செப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம்
எல்லா மாதங்களும் தங்களுக்கான நினைவுகளைச் சுமந்துள்ளன. இருந்தபோதும் உலக அரசியலில் செப்டெம்பர் மாதம் கொஞ்சம் சிறப்பானது. செம்டெம்பர் நிகழ்வுகள் வரலாற்றின் திசைவழியில் முக்கியமான காலங்களை உள்ளடக்கியது. அக்காலங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக எமக்குச் சில முக்கிய செய்திகளைச் சொல்கின்றன. அச்செய்திகள் வலியன. எமது நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதைத் தீர்மானிக்க அவை உதவக்கூடும்.
சிலியின் செப்டெம்பர் – 45 ஆண்டுகள் முன்னே
இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னமெரிக்க நாடான சிலியில் மக்களால் தெரியப்பட்ட ஜனாதிபதி சல்வடோர் அயென்டேக்கு எதிராக இராணுவச் சதி அரங்கேறி அவர் கொல்லப்பட்டது 1973 செப்டெம்பர் 11. இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக சிலி இருந்தபோதும் அதன் பயன்களை மக்களால் அனுபவிக்க இயலவில்லை. சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களின் கைகளில் இருந்தன. அவற்றுக்கு அரச ஆதரவு இருந்தது. இந்நிலையில் இடதுசாரியும் வைத்தியருமான அயென்டே 1971ம் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.
அவர் பல்வேறு சமூகநலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். குறிப்பாக குழந்தைகள் போசாக்கின்மையினால் அவதிப்படுவதால் அவர்கட்கு தினமும் இலவசமாகப் பால் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தனியார் கைகளில் இருந்த செப்புச் சுரங்கங்களை தேசியமயமாக்கினார். இதனால் அரசுக்கு நிறைய வருமானம் கிடைத்தது. இதனால் அவர் விரும்பிய சமூகநலத்திட்டங்களை அவரால் தொடர்ச்சியாகச் செய்ய முடிந்தது.
அரசுடமையாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட அமெரிக்கச் செப்பு கம்பெனி முதலாளிகள் அமெரிக்க அரசிடம் முறையிட்டன. அமெரிக்க காங்கிரசில் பேசிய அதன் பிரதிநிதிகள் எப்பாடுபட்டாவது அச்சுரங்கங்களை மீளப் பெற வேண்;டும் என்றும் அதற்காக எதையும் செய்யத் தயாராகவிருப்பதாகவும் சொல்லின. இதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ரிட்சட் நிக்சன் அமெரிக்க நலன்களை அரசாங்கம் நிச்சயம் தக்கவைக்கும். அதை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்று தெரிவித்தார்.
அயென்டே அரசுக்கெதிரான இராணுவச்சதி அமெரிக்க ஆதரவுடன் சிலியின் இராணுவத்தளபதியாக இருந்த அகஸ்டோ பினோஷேயினால் அரங்கேற்றப்பட்டது. விமானங்கள் ஜனாதிபதி மாளிகையைக் குண்டுவீசித் தாக்கின. மக்களுக்கு வானொலியில் உரையாற்றிய ஜனாதிபதி அயென்டே ‘இந்தச் சிலியின் தெருக்களில் என்றாவது ஒருநாள் மக்கள் சுதந்திரமாக நடமாடுவர். மக்கள் வெல்வர். சிலியை விடுவிப்பர். நும்பிக்கை இழக்காதீர்கள்’ என்று உரையாற்றினார். அயென்டே கொல்லப்பட்டு இராணுவச் சதி வெற்றிபெற்றதன் பின்னணியில் இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகளும், அரச ஆதரவாளர்களும் தேடித்தேடிச் சுட்டுக் கொல்லப்பட்டனர். 16 ஆண்டுகள நீடித்த பினோஷேயின் சர்வாதிகார ஆட்சியில் 5,000க்கும் அதிகமானோர் கொலையுண்டனர் அல்லது காணாமல் போயினர். 50,000 மேற்பட்டவர்கள் சிறையில் தினந்தினம் சித்திரவதைகளை அனுபவித்தனர். 2 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அவரது ஆட்சியில் அரங்கேறிய ‘Operation Colombo’ மிகவும் பிரபலமானது. அரசியல் எதிரிகளைக் குறிவைத்து நடாத்தப்பட்ட இந் நடவடிக்கையின் விளைவால் 120க்கும் மேற்பட்ட முக்கியமான அரசியற்செயற்பாட்டாளர்கள் இல்லாமல் செய்யப்பட்டார்கள்.
இலத்தீன் அமெரிக்காவின் மிகவும் கொடுமையான ஆட்சிகளில் ஒன்றாக பினோஷேயின் ஆட்சி இருந்தது. அதற்கு இறுதிவரை அமெரிக்காவின் ஆதரவு இருந்தது. சிலேயின் வளங்களை அமெரிக்கக் கம்பெனிகள் வரைமுறையின்றிச் சுரண்டின. பினோஷேயிற்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த அமெரிக்கா தான் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறது. அதன் யோக்கிதையை நாம் சிந்தித்தாக வேண்டும்.
இறுதியாக பினோஷே பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவருக்கெதிரான குற்றங்களுக்காக அவர் விசாரணைக்குட்படுத்த வேளை அவரை விட்டுவிடும்படியும் அவரது முதுமையின் காரணமாக அவரை மன்னிக்கும்படியும் பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் கேட்டுக் கொண்டார். உண்மை என்னவெனில் இதே பாப்பரசரின் குரல் இக்கோரிக்கைக்கு அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்போ பின்போ கூட ஒலித்திருத்தால் பினோஷேக்காக மன்றாட நேர்ந்திராது. கோல்லப்பட்டோருக்காக ஒலிக்கும்போதை விட கொலைகாரனுக்காக ஒலிக்கும்போது அக்குரல் நீண்ட தூரங்களை எட்டுகிறது.
9/11 – பயங்கரவாதத்திற்கெதிரான போரின் 17 ஆண்டுகள்
அயெண்டே கொல்லப்பட்டு சரியாக 28 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்காவின் வர்த்தக மையக் கட்டங்களின் மீதான தாக்குதல் நிகழ்கிறது. உலக ஒழுங்கில் புதிய போக்கை உருவாக்கிய இந்நிகழ்வு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ அமெரிக்கா முன்னெடுக்க வாய்ப்பாக்கியது. அதன் விளைவுகள் இன்று 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் பல்வேறு வகைகளில் பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோசத்தை பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டில் உரிமைகளுக்காகப் போராடுவோரை பயங்கரவாதிகள் என்று வரையறுத்து அவர்களுக்கெதிரான கட்டற்றபோரை அதே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பேரில் நடாத்தியுள்ளன. சில இன்னமும் நடத்துகின்றன. இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை எண்ணிப்பார்த்தால் இதை விளங்குவதில் சிரமங்கள் இரா.
உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த விமானத் தாக்குதல் பற்றிய பல உண்மைகள் இன்னமும் அமெரிக்க மக்களுக்குக் கூறப்படவில்லை. இவ்வளவு நுட்பமாக ஒரு தாக்குதலை நடத்து வதற்கான திட்டமிடலும் அதை உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்கள் உள்ள அமெரிக்காவில் செய்து முடிப்பதும் அமெரிக்காவினுள் எவருடையதும் உதவியில்லாமல் நடந்திருக்க இயலுமா? அது ஒரு புறமிருக்க, அத்தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதிகள் எவரும் இலக்கு வைக்க விரும்பக்கூடிய யூதப் பெருவணிகர்கள் கட்டிடத்தினுள் நுழை வதற்கு முன்னரே ஏன் நடந்தது? அத்தாக்குதலில் இறந்தோர் சுத்திகரிப்புத் தொழிலாளர் போன்ற ஏழைகளாகவே இருந்தனர். தீயணைப்புப் படையினரும் அதில் இறந்தனர். இக்கேள்விகளின் மூலம் இது இஸ்லாமிய அடிப்படைவாதிகளே தீவிரவாதிகளோ சம்பந்தப்படாத விடயம் என்பது வாதமல்ல. கேட்கப்படாத பதில் கூறப்படாத வினாக்கள் இங்கு ஒளிந்துள்ளன.
இவ்வாறான கேள்விகளை கேட்பதற்குக் காரணமான கேள்விகள் உண்டு. 9/11 என்பது அமெரிக்க பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க தீங்கு எதையும் செய்துள்ளதா கேட்டால், இல்லையென்றே பொருளாதார நிபுணர்கள் என்று பலரும் கூறுவர். 9/11 தாக்குதல் அமெரிக்காவின் பாதுகாப்பை இடைஞ்சலானதாக்கியுள்ளது என்று கூற இயலுமா என்றால், அதற்கும் விடை இல்லை என்றே அமையும். 9/11 இன் பயனாக அமெரிக்க உலகின் ஆயுதப் பெரு வல்லரசு என்ற தகுதிக்கு எவ்விதமான கேடும் நேர்ந்துள்ளதா என்றால், அதற்கும் இல்லை என்ற மறுமொழியே கிடைக்கும். ஆனால், 9ஃ11 மூலம் அமெரிக் காவால் ஒரு புதிய உலக ஆதிக்கவேலைத் திட்டத்தைத் தொடக்கி வைக்க முடிந்துள்ளது. அத்துடன், அதன் பின்னணியில், திருப்பித் தாக்கும் வலிமையற்ற எந்த நாட்டின் மீதும் எவ்வித நியாயமுமின்றி போர் தொடுக்க அதற்கு இயலுகிறது என்பதையும் நாம் அறிவோம்.
எனவே 9/11 என்பது அமெரிக்க-சோவியத் ஒன்றியம் கெடுபிடிப்போர் முடிந்த பின்பு அமெரிக்காவின் போர் முனைப்பை நியாயப்படுத்துவதற்கான ஒரு வலிய கருவியாகி உள்ளது. அதன்மூலம் அமெரிக்காவால் ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற நடவடிக்கையைத் தொடக்கி வைத்து அதில் தனது கூட்டாளிகளாகச் சில நாடுகளைப் புதிதாகச் சேர்த்துக் கொண்டுமுள்ளது.
9/11 எப்படிநிகழ்ந்திருந்தாலும் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன என்பதில் ஐயமில்லை. எனினும் முதலில் தண்டிக்கப்பட்டது ஆப்கானிஸ்தான். அங்கு சோவியத் ஆதரவுடன் நிறுவப்பட்ட ஒரு ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஊட்டி வளர்த்த தலிபான்கள் இப்போது அமெரிக்காவின் எதிரிகளாகி விட்டனர். 9ஃ11க்கும் என்ன தொடர்பு என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அங்கே அமெரிக்கத் தலைமையிலான ஒரு போர் தொடுக்கப்பட்டது. ஈராக் மீது போர் தொடுப்பதற்குச் சொல்லப்பட்ட ஒரு காரணமும் உண்மையானது அல்ல. எனினும் ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் ஆப்கானிஸ்தானுக்கும் உள்ளதாகக் கூறப்பட்டு அங்கு ஒரு போர் தொடங்கப்பட்டது.
அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நாடகத்தில் சில நாடுகளினதும் சில அமைப்புகளதும் பயங்கரவாதம் கண்ணில் படாது போய்விடும். அங்கெல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான அரச நடவடிக்கை மனித உரிமை மீறல் என்று கண்டிக்கப்படும். வேறு சில இடங்களில், பயங்கரவாதிகளை வேட்டையாடுகிற பேரில் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிரான விடுதலை இயக்கங்களும் குறிவைக்கப்படும். எனினும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா இதுவரை செய்து வந்ததெல்லாம்தான் விரும்பாத ஆட்சிகளைக் கவிழ்ப்பதும் தனக்குப் பயனற்றுப் போன அல்லது முற்றாகக் கீழ்ப்படியாது பயங்கரவாத அமைப்புகளைக் கைகழுவி விடுவதுமே. இதை மறந்துவிட்டு அமெரிக்காவும் மேற்குலகும் தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித் தருவார்கள் என்று சொல்லுகிறவர்கள் அதை அறியாமையால் சொல்லவில்லை. அயோக்கியத்தனத்தால் சொல்கிறார்கள். அவ்வளவே.
உலகப் பொருளாதார நெருக்கடி – 10 ஆண்டுகளின் பின்
9/11க்குப் பின்பான அமெரிக்க, அமெரிக்கச் சார்பு மேற்குலக நடத்தை யின் பிரதான சமூகப் போக்குகளாக வெளிப்பட்டுள்ள 2 விடயங்களில் ஒன்று அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளை நிற வாத அரசியற் சிந்தனையின் எழுச்சியாகும். மற்றது இஸ்லாமியப் பகைமை. இரண்டுமே ஃபாசிசத் தன்மையுடை யவை. எனவே ஜனநாயக மறுப்பும் அவற்றுடன் சேர்ந்து வளர்ந்துள்ளது. இவ்விரண்டடையும் உந்தித்தள்ளி இன்று மேற்குலகின் கடும்போக்கு வலதுசாரியத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி ஆகும்.
இதேபோன்றதொரு செப்டெம்பரில் தான் 158 ஆண்டுகள் பழைய லேமன் பிரதர்ஸ் தனது முடிவை அறிவித்தது. அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய முதலீட்டு வங்கியான லேமன் பிரதர்ஸ் தனது வங்குரோத்து நிலையை அறிவித்து அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியின் முதலாவது அறிகுறியை இதே செப்டெம்பரில் தான் காட்டியது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சரியும் கட்டிடங்கள் போல அமெரிக்க நிதிநிறுவனங்களும் வங்கிகளும் அடுத்தடுத்துச் சரிய அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி உலகப் பொருளாதார நெருக்கடியாக மாற்றங் கண்டது.
அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவானது அமெரிக்காவின் பொருளாதாரத்தின் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் குறைத்துள்ளது எனினும் அமெரிக்காவே உலகின் பெரிய போர் இயந்திரத்திற்குப் பொறுப்பாக உள்ளது என்கிற நிலையில் பல்வேறு நாடுகளில் போர் தொடுத்து வளங்களைச் சுரண்டுவதன் மூலம் தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால் இன்று பத்தாண்டுகள் கடந்த நிலையில் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த இயலவில்லை.
மூலதனத்தின் பிரச்சினை ஏனென்றால் அது வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த வளர்ச்சியின் தன்மையை அதனால் தீர்மானிக்க இயலாது. மூலதனம் வளர்ந்து வந்த விதமும் பங்குச் சந்தை முதலீட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் பங்குச் சந்தையில் கட்டுப்பாடற்ற வணிக நடவடிக்கைகட்கும் வழிசெய்தது. இதனால் மூலதனத்தின் ஒரு கண்ணியில் ஏற்பட்ட சரிவு உலகளாவியதாகியுள்ளது. இன்று இப்பொருளாதார நெருக்கடி இன்னொரு வகையில் வலது தீவிரவாதத்தையும் நிறவெறியையும் தூண்டியுள்ளது. ‘அமெரிக்கா முதல்’ என்ற கோஷத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலை பெறுகிறார். அவருக்கு கணிசமான அமெரிக்கர்களின் ஆதரவு உண்டு. அது இன்று அமெரிக்காவில் தோற்றம் பெற்றுள்ள வெள்ளை நிறவெறி, குடியேற்றவாசிகளுக்கு எதிர்ப்பு, முஸ்லீம் விரோதம் ஆகியவற்றின் கூட்டமைவாகும். அதன் நேரடியப் பிரதிநிதியாகவே ட்ரம்ப் உள்ளார். அமெரிக்கா பொருளாதார வல்லரசு என்ற நிலையை இழந்து வருகிறது. ஆனால் இன்னமும் உலகின் இராணுவ வல்லரசாக அமெரிக்க இருக்கிறது. அதுவரை உலக அலுவல்களில் அமெரிக்காவில் செல்வாக்கு அதிகமாக இருக்கும். எனினும் என்றென்றைக்குமல்ல.
ஓஸ்லோ உடன்படிக்கையின் 25 ஆண்டுகள்
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலியத் தலைநகராக அங்கீகரித்ததன் மூலம் தனது பலஸ்தீன வெறுப்பை வெளிப்படையாகக் காட்டியுள்ளார். இது இன்னொரு செப்டெம்பரை நினைவுபடுத்துகிறது. இதேபோன்றதொரு செப்டெம்பரில் தான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பலஸ்தீனத்தின் தலைவர் யசீர் அரபாத்; இஸ்ரேலின் பிரதமர் சிமோன் பெரஸ் ஆகியோரிடையே சமாதான உடன்பாடு எட்டப்பட்டது. நோர்வேயின் மத்தியஸ்தத்துடன்; நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடு ஒஸ்லோ உடன்பாடுகள் எனப்பட்டன. நோர்வே ஒரு மூன்றாந்தரப்பாக உலக அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்த நிகழ்வு இது. அதேவேளை மிகுந்த எதிர்பார்ப்புடன் எட்டப்பட்ட இவ்வுடன்படிக்கை இஸ்ரேலின் நடவடிக்கைகளால் சிதைந்த போனது. பலஸ்தீனர்கள் சர்வதேச சமூகத்தால் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டார்கள். அதே சர்வதேச சமூகத்திடம் நீதி கோருகிறார்கள் சிலர்.
இதில் கவனிக்க வேண்டிய சில செய்திகள் உண்டு. அரபுப் பிரதேசத்தைக் கூறுபோட்டு எண்ணெய் வளத்திற்கும் அதிகாரத்திற்குமான போட்டியில் அரபு மக்களைப் பிளவுபடுத்த ஐரோப்பியர் உருவாக்கிய பல்வேறு அரபு முடியாட்சியிகளின் நடுவே 1948 இல் இஸ்ரேல்; உருவானது. இன்று இஸ்ரேல்-பலஸ்தீனப் பிரச்சினை பற்றிஆய்வுக் கட்டுரைகளை எழுதுகிறவர்கள் பலருக்கு 1948 இற்கு முன்பிருந்தே ஸியோனிசம் என்கிற யூத மேலாதிக்கச் சிந்தனை எவ்வாறு செயல்வடிவம் பெற்றது என்பதே நினைவில் இல்லை.
முதலாம் உலகப் போரின் பின்பு மெல்ல மெல்லத் தொடங்கி 1940 களில் தீவிரம் பெற்ற யூதப் பயங்கரவாதக் குழுக்கள் அராபியர்களைத் திட்டமிட்ட முறையில் அவர்களது வதிவிடங்களிலிருந்து விரட்டின. 1948 இல் இஸ்ரேலை உருவாக்கிய போது இந்த இனச் சுத்திகரிப்பு தீவிரமாக நடைபெற்றது. இஸ்ரேல் இன்று மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு அதி முக்கியமான இராணுவ மேலாதிக்கக் கேந்திரமாக உள்ளது. தமிழர்கள் யூதர்களைப் போல் வரவேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். எனவே நிறைவாக ஒரு செய்தியுடன் இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பலஸ்தீனத்தினைப் போன்று அந்நிய மேலாதிக்கத்தின் கீழ்ப்பட்டிருந்த ஒரு நாட்டில் ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பின் விளைவானதல்ல. எனினும், அங்கு போல தமிழ்த் தேசியத்தின் பாரம்பரியப் பிரதேசத்தைத் திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் அடையாளமில்லாமலாக்குகிற பணி இஸ்ரேலின் யூதக் குடியேற்றங்களைப் பின்பற்றுகிற முறையிலேயே தொடக்கி வைக்கப்பட்டது. அவ்வகையிலேயே தொடர்கிறது. பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் செய்வதை இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குச் செய்கிறது.