அரசியல்உலகம்

கிரீன்லாந்தை விலைபேசல்: நாடுகள் விற்பனைக்கு

காணிகளும் வீடுகளும் வாங்கி விற்கப்படுவது போல நாடுகளும் வாங்கி விற்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. அவ்வாறு ஒரு நாட்டையோ அதன் பகுதியையோ விலை பேசுவதும் விற்கச்சொல்லி கேட்பதுவும் அதற்காகத் தயாயிருக்கும் பேரமும் அபத்தமாக தெரியுமல்லவா. ஆனால் இன்றைய உலக அரங்கு அபத்தமும் அவலமும் ஆபத்தும் கலந்த கலவையாய் இருக்கிறது. இதை மெய்யாக்கும் கதை ஒன்றையே நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். காணிகளையும் கட்டடங்களையும் வாங்கி விற்கும் வியாபாரி தனது 19 ஆம் நூற்றாண்டு நினைவுகளுடன் உலகின் பலம் பொருந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால் நிலைமை இவ்வாறு இருக்கும் என்பதை சுட்டுகிறது இந்த கதை.

கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் முக்கிய நாளிதழான Wall Street Journal அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்து நாட்டை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டது. கிரீன்லாந்து நாட்டை நிர்வகிக்கும் டென்மார்க் நாட்டிற்கு அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்ற நிலையில் இந்த தகவல் கசிந்துள்ளது.

வெளிப்பார்வைக்கு நகைச்சுவையாகவும் பைத்தியக்காரத்தனம் தெரிந்தாலும் இவ்வாறான செயற்பாடுகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுக்க கூடியவர் என்பதும் அதை ஆமோதித்து முன்செல்ல அவருடன் இருக்கிற நிர்வாகிகளும் தயாராகவே இருக்கிறார்கள் என்பதையும் டிரம்பினுடைய நிர்வாகத்தின் கடந்த மூன்றாண்டு ஆட்சிக்காலம் உறுதிபடச் சொல்லுகிறது. எனவே இதை நகைச்சுவை என்றோ முட்டாள்கள் தினத்தின் கதை என்றோ புறக்கணிக்க இயலாதபடி கவனம் குவிக்க வேண்டி உள்ளது. உலக அரசியல் அரங்கு 19ஆம் நூற்றாண்டு அரங்குக்கு ஒப்பதாக இருப்பதாக எண்ணும் வர்த்தகரின இந்த முனைப்பை அலட்சியம் செய்யவியலாதபடி உலக அரங்கில் அமெரிக்காவின் நடத்தை உள்ளது.

வரலாற்றில் நாடுகள் விற்கப்படுவதும் வாங்க படுவதும் நடைபெற்று வந்திருக்கின்றன. கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றில் இதற்கான சான்றுகள் இல்லாத போதும் இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றை ஆழமாக நோக்கினால் இவ்வாறான கொள்வனவுகள் நடைபெற்றுள்ளதைக் காணலாம். இன்றுள்ள அமெரிக்காவின் மாநிலங்களில் பல இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டு அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டவையே. அமெரிக்காவுக்கு இது புதிதல்ல. ஆனால் கேள்வி யாதெனில் உலக அரசியல் அரங்கம் சர்வதேச சட்டங்களை இயற்றி இயங்கிவரும் நிலையில் இவ்வாறு நாட்டின் பகுதியைக் கொள்வனவு செய்வது சாத்தியமாகுமா? இந்தக் கொள்வனவு நடைபெறுமாயின் அது சர்வதேச சட்டங்களுக்கு பொருந்தி வருமா? ஆகிய இரண்டு கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

ஒருவேளை இது சாத்தியமானால் உலகின் ஏனைய பெரிய சக்திகள் இதைப் பின்பற்றி வெவ்வேறு பகுதிகளை கொள்வனவு செய்வதற்கு முண்டியடிக்கும். இது உலக அரசியலில் பாரதூரமான மாற்றங்களையும் நெருக்கடிகளையும் உருவாக்கும். கற்பனை செய்ய இயலாதபடி நிகழ்வுகள் நடந்தேறலாம். நாளை கொழும்பை ஒரு நாடும் யாழ்ப்பாணத்தை இன்னொன்றும் திருகோணமலையை மற்றொன்றும் நிர்வகிக்கும் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.

உலக அரசியல் பல்வேறுபட்ட கால கட்டங்களை தாண்டி வந்திருக்கிறது. தேசிய அரசுகளின் தோற்றம் நாடுகளுக்கு அதற்கான ஆட்புல எல்லையையும் அதற்கு உட்பட்ட மக்கள் தொகையையும் அவர்களுக்கான அரசாங்கத்தையும் இறைமையையும் வழங்கி தேச எல்லைகளை மையப்படுத்திய நாடுகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. இதைத்தொடர்ந்து நாடுகாண் பயணங்கள் நாடுகளைக் கைப்பற்றி காலனி ஆக்குவது பிரித்தானிய, பிரெஞ்சு, போத்துக்கீச, டச்சு, அமெரிக்கக் கொலனிகளுக்கு வித்திட்டன. உலகப்போர்கள் அதைத்தொடர்ந்தன. இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து காலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள் புதிய சுதந்திர அரசுகளாக தோற்றம் பெற உதவின. உலகமயமாக்களின் வருகை தேச எல்லைகளைக் கடந்த பல்தேசிய கம்பெனிகள் எல்லைகளை மறு வரையறை செய்கின்ற பிராந்தியக் கட்டமைப்புக்கள், கட்டட வர்த்தகம் என்று பல கட்டங்களைத் தாண்டி உலக அரசியல் நகர்ந்து வந்துள்ளது. மேலாதிக்க நோக்குடையனவாக இருப்பினும் ஏதோ ஒரு வகையில் பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக ஒழுங்கு சார் நடைமுறை, சர்வதேச அரசியலையும் நாடுகளுக்கு இடையிலான உறவுகளையும் ஒரு பொது தளத்தில் பேணி வளர்த்து உரையாடுவதற்கான வாய்ப்பை வழங்கி வந்துள்ளது.

கிரீன்லாந்தை வாங்குவதற்கு அமெரிக்கா எடுத்துள்ள முயற்சி எழுப்பும் பிரதானமான கேள்வி ஒரு நாடு தனது ஆட்புல எல்லைக்கு உட்பட்ட ஒரு பகுதியை இன்னொரு நாட்டுக்கு விலைபேசி விற்க முடியுமா என்பதே. இது விற்பனைக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்களின் இறைமை சார்ந்த கேள்வியை எழுப்புகிறது. அக்குறிப்பிட்ட மக்கள் தொகையின் அனுமதி இல்லாமல் அந்த மக்கள் வாழுகிற பகுதியை இன்னொரு நாட்டுக்கு தாரைவார்க்க முடியுமா என்பது சர்வதேச சட்டங்களில் புதிய கேள்விகளை நிச்சயம் எழுப்பும்.

கிரீன்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் இருக்கிற சுயாட்சி நாடாக திகழ்கிறது. பாதுகாப்பு, அயலுறவுகள் ஆகிய இரண்டு விடயங்கள் தவிர்ந்த அனைத்தையும் தீர்மானிப்பதற்கான முழு உரிமை கிரீன்லாந்தில் வாழும் மக்களுக்கு உண்டு. 57 ஆயிரம் பேர் கிரீன்லாந்து தீவில் வசிக்கிறார்கள் உலகத்தின் மிகப்பெரிய தீவான கிரீன்லாநது அதிகளவான பனிப் பாறைகள் நிறைந்த பகுதியாகும்.

இதை அமெரிக்கா வாங்க முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முதலும் இரண்டு தடவைகள் அமெரிக்கா கிரீன்லாந்து வாங்க முயற்சித்து இருக்கிறது. அமெரிக்கா இவ்வாறு பல பகுதிகளை இதற்கு முன்னும் வாங்கியுள்ளது. 1867 ஆம் ஆண்டு ரஷ்யப் பேரரசிடமிருந்து 63 ஆயிரம் சதுர மைல்களை கொண்ட அலாஸ்காவை 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அமெரிக்கா வாங்கியது. மேற்கிந்திய தீவுகளில் டென்மார்க்கின் காலனிகளாக இருந்த St. Thomas, St. John, St. Croix  ஆகிய தீவுகளை 1917 ஆம் ஆண்டு 25 மில்லியன் பெறுமதியான தங்க நாணயங்களுக்கு அமெரிக்கா டென்மார்கிடமிருந்து வாங்கியது.

இருபத்தியோராம் நூற்றாண்டில் காணிகளை வாங்கும் வேலையை அரசுகள் செய்வதில்லை, மாறாகப் பல்தேசிய நிறுவனங்கள் செய்கின்றன. இத்தாலியின் பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமான பெனிட்டன் (Benetton) ஆர்ஜென்டீனாவின் மப்பூச்சே பழங்குடிகள் வாழும் பகுதியான பட்டகோனியாவில் 2.2 இரண்டு மில்லியன் ஏக்கர்கள் நிலத்தை வாங்கியுள்ளது. பெனிட்டன் நிறுவனம் இந்த பகுதியில் தனது ஆடை உற்பத்திக்குத் தேவையை பருத்தி விளைவிக்கிறது. பழங்குடிமக்களின் அனுமதியை பெறாமல் அவர்களது வாழ்விடங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு எதிராகப் போராடுகின்ற போராட்டக்காரர்கள் காணாமல் போய் பின்னர் பிணங்களாக ஆறுகளில் மிதக்கிறார்கள். ஆனால் மப்பூச்சே பழங்குடிகள் தங்கள் நிலங்களுக்கு உரிமைகோரித் தொடர்ந்து போராடுகிறார்கள். 2009 ஆம் ஆண்டு தென்கொரியாவின் Daewoo நிறுவனம் மடகஸ்காரில் 3.2 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கு வாங்கியது. இப்பகுதியில் உணவை உற்பத்தி செய்து அதை நேரடியாக தென்கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக இந்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு சீனாவின் Nongken குழுமம் அர்ஜென்டினாவில் 8 லட்சம் ஏக்கர்களை உணவு பொருள் உற்பத்திக்கான வாங்கியது. இன்று இடங்களை வாங்குவது, குத்தகைக்கு எடுப்பது, கையகப்படுத்துவது என அனைத்தும் நாடுகளால் செய்யப்படாமல் நிறுவனங்களாலும் பல்தேசிய கம்பனிகளாலும் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கிரீன்லாந்து வாங்குவதற்கு ட்ரம்ப்; எடுக்கும் முயற்சி ஆனதே உலக அரசியலை 19ஆம் நூற்றாண்டு நிலைமைகளுக்கு பின் தள்ளுகிறது.

கிரீன்லாந்து வாங்குவதற்கு அமெரிக்கா காட்டுகிற முனைப்பு தற்செயலானதல்ல. கிரீன்லாந்தின் நிலப்பரப்புக்கு அப்பால் உலக நன்னீரில் மிகச் சுத்தமான 10 வீதமான நன்னீர் கிரீன்லாந்தில் இருக்கிறது. இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக 50 பில்லியன் பரல்களுக்கு மேற்பட்ட எண்ணெய் வளம் இங்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலகின் ‘அரிதான இயற்கை கனிம வளங்கள்’ இந்த பகுதியில் இருக்கின்றன. உலகில் உள் இவ்வகையான அரிய கனிமவளங்களில் 90% சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இதனாலேயே நவீன கைபேசிகள் தொட்டு நுண்ணிய நவீன இலத்திரனியல் உபகரணங்கள் வரை அனைத்தையும் சீனாவால் உற்பத்தி செய்ய முடிகிறது. எனவே அதற்கு போட்டியாக அரிய கனிம வளங்களை கட்டுப்படுத்துவது அமெரிக்காவிற்கு அவசியமாகிறது.

பூகோள பாதுகாப்பு என்கிற நிலையில் ஆர்டிக் அத்திலாந்திக் மீதான கட்டுப்பாட்டையும் பார்வையையும் செலுத்துவதற்கு கிரீன்லாந்தை கட்டுப்பாட்டுக்குள் வாய்ப்பானது அட்லாண்டிக் கடலுக்கு நடுவே அமைந்துள்ளது. 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹரி ட்ரூமன் கிரீன்லாந்து 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியான தங்கத்திற்கு வாங்க முனைந்தார் அப்போதைய அமெரிக்க பாராளுமன்றமும் ராணுவமும் இதை முழுமையாக ஆதரித்தன அமெரிக்க நலன்களுக்கு கிரீன்லாந்து முக்கியமான பூகோள கேந்திர நிலையம் என்பது அன்று தொட்டு அமெரிக்க ராணுவ வல்லுனர்களால் தொடர்ந்து முன்மொழியப்பட்ட வருகிறது.

ட்ரம்பின் இந்த முயற்சி வெற்றியளிக்கப் போவதில்லை. அதற்கு கீரின்லாந்து மக்களும் டென்மார்க் மக்களும் அனுமதிக்கப்போவதுமில்லை. ஆனால் இவ்வாறான ஒரு முயற்சியை அமெரிக்கா மேற்கொள்வதானது ஒரு வலுவான செய்தியைச் சொல்கிறது. அமெரிக்கா அடாவடியால் தன்னை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது. விழுமியங்களும் அறமும் உலக அரசியலில் வெற்றுக் கோஷங்களே.

உலக வரைபடத்தில் கீழ் மூலையில் உள்ள இலங்கை எவ்வாறு பூகோள அரசியலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப்போலவே மேல் மூலையில் உள்ள கீரின்லாந்தும் முக்கியமானதே. இதையும் கவனிப்பது பயன்தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *