அரசியல்உலகம்உள்ளூர்

கொரோனா வைரஸ்: செவ்வாயில் சீவிப்பதற்கான கனா

“அவன் பட்டுவேட்டி பற்றிய கனாவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது” இது நன்கறியப்பட்ட கவிதை வரி. மனிதகுலத்தின் கதியும் இன்று இப்படித்தான் இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் எதையெதையோயெல்லாம் மனிதகுலம் சாதிக்கும் என எதிர்பார்த்தார்கள். கடந்த இருபதாண்டுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்களும் எம்மையெல்லாம் வியப்பில் ஆழ்;த்தின என்பதில் ஜயமில்லை. ஆனால் இந்தக் கொரோனா வைரஸ் எமக்கு ஏற்படுத்தியுள்ள சவாலும் அதைச் சமாளிக்கவியலாது மனிதகுலம் திண்டாடுவதும் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கிறது. நாம் கவனமாக மனதிலிருத்த வேண்டிய செய்தி அது.

கொரோனா வைரஸ் மனிதர்களின் நடத்தையின் பண்புகளை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. மனிதன் எவ்வளவு சுயநலமானவனாக மாறிவிட்டான் என்பதை அதிககூடிய விலையில் விற்கப்படும் பொருட்களும் அளவுகதிகமாகப் பொருட்களை வாங்கி மற்றவர்களுக்கு அதைக் கிடைக்காமல் செய்யும் நடத்தையும் காட்டின. மறுபுறம் அரசுகள் மக்களைக் காப்பதை விட பொருளாதாரத்தையும் அதிலும் குறிப்பாக தனியார் நிறுவனங்கள் நட்டமடையாமல் காப்பதிலியே கவனம் செலுத்துகின்றன. இந்த மனிதகுலம் தான் செவ்வாயில் சீவிப்பதற்குக் கனாக் கண்டது.

சில தினங்களுக்கு முன் இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் வந்த பீகார் மாநில கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்த நிலையில் போக்குவரத்து இல்லாத நிலையில் கையில் காசில்லாத நிலையில் நடந்தே தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடிவெடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து எதுவித உணவுமில்லாமல் நடந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு யாரோ உணவைக் கொடுத்தபோது அவர்கள் கதறியழுத காட்சி என் நெஞ்சை அடைத்தது. இந்தியப் பெருநகரங்கள் மூடப்பட்ட நிலையில் நாட்கூலிகள் வேலையற்று உண்ண உணவற்று குடும்பங்களுடன் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நடந்த காட்சியோ பார்க்க மிகவும் கொடுமையானது.

இது போதாதென்று சொந்த ஊர்களுக்கு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் திரும்பியவர்களை மாநில அரசுகள் நடாத்திய முறை கொடுமையானது. சில தினங்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்திற்கு மீண்ட தொழிலாளர்களை மாநில சுகாதாரத்துறை நிலத்தில் இருத்திவைத்து அவர்கள் மீது வேதியல் திரவம் ஒன்றைத் தெளித்தது. தெளிக்கப்பட்ட அந்த இரசாயனத்தின் பெயர் சோடியம் கைபோகுளோரைட். இது வீடுகளில் மலசலகூடம் கழுவப் பயன்படுத்தப்படுவது. இதைச் சாதாரண ஏழை மக்களின் மீது நீர் பாய்ச்சும் குழாய்களைப் பயன்படுத்தி வீசியடித்துக் குளிப்பாட்டி உள்ளார்கள். கொரோனா வைரஸினால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழைகளும் உழைக்கும் அடித்தட்டு மக்களுமே.

இந்த நோய்த்தொற்று பல்வேறுபட்ட உளவியல் தாக்கங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மருத்துவப் பணியாளர்களிடையே இது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குலக நாடுகளில் பல தாதிமார் கடந்த இரு வாரங்களில் தற்கொலை செய்துள்ளார்கள். குறிப்பாக அவர்களுக்கு வைரஸ் நோய்த்தொற்று இருப்பது அறியப்பட்ட நிலையில் தங்களால் இன்னும் பலருக்கு இந்த நோய்த்தொற்று பரவியிருக்குமோ என்ற குற்றவுணர்வில் தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். இன்று இத்தாலியிலும் ஸ்பெயினும் மருத்துவப் பணியாளர்கள் வீடுகளுக்குச் செல்ல அஞ்சுகிறார்கள். தாங்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்றைக் காவிச் சென்றுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களிடம் உளவியல்ரீதியான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் பலர் வேலையிழந்துள்ளார்கள். பலர் அன்றாடம் உணவுக்கே திண்டாடுகிறார்கள். இலட்சக்கணக்கானோருக்கு நாளை என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. உலகெங்கும் மக்கள் வாரக்கணக்கில் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். இதுவும் பல்வேறு விதமான உளவியல் பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. நோய்த்தொற்றுக்கு ஆளாகுவோரின் தொகையும் மரணிப்போரின் தொகையும் நாளுக்கு நாள் அதிகரிப்தைப் பார்க்கப் பார்க்கப் பதட்டமும் நிச்சயமின்மையும் அதிகரிக்கிறது. வெறுமை ஆட்கொள்கிறது. குறிப்பாக ஏற்கனவே நோய்களை உடைய 50 வயதைத் தாண்டியவர்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகினால் தனிமைப்படுத்தப்படுவோம், மருத்துவ வசதிகள் கிடைப்பது நிச்சயமல்ல, யாரும் பக்கத்தில் இருக்கமாட்டார்கள். இறந்தாலும் மரணச்சடங்கு இல்லை ஆகியன வயதானவர்களை மிகவும் பாதித்துள்ளது. “சாகிறது பற்றிக் கவலையில்லை, ஆனால் இந்தக் கொரோனாவால் சாகக்கூடாது” என்று பலர் தொலைபேசி உரையாடல்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இன்று மேற்குலக நாடுகளில் ஈழத்தமிழர்கள் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி மரணித்திருக்கிறார்கள். இது புலம்பெயர் தமிழர்களை உலுக்கியுள்ளது. அவர்கள் இந்த நோய்த்தொற்று தமக்கு அருகாமையில் உள்ளது போல உணர்கிறார்கள். அஞ்சுகிறார்கள். இது ஏற்படுத்திருக்கின்ற அச்சம் உளவியல் ரீதியாக அவர்களைப் பாதிக்கிறது. இதிலிருந்து அவர்கள் விடுபட நீண்ட காலம் எடுக்கும்.

அறிவியல் ரீதியாகவும் தொழிநுட்ப ரீதியாகவும் வளர்ச்சியடைந்துள்ள மனிதஇனம் இந்த நெருக்கடியைச் சமாளிக்க இயலாமல் ஏன் திணறுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் உண்டு. கடந்த அரைநூற்றாண்டுகால அறிவியல் வளர்ச்சி வியக்கத்தக்கது. அதேவேளை இந்த வளர்ச்சி முழு மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கானதாய் இருந்ததில்லை. கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் தொடங்கி நவீன கருவிகள் வரை அனைத்தும் அனைவருக்கும் உரியதாய் என்றுமே இருந்ததில்லை. இந்த உண்மை எமக்கு விளங்குவதில்லை. நவீன கண்டுபிடிப்புகளைக் கண்டு வியந்து அப்பால் நகர்கிறோம்.

அறிவு தனியார்மயப்பட்டு ஆண்டுகள் பலவாயிற்று. குறிப்பாக உலகின் முதற்தரமான அறிவியல் ஆய்விதழ்கள், கட்டுரைகள், தரவுகள், செய்திகள் எவையும் இலவசமான பாவனைக்கு உரியனவல்ல. அனைத்தையும் நீங்கள் பணம் செலுத்தியே பெற வேண்டியுள்ளது. உருவாக்கப்பட்ட அறிவு ஒரு சிலரின் கைகளில் தேங்குகிறது. கண்டுபிடிப்புக்களும் புத்தாக்கங்களும் விலைபேசி விற்கப்படுகின்றன. பின்னர் அவை காப்புரிமை செய்யப்பட்டு தனிச்சொத்தாகின்றன. இவ்வாறுதான் அறிவும் அறிவியல் வளர்ச்சியும் கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது.

மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால் அனைத்துவகையான நவீன மருத்துவ ஆய்வுகளும் பல்தேசிய மருந்து நிறுவனங்களாலேயே நடாத்தப்படுகின்றன (ஒன்றில் அவை அந்நிறுவனங்களின் ஆய்வுகூடங்களில் நடக்கின்றன, அல்லது அவர்களால் நிதியளிக்கப்பட்டு பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் நடக்கின்றன). எவ்வாறாயினும் இந்தக் கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் அந்த மருந்து நிறுவனங்களுக்கே உரியனவாகின்றன. இதன்மூலம் உருவாக்கப்படும் மருந்துகளை விற்பனை செய்து இந்நிறுவனங்கள் இலாபம் பார்க்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில் ஆய்வுகளுக்கு அரசுகள் நிதி ஒதுக்குவது குறைந்து நிறுவனங்களே ஆய்வுகளுக்கு நிதியளிப்புச் செய்கின்றன. உலகின் எந்தவொரு நவீன கண்டுபிடிப்பும் இலவசமாகவோ மிகக்குறைந்த விலையிலோ மக்களைச் சென்று சேரவில்லை. அறிவென்பது இன்று இலாபம் சம்பாதிக்கும் ஒன்றாகிவிட்டது. அதுகுறித்த எந்த உணர்வுமற்று ஆய்வாளர்கள் தங்கள் அறிவை விற்பது குறித்து வெட்கப்படுவதில்லை. முதலாளித்துவ உலகம் மக்களை அவ்வாறே தயார் செய்கிறது. அரசின் வகிபாகங்கள் மெதுமெதுவாகக் குறைக்கப்பட்டு திறந்த சந்தை, கட்டற்ற வர்த்தகம் முன்தள்ளப்பட்டது. இதன் ஒருபகுதியே இலவசக் கல்விக்கும் இலவச மருத்துவத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட போர். கல்வியையும் மருத்துவத்தையும் தனியார்மயமாக்குவதன் மூலம் அவற்றை சாதாரண மக்களிடமிருந்து பறித்தெடுத்து இலாபமீட்டுவதற்கான கருவிகளாக்கும் முயற்சிகள் உலகெங்கும் நடைபெறுகின்றன.

அரசதுறையானது மருத்துவத்தையும் பொதுச் சுகாதாரத்தையும் தன்கைகளில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நோய்த்தொற்று மிகத்தெளிவாக உணர்த்தியுள்ளது. தனியார்மயப்படுத்தப்பட்ட, மருத்துவக் காப்புறுதிகளுக்கு உட்பட்ட மருத்துவ சேவைகளைக் கொண்ட நாடுகளில் உள்ளவர்கள் இப்போது எதிர்நோக்கும் இன்னல்கள் சொல்லி மாளாதவை. மேற்குலக நாடுகளில் கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சிக்கு வந்த தீவிர வலதுசாரி ஆட்சிகள் அரச மருத்துவத்துக்கு போதிய நிதிவசதியும் வளங்களையும் வழங்காது சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதன் மோசமான விளைவுகளை இந்த நோய்த்தொற்று தோலுரித்துக் காட்டியுள்ளது. பிரித்தானியப் பிரதமர் முதல் ஜேர்மன் சான்சலர் வரை அனைவரும் பொதுச் சுகாதாரத் துறைக்குச் சுமையேற்ற வேண்டாம் எனக் கோருகிறார்கள்.

விமானச் சேவைகள் தங்களைப் பிணையெடுக்குமாறு கோருகின்றன. அரசுகள் அதற்குத் தயாராகவே உள்ளன. அதே அரசுகளே தனது மக்களுக்கு உணவளிக்கவோ வேலைக்கான உத்தரவாதமளிக்கவோ தயாராக இல்லை. இந்த நோய்த்தொற்று எல்லோருக்குமானது. ஆனால் இது ஏழைகளையும் எளியவர்களையும் உழைக்கும் மக்களையுமே அதிகம் பாதிக்கின்றது. இன்றும் ‘பொருளாதாரம் சரிவடைய இடமளிக்கக் கூடாது” என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அவர்கள் தங்கள் இலாபத்தில் ஒருபகுதி குறைவடைவதை விரும்பவில்லை.

இக்கட்டுரையை எழுதுகின்ற போது அமெரிக்காவில் உள்ள அமேசன் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் வேலையாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு கையுறைகளோ, தொற்றுநீக்கிகளோ, முகத்தை மூடும் துணிகளோ வழங்கப்படவில்லை என்றும் மோசமான சுகாதார நிலைகளில் தாம் வேலை செய்வதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நியூயோர்க்கில் உள்ள அமேசன் நிறுவனத்தின் பண்டகசாலையில் பணியாற்றிய பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்தப் பண்டகசாலையை மூடி தொற்றுநீக்கம் செய்து மீண்டும் திறக்குமாறு அங்கு பணிபுரிந்தவர்கள் கோரிக்கை வைத்தார்கள். இதை நிர்வாகம் ஏற்கத் தவறியதையடுத்து அவர்கள் வெளிநடப்புச் செய்தார்கள். இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்ற ஊழியரை அமேசன் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே. சாதாரண ஊழியர்களின் பாதுகாப்கோ, உயிருக்கான உத்தரவாதமோ ஒரு பொருட்டல்ல. இலாபம் குறைவுபடக்கூடாது என்பதே முக்கியமானதாகிறது.

வளர்முக நாடுகளில் நோய்த்தொற்றைத் தடுக்க அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவால் தொற்றால் இறப்பவர்களை விட பசியாலும் பட்டினியாலும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பதற்கான சாத்தியம் அதிகரித்து வருகிறது. அரசுகள் மக்களைப் பற்றிய எந்தவொரு அக்கறையுமின்றி செயற்படுகின்றன.

செவ்வாயில் சீவிப்பது பற்றிய கனாவை தின்றது செமியாமல் ஏப்பம் விடுபவர்கள் கண்டுகொள்ளட்டும். நாங்கள் அடுத்த வேளை உணவுக்கு அல்லாடுபவர்களைப் பற்றிக் கவலைப்படுவோம். அவர்களின் இருப்புக்குக் கைகொடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *