ஆடித்தான் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
போராட்டக்காரர்களா – அரசியல்வாதிகளா, வெல்லப்போவது யார் என்பதே இன்று எம்முன்னுள்ள கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அரசியல்வாதிகள் ரணிலைப் பிரதமராக்கியதனூடு தங்கள் ஆட்டத்தின் முதலாவது காயை நகர்த்தியுள்ளார்கள். சஜித் என்ற பேரிடருக்கு எவ்விதத்திலும் சளைத்தவரல்ல ரணில். கோட்டாகோகமவின் திசைவழிகளே இலங்கையின் ஜனநாயகத்தின் உரிமைகளின் பாதையையும் சாத்தியக்கூறுகளையும் தீர்மானிக்கவல்லது என்பதை போராட்டக்காரர்கள் மட்டுமன்றி இலங்கையின் மீதான அன்புகொண்ட அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.
இலங்கையின் நெருக்கடி வெறுமனே ஒரு பொருளாதார நெருக்கடியல்ல என்பதைப் பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். இது அரசியல், பொருளாதாரம், சமூகம், ஆட்சியில்-நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டதொரு நாற்பரிமாண நெருக்கடி. இதை அண்மைய நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இதை வெறுமனே பொருளாதார நெருக்கடியாக நோக்கினால் இந்நெருக்கடியில் இருந்து என்றென்றைக்கும் மீளவியலாது. ஏந்தவொரு ஒற்றைப் பரிமாணத்திலும் தனித்து நோக்கவியலாதபடி இந்நான்கும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதை உணர்ந்துகொள்வது முக்கியமானது. இது தனிநபர்கள் பற்றியதல்ல. இது நமது நாட்டின் அரசியற் கட்டமைப்பு, அரசியற் பண்பாடு ஆகியவற்றின் உட்பவிப்பாக உருவாகியது. எனவே இக்கட்டமைப்பையும் இதன் பண்பாட்டையும் மாற்றாமல் நின்றுநிலைக்கக்கூடிய தீர்வு சாத்தியமல்ல.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றவுடன் பலர் மத்தியில் நம்பிக்கையும் உற்சாகமும் பிறந்தது. அது இப்போது கொஞ்சம் குறைந்தாலும் பொருளாதாரத்தை சீர்செய்வார் என்று ஒரு ஓரமாக நம்பிக்கை இருப்பதாக பலர் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கைகளின் அடிப்படை ரணிலின் அயலுறவுத் தொடர்புகள் எனில் நமது நாடு இன்னும் கூறுபோடப்படுகிறது என்று பொருள். அவரது நிர்வாகத் திறமையெனில், நல்லாட்சியின் கொடுமைகளை நினைவுகூராமல் இருக்கவியலாது. அவரது பொருளாதார அறிவு எனில் 2015 முதலான காலப்பகுதியில் இலங்கை பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை ஏனெனில் யுத்தம் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பொருளாதார வளர்ச்சியை ஆண்டுதோறும் அடைந்த நாடு இலங்கை.
ரணிலின் தாராண்மைவாத-ஜனநாயக முகத்தை முன்மொழிவோரும் மெச்சுவோரும் படலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக வாசிப்பது நல்லது. சந்திரிகா பண்டாரநாயக்கவினால் அமைக்கப்பட்ட இவ்வாணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவை குற்றவாளியாகக் கண்டதோடு அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படியும் அவரது குடியுரிமையைப் பறிக்கும்படியும் பரிந்துரை செய்தது. சந்திரிக்கா இறுதிவரை இதுதொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2015ம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் வாக்களித்தார்கள். அதைத் தொடர்ந்த மைத்திரி-ரணில் ஆட்சி ஒரு பேரிடர். இந்தப் பேரிடரே மீண்டும் ராஜபக்ச குடும்பத்தைக் கொண்டு வந்து சேர்ந்தது. தனது ஆட்சிக்காலத்தில் ராஜபக்சக்கள் மீதான எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் ரணில் பார்த்துக் கொண்டார். அதன் இன்னொரு இடைக்கால அத்தியாயமே இப்போது அரங்கேறுவது. இந்த அரசியற் தரகர்களின் கைகளில் சிக்கி நாடு சின்னாபின்னாமாகிறது.
ரணில் மக்களின் தெரிவல்ல. அவர் மேற்குலகின் தெரிவு என்பது வெளிப்படை. மக்களால் விரும்பப்படாத, அங்கீகரிக்கப்படாத ஒருவர் மக்களின் நலன்களுக்காகக் கடமையாற்றப் போவதுமில்லை, தேவையுமில்லை. அவ்வாறு ஒன்றை எதிர்பார்ப்பவர்கள் இலவுகாத்த கிளிகள். தவறிச் சகதிக்குள் விழுந்த மிருகத்தை வேட்டையாடும் நரியின் செயலை இராஜதந்திரம் என்று போற்றிப் புகழப் பலர் இருக்கிறார்கள்.
இன்று நாடு மட்டுமல்ல, நாட்டு அரசியலும் வங்குரோத்து நிலையில் தான் உள்ளது. பாராளுமன்றம் என்பது சாக்கடை என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மைக்கால நடத்தைகள் மீள உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்போர் மக்களின் மனோநிலையில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறார்கள் என்பதை அவர்களின் நடத்தை காட்டுகிறது. பாராளுமன்றம் வயதானவர்கள் பொழுதுபோக்கிற்கும் பேச்சுத்துணைக்கும் சேரும் ஒரு கட்டடமாக மாறிவிட்டது. தான் பொருளாதாரத்தை சீர்படுத்தவே வந்துள்ளேன் என்ற வாக்குமூலத்தின் மூலம் தன்னிடம் வேறெதையும் எதிர்பாராதீர்கள் என்று ரணில் தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறார்.
எந்த அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்குப் போகச் சொன்னார்களோ அதே அரசாங்கம் மகிந்தவுக்கு பதிலாக ரணில் என்ற முகமூடியைச் சூடியபடி அதே ஆட்களுடன் வலம் வருகிறது. இது மக்கள் கோரிய மாற்றமல்ல. பதவியேற்று ஒருவாரம் கடந்துள்ள நிலையில் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தனது திட்டம் என்ன என்பது பற்றி இன்றுவரைப் பிரதமர் வாய்திறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கையரின் அண்மைய நடத்தைகளின் எங்களின் வங்குரோத்து நிலையை விளக்கப் போதுமானவை. முதலாவது, பிரதமரது அண்மைய உரை, அவர் வெளிப்படையாக உண்மையைச் சொல்லிவிட்டார் என்பதற்காக மெச்சப்பட்டது. மக்களால் தெரிவானவர் மக்களுக்கு உண்மையைச் சொல்வதுதானே நியாயம். அதுதான் மக்கள் பிரதிநிதிகளின் பணி. வேளிப்படையாக உண்மை சொன்னவரை மெச்சுகிற அளவுக்கே எமது பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்பதும், அவர்களின் பொய்களை அறிந்தும் தொடர்ந்தும் அவர்களை பாராளுமன்றிற்கு அனுப்பியுள்ளோம் என்பது எவ்வளவு பெரிய அரசியல் வங்குரோத்து மட்டுமல்ல அறஞ்சார்ந்த வறுமை.
இரண்டாவது, ரணில் பிரதமரானவுடன் அவர் நல்ல நிர்வாகி, இலங்கைக்கு அவரே தேவை என்று பலரும் எழுதியதைக் கவனித்தேன். பிரதமராகத் தவறிழைத்தவரை, மத்திய வங்கிப் பிணைமுறி ஊழலில் நாட்டுக்குப் பலகோடி நட்டத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தவரை நல்ல நிர்வாகி என்பது என்ன மாதிரியான மனநிலை. கெட்டிக்காரத்தனமான திருடுபவனை வல்லவன் என்று கொண்டாடுவதை என்னவென்பது.
மூன்றாவது, எல்லோரும் சர்வதேச நாணய நிதியத்திடம் எப்படியாவது கடன் வாங்கிவிடவேண்டும் என்று சொல்கிறார்கள். கடன் வாங்குவது தவறு என்றுதான் எமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. பிறகு நாட்டைக் கடன்வாங்கி இன்னும் கடனாளி ஆக்கு என்று வாதிடுவதை ஆதரிப்போரை என்னவென்னது. இது எவ்வகைப்பட்ட அறம்.
கோட்டாகோகம போராட்டாமானது தொடரவேண்டியதன் அவசியத்தை மேற்சொன்ன விடயங்கள் காட்டி நிற்கின்றன. ரணில் வந்தால் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கும் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். பானையில் எதுவும் இல்லாதபோது அகப்பையிலே கிள்ளுவதற்கு என்ன இருக்கிறது. ரணில் பொதுஜன பெரமுனவின் தயவில் இருக்கிறார். பொதுஜன பெரமுன போராட்டக்காரர்களுக்கு எதிராக இருக்கிறது. இவ்வளவுதான்.
போராட்டக்காரர்களைக் கவனிக்க குழு அமைத்ததன் மூலம் இதன்மீதான தனது முழுமையான கவனத்தை ரணில் வைத்திருக்க விரும்புகிறார். ஒருபுறம், இப்போராட்டம் விரிவிடையாமல் காலிமுகத் திடலுக்குள்ளேயே வைத்திருக்கவும் அதன் இயங்கியலைக் கண்காணிக்கவும் அவர் அரசவளங்களைப் பயன்படுத்துகிறார். மறுபுறம், இப்போராட்டத்தை ஜனாதிபதிக்கு ஒரு அழுத்தமாகப் பிரயோகிப்பதனூடு தனது இருப்பைத் தக்கவைக்க முனைகிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் வழமையான அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முனைகிறார்கள்.
இதற்கு மாற்றாக புதிய அரசியல் பண்பாடு ஒன்றை நோக்கி மக்களைப் பயணிக்க வைக்கும் காரியத்தில் இப்போராட்டக்காரர்கள் இறங்கியிருக்கிறார்கள். இது ஒரு எதிர்ப்பியக்கமாக வளர்ந்துள்ளது. இது மக்களிடம் மக்களுக்கான ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான புதிய அரசியல் ஆற்றலை மட்டுமன்றிப் புதிய அரசியற் பண்பாடு, வலுவான பொறுப்புக்கூறல், முடிவெடுப்பதில் குடிமக்களின் பங்கேற்பு, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை போன்றவற்றைக் கோரி நிற்கின்றது.
இந்தக் கோரிக்கைகள் இரண்டு விடயங்களைக் காட்டி நிற்கின்றது. முதலாவது, பாராளுமன்ற ஜனநாயகம் எவ்வாறு ஆதிக்க அரசியல் வர்க்கத்தின் அனைத்துத் தரப்பாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். இரண்டாவது வெறும் வாக்காளராக இல்லாமல் பங்கேற்பாளராக அரசியலில் இணைந்திருப்பதற்கான குடிமக்களின் புதிய ஜனநாயக விருப்பைக் கோடிடுகின்றன. இவை வரவேற்கத்தக்க மாற்றங்கள்.
இந்த மாற்றங்கள் இன்றைய அரசியல் வர்க்கத்தின் விருப்புகளுக்கு நேரெதிரானது. வாக்களிப்பதற்கு அப்பால் பார்வையாளர்களாகக் குடிமக்களை வைத்திருந்த வைத்திருக்க விரும்புகிற ஒரு அரசியல் கட்டமைப்பு ஆட்டக் கண்டுள்ளது. இந்தக் கட்டமைப்பைத் தக்கவைக்க கட்சி பேதமின்றி அனைவரும் உழைக்கிறார்கள். ஏனெனில் இந்தக் கட்டமைப்பு தகர்வதன் ஆபத்துக்களை குடிமக்களை விட அவர்களே நன்கறிவார்கள். எனவே இந்த எதிர்பியக்கத்தை சிதைப்பதும் இல்லாமல் செய்வதுமே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. அதற்கு ஜனநாயகத் தாரளவாத முகமூடியுடன் ஒருவர் வந்திருக்கிறார்.
இனிவரும் காலங்கள் இவ்வெதிர்ப்பியக்கத்திற்கு நெருக்கடியான காலமாக இருக்கும். “இந்நெருக்கடியான காலத்தில் அரசாங்கம் செயற்படக் காலஅவகாசம் கொடுக்க வேண்டும்”, “அரசியல் ஸ்திரத்தன்மைக்கு போராட்டக்காரர்கள் உதவவேண்டும்” என்ற குரல்கள் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இவை அரசியல்வாதிகளின் குரல்களே. அவர்தம் பிரதிநிதிகளின் குரல்களே. இப்போது பிரிகோடுகள் மிகத் தெளிவாகியுள்ளன. பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஒருபுறம் போராட்டக்காரர்கள் மறுபுறமுமாகக் களத்திலே நிற்கிறார்கள். இலங்கையின் தலைவிதி யார்கையில்?