். ஆயிரம் கருத்துக்கள் முட்டி மோதட்டும்.