சபரிமலை ஐயப்பன் சர்ச்சை: பெண்ணுரிமைக்கு வேட்டுவைத்தல்
நந்தனாரைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த சமூகத்தின் நவீன வாரிசுகள் இன்று பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கக் கோட்டைகளாக மதமும் மதஞ்சார் நம்பிக்கைகளும் இருந்துள்ளன. இன்று முன்னேறிய சமூகங்களாக எம்மை நாம் சொல்லிக் கொண்டாலும் பெண் விடுதலையின் பிரதான முட்டுக்கட்டைகளாக இதே சமூகங்களே இருக்கின்றன என்ற உண்மை இன்னொரு முறை நிரூபணமாகிறது.
கடந்த மாதம் 28ம் திகதி இந்திய உயர் நீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கிக் தீர்ப்பு வழங்கியது. இத் தீர்ப்பு ஆண் பெண் சமத்துவ அடிப்படையை மதித்து வழங்கிய தீர்ப்பு என்ற வகையில் முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. இத் தீர்ப்பிற்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டனப் போராட்டம் ஒன்றைக் கொழும்பில் சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியம் நடாத்தியது. இப்போது இவ்விடயம் இலங்கையிலும் பேசுபொருளாக்கப்படுவதால் அது குறித்து எழுதுவது அவசியமாகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலிற்குள் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மாதவிடாயிலுள்ள பெண்கள் கோயிலை அசுத்தமாக்குவர் என்று சொல்லி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து 1991ம் ஆண்டு தொடுத்த வழக்குக்கு இப்போதுதான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெண்களின் மத வழிபாட்டு உரிமையின் மீது ஆணாதிக்கத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் அனைத்துப் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி சபரிமலை கோவிலுக்குள் செல்லலாம். ஆணாதிக்க விதிகள் மாற்றப்பட வேண்டும். மதத்தில் ஆணாதிக்கம் அனுமதிக்கப்படலாகாது. உயிரியல் தன்மையை அடிப்படையாகக் கொண்ட எந்த விதியும் அரசியல் சாசன சோதனையைத் தாண்டி நிலை பெற்றிருக்க முடியாது. அதே போல திருவனந்தபுரம் தேவசம் குழுமம் குறிப்பிட்டிருப்பது போல, ஐயப்ப பக்தர்களை மதத்தின் தனிப் பிரிவினராக முடியாது.” என்றும் சொல்லியிருக்கிறது.
இத் தீர்ப்பை எதிர்த்துப் பல வாதங்கள் வைக்கப்படுகின்றன. நீதிமன்றம் மத அலுவல்களில் தலையிடக்கூடாது என்பது அவற்றிற் பிரதமானமானது. இந்து மக்கள் கட்சியினரோ இத் தீர்ப்பு மாற்றப்படாவிட்டால் பிரதமர் நரேந்திர மோடியால் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு இத் தீர்ப்பு எப்படியும் மாற்றி அமைக்கப்படும் என்று நீதித்துறைக்கு சவால் விடுகிறார்கள். பேச்சாளர் சுகி சிவம் நீதிமன்றம் எப்போதும் சரியான தீர்ப்புக்களை வழங்குவதில்லை. எவ்வாறு யேசு கிறீஸ்துவுக்கு தண்டனை தவறான தீர்ப்பானதோ அதைப் போலவே இத் தீர்ப்பும் என்று வாதிடுகிறார். இதில் அவர் யேசுவுக்கெதிரான தீர்ப்பைப் பிரேமானாந்தாவின் தீர்ப்புக்கு ஒப்பிட்ட நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நினைவுபடுத்துகிறார்.
இனி இப் பிரச்சனையின் மையத்திற்கு வருவோம். பெண்கள் ஏன் கோயிலுக்குப் போகக்கூடாது? போவது, இந்து மதத்திற்கு மட்டுமல்லாது எல்லா மதங்கட்கும் பொதுவாக மத நம்பிக்கையுள்ளவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு எவ் வேறுபாடுமின்றி அனுமதிக்கப்பட வேண்டும். பாலோ, வயதோ, சாதியோ, இனமோ அதைத் தடுக்க காரணமாகக்கூடாது.
இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் பெண்கள் அனைத்துக் கோயில்களுக்கும் செல்ல முடியும். பெண்கள் தான் கோயிலுக்குச் செல்பவர்களில் பெரும்பான்மையினர். எனின் ஏன் சபரிமலைக்கு மட்டும் போகக்கூடாது. அதற்காகச் சொல்லப்படும் புராணக்கதைகள் எதுவுமே நம்பத்தகுந்தாக இல்லை. உலகமே இறைவனின் படைப்பு என்றால் மனிதர்களில் பாதிக்கும் மேலாக இருக்கின்ற பெண்கள் தன்னைப் படைத்த இறைவனையே வழிபட அனுமதிக்க முடியாது என்பது கடவுளுக்கே செய்யும் துரோகம் எனப் பொருள் கொள்ளலாம். இந்த சமூகம் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்ற உண்மையை ஏற்க வேண்டும். அதை ஏற்க மறுக்கின்ற சமூகத்தின் பிரதிநிதிகளும் குழுக்களுமே இத்தீர்ப்பைக் கேள்விக்குட்படுத்துவது மட்டுமன்றி பெண்களை அனுமதிக்க முடியாது என்று அடம்பிடிக்கிறார்கள்.
சபரிமலையும் சுத்தமும்
பெண்களை கோயிலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று வைக்கப்படும் வாதத்திற்கு சுத்தமும் பெண்களின் மாதவிடாயும் அடிப்படையான காரணமாகச் சொல்லப்படுகிறது. பெண்கள் தீட்டானவர்கள் என்று சொல்வதன் மூலம் பெண்கள் அனைவரையும் நாம் கொச்சைப்படுத்துகிறோம். அவர்களை மாண்பிறக்கம் செய்கிறோம். பருவமாறுதல்கள் பெண்களுக்கு மட்டும் நிலவுவது மாதிரியும் ஆண்களுக்கு அம் மாறுதல்கள் நிகழாதது போலவும் ஒரு தவறான விம்பம் ஆக்கப்பட்டுள்ளது. உடல் தூய்மையும் அசுத்தமும் கலந்த ஒன்றுதான். நூற்றுக்கு நூறு தூய உடல் எதுவுமே கிடையாது. அறிவியற்படி அவ்வாறு ஒன்று இருக்க முடியாது. எனவே மாதவிடாயை அசுத்தம் என்பதே அடிப்படையிற்; பிழை. இனவிருத்தியின் ஆதாரமே மாதவிலக்குடன் தொடர்புடையது என்பதை மறுக்கமுடியாது. எனவே அதைக் காரணமாகக்கிப் பெண்களைத் தள்ளிவைப்பதும் ஒதுக்குவதும் தவறு.
சபரிமலைக்குச் செல்பவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற விடயத்திற்கு வருவோம். சபரிமலையின் 18 படிகளை ஏறுபவர்கள் பம்பை நதியில் குளித்துவிட்டுத்தான் ஏறவேண்டும். அதையே ஐயப்ப பக்தர்கள் செய்கிறார்கள். கேரள மாநிலத்தின் மூன்றாவது பெரிய நதி பம்பை. ஆனால், அம் மாநிலத்தின் அசுத்தமான ஒரே நதியும் அதுதான். மத்திய அரசின் ‘தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின்’ கீழ் தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ள ஒரே கேரள நதி அதுதான்.
நீரின் தூய்மையை அளக்கும் பல்வேறு அலகுகளில் Fecal coliform எனும் மலஞ்சார் பற்றிரியமும் ஒன்று. 100 மில்லிலீட்டர் தண்ணீரில் அது அதிகபட்சம் 500 இருக்கலாம். பம்பை நதி நீரில் 120-140 மடங்கு அதிகமாக 60,000 முதல் 70,000 வரை Fecal coliform உள்ளது.
மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், பறவை எச்சம், செயற்கை உரம் கலந்த விவசாயக் கழிவுகள் ஆகியவற்றின் ஏதேன் ஆறுகளில் கலப்பதால் குநஉயட உழடகைழசஅ அளவு கூடும். பம்பை நதியில் அதன் அளவு மிகுவதற்கு மனிதக் கழிவுகள் அதிகம் கலப்பதுதான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பம்பை நதியைத் தூய்மைப்படுத்தலை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர், “எத்தனை பொதுக் கழிப்பிடங்கள் இருந்தாலும், பக்தர்கள் பொதுவெளியில் மலம் கழிப்பதைத்தான் விரும்புகின்றனர். இது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினால் ஒழிய, இப்பழக்கத்தை மாற்ற முடியாது. கோயில் வருவாயை முக்கியமாகக் கருதி, பக்தர்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சுமார் 3 கோடி பேர் சபரிமலைக்கு வருகிறார்கள். உற்சவ நாளையண்டிய ஜனவரி நடுப்பகுதியில்; ஓரு நாளில் மட்டும் ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமானோர் ஐயப்பனைத் தரிசிக்கிறார்கள். அவ்வளவுபேரும் அங்கு குளிக்கிறார்கள். அதன் சுத்தத்தை என்னவென்பது.
ஐயப்ப பக்தர்களுடன் பயணித்த பத்திரிகையாளர் ஒருவர் தனது அனுபவங்களைப் பின்வருமாறு பகிர்கிறார். ‘தினம் ஒரு துணி உடுத்துமளவிற்கு உடைகளை அதிகம் கொண்டுவர முடியாது. ஏனெனில் எல்லாவற்றையும் காவ முடியாது. இருமுடிக் கட்டு, அதனுடன் இரண்டு கருப்பு உடைகள், ஒரு துண்டு அடங்கிய தோள் பை இவற்றுடன்தான் வருவார்கள்.
பயணச் செலவைக் குறைக்க, போகிற இடங்களில் அறை எடுத்துத் தங்க மாட்டார்கள். ஒன்றில் பயணப்படும் வண்டியில் தூங்குவார்கள் அல்லது வண்டி நிற்கும்போது, கிடைக்கிற இடங்களில் துண்டு விரித்துப் படுத்துக் கொள்வார்கள். அறை எடுக்காததால், துணிகளை சரியாகத் துவைத்து உலர்த்த முடியாது. ஊர் திரும்பும் வரை இரண்டு கூட்டம் துணிகளையே மாற்றி மாற்றி உடுப்பதால், பெரும்பாலும் அவை அழுக்கேறி காணப்படும். 48 நாட்கள் அல்லது 60 நாட்கள் முடி வெட்டாமல், ஷவரம் செய்யாமல் தலை புதர் மண்டிக் காணப்படும். அறை வசதி இல்லாததால், காலைக் கடன் கழிப்பதற்கு, தண்ணீர் கிடைக்கிற இடங்களை எல்லாம் பயன்படுத்துகிறார்கள்.’
ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் பெண்களுக்கு அனுமதியில்லை
பொதுவெளியில் வைக்கப்படும் இன்னொரு வாதம் ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் பெண்களைக் கோயிலுக்கு அனுமதிப்பதில்லை. மூன்று விடயங்களை இவ்விடத்தில் சொல்ல வேண்டும். முதலாவது “கடவுளாக இருந்தாலும் அவருக்கு மனக் கட்டுப்பாடு குறைவு எனவே பெண்களே வராதீர்கள்” என்று நீங்கள் ஐயப்பனையே அவமதிக்கிறீர்கள்.
இரண்டாவதாக ஐயப்பன் பிரம்மச்சாரியல்ல. அவர் இரண்டு திருமணம் செய்தவர். அவருக்கு பூர்ணா, புஷ்கலா தேவி என இரு மனைவியர் உள்ளனர். அவர் தன் மனைவியருடன் கோயில்களில் அமர்ந்திருக்கிறார். அவர் பாலகனாக குளத்துப்புழையிலும், இளைஞராக புஷ்கலா தேவியுடன் ஆரியங்காவிலும், பூர்ணா, புஷ்கலா தேவியருடன் அச்சன் கோவிலிலும், துறவியாக சபரிமலையிலும் காட்சி தருகிறார்.
எல்லோரையும் போல பாலகன், இளைஞன், நடுத்தர வயது முதலான பருவங்கள் ஐயப்பனுக்கும் இருந்திருக்கிறது. மனைவியருடன் வாழ்ந்துவிட்டு துறவறம் பூண்டிருக்கிறார்;. இப்படி வீட்டை விட்டு காட்டுக்குப் போய்த் துறவறம் பூண்டவர்கள் துறவிகள் எனப்படுவார்களே ஒழிய பிரம்மாச்சாரிகள் என்றல்ல. திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை தனியாக இருப்பவர்களுக்குத் தானே பிரம்மச்சாரி என்று பெயர். எனவே பெண்களை உள்ளே அனுமதிக்க மறுக்க ஒரு காரணமாக மட்டுமே ஐயப்பன் பிரம்மச்சாரி எனப்படுகிறது என்று கொள்ளலாமா?
மூன்றாவதாக இந்து மதத்தில் எல்லோரும் அறிந்த பிரம்மச்சாரி ஆஞ்சநேயர். அவருடைய கோயில்களில் பெண்கள் நிரம்பி வழிகிறார்கள். அவருக்கு பக்தர்களை விடப் பக்தைகளே கூட. பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர் கோயிலுக்குப் பெண்கள் அனுமதிக்கும் போது ஏன் பிரம்மச்சரி எனப்படும் ஐயப்பன் கோயிலுக்கு மட்டும் பெண்கள் போகக் கூடாது?
மகரஜோதி என்ற ஏமாற்று
சபரிமலை ஐயப்பன் கோயிலின் விஷேசமே மகர சந்கராந்தி. அன்று வானில் தோன்றும் ஒளிப்பிழம்பே மகர ஜோதி எனப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் திகதி இரவு 6.30 மணியளவில் தோன்றுகிறது. இது ஐயப்பனே ஒளிப்பிளம்பாகக் காட்சி தருகிறார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு போகிறார்கள். பொன்னம்பல மேட்டில் தோற்றும் ஒளிப்பிழம்பை பார்ப்பதற்காகக் கூடும் கூட்டத்தில் விபத்துக்கள் வழமையாகின. 2011ம் ஆண்டு மகரஜோதியைப் பார்ப்பதற்காக கூடிய கூட்ட நெரிசலில் 105 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து இவ் விடயம் பற்றி ஆராயத் தமிழ்நாட்டின் ‘நக்கீரன்’ பத்திரிகையின் புலனாய்வுக் குழு பொன்னம்பல மேட்டுக்குச் சென்றது. மகரஜோதியை மனிதர்களே ஏற்றுகிறார்கள் என்பதைக் கேரள பகுத்தறிவாளர் சங்க உறுப்பினர் பலமுறை சொல்லியும் அது கவனம் பெறவில்லை. அவ்வமைப்பின் செயற்பாட்டாளர் சுகுமாரன் அதை ஏற்றுபவர்களைப் பிடித்துக் காவல்துறையினரிடம் கையளித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று 1990களிலேயே சொல்லியிருக்கிறார். நக்கீரன் குழு சுகுமாரனையும் அழைத்துக் கொண்டு பொன்னம்பல மேட்டின் அடிவாரத்திற்குச் செல்கிறது. அங்கு வாழும் மலைவாழ் மக்களுடன் இது பற்றி உரையாட முனைந்தபோது அதற்கு அவர்கள் மறுக்கிறார்கள். ஊடகவியலாளர்களுடன் தொடர்பு கொண்டால் போலிஸ் தமக்கு தர்ம அடி அடிக்கும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இவ்வாறு நக்கீரன் குழு விக்கித்து நிற்கிறது.
தற்செயலாக அங்கு ஒரு முதியவரைச் சந்திக்கிறார்கள். அவருடைய பெயர் சிவலிங்கம். இலங்கையில் இருந்து அகதியாய் வந்து நீண்டகாலமாக அப் பகுதியில் வசிப்பவர். அவர் துணிந்து உண்மையைச் சொல்லியிருக்கிறார். அவர் விவரித்தது பின்வருமாறு:
“ஜனவரி 14ஆம் தேதி காலையிலே பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங்களோடு நாலஞ்சு ஜீப்ல ஆளுக போவாங்க. பொன்னம்பல மேட்டு உச்சிக்குப் போய் தங்கிக்குவாங்க. மாலையில அந்தப் பாத்திரங்கள்ல கற்பூர கட்டிகளைப் போட்டு நாலஞ்சு பேரு சேர்ந்து கற்பூர ஒளி தெரியற அந்த அலுமினியப் பாத்திரத்தத் தூக்கிப் பிடிப்பாங்க, அதுதான் மகர ஜோதி.”
இதை நக்கீரன் குழு நேரிற் பார்த்தது. மேலதிக தகவல்களுக்கு 2011 ஜனவரி 26-28 நக்கீரன் இதழைக் காண்க. அதே வேளை 105 பேர் பலியான வழக்கில் மகரஜோதி இயற்கையாகத் தோன்றுவதா அல்லது மனிதர்களால் ஏற்ப்படுவதா என்று நீதிமன்றால் வினவப்பட்டது. இதற்கு பதில் அளித்த கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு: “வனத்துறை அதிகாரிகளும் கோயிலுக்குப் பொறுப்பாக இருக்கும் அறநெறித்துறை அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம் தான் மகரஜோதி” என்ற உண்மையை ஒப்புக் கொண்டார். ஆனால் சோகம் யாதெனில் இன்றும் மகரஜோதியாக ஐயப்பன் தோன்றுகிறார் என்று சொல்லப்படுகிறது. மக்கள் அதை நம்புகிறார்கள்.
ஜயப்பன் பற்றிய ஏராளமான முரண்களும் பொய்களும், புரட்டுகளும் பித்தலாட்டங்களும் உள்ளன. அவற்றை பணம் கொழிக்கும் ஒரு வியாபாரமாக்கிறார்கள். அதை எழுத இடம் போதாது.
பெண்களின் உரிமைக்கான போராட்டம்
பெண்களின் சமவுரிமையை மதித்து ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநிறுத்தப் பெருந் தடைகளாகப் பொருளாதார ஏற்றத்தாழ்வும் பண்பாட்டு வாழ்வியல் நடைமுறைகளும் உள்ளன. இத் தடைகள் நிலவுடைமை வழிவந்த கருத்தியல் சிந்தனை நடைமுறைகளின் நீடிப்புக்களாகும். பெண்கள், பல்வேறு நிலைகளில், வெளிப்படையாகத் தெரியாத ஒடுக்குதல்களாற் பிணைக்கப்பட்டுள்ளனர். அது பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. அவ்வாறு வெளிப்படும் ஒன்றுதான் இப்போது சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பின் மீதான எதிர்வினை. எனவே பெண்கள் தங்கள் உரிமைகளுக்குத் தொடர்ந்தும் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதைத்தான் இத்தீர்ப்பைத் தொடர்ந்துள்ள செய்திகள் சொல்கின்றன.
நிறைவாக எமது சமூகத்தை சமத்துவத்தின் திசையிலும் ஜனநாயகத்தின் திசையிலும் நகர்த்தியாக வேண்டும். அதற்காகக் குரல்கொடுப்பதும் ஒன்றுபடுவதும் போராடுவதும் தவிர்க்கவியலாதது.