கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு
நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது. எதிர்காலம் குறித்த அச்சங்களும் நிச்சயமின்மைகளும் நிச்சயமாகிப் போன பொழுதொன்றில், நம்பிக்கை வைப்பதைத் தவிர வழி வேறில்லை. ஏன் இவ்வாறு சொல்கிறேன், இதற்கான காரணங்கள் என்ன என்று, நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் நோக்கிப் பயணிப்போம்; நம்பிக்கையோடு!
கொரோனா வைரஸ் என்று அறியப்பட்ட கொவிட்-19 நோய்த்தொற்று, எண்ணிக்கையில்லாத கேள்விகளை, எம்மத்தியில் உருவாக்கியிருக்கிறது. ‘நாளை என்ன நடக்கும்’ என்ற கேள்வியே, எல்லோர் மனங்களிலும் உள்ளது. இது நியாயமான கேள்வியாகும். ஆனால், இந்தத் தொற்றை, மனிதகுலம் தாண்டி வந்ததன் பின்னர், நீண்டகால நோக்கில், என்ன நடக்கும் என்பது குறித்த புரிதலை நோக்கி, நாம் நகர்ந்தாக வேண்டும். எல்லாவகையான சாத்தியங்களும் எம்முன்னே உள்ளன.
இந்த வைரஸ் தொற்று யாரும் எதிர்பாராதது. இது, பல வழிகளில் பல்பரிமாண அதிர்ச்சிகளை உருவாக்கியிருக்கிறது. இதிலிருந்து இந்த உலகம் மீள்வதற்கு, நீண்ட காலம் எடுக்கும். மனிதகுலம் தன் வளர்ச்சியை, மேன்மையை, தொழில்நுட்ப உயர் திறத்தைக் கொண்டாடி மகிழ்ந்து இருந்த காலப் பொழுதொன்றில், ‘கொரோனா’ தன் கைவரிசையைக் காட்டியுள்ளது. கொரோனாவின் தாக்குதலை எதிர்கொள்ள, மனிதகுலம் தயாராக இல்லை என்ற உண்மை உறைத்த போது, காலம் கடந்து விட்டது. இத்தருணத்தில், இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதே பாரிய சவாலாக மாறியுள்ளது.
பல வழிகளில், மனிதகுலம் மனிதாபிமானத்தில் இருந்தும் அடிப்படை மனித அறங்களில் இருந்தும் விலகி, நீண்ட தூரம் வந்துவிட்டதை இந்த நெருக்கடி எடுத்துக்காட்டியது. ஒரு நெருக்கடியின் போது, மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், அரசுகள் எவ்வாறு செயலாற்றுகின்றன, நிறுவனங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன, ஊடகங்கள் என்ன செய்கின்றன போன்ற அனைத்தையும், வீட்டில் இருந்தே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை குறித்து எவ்வளவு தூரம் ஆழமாக நாம் சிந்தித்துள்ளோம் என்பது கேள்விக்குறியே?
இன்றும், இலாபத்தைத் தக்க வைப்பது பற்றியும் இலாபத்தைப் பெருக்குவது பற்றியும் பலர் சிந்திக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் பாதிப்படையாமல் இருக்க, அவர்களுக்கு அரசுகள் நிதி அளிக்கின்றன; சரிந்து விட்ட தனியார் கம்பெனிகளைப் பிணையெடுக்கின்றன. ஆனால், அந்த அரசுகளில் வாழுகின்ற குடிமக்கள், உணவுக்கு வழியின்றி பட்டினி கிடக்கிறார்கள். மருத்துவத்துறையில் கடமையாற்றும் பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்கிறார்கள். இதுதான், இன்றைய உலகின் சுருக்கமான வரைபடம்.
கொரோனா வைரஸ் நெருக்கடி, முடிவுக்கு வருவது போன்ற ஒரு சித்திரம், எமக்குக் காட்டப்பட்டாலும் உண்மை அதுவல்ல; பலவழிகளில் நெருக்கடி இப்போதுதான் தொடங்குகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகள், இலங்கை போன்ற நாடுகளைப் பார்த்து, ‘மூன்றாம் உலக நாடுகள்’ என்று அழைக்கும் வழமை ஒன்று உண்டு. இந்த வைரஸ் தொற்று, இப்போது கிட்டத்தட்ட எல்லா நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகள் ஆக்கியுள்ளது.
பசியும் பட்டினியும் வறுமையும் உலகமயமாகி உள்ளன. இது, வெறுமனே ஒரு சுகாதார மருத்துவ நெருக்கடி அல்ல; அதையும் தாண்டி, சமூகம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என, மனிதகுலத்தின் அனைத்துத் தளங்களிலும் கொரோனா வைரஸின் பாதிப்பின் தாக்கம், வெளிப்படையாகவே புலப்பட்டு நிற்கின்றது. இதை நாம் மறந்துவிடக்கூடாது; மறைக்கவும் முடியாது.
இவற்றைக் கருத்தில் கொண்டே நாம், கொவிட்-19 இன் பின்னரான உலகம் குறித்துப் பேச வேண்டி உள்ளது. கொவிட்-19 உலக ஒழுங்கை உலுக்கியுள்ளது; இது, உலக ஒழுங்கை நெருக்கடிக்குள் தள்ளியதன் மூலம், எதிர்காலம் குறித்த புதிய சாத்தியங்களையும் நிச்சயமின்மைகளையும் உருவாக்கியுள்ளது. இவை, ஆழமான நீண்ட ஆய்வை வேண்டுவன. இவற்றின் ஒவ்வோர் அம்சங்கள் குறித்தும் பார்க்கலாம். கொவிட்-19 பற்றிய அனுமானங்களை முதலில் நோக்கலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த Center for Infectious Disease Research and Policy என்ற ஆய்வு நிறுவனம், அண்மையில் வெளியிட்ட அறிக்கையானது கொவிட்-19 எவ்வாறு முன்நகரும் என்ற வினாவுக்குப் பதிலளித்துள்ளது. அவ்வறிக்கையின்படி:
– இந்தத் தொற்று, 18 முதல் 24 மாதங்களுக்கு நிலைக்கும் சாத்தியம் உண்டு.
– உலகின் 60% தொடக்கம் 70% வரையிலான மக்கள் தொகையினர், இத்தொற்றுக்கான நோயெதிர்ப்புச் சக்தியைப் பெறும்வரை இது தொடரும்.
– இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான குணங்குறிகளைக் காட்டுவதில்லை; அல்லது, மிகக்குறைவாகவே காட்டுகிறார்கள். இதனால் இதைக் கட்டுப்படுத்துவது கடினமானது.
– அரசாங்கங்கள் இந்தத் தொற்று விரைவில் முடிந்துவிடும் என்று மக்களுக்குச் சொல்வதை நிறுத்த வேண்டும். மாறாக, இது நீடிக்குமிடத்து, அதற்குத் தாக்குப்பிடிப்பதற்கு மக்களைத் தயார்செய்ய வேண்டும்.
– இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நிலைமை சீராகலாம். ஆனால், 2021க்கு முன்னர் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் பயன்பாட்டுக்கு வராது.
இவ்வறிக்கையின் சாரம் யாதெனில், கொரோனா வைரஸின் தாக்கம் முடிந்துவிட்டது என்று மக்கள் முடிவுகட்டாமல், அதை எதிர்கொள்ளத் தயாராகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதேயாகும்.
இன்று, எல்லோர் மத்தியிலும் எழுந்திருக்கின்ற கேள்வி, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில், இந்தத் தொற்று இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏன் ஏற்படுத்தியது என்பதாகும். இதற்கான பதிலை, ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விளக்கலாம்.
இந்தக் கொவிட்-19 வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்காவாகும். இங்கு, மருத்துவ சேவைகளில் பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. மருத்துவமனைகளில் இடநெருக்கடி, ‘வென்டலேட்டர்’கள் இல்லாமை என்பன, தலையாய பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. Global Campaign on Military Spending என்ற அமைப்பு, அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்கா வாங்கும் F-35 ரக போர்விமானம் ஒன்றின் மதிப்பு 89 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தத் தொகையில், 3,244 ‘வென்டலேட்டர்’களைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டில்களுடன் கொள்வளவு செய்ய முடியும். அமெரிக்கா, இதுபோன்ற 3,000 விமானங்களை வாங்கவுள்ளது.
இது, நாடுகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. பொதுச் சுகாதாரம் இலவசமாகவும் அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ள நாடுகள் இந்தத் தொற்றை ஓரளவு வினைத்திறனாகக் கையாண்டுள்ளன என்று சொல்லலாம்.
கடந்த மாதம் 27ஆம் திகதி, Stockholm International Peace Research Institute தனது வருடாந்த இராணுவச் செலவீன அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டை விட, 2019ஆம் ஆண்டுக்கான இராணுவச் செலவீனம் 3.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
உலகளாவிய மொத்த இராணுவச் செலவீனத்தில் 38 சதவீதத்துக்கு அமெரிக்கா பொறுப்பாகின்றது. சீனா, இந்தியா, ரஷ்யா, சவூதி அரேபியா ஆகியன இந்த வரிசையில் அடுத்து வருவன. இந்தியா, முதன் முறையாக உலகளாவிய இராணுவச் செலவீனத்தில் மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது. இவை, அரசாங்கங்களின் முன்னுரிமை ஒழுங்கை விளக்க உதவுகின்றன.
கொவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய காலத்திலும், இந்தநிலை தொடரும் என எதிர்பார்க்கலாம். அரசாங்கங்களும் நிறுவனங்களும் இதைத் தங்களுக்கு வாய்ப்பான ஒன்றாக மாற்ற நினைக்கின்றன. அவை, அரசியல் கதையாடல்களாகவும் இலாபத்துக்கான புதிய வழிமுறைகளாகவும் வெளிப்படுகின்றன. அவற்றுக்கு, ‘கொரோனா’ என்ற முகமூடி கனகச்சிதமாகப் பயன்படுகிறது.
இதை, நாம் முதலில் உணர வேண்டும். கொரோனா வைரஸின் பெயரால், நாம் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த நோய்த்தொற்று, யாருடைய வாழ்வை மிகமோசமாகத் தாக்கியது எனில், மிகச்சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கையையே ஆகும். அரசியல்வாதிகளோ, கொள்கை வகுப்பாளர்களோ, சமூக ஊடகப் போராளிகளோ இதற்கான விலையைக் கொடுக்கவில்லை; சாதாரண மக்களே கொடுத்தார்கள். இனியும் அவர்களே, உழைப்பாலும் ஊதியத்தாலும் உறிஞ்சப்படுவார்கள்.
இன்று, நாம் எதிர்நோக்கும் இந்த நெருக்கடியை, கடந்து போகவேண்டுமாயின் இரண்டு விடயங்களைச் செய்தாக வேண்டும். ஒன்று: கொவிட்-19க்குப் பின்னரான உலகைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும்; அதற்குத் தயாராக வேண்டும்.
இரண்டு: நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். இந்தத் தொற்றுக்குப் பின்னரான உலகின் திசை வழிகள் பற்றி, அடுத்த வாரமும் நாம் பேசலாம். நம்பிக்கையோடு இருப்பதன் மிகச் சிறந்த அடையாளம், எங்கள் விவசாயிகள். இவ்விடத்தில், ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.
மப்பன்றிக் கால மழை காணாத மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது;காளை இழுக்காது
அந் நிலத்தின்
பாறை பிளந்து பயன் விளைப்பான் என்னூரான்.
ஆழத்து நீருக்கு அகழ்வான் அவன். நாற்று
வாழத்தன் ஆவி வழங்குவான். ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன் நெல்லு.
தங்க நகைகள் தலைக்கணிந்த பெண்களே
கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப்
பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல்
முற்றி, மனித முயற்சிக்கு இறை கொடுக்கும்
பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும்
அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத
எந்தச் சொல் உண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி
உள்ளம் நெகிழ்ந்தான்; ஒரு கதிரைக் கொத்தாக
கிள்ளி முகர்ந்தான்; கிறுகிறுத்துப் போகின்றான்.
வாடும் கதிருக்கு வார்க்கா முகில், கதிர்கள்
சூடும் சிறு பயிர் மேல் “சோ”வென்று நள்ளிரவில்
கொட்டும். உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய்
எட்டுத் திசையும் நடுங்க முழங்கி எழும்.
ஆட்டத்து மங்கையர் போல் அங்கு மொய்த்து நின்ற பயிர்
பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய் விடவே
கொள்ளை போல் வந்து கொடுமை விளைவித்து
வெள்ளம் வயலை விழுங்கிற்று.
பின்னர் அது வற்றியதும் ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி
பற்றி, அதோ பார், பழையபடி கிண்டுகிறான்.
சேர்த்தவற்றை முற்றும் சிதற வைக்கும் வானத்தைப்
பார்த்து அயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்
வாழி, அவன்.
ஈண்டும் முதலில் இருந்தும் முன்னேறுதற்கு
மீண்டும் தொடக்கும் மிடுக்கு.