குர்திஷ் மீதான துருக்கிய முற்றுகை: வரலாறு கற்றுக்கொடுக்கும் போது….
‘வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரேயொரு பாடம், நாம் வரலாற்றிலிருந்து பாடங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே’. கான்பூசியஸின் இவ்வரிகளை மீள்நினைவூட்டுமாறு நிகழ்வுகள் நடக்கின்றன. யார் கற்கிறார்களோ இல்லையோ விடுதலைப் போராட்டங்கள் நிச்சயம் வரலாற்றிலிருந்து கற்ற வேண்டும். இதை ஈழத்தமிழர் விடுதலை முதல் பலஸ்தீனியர்களின் விடுதலை வரை நாம் கண்டிருக்கிறோம். வரலாற்றிலிருந்தும் அனுபங்களிலிருந்து கற்க மறுக்கும் போது வரலாறு நம்மை மிக மோசமாகத் தண்டிக்கும். அவ்வாறான தண்டனையொன்றையே குர்திஷ் போராளிகள் இப்போது எதிர்நோக்குகிறார்கள். சில சமயங்களில் பாடங்களை நாம் கற்றுக்கொள்வதற்குக் கொடுக்கும் விலை அதிகம். அவ்வாறானதொரு விலையே இப்போது குர்திஷ் போராளிகள் கொடுக்க நேர்ந்துள்ளது.
சிரியாவின் வடபகுதியில் இருக்கின்ற குர்திஷ் போராளிகளை மையப்படுத்திய இராணுவ நகர்வொன்றைக் கடந்த வாரம் துருக்கி தொடங்கியது. சுpரியாவின் வடபகுதியில் இருந்து அமெரிக்கா தனது இராணுவத்தை மீளப்பெற்றுக் கொண்டதன் தொடர்ச்சியான துருக்கியால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக ‘அமைதி வசந்தம்’ எனப் பெயரிடப்பட்ட நடவடிக்கையை துருக்கி கடந்த புதன்கிழமை (9 ஒக்டோபர்) தொடங்கியது.
இந்த நடவடிக்கை பிராந்திய ரீதியிலும் பூகோள அரசியல் ரீதியிலும் பல்வேறு சிக்கல்களையும் நெருக்கடிகளையும் கொண்டுள்ளது. இதன் பரிமாணங்கள் பல. இதை விளங்குவது இந்த இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தை விளங்கிக் கொள்ள உதவும். இதன் முதற்கட்டமாக இந்த முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் குர்திஷ் போராளிகள் யார் என்பது பற்றிய சித்திரம் முக்கியமானது.
குர்திஷ் போராளிகளின் கதை
குர்திஷ் மக்களின் விடுதலையை நோக்காகக் கொண்டு 1978ம் ஆண்டு அப்துல்லா ஒச்சலான் தலைமையில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே என நன்கறியப்பட்டது) ஆரம்பிக்கப்பட்டது. 1984ம் ஆண்டு முதல் துருக்கிய அரசாங்கத்துக்கு எதிராக போராடிவரும் பி.கே.கே புரட்சிகர சோசலிசம், குர்திஷ் தேசியவாதம் ஆகியவற்றிணை இணைத்த சுதந்திர குர்திஷ்தானை உருவாக்குவதை நோக்காகக் கொண்டது. குர்திஷ்கள் நீண்டகாலமாக துருக்கியில் பாரிய நெருக்கடிகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்து வருகிறார்கள். அவர்களது மொழி மறுக்கப்பட்டது, அவர்களது பண்பாட்டு அடையாளங்கள் மறுக்கப்பட்டன. இவையனைத்தும் வீறுகொண்ட குர்திஷ் விடுதலைப் போராட்டத்திற்கு வழிவகுத்தன.
1990களில் துருக்கிய அரசாங்கத்துக்கெதிரான ஆயுதக் கிளர்ச்சியை பி.கே.கே. முன்னெடுத்து வந்தது. 1999ம் ஆண்டு ஒச்சலான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்த பி.கே.கே. தன்னை மீள்தகவமைத்துக் கொண்டு தனது விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தது. 2007ம் ஆண்டு ஏனைய குர்திஷ் போராட்டக் குழுக்களையும் ஒன்றிணைத்து துருக்கி, சிரியாவின் வடக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய சுயாட்சிப் பிரதேசமொன்றை உருவாக்கப் போராடிக் கொண்டிருந்தன.
இந்நிலையில் சிரியாவில் ஆட்சிமாற்றமொன்றை மேற்கொள்வதற்கான அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முன்னெடுத்த போர் குர்திஷ் போராட்டத்திற்கு புதிய வாய்ப்பையும் சவாலையும் கொடுத்தது. 2011ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போராக உருவெடுத்த சிரியா அரசுக்கெதிரான எதிர்ப்பு காலப்போக்கில் பலநாடுகளையும் அமைப்புக்களையும் தன்னுள் உள்ளீர்த்து பிராந்திய யுத்தமாகியது. இதே காலப்பகுதியில் தோற்றம் பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பாரிய சக்தியாக உருவெடுத்தது. ஐ.எஸ்.ஐ.எஸ்யை ஒழிப்பதைக் காரணம் காட்டி அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சிரியாவிற்குள் இறங்கின. மறைமுகமாக எல்லோரும் சிரியாவில் ஆட்சிமாற்றத்திற்கே வேலை செய்தார்கள்.
இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையிலான சாம்ராஜ்யத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் குர்திஷ் மக்களைத் தாக்கத் தொடங்கினர். இதன் விளைவால் குர்திஷ் போராளிகள் தமக்குள் இணைந்து 2015ம் ஆண்டு சிரிய ஜனநாயகப் படைகள் என்ற அமைப்பை உருவாக்கினர். இப்படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு எதிராகத் தீரமுடன் போரிட்டார்கள். குறிப்பாக இவர்களின் பெண் போராளிகளின் வீரம் உலகளாவிய கவனம் பெற்றது.
இந்நிலையில் அமெரிக்கா சிரிய ஜனநாயகப் படைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு எதிராகப் போரிடுவதற்கு வாய்ப்பாக இராணுவ உதவியும் நவீன ரக ஆயுதங்களையும் தருவதாகச் சொன்னது. இந்த அழைப்பை சிரிய ஜனநாயகப் படைகள் ஏற்றுக் கொண்டன. அமெரிக்க ஆதரவு பெற்ற அமைப்பாக சிரிய ஜனநாயகப் படைகள் மாறின. சிரியாவில் ஆட்சிமாற்றமொன்றின் ஊடு தமக்கான தனிநாட்டுக்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சிரிய ஜனநாயகப் படைகள் கருதின. இன்னொருவகையில் அவர்கள் சிரியப் படைகளுக்கு எதிராகவும் போரிட்டார்கள். பல எல்லைப்புற சிரியப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சிரியாவில் ஆட்சிமாற்றத்தின் விளைவால் ஏற்படுகின்ற புதிய அரசு குர்திஷ்களுக்கு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்த்தார்கள்.
யாரும் எதிர்பாராத வகையில் சிரியாவுக்கு ஆதரவாக ஐ.எஸ்.ஐ.எஸ்யை ஒழித்துக்கட்ட ரஷ்யா சிரியப் போரில் இறங்கியது. தனது விமானங்களின் உதவியுடன் மொத்தப் போரின் களநிலவரங்களை ரஷ்யா மாற்றியது. ரஷ்யா சிரியப் போருக்குள் நுழையும்போது சிரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வெறும் 20மூ மட்டுமே. தனது நடவடிக்கை முடிந்து சிரியாவிலிருந்து ரஷ்யா வெளியேறியபோது 80மூ நிலப்பரப்பை சிரிய இராணுவம் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தன. போரின் மொத்தப் பரிமாணமும் மாறியிருந்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு எதிரான போரில் அமெரிக்காவினதும் மேற்குலகினதும் பங்காளியாக துருக்கி இருந்தது. சுpரியாவில் ஏற்படுகின்ற ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி தனது எல்லைகளை விரிவுபடுத்துவதோடு குர்திஷ் வாழ்கின்ற சிரியாவின் வடபகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்பது அதன் கணக்காக இருந்தது.
இவ்வாண்டு தொடக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் முழுமையாக சிரியாவிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் குர்திஷ் போராளிகளுக்கு எதிரான சிறுசிறு நடவடிக்கைகளை துருக்கி கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்தவாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவதாக அறிவித்தார். ஐ.எஸ்.ஐ.எஸ் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கப் படைகளின் இருப்பு அங்கு தேவையற்றது என்று கருத்துரைத்தார். இது அமெரிக்கப் படைகளின் தயவில் இயங்கி வந்த குர்திஷ் போராளிகளுக்கு (சிரிய ஜனநாயகப் படைகள்) மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அமெரிக்கப் படைகள் விலகியதைத் தொடர்ந்து துருக்கி குர்திஷ் போராளிகளை அழிப்பதற்காக வட சிரியாவிற்குள் படைகளை அனுப்பியுள்ளது. குர்திஷ் போராளிகள் இந்த எதிர்பாராத நடவடிக்கைகளால் விக்கித்து நிற்கிறார்கள். குடந்த வாரம் வரை சிரிய அரசை ‘கொலைகார அரசு’ (அமெரிக்கா வேண்டுகிற மொழியில்) என்று அழைத்து வந்தவர்கள் இன்று சிரிய அரசுடன் பேசவும் சேர்ந்தியங்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அதேவேளை இப்போரில் பங்காளியான ரஷ்யாவுடன் நட்புறவை விரும்புவதாகவும் அறிவித்துள்ளனர். அமெரிக்கா தமது முதுகில் குத்திவிட்டதாகக் கண்டனம் தெரிவிக்கின்றனர். இன்று குர்திஷ் போராளிகள் எதிர்நோக்கும் நெருக்கடி அவர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதை இங்கு அழுத்திக் கூறவேண்டியுள்ளது.
புதிய போரின் பரிமாணங்கள்
இன்று மேற்குலக நாடுகள் திரிசங்கு நிலையில் இருக்கின்றன. ஏனெனில் மேற்குலக நாடுகளின் இராணுவக் கூட்டான நேட்டோவில் துருக்கி ஒரு அங்கத்தவர். எனவே துருக்கியின் இராணுவ நடவடிக்கையைக் கண்டிக்க இயலாது. அமெரிக்காவின் தன்னிச்சையான ஈராக், லிபிய மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டிக்காத நேட்டோவால் இதையும் கண்டிக்க இயலாது என்பதே உண்மை.
துருக்கி மிக நீண்டகாலமாக தனது பழைய ஓட்டோமன் பேரரசை மீண்டும் நிறுவும் ஆவலில் உள்ளது. கடந்த ஒரு தசாப்தகாலமாக துருக்கியின் நடத்தை இதைக் காட்டுகிறது. அதன் தொடர்ச்சியாகவே துருக்கியின் இந்த நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளது. தனது பிராந்திய அரசியல் மீதான தனது வலிந்த செல்வாக்கை உறுதிப்படுத்த கடந்த காலங்களில் துருக்கிய ஜனாதிபதி பல நடவடிக்கைளை எடுத்துள்ளார். ஆனால் அவையனைத்தையும் விட இப்போதைய அவரது நடவடிக்கை மிக ஆபத்தானது. இந்த நடவடிக்கையின் இறுதிவிளைவு துருக்கியின் பிராந்தியப் பேரரசுக்கு கனவுக்கு ஆப்பு வைக்கவும் கூடும்.
சிரியாவிற்கெதிரான மேற்குலகின் யுத்தம் தொடங்கியவேளை சிரிய ஆட்சிமாற்றத்தை துருக்கி வேண்டி நின்றது. அமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்து போரிட்டது. ஆட்சிமாற்றத்துக்காகப் போராடிய சில குழுக்கள் துருக்கிய ஆதரவுடன் இயங்கின. இப்போது போர் முடிந்துள்ள நிலையில் துருக்கிய ஆதரவு பெற்ற குழுக்கள் சிரியாவின் சில எல்லைப் பிரதேசங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.
இப்போதைய துருக்கியின் நடவடிக்கை சிரியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதையும் நோக்காகக் கொண்டது. குர்துகளை அழிப்பதன் பெயரால் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் பகுதிகளைக் கைப்பற்ற நினைக்கிறது.
துருக்கி, அமெரிக்கா, நேட்டோ ஆகியவற்றின் நடத்தை மத்திய கிழக்கின் பூகோள அரசியலின் பரிமாணங்களைக் காட்டி நிற்கிறது. இது சிரியாவின் மீதான வலிந்த போர் ஏன் தொடுக்கப்பட்டது என்பதை இன்னமும் தெளிவாக விளக்கி நிற்கின்றன. வலிமையான அரசியல்ரீதியாக நிலையான சிரியா இன்று மத்திய கிழக்கில் அவசியமானது. ஆதைச் சாத்தியமாக்கியதில் ரஷ்யாவின் பங்கை இங்கு நினைவுகூரல் வேண்டும்.
இக்கட்டுரையை நிறைவுசெய்யும் போது குர்திஷ் போராளிகள் சிரிய அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றை எட்டியுள்ளார்கள். அதன்விளைவாக சில பகுதிகளில் இருந்து துருக்கி இராணுவம் விரட்டப்பட்டு நகரங்கள் சிரிய இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன. இது மூன்று விளைவுகளை ஏற்படுத்தும். முதலாவது அமெரிக்கப் படைகளின் உதவியுடன் குர்துகள் கட்டுப்படுத்திய சிரியாவின் பகுதிகள் இப்போது சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும். எனவே சிரிய இராணுவம் தனது நாட்டின் மேலதிக பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். இரண்டாவது சிரிய இராணுவம் துருக்கிய ஆதரவுள்ள போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் பகுதிகளை குர்திஷ் போராளிகளின் உதவியுடன் மீட்கும். மூன்றாவது ஏற்பட்டுள்ள புதிய கூட்டு சிரிய இராணுவத்திற்கும் துருக்கி இராணுவத்திற்கும் இடையிலான நேரடி யுத்தமாகியுள்ளது. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நேட்டோ உறுப்பு நாடொன்றின் மீது இன்னொரு நாடு தாக்குதல் நடாத்தினால் உறுப்பு நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஏனைய நேட்டோ நாடுகளுக்கு உண்டு. எனவே இப்போது துருக்கிக்கு அமெரிக்காவும் ஏனையோரும் ஆதரவு தெரிவிப்பார்களா என்பதே கேள்வி. அவ்வாறு நடக்குமானால் சிரியாவிற்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்குவது உறுதி. தேவையற்ற புதிய பிராந்தியப் போருக்கு துருக்கியும் அமெரிக்காவும் தயார் செய்துள்ளன.
நிறைவாக
இற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முதல் குர்திஷ் போராளிகளின் தத்துவார்த்த அரசியல் குழு உறுப்பினர்களுடன் கட்டுரையாளருக்கு உரையாடக் கிடைத்தது. அவ்வுரையாடலில் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதன் ஆபத்துக்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் குர்திஷ் தலைவர்கள் தங்களுக்கான சுயாட்சிப் பிரதேசத்தை வெல்வதற்கான ‘தந்துரோபாய நடவடிக்கை’ என விளக்கம் கொடுத்தார்கள். இன்று அம்முடிவுக்கான விலையை குர்திஷ் மக்கள் கொடுக்க வேண்டியுள்ளதை துயரத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது.
விடுதலைக்கான போராட்டங்கள் அனைத்திற்கும் உள்ள பொது எதிரிகளை தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் மக்களுக்கு அடையாளங்காட்டுவது. எதிரியைத் தனிமைப்படுத்துவது என்பது ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செய்கிற காரியமல்ல. அதை குர்திஷ் போராளிகள் இப்போது கற்றுள்ளார்கள்.