ஐரோப்பா: கலர் மங்கும் கனவுகள்
ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியபோது உலகின் பிரதான நாடுகளின் கூட்டாக வலிமையான அமைப்பின் தோற்றமொன்று எதிர்பார்க்கப்பட்டது. இன்று கால் நூற்றாண்டுக்குப் பிறகு அதன் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது. இது எவ்வாறு நடந்தது. தனக்கென தனியான நாணயம், பொதுச் சந்தை, தனியான பொதுச் சட்டவிதிகள், உறுப்பு நாடுகளிடையே கட்டற்ற பயணத்திற்கான திறக்கப்பட்ட எல்;லைகள் என மிகுந்த கனவுகளுடன் ஜொலித்த ஒரு அமைப்பின் கலர் மங்குவதை இப்போது காண்கிறோம். இது எவ்வாறு நடந்தது. இது எதை எதிர்வுகூறுகிறது. ஐரோப்பா மீது இருந்த ஈர்ப்பும் அதன் பொருளாதாரப் பலமும், நாகரீகமானவர்கள், முன்னேறிய சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. இன்று காலங்கள் மாற கனவுகளும் மாறுகின்றன.
ஐரோப்பா ஒரு கண்டமாக முன்னெப்போதுமில்லாத நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக அண்மைய மூன்று நிகழ்வுகள் இதனை இன்னொருமுறை உறுதிப்படுத்தியுள்ளன. முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்களிப்பு நடாத்தப்பட்டு அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையிலும் இன்றுவரை அதில் இழுபறி தொடர்கிறது. இரண்டாவது பதவிக்கு வந்துள்ள இத்தாலிய அரசாங்கம் முன்வைத்த 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் கடந்த வாரம் நிராகரித்துவிட்டது. இது இத்தாலிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான மோதல் போக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. மூன்றாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டை முன்தள்ளியவரும் அதன் பிரதான ஆதரவாளர்களில் ஒருவருமான ஜேர்மன் சான்சலர் அங்கெலா மேக்கலின் கட்சியானது பிராந்தியத் தேர்தல்களில் சந்தித்த மோசமான தோல்வியின் விளைவால் 2021ம் ஆண்டு தான் பதவி விலகுவாதாக அவர் அறிவித்துள்ளார். பெருந்தேசியவாத நாசிசக் கூறுகள் வெளிப்டையாகவே ஜேர்மனியில் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில் மேக்கலின் இவ்வறிவிப்பு வருகிறது.
இம்மூன்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியை மட்டுமன்றி ஒரு கண்டமாக ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. ஒருபுறம் பொருளாதார நெருக்கடி 2.0விற்கு ஐரோப்பிய நாடுகள் தயாராக வேண்டும் என்று சில பொருளியல் வல்லுனர்கள் அறிவிக்கின்றனர். திறந்த பொருளாதார, கட்டற்ற வர்த்தகக் கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றும் அரசாங்கங்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் மல்லுக்கட்டுவதானது இந்நெருக்கடி அடுத்த கட்டத்தை அடைந்துள்ளதை தெளிவாகவே எடுத்துக்காட்டுகிறது. அதையே எட்டமுடியாதாக உள்ள பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கை உறுதி செய்கிறது. இன்னொரு வகையில் ஐரோப்பா இன்னொரு திசையில் பயணிப்பதை நாம் அவதானிக்க வேண்டும். ஏனெனில் கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்தது மட்டுமன்றி அது நடந்தேறிய களமும் ஐரோப்பா என்பதை மறந்துவிடலாகாது.
பிரெக்ஸிட்: முட்டுச் சந்தில்
2016ம் ஆண்டு யூன் மாதம் 23ம் திகதி பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று வாக்களித்தார்கள். இதன்படி 2019 மார்ச் மாதம் 29ம் திகதி பிரித்தானியா நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதை சாத்தியமாக்கும் உடன்படிக்கைகள் இதுவரை எட்டப்படவில்லை. இதனால் இன்னமும் நிச்சயமின்மை தொடர்கிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தையும் குறிப்பாக பிரித்தானியாவையும் பலமாகப் பாதித்துள்ளது.
மூன்று அடிப்படை விடயங்களில் எதுவித முடிவையும் எட்ட முடியாமல் பிரித்hனியா தள்ளாடுகிறது. முதலாவது, பிரிந்த பின்னர் எல்லைகளை என்ன செய்வது, குறிப்பான வட அயர்லாந்தின் எல்லைகள் தொடர்பான மிகச்சிக்கலான அரசியல் நெருக்கடியை இது உருவாக்கியுள்ளது. இரண்டாவது, பிரிவின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கின்ற பிரித்தானியப் பிரஜைகளின் கதி என்ன. அதேபோல் பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு பிரஜைகளின் கதி என்ன. மூன்றாவது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திடம் கடன்பட்டுள்ள தொகையும் அதை எவ்வாறு செலுத்துவது என்பது பற்றி எட்டவியலாத உடன்பாடு.
இலாபம் குறைவுபடுவதை யாரும் விரும்பவில்லை. எனவே ‘வேணும் ஆனால் வேண்டாம்’ என்ற வகையில் பேரம்பேசல் முடிவின்றித் தொடர்கிறது. இது இன்னொருபுறம் திறந்த சந்தை மூடிய சந்தையாகியுள்ளதையும் காட்டாமல் இல்லை. உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியின் ஒரு பரிமாணம் இங்கு அரங்கேறுகிறது.
இத்தாலி – ஐரோப்பிய ஒன்றிய முறுகல்
இவ்வாண்டு இத்தாலியில் தீவிர தேசியவாதத்தை முன்னெடுக்கும் அதிவலது நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளின் கூட்டணி பதவிக்கு வந்தது. இந்த அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ள நிலையில் அதை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக விமர்சித்து இதை ஏற்க மறுத்துள்ளது. இது இதுவரை பொதுவெளியில் உரையாடப்படாத ஒரு விடயத்தை முன்தள்ளியுள்ளது. இது சில வினாக்களையும் எழுப்பியுள்ளது. முதலாவது ஒரு நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தை ஏற்க முடியாது என்று எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் சொல்லவியலும். இரண்டாவது அவ்வாறு சொல்வதன் காரணம் என்ன. மூன்றாவது இதற்குக் காரணமாகச் சொல்லப்படாத காரணிகள் உண்டா.
இத்தாலியின் 2019 வரவு செலவுத் திட்டத்தில் சிக்கன நடவடிக்கைகளை அதிகரிப்பதாக இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டதாகக் கூறியே ஐரோப்பிய ஒன்றியம் அதை நிராகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் எதையுமே இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்ததில்லை. முதன்முறையாக இது நடந்துள்ளது. அதேவேளை வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருத்திய வரவு செலவுத்திட்டத்தை மீளச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இத்தாலியைக் கோரியுள்ளது.
இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இத்தாலிக்கும் இடையிலான நேரடி முறுகலாக உருவெடுத்துள்ளது. இது இன்று ஐரோப்பா எதிர்நோக்கும் சவாலின் புதிய பரிணாமங்களைத் தெளிவாகக் காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் தற்போதைய இத்தாலிய அரசாங்கமும் திறந்த சந்தைப்பொருளாதார விதிகளை ஆதரித்து நடைமுறைப்படுத்துவன. தாரண்மைவாதப் பொருளாதார முறையை முன்தள்ளுவன. நிதிமூலதனத்தினதும் பல்தேசியக் கம்பெனிகளினதும் நலன்களைக் காப்பன. இருந்தபோதும் இவர்களுக்கிடையில் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் முரண்பாடு எழுந்திருப்பதானது கவனிப்புக்குரியது.
இத்தாலிய அரசாங்கத்தால் ‘மக்களுக்கான வரவு-செலவுத் திட்டம்’ என்று முன்வைக்கப்பட்ட இத்திட்டத்தை கண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் இன்னொரு பொருளாதார நெருக்கடியைத் தூண்டக்கூடிய வகையில் ‘பொறுப்பற்ற வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக’ இத்தாலிய அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டியது. அதே வேளை இப்போது இத்தாலிய அரசாங்கத்தின் முன் இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்றில் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பில்லியன் கணக்கான யூரோக்களில் ஐரோப்பிய ஒன்றிய அபராதங்களை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும். எந்தவொரு முடிவையும் மூன்று வார காலத்திற்குள் எடுத்தாக வேண்டும்.
இது ஆளும் இத்தாலிய அரசாங்கக் கூட்டாளிக் கட்சிகளிடையே நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அதிகார மையத்;துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்பதற்கான சமிக்கைகளை வழங்கும் வேளை ஐரோப்பிய ஒன்றிய மீதான தேசியவாத எதிர்ப்பிற்கு இத்தாலிய அதிகாரிகள் அழைப்பு விடுக்கிறார்கள்.
துணைப் பிரதமரான மட்டியோ சல்வீனி “இது எதையும் மாற்றாது, நாங்கள் பின்வாங்க மாட்டோம். அவர்கள் ஒரு அரசாங்கத்தைத் தாக்கவில்லை, மக்களைத் தாக்குகிறார்கள். இத்தகைய விடயங்கள் இத்தாலிய மக்களை இன்னும் கோபமடையச் செய்யும். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்பு இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்று மக்கள் அதன்மீது வெறுப்படைவார்கள். இதைத்தான் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறதா” என்று கேள்வி எழுப்பினார்.
பிரபல ஐந்து நட்சத்திர இயக்கத்தின் முக்கியஸ்தரும் இன்னொரு துணை பிரதமருமான லூய்ஜி டி மாய்யோ: “இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிடிக்காத முதல் இத்தாலிய வரவு-செலவுத் திட்டமாகும். எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், இது புரூசெல்ஸ்ஸில் எழுதப்படாத, ரோமில் எழுதப்பட்ட முதல் இத்தாலிய வரவு செலவுத் திட்டமாகும்” என்றார்.
தீவிரவலதுசாரி இத்தாலிய அரசாங்கக்கூட்டணிக்குள் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் இவ்விடயம் ஏற்படுத்தியுள்ளன. இது இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. இது தீவிரவாத நிலைப்பாடுடைய கட்சிகளுக்கு பிரச்சனையாகியுள்ளது. இத்தாலியத் தேசியவாதத்தை ஆயுதமாக்கி ஆட்சிப்பீடம் ஏறிய இக்கட்சிகள் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இத்தாலி வெளியேற செயற்பட வேண்டும். அதுவே உண்மையான இத்தாலிய தேசியவாதிகளின் நிலைப்பாடாக இருக்க முடியும் என்ற வாதத்தினால் கலவரமடைகிறார்கள். ஒருபுறம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எவ்வாறு பதிலளிப்பது என்ற வாதப் பிரதிவாதங்கள் உச்சத்தை எட்டியிருக்கின்றன. அதேவேளை இவர்களது தீவிரதேசியவாதிகளில் ஒருபகுதி பிரித்தானியாவைப் போல ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான வாக்;கெடுப்பை நடாத்தக் கோருகின்ற நிலையில் அதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களாக இன்னொரு பரபரப்பான செய்தி இத்தாலிய ஊடகவெளியை நிறைத்தது. திங்கட்கிழமை துணைப் பிரதமர் மட்டியோ சல்வீனியின் காதலியான எலிசா இசராடே சல்வீனியுடனான மூன்றாண்டு உறவை முடித்துக் கொள்வதாக தனது இன்ஸ்டாமில் அறிவித்தார். அதிலும் முக்கியமான அச்செய்தியை அவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்த ஒரு புகைப்படத்துடன் இணைத்திருந்தார். இப்போது இத்தாலியின் பேசுபொருளாக இது மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக இது இத்தாலியைத் தாண்டி சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இத்தாலி எதிர்நோக்கும் உண்மையான நெருக்கடி இப்போது இன்னொரு செய்தியால் மடைமாற்றப்பட்டுள்ளது.
இத்தாலி இப்போது பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் நிற்கிறது. 2008 உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய நிதியில் சரிவில் இருந்து இன்னமும் வெளிவரவில்லை. இத்தாலிய வங்கிகள் இப்போது 260 பில்லியன் யூரோ மதிப்பீட்டிலான அறவிட முடியாக் கடன்களினால் ஏற்கனவே நெருக்கடியில் சிக்கியுள்ளன. இத்தாலியின் பொருளாதார நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சுவிஸ் பன்னாட்டு முதலீட்டு வங்கியான கிரடிட் சுவிஸ் ஊசநனவை ளுரளைளந ஜேர்மனியப் பத்திரங்களை விட 4 சதவிகிதம் கூடுதலாக வட்டி செலுத்துகின்ற அளவிற்கு இத்தாலியப் பத்திரங்கள் வீழ்ச்சியை அடையுமானால், இத்தாலிய வங்கிமுறை ‘மீளவியலாத பாரிய அழுத்தத்தை’ எதிர்கொள்ளும் என மதிப்பிட்டுள்ளது. இப்போது கிட்டத்தட்ட இப்பத்திரங்கள் 3.5 சதவீதத்தை எட்டியுள்ளன. இது இத்தாலியைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்னொரு பொருளாதார நெருக்கடியின் வருகையை எதிர்கூறுவதாக உள்ளது.
2008 பொருளாதார நெருக்கடியின் பின்னரான ஒரு தசாப்தகால பொருளாதாரச் சிதைவு மற்றும் பழிவாங்கும் தன்மை கொண்ட ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்குப் பின்னர், 2008க்கு முன்னர் இருந்ததை விட இத்தாலியின் பொருளாதாரமானது மேலும் சிறியதாகியுள்ளது. எல்லா நாடுகளும் கடன்பட்டுள்ளன. இது இத்தாலிக்கும் மட்டுமே உரியதல்ல. கிரீஸ் (அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 180 சதவிகிதம்), போர்ச்சுக்கல் (126 சதவிகிதம்), ஸ்பெயின் (99 சதவிகிதம்), பிரான்ஸ் (98 சதவிகிதம்) போன்ற நாடுகளும் கடன்பட்டுள்ளன.
2008 இல் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பா எங்கிலும் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து பாரிய பணம்-அச்சடிப்பு மூலம் கடனில் மூழ்கியுள்ள நாடுகளுக்கு நிதியளிப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்நாடுகள் தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டன. ஆனால் அதன் விளைவுகள் தசாப்தகாலந் தாண்டியும் நிலைக்கிறது. இதுவே யூரோ நெருக்கடி 2.0வை உருவாக்கும் என்ற அச்சத்தை விதைத்துள்ளது. இந்த அச்சம் பிரதானமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வலிமையான நாடான ஜேர்மனியின் ஆட்சியாளர்களிடையே நிலவுகிறது.
அங்கெலா மேக்கலின் முடிவு
இந்தப் பின்புலத்தில் ஜேர்மனியில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களும் கவனிக்கத்தக்கன. அண்மையில் நடைபெற்ற ஜேர்மன் பிராந்தியத் தேர்தலில், ஜேர்மனிய சான்சலர் அங்கெலா மேக்கலின் கூட்டணி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து மேக்கல் 2021ஆம் ஆண்டுடன் தமது பதவியிலிருந்து விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். தமது பதவிக் காலம் முடிந்ததன் பின்னர் எந்தவொரு அரசியல் பதவியையும் வகிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தமது கட்சியின் தலைவரைத் தெரிவுசெய்யும் தேர்தலிலும் தான் போட்டியிடுவதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வலிமை மிக்க தலைவராகத் திகழ்பவர் அங்கெலா மேக்கல். குறிப்பாக அகதிகள் பிரச்சனையில் அவரது நிலைப்பாடு மெச்சப்பட்டது. அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அகதிகளை அனுமதித்ததன் ஊடு ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதியை அவர் கெடுத்துவிட்டதாக அவர் மீது மிகப் பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனது தொடர்ச்சியாகவும் இன்று ஜேர்மனியில் அதிகரித்துள்ள தேசியவாத மனோநிலையின் விளைவாகவும் அவரது கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இது இன்னொரு வகையில் மேக்கலால் முன்னெடுக்கப்பட்ட திறந்த பொருளாதார, ஜனநாயக மனிதாபிமான கலவையில் அமைந்த சித்தாந்தத்தின் அரசியல் முடிவை குறிப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் அளவில் காட்டுகிறது.
இவற்றுக்கும் அப்பால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்னொரு முக்கிய நாடான பிரான்ஸின் அரசியல் நெருக்கடி பாரிய பிரச்சனையாகியுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் பஅரசாங்கத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமைச்சரான ஜெரார்ட் கொலொம்ப் கடந்த மாதம் தனது பதவியை இராஜினாமா செய்தது, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தின் உச்சபட்ச பலவீனத்தையும் ஆழ்ந்த நெருக்கடியையும் அம்பலப்படுத்தியுள்ளது. அதேவேளை இதற்குச் சிலகாலம் முன் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக்கோலோ உலோ, ஒரே மாதத்தில் இராஜினாமா செய்த இரண்டாவது இடத்தில் இருக்கும் அமைச்சராவார். இரயில்வே வேலைநிறுத்தத்திற்கும் மற்றும் தேசிய இரயில்வேயைத் தனியார்மயமாக்கியதற்கும் பின்னர், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் புகழ் மங்கத் தொடங்கியுள்ளது. அவரது கொள்கைகள் மக்களது நலன்களை மேம்படுத்துமென வெறும் 6 சதவிகித பிரெஞ்சு மக்கள் மட்டுமே நம்புகின்றனர் என்று கடந்த வாரம் எடுக்கபட்ட கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. மக்ரோனின் அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு நன்மதிப்பை இழந்தது. நீண்ட போராட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்ட ஓய்வூதியங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் வேலைவாய்ப்பற்றோர் காப்பீடு ஆகிய நலன்களை உள்ளடக்கிய அடிப்படை சமூகத் திட்டங்களில் வெட்டுக்களை மக்ரோன் ஏற்படுத்தி வருகின்றார். இவையும் இவரது சகாக்களின் பிரிவும் பிரான்ஸில் நிச்சயமின்மைக்கு வழிஏற்படுத்தி உள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் எல்லாம் நெருக்கடிக்குள் இருக்கின்றன.
இன்று ஐரோப்பா ஒரு கண்டமாகவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அரசியல் அமைப்பாகவும் இருப்பதையும் அதன் எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது. கனவுகள் கலைகின்றன. நிஜவாழ்க்கை யதார்த்தத்தையும் நிச்சயமின்மையையுமே விட்டுச் செல்கிறது.