அரசியல்உலகம்

காலத்தின் திசைவழிகள்: போராட்டங்களின் உலகமயமாக்கல்

வாழ்க்கை தெரிவுகள் எதனையும் வழங்காதபோது போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என மக்கள் உணர்கிறார்கள். ஒருபுறம் செல்வம் சிலரது கைகளில் மலைபோல் குவிகையில் இருந்த கொஞ்சம் மெதுமெதுவாய் களவாடப்படுவதை அவர்கள் உணர்கையில் அவர்கட்கு போக்கிடம் எதுவும் இல்லை. அமைதியாக இருத்தல், பொறுமை காத்தல் போன்ற போதிக்கப்பட்ட அகிம்சை வழிமுறைகள் எதுவுமே பயனளிக்காது என்பதை உணர்ந்த பின்னர் மக்களால் என்ன செய்ய முடியும். இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற நிலையில் அவர்கள் செய்யக் கூடியது என்ன. தனது எதிர்காலம் மட்டுமன்றி தனது குடும்பத்தின் தனது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாவதற்கும் அப்பால் எதிர்காலமற்ற காலத்தை எதிர்நோக்கி இருக்கையில் என்ன செய்யவியலும்.

உலகம் இப்போது போராட்டங்களால் தகித்துக் கொண்டிருக்கின்றது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் போராட்டங்கள் நடக்கின்றன. அவற்றைப் பிராந்திய ரீதியாகவோ, கண்டங்கள் ரீதியாகவோ வேறுபிரிக்க முடியாதபோடி அவை பல்கிப் பரவியுள்ளன. சரியாகச் சொல்வதானால் அவை உலகமயமாகியுள்ளன. அவற்றில் உலகக் கவனத்தை எட்டாத சில முக்கிய போராட்டங்களையும் அதனையொட்டி நாம் வாழும் உலகின் எதிர்காலத்தின் திசைவழி குறித்த பார்வையையும் இக்கட்டுரை வழங்க முனைகிறது.

 

பங்களாதேஷ்: வீதிக்கு வந்த மாணவர்கள்

கடந்த மாதம் 29ம் தேதி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் பிரதான விமான நிலைய வீதியில் பயணிகளை ஏற்றுவதற்காக ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரு பேருந்துகளுக்கு இடையிலான போட்டியில் மாணவனும் மாணவியும் சிக்கி மரணமடைந்தனர். இது பங்களாதேஷ் மாணவர்களை வீதிக்குக் கொண்டுவருவதற்கான தீப்பொறியாக அமைந்தது. இதையடுத்து பங்களாதேஷில் வீதிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் மாணவர்கள் போராடினார்கள். இது மொத்த பங்களாதேஷையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

உலகளாவிய ரீதியில் வீதிவிபத்துக்களில் அதிகளவானவர்கள் மரணமடையும் நாடுகளில் பங்களாதேஷ் முன்னணியில் உள்ளது. பங்களாதேஷில் ஆண்டுதோறும் சராசரியாக 4,000 பேர் சாலைவிபத்தில் இறப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 2017-ஆம் ஆண்டில் மட்டும் இங்கு வீதிவிபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,200.

வீதிவிபத்துக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும் எனக்கேட்டும், போக்குவரத்து, வீதிவிபத்து தொடர்பான சட்டங்களில் திருத்தம் வேண்டுமெனவும் கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். தொடக்கத்தில் இதை அரசோ ஊடகங்களோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. நாட்கள் செல்லச் செல்ல தங்கள் போராட்ட வடிவத்தை அவர்கள் மாற்றினார்கள். வாகனத்தை ஓட்டுபவர்கள் முறையான ஆவணங்கனையும் உரிமங்களையும் வைத்திருக்கிறார்களா என மாணவர்கள் வாகனங்களைச் சோதனையிடத் தொடங்கினர்.

நாட்கள் செல்லச் செல்ல மக்கள் ஆதரவு மாணவர்களுக்குப் பெருகியது. மாணவர்களது கோரிக்கைகள் நியாயமானவை என மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் மாணவர்களிடையே குண்டர்கள் புகுந்து பொலிசாருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பொலிசார் மாணவர்களைத் தாக்கினர். டாக்கா போராட்டக் களமாகக் காட்சியளித்தது. மாணவர்களின் போராட்டங்களால் பங்களாதேஷின் தலைநகரம் ஸ்தம்பித்தது.

அரசாங்கம் குண்டர்களின் உதவியுடன் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டி அதற்கு பொலிசாரின் பதில் வன்முறை மூலம் போராட்டத்தை வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் பங்களாதேஷ் வரலாற்றில் இது முக்கியமான ஒரு போராட்டமாகக் கொள்ளப்படுகிறது. மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக தலைநகரையே கதிகலங்க வைத்த நிகழ்வு ஒருபுறம் ஆச்சரியமூட்டுவதாய் இருந்தாலும் மறுபுறம் அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது.

 

ரையன் எயார்: விமானிகளின் சோகக்கதை

விமான ஓட்டிகள் பற்றிய கனவு நம்மில் பலருக்கு உண்டு. கம்பீரமான தோற்றம், நல்ல சம்பளம், இராச மரியாதை என விமான ஓட்டிகள் பற்றிய பிம்பங்கள் பலமானவை. விமான ஓட்டியாக ஆசைப்படும் பலர் இந்த பிம்பங்களால் கவரப்பட்டவர்களே. இப்போது ஐரோப்பாவெங்கும் ஒருதொகை விமான ஓட்டிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ரையன் எயார் விமானச் சேவையைச் சேர்ந்த விமானிகள் கடந்த வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் 400 விமானங்களை இச்சேவையால் இயக்க முடியவில்லை. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 74,000 பயணிகள் பாதிக்கப்பட்டார்கள்.

‘ரையன் எயார் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது, ரையன் எயார் மாற வேண்டும். எங்களை மதியுங்கள்’ என்ற பதாகைகள் விமான நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு 130 மில்லியன் பயனர்களை ஏற்றிச் சென்றிருந்த ரைன்எயார், விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக உள்ளது. அது, குறைந்த சம்பளங்கள் மற்றும் நீண்ட வேலை நேரங்களைத் திணிக்கும் அதன் வியாபார மாதிரியின் அடிப்படையில் அதீத-சுரண்டலுக்கான புதிய நிர்ணய வரம்புகளை அமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. மிகக்குறைவான விலையில் ஆசனங்களை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தன்வசம் வைத்துள்ளது. அதேவேளை மிகக்குறைந்த ஊதியத்தைத் தொழிலாளர்களுக்கு வழங்குவதன் மூலம் ஏராளமான இலாபத்தை அது சம்பாதித்துள்ளது.

குறிப்பாக விமானிகள் தொழிற்சங்கமாவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு மிகக்குறைவான மருத்துவக் காப்புறுதியே வழங்கப்படுகிறது. சம்பளம் தொடர்பான நியமமான விதிகள் கிடையாது. நேர அட்டவணையோ வேலைநேரக் கட்டுப்பாடுகளோ கிடையாது. 10 அமெரிக்க டாலர்கள் சம்பளம் வழங்கப்படும் விமானச் சேவை பணியாளர்களைப் பணியமர்த்த, குறைவூதிய நாடுகளில்—குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்—பிழிந்தெடுக்கும் முகமைகளைப் பயன்படுத்தி, அடிமட்ட சம்பளத்திற்கு பணியாளர்களை நியமிக்கிறது. 4,000 க்கும் அதிகமான ரைன்எயர் பணியாளர்கள் மாதத்திற்கு மிகக் குறைவாக 600 டாலர் அளவுகே சம்பாதிக்கின்றனர்.

விமானிகள் ரையன் எயார் விமானச் சேவை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் ஒரு-ஆள் நிறுவனத்தை நிறுவி, அயர்லாந்தில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்க நிர்பந்திக்கப்பட்டார்கள். அதன்படி அவர்களது சம்பளமானது அவர்களது தனியார் நிறுவனம் ரையன் ஏயாருக்கு வழங்கிய சேவைக்காக கொடுக்கப்பட்ட தொகையாக அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும். இதன் மூலம் பல விடயங்களை ரையன் ஏயார் சாதித்துள்ளது. முதலாவது இது சேவைக்காக ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனிக்கு வழங்கும் தொகை. எனவே தொகையைப் பெற்ற கம்பெனி (விமானி) பெற்ற தொகைக்கு அரசுக்கு வரி செலுத்த வேண்டும். இது தனியாள் வரியல்ல, கம்பெனி வரி எனவே வரிவீதம் அதிகம். இரண்டாவது சேவையைப் பெற்றுக் கொள்வதால் முதலாளி-தொழிலாளி உறவு அங்கே கிடையாது. எனவே தொழிலாளி குறித்த பொறுப்பு ஏதும் ரயன் எயாருக்குக் கிடையாது. இதனால் காப்பீடு, மருத்துவ உதவி, ஓய்வூதியம், பிற கொடுப்பனவுகள், விடுமுறை என எதுவும் கிடையாது. இதனால் தொழிலாளிக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைப் பாதுகாப்பே இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

விமானி அல்லாத பிற ஊழியர்கள் தனியார் முகவர் நிறுவனங்களால் வேலைக்கமர்த்தப்படுகிறார்கள். அம்முகவர் நிறுவனங்களின் சேவைக்கு ரையன் எயார் தொகையை வழங்குகிறது. இவ்வாறு வேலைக்கமர்த்தும் தனியார் முகவர் நிறுவனங்கள் எந்தவித மருத்துவ காப்பீடோ, ஓய்வூதியமோ பிற தொகையோ எதுவுமே கிடையாது என ஒப்பந்தத்தில் உடன்பாட்டைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் விமானியல்லாத பிறருக்கு எதுவித அடிப்படையான சமூகப் பாதுகாப்பும் இல்லை.

ரையன் எயார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு நெதர்லாந்தைச் சேர்ந்த் விமானி ஒருவர் வேலைநிறுத்தத்திற்கு ஒருவாரம் முன்னர்  மலாகா விமான நிலையத்தின் பணியாளர் கார் நிறுத்தப்பகுதியில் இறந்து கிடந்தார். அவர் பெல்ஜியத்தின் புரூசெல்ஸிற்கு விமானம் செலுத்த வேண்டியிருந்த நேரத்திற்கு சற்று முன்னர் தான் தற்கொலை செய்து கொண்டார். இது ரைன்எயர் விமானியின் இரண்டாவது தற்கொலையாகும். சுpலகாலம் முன்ர் அப்போது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் லென்னன் விமான நிலையத்தில் பிரித்தானிய விமானியொருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். விமானிகள் எதிர்நோக்கும் மன அழுத்தம் அபரிமிதமானது.

அயர்லாந்தில் தலைநகரைக் கொண்டுள்ள ரையன் எயாரின் அயர்லாந்து விமானிகள் கடந்தாண்டு நான்கு தடவைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஓரேயொரு கோரிக்கையையே முன்வைத்தனர்;. தாங்கள் தொழிற்சங்கமாவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அது. இதற்கு பதிலளித்த ரையன் எயாரின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக்கல் ஓ-லியரி ‘தொழிற்சங்கமாவதை அனுமதிப்பதை விட நான் எனது கைகளை வெட்;டிக் கொள்வது மேல்’ எனப் பதிலளித்தார். இதையடுத்து ஸ்பெயின், பிரித்தானியா, நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள விமானிகளும் இக்கோரிக்கையை கூட்டாக முன்வைத்தனர். இது சாத்தியமாகபோது கடந்தாண்டு கிறிஸ்மஸ்ஸை ஒட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மிரட்டியதன் விளைவாக ரையன் எயார் நிர்வாகம் தொழிற்சங்கமாதலை ஏற்றுக் கொண்டதோடு அதனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உடன்பட்டது. ஆனால் எட்டு மாதங்கள் கடந்த நிலையில் எதுவித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. இதனால் விமானிகளின் எக்கோரிக்கையையும் ரையன் எயார் கணக்கெடுக்கவில்லை. இதன் விளைவால் இப்போது இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இப்போராட்டமானது ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் 37 நாடுகளில் 86 விமான நிலையங்களில் இருந்து 13,000 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு பெருநிறுவனத்திற்கு எதிரான ஓர் உலகளாவிய போராட்டமாக வேகமெடுத்து வருகிறது. இதன் தீவிரத்தன்மை இன்று உலகம் எதிர்நோக்கும் சவால்களுக்கான சரியான உதாரணமாகும்.

இது ஐரோப்பாவை இன்று நிலைகுலைய வைத்துள்ள ஒரு போராட்டமாகும். இது இன்று ஐரோப்பாவெங்கும் எழுகின்ற போராட்டக் குரல்களின் ஒருபகுதி. குறிப்பான ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானிகள் இதில் ஈடுபட்டுள்ளமையானது ஒரு சர்வதேசியத்தை உழைக்கும் மக்களின் சுரண்டலுக்குள்ளாகும் மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவின் 50,000 பல்கழைக்கழக ஆசிரியர்கள் தங்கள் ஓய்வூதியக் கொடுப்பனவு வெட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நிகழ்த்திய வேலைநிறுத்தப் போராட்டம் பிரித்தானியாவின் நவீன வரலாற்றில் காணக் கிடைக்காத ஒன்று. இதையும் கடந்த மாதம் பிரான்சில் இரயில்வே ஊழியர்கள் தங்கள் சம்பள, சமூகநல வெட்டுக்களுக்கு எதிரான நிகழ்த்திய மாபெரும் வேலைநிறுத்தத்தையும் ரையன் எயார் வேலைநிறுத்தத்துடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். இதேபோல இத்தாலியில்  மோசமான சுரண்டலுக்கு உள்ளாவதை எதிர்த்து பண்ணைகளில் வேலைசெய்யும் குடியேறிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இவை உலகத்தின் திசைவழி குறித்து தெளிவான செய்தியொன்றைச் சொல்கின்றன.

 

அமேசன்: செல்வம் இங்கே குவிந்து கிடக்கிறது

ரையன் எயாரை விட உலகளாவிய ரீதியில் நன்கறியப்பட்ட பல்தேசியக் கம்பெனியான அமேசனின் ஊழியர்கள் கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக போத்துக்கல், போலந்து, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி ஆகிய நாடுகளில் பணிபுரியும் அமேசன் ஊழியர்கள் மிகக்குறைவான சம்பளம், மோசமான வேலைத்தள நிலவரங்கள் ஆகியவற்றைக் காரணங்காட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜேர்மனியில் அமேசனில் பணியாற்றும் 16,000 பணியாளர்களும், ஸ்பெயினில் பணியாற்றும் 2,000 பேரும் தங்கள் தங்கள் நாடுகளில் அரசுகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த அடிப்படைச் சம்பளத்தை தங்களுக்கு அமேசன் நிறுவனம் வழங்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர். இது எதனையும் கணக்கிலெடுக்கத் தயாராக இல்லை என்றும் இவ்வாறான கோரிக்கைகள் நியாயமற்றவை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக்கதையின் இன்னொரு பக்கம் உண்டு. அண்மையில் உலகின் முதலாவது பணக்காரராக அமேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் பிரதான செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஸோஸ் அறிவிக்கப்பட்டார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

பெஸோஸின் இச்சாதனையை அவருக்குப் பணிபுரியும் 500,000 தொழிலாளார்களின் நிலையுடன் ஒப்பிடும் போது இச்சாதனை எவ்வாறு சாத்தியமாகியது என்பது புரியும். பெஸோஸ் 2018ம் ஆண்டின் முதல ஆறு மாதங்களில் 50 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இந்தாண்டின் ஒரு நாளில் அவர் ஈட்டியிருக்கும் 255 மில்லியன் டாலர் என்பது அமெரிக்காவில் 10,000 க்கும் அதிகமான அமசன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு சம்பளங்களின் மொத்தத்துக்குச் சமம். 2018 இல் பெஸோஸ் ஒரு வினாடியில்  சம்பாதித்துள்ள 2,950 டாலர்களானது இந்தியாவில் ஒரு அமேசன் தொழிலாளரின் ஓராண்டு சம்பளமான 2,796 டாலரை விட அதிகம்.

இவ்வளவு தொகையை சம்பாதிக்கக் காரணமான அமேசன் நிறுவனம் அமெரிக்காவில் மிகவும் ஆபத்தான வேலையிடங்களில் ஒன்று என்பதை தொழிலிட பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஆதாரங்களுடன் காட்டியுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் வெளிநாட்டு போர்களிலும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மறுப்பிலும் அமேசன் அமெரிக்க அரசின் குற்றங்களுக்கு ஆழமாக உடந்தையாக உள்ளது. இந்நிறுவனத்திற்கு உள்ளே வளர்ந்து வரும் எதிர்ப்பு முக்கியமானது.

‘பெருந்திரளான மக்களை நாடு கடத்துவதிலும் பொலிஸ் கண்காணிப்பு வேலைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதை  அமேசன் நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ எனக் கேட்டு ஜூன் மாதம், அமேசன் பணியாளர்கள் கடிதமொன்றை வெளியிட்டனர். இதில் அமேசன்  அரசு கண்காணிப்புக்கான மற்றொரு சக்தி வாய்ந்த கருவியாகத் தொழிற்படுவதைக் கண்டிப்பதாகவும், அதேவேளை இது இறுதியில்; அடித்தட்டு மக்களையே பாதிக்கிறது. குற்றங்களைச் செய்கின்ற பணக்காரர்கள் இதில் தப்புவதில்லை. சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் அமேசன் உடந்தையாக இருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு சித்திரவதை முகாம்களில் மில்லியன் கணக்கானோரைப் படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை ஹிட்லருக்கு வழங்குவதில் அமெரிக்க ஐடீஆ நிறுவனம் தொடர்புபட்டிருந்ததைக் குறிப்பிட்டு காட்டியது.

 

நிறைவாக

உலகின் திசைவழி ஆபத்தான பாதையில் பயணிக்கிறது. இலாபவேட்கையும் அதற்காக எதையும் செய்யத் தூண்டும் பாணியிலான பண்பாட்டுச் சுத்திரிகரிப்புகளும் அதைச் சாத்தியமாக்கும் ஊடகங்களும் என இலாபத்தை எப்படியும் சேர்க்கலாம் என்பதை நியாயப்படுத்தும் அளவுகோல்கள் நிரம்பிய சூழலில் வாழ்கிறோம். ஒருவன் சுரண்டப்படுவதை, அவனுக்கு அநீதி இழைக்கப்படுவதை, அவனுடைய உரிமை மறுக்கப்படுவதை அமைதியாகக் பார்க்கும் ஒரு சமூகத்தில் நாம் வாழத் தலைப்படுவதை விட ஆபத்தானது வேறெதுவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *