டிசெம்பர் 6: சுயநிர்ணய உரிமையை நினைவுகூரல்
ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் வரலாறுகின்றன. எல்லா நிகழ்வுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை. அவ்வாறு வரலாற்றைத் தீர்மானிக்கும் நிகழ்வுகள் நடந்த நாட்கள் முக்கியமானவை. சில நாட்கள் ஏனைய நாட்களைவிட முக்கியமானவை. அந்த நாட்கள் வரலாற்றின் திசைவழியை, அரசியல் சித்தாந்தத்தை, சமூக அசைவியகத்தை என எல்லாவற்றையும் புரட்டிப் போடும் தன்மையுடையவை.
உலக அரசியல் வரலாற்றில் அதிகம் பேசப்படா விட்டாலும் இன்றைய தினம் (டிசெம்பர் 6) மிகவும் முக்கியமான தினம். இன்றைய தினம் இடம்பெற்ற மூன்று வரலாற்று நிகழ்வுகள் எவ்வாறு உலக அரசியலின் நிகழரங்கின் நடத்தையில் செல்வாக்கு செலுத்தியுள்ளன என்பதை இக்கட்டுரை நோக்குகிறது. முதலாவது நிகழ்வு இற்றைக்கு 101 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் நடந்தவொன்று. 1917ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 6ம் திகதி பின்லாந்து சோவியத் யூனியனில் இருந்து சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தின் அடிப்படையில் பிரிந்து தனிநாடாகியது. தேச அரசுகளின் தோற்றத்தின் பின்னணியில் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி தனிநாடாகிய முதலாவது நிகழ்வு நடந்தேறிய தினம் இன்றாகும். இந்நிகழ்வு சுயநிர்ணய உரிமை குறித்து கோட்பாடு நடைமுறையானதை ஒட்டி தத்துவார்த்த வாதப்பிரதிவாதங்களுக்கு வழி வகுத்தது. இதுவே உலக அரசியல் வரலாற்றில் சுயநிர்ணய உரிமையை தத்துவார்த்தத் தளத்தில் இருந்து நிகழ் அரசியலுக்குக் கொண்டு வந்தது என்பதை மறுக்கவியலாது.
பின்லாந்து பிரிவினைக்கு லெனினின் ஆதரவும் அதை ஆதரித்து ஸ்டாலின் ஆற்றிய முக்கியமான உரையும் சுயநிர்ணய உரிமையை மார்க்சிய லெனினியர்கள் எவ்வாறு நோக்கினார்கள் என்பதைக் காட்டி நிற்கின்றது. அதேவேளை சுயநிர்ணய உரிமை பற்றிய முன்னோடியான பார்வை மார்க்சியச் சிந்தனையிலேயே இருந்தது என்பதையும் நினைவூட்ட வேண்டும். ஈழத்தமிழ் அரசியலில் முக்கியமான சொல்லாடலாகவும் இருக்கும் சுயநிர்ணய உரிமை குறித்து இக்கட்டுரை அலசுகிறது.
இன்று உலகத்தில் எற்பட்டிருக்கின்ற தேசியப் பிரச்சனைகளை நோக்கும் போது தேசியவாதத்தின் வளர்ச்சியை முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இணைத்து பார்க்கவேண்டும். ஒரு காலத்தில் முதலாளித்துவம் தேசியவாதத்தை ஆதரித்தது. அதே முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த பின்பு, தேசிய இன ஒடுக்கலை மேற்கொண்டு இன விடுதலையை எதிர்த்தது. தேசிய இனப் பிரச்சினையில் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு கொள்கையிருக்கின்றது: தனது வசதிக்கேற்ப சில இனவிடுதலைப் போராட்டங்களை அது ஆதரிக்கும் சில இனவிடுதலைப் போராட்டங்களை அது எதிர்க்கும். இன்று ஆதரித்ததை நாளை எதிர்க்கவுங் கூடும். அவ்வாறு தான் அது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைத் தனது நலனுக்கேற்றவாறு பயன்படுத்தி வந்துள்ளது. சுயநிர்ணய உரிமை, அவ்வாறு மாறுபடக்கூடிய வியாக்கியானங்களை உடையதாக இருக்க முடியாது. இந்த இடத்தில், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைத் தங்களுக்கு வசதிக்கு ஏற்றுவாறு திரிப்பவர்களின் நோக்கங்கள் முக்கியமாகின்றன.
சுயநிர்ணய உரிமை
சுயநிர்ணய உரிமை என்ற கருத்துப்படிவம் ரஷ்யப் புரட்சியில் தன் தோற்றுவாயை உடையது. ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் உருவாக்கம்; மொழியாலும் பண்பாட்டாலும் வேறுபட்டோரும் ரஷ்யப் புரட்சியால் கவிழ்க்கப்பட்ட ரஷ்ய ‘ஸார்’ பேரரசினால் ஒடுக்கப்பட்டுவந்தோருமான 120க்கும் மேற்பட்ட இனப்பிரிவுகட்குரிய மக்களை ஒன்றிணைத்தது. இம் மாபெருஞ் சாதனை 1917 ஒக்டோபர் புரட்சியின் மூலம் இயலுமானது. இந்தப் பின்புலத்திலேயே சுயநிர்ணய உரிமையை முக்கியமான கோட்பாடாக ரஷ்யப் புரட்சியியைத் தலைமை தாங்கி வழிநடாத்திய வி.ஜ. லெனின் வளர்த்தெடுத்தார். இதில் லெனினின் பங்களிப்பு முக்கியமானது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தோழர் லெனின் “தேசங்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமையானது, விடுதலைக்கான உரிமை, கட்டற்ற உரிமை ஒடுக்கும் தேசத்திலிருந்து அரசியல்ரீதியாகப் பிரிந்து செல்வதற்கு ஆதரவான கிளர்ச்சியை நடத்துவதற்கான கட்டற்றநிலை. பிரிந்து செல்வதா என்ற கேள்விக்கான தீர்வினை ஒப்பங்கோடல்ஃகுடியொப்பம் மூலம் முடிவுசெய்யவேண்டிய சுதந்திரம் இருக்கவேண்டிய அதே வேளை இந்தக் கோரிக்கை, பிரிந்துசெல்ல, கூறுபடுத்த, அல்லது சிறு அரசை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஒத்ததல்ல. எந்த வடிவத்திலும் நடாத்தப்படும் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை விளக்க வரும் நேர்மைப் பொருத்தமுடைய வெளிக்காட்டுகையே அது. அரசின் ஜனநாயக முறைமை பிரிந்து செல்வதற்கான முழுமையான நிலையை அண்மித்திருக்குமாயின், முழுமையாகப் பிரிந்து போகும் சுதந்திரத்தை வழங்கும் போது, மிக அருமையாக அல்லது வலுக்குறைந்த தேசிய இனக்கூறே செயலளவில் பிரிந்துபோகும். பொருளாதார முன்னேற்றம், மக்கள் நலன்களின் நோக்கில் தேசிய சுயநிர்ணய உரிமைசால் ஜனநாயக முறையைப் பேணும் பேரரசுகளுக்கு பல நன்மைகளை வழங்கும் என்பது ஜயத்துக்கிடமானதற்று” என்றார்.
அதேவேளை சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல், கூட்டிணைப்புக் கொள்கையை உருவாக்குவது போன்றதல்ல. ஒருவர் இந்தக் கொள்கையையும் மத்தியில் ஜனநாயகம் மையப்படத்தப்படுவதையும் சமரசமின்றி எதிர்க்கும் ஒருவர், தேசிய இனங்களின் சமனின்மைக்கு தீர்வு காண முழுமையாக ஒன்றித்த கொள்கையின் கீழ்க் கூட்டிணைப்பை விரும்பலாம் என விளக்குகிறார் லெனின்.
பிரிந்து போவதற்கான உரிமை
சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போவதற்கான உரிமை என்றே எமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் சுயநிர்ணய உரிமையின் உண்மையான பொருள் எமக்குச் சொல்லப்படவில்லை. ஒரு உரிமையைக் கொண்டவர்;, அதை ஏன் எப்போது பிரயோகிக்க வேண்டும் என்பதை ஆராயாமல், ஒரு உரிமை இருப்பதால் அது பிரயோகிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று சிலர் ஏன் சொல்கிறார்கள்? அந்த உரிமை பிரயோகிக்கப்படாமை அந்த உரிமையின் இழப்பல்ல. பிரிந்து போகும் உரிமை கோரிப் போராடுவோர் பிரிவினைக்காகப் போராடுவோரினின்று தெளிவாகவே வேறுபடுகிறார்கள். முன்னையோர் இணைந்து வாழும் வாய்ப்பைக் கருத்திற் கொண்டு போராடுகிறார்கள்: பின்னையோர் எவரிடமும் பிரிந்துபோகும் உரிமையைக் கேட்காமற் பிரிவினைக்காகவே போராடுகிறார்கள். எனவே இவ்வாறான அடிப்படை வித்தியாசங்களை எளிதாக அலட்சியம் செய்துவிட்டுப் புனையப்படும் ‘சுயநிர்ணயம் /பிரிவினை” என்ற சூத்திரம் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு புனைபவர்கள் தெரிந்து திட்டமிட்டே அதைத் செய்கிறார்கள். இனங்களிடையே நல்லுறவு ஏற்படுபது அவர்களது நலன்களுக்குக் தீங்கானது. எனவே சுயநிர்ணய உரிமையைப் பிரிந்து போவற்கான உரிமை மட்டுமே என வியாக்கியானம் செய்வதன் மூலம் சகல இனங்களுக்குமான சுயநிர்ணய உரிமைகள் மறுக்கப்பட அவர்கள் வழிசெய்கிறார்கள்.
பிரிந்துபோகும் உரிமையின் அங்கீகாரம் பிரிவினையை ஊக்குவிக்கும் நோக்கையுடையதல்ல. மாறாக அது ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சுயவிருப்பின் பேரில் ஒன்றாக வாழும் வாய்ப்பைப் பலப்படுத்தும் நோக்கையுடையது. அதன் காரணமாகவே சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினையே என்று கூறுவோர் சுய நிர்ணய உரிமை என்பதன் கருத்தைத் திரிக்கிறார்கள். அதாவது ஒன்றைச் செய்யும் உரிமையை அதைச் செய்யும் நிர்ப்பந்தமாக மாற்றுகிறார்கள்.
தேசிய இனங்களின் பிரச்சினை, முக்கியமாகத் தேசிய அரசாக அமையும் வாய்ப்பில்லாத தேசிய இனங்களின் பிரச்சனை, இன்று மேலும் கவனமான பரிசீலனையை வேண்டி நிற்கிறது. சுய நிர்ணயம் என்பதன் பொருள் ஒரு தேசம் பிரிந்துபோகும் உரிமையை எந்த நிலையிலும் மறுக்காத விதமாக மேலும் விரிவுபடுத்தபட வேண்டிய தேவையை நாம் எதிர்நோக்குகிறோம். தேசிய இனம் என்ற பதத்தின் பொருளை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. தேசிய இனங்களாக அடையாளங்காண முடியாத ஒடுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகளது உரிமைகள் தொடர்பாகவும் தெளிவான கருத்துக்கள் அவசியமாகின்றன. தேச அரசுகள் முக்கியத்துவமிழந்து வரும் புதிய உலக ஒழுங்கில் புதிய சவால்களை நாம் எதிர்நோக்குகிறோம்.
ஒரு தேசிய இனம் ஒரு தேசமாக அல்லது ஒரு தேசிய அரசாக அமைவதற்குச் சில நடைமுறைச் சாத்தியமான தேவைகள் உள்ளன. அதற்குரிய தொடர்ச்சியான ஒரு பிரதேசம் முக்கியமான ஒரு தேவை. அவ்வாறு எப்போதுமே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததில்லை. தேசிய இனப் பிரச்சனை தொடர்பான கொள்கைகள் ஆதிவாதிகள், நாடோடிகள் போன்ற சமுதாயப் பிரிவினரைப் போதிய கணிப்பிலெடுக்கத் தவறியதன் காரணமாக இம் மக்களது உரிமைகள் உலகெங்கும் நாளாந்தம் பறிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் வேடர் சமுதாயத்தின் பிரச்சினையோ நாடோடிகளின் நிலைமையோ தேசிய இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவேனும் இதுவரை கருதப்படாமை கவனிக்கத்தக்கது.
இன்னொரு அம்சம் மிகவும் அடிப்படையானது. ஒரு மக்கள் பிரிவு தேசிய இனமாக அடையாளங் காணப்பட்டால் அதற்குச் சுய நிர்ணய உரிமை உண்டு. சுய நிர்ணய உரிமை என்றாற் பிரிந்து போகும் உரிமை. பிரிந்து போகும் உரிமையைப் பிரயோகிக்கும் வசதி இல்லாத ஒரு மக்கள் பிரிவுக்குச் சுய நிர்ணய உரிமையை அதன் முழுமையான அர்த்தத்தில் அனுபவிக்க முடியாது என்பது உண்மை. அதனால் அவர்கட்குத் தம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையே இல்லை என்றாகிவிடுமா? அக் காரணத்தால் அவர்கள் ஒரு தேசிய இனமாக இல்லாது போய்விடுவார்களா? ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம் ஒடுக்கப்பட்ட ஏனைய தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையை மறுக்கிற போது, தனது சுயநிர்ணய உரிமையை ஏனைய இனங்கள் ஏற்க மறுக்கிற சூழலை அது உருவாக்குகிறது. இது தீங்கானது. இவை விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கான பாதையில் பாரிய தடைக்கல்லாக அமையக்கூடும்.
ஒன்றாக இருப்பது முடியாமற் போனாற் சுயநிர்ணய உரிமையின்படி பிரிந்துபோக உரிமையுண்டே ஒழிய அதுவே பிரிவினையாக மாட்டாது. இதை லெனின் மணமுறிவு உரிமையை எடுத்துக்காட்டி ஒப்பிட்டு விளக்குகிறார். மணமுறிவு உரிமை என்பது மண உறவை முறிப்பதல்ல. ஆனால் ஒவ்வோர் ஆளும் மண ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும்போது பின்பயன்கருதி மணமுறிவு உரிமையையும் உறுதிசெய்வதுபோல மணமுறிவு உரிமை இல்லாமல் எந்த திருமணமும் நீடுநிலைப் பொறுப்புறுதி வழங்கமுடியாது. பிரிவதற்கான உரிமை உறவை சமமாக வைக்கவும் நிலைத்து நிற்கவும் செய்வதற்காகனது. ஆகவே ஓர் ஒன்றியத்தின் (Union) தேசிய இனங்களும் இனக்கூறுகளும் பிரிந்துபோவதற்கான உரிமை என்பது இணைந்து வாழ்வதற்காக சாத்தியங்களை துருவித் தேடலே என்பது லெனின் முன்வைக்கும் கருத்தாகும்.
மேற்குலகும் சுயநிர்ணய உரிமையும்
மேற்குலகு சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருக்கும் என்ற படிமம் ஈழத்தமிழ் அரசியலிலும் விடுதலைப் போராட்டத்திலும் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டதொன்று. ஆனால் மேற்குலகு குறிப்பாக அமெரிக்கா சுயநிர்ணய உரிமையை தனது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளது. மேற்குலகின் இரட்டை நிலைப்பாட்டை பல்வேறு உதாரணங்களில் காணலாம். ஆசியாவில் இந்தியா உட்படப் பிரித்தானியக் கொலனிகள் பலவற்;றுக்குச் சுதந்திரம் வழங்கப்படுவதை அமெரிக்கா ஆதரித்துப் பேசிய அதேவேளை வியட்னாமில் பிரெஞ்சுக் கொலனியவாதிகள் மக்கள் போராட்டங்களின் விளைவால் முறியடிக்கப்பட்ட பின்பு தென் வியற்நாமை அமெரிக்கா கைப்பற்றியது. அண்மித்த வேறு பல நாடுகளைக் கைப்பற்றியது அல்லது நாடுகளிற் தனது பொம்மை அரசுகளை நிறுவியது.
ஆபிரிக்காவில் கொலனிய, நிறவாத ஆட்சிகட்கெதிரான போராட்டங்களைப் பொறுத்தவரை, கொலனி ஆட்சிக்குப் பிந்திய எந்த ஆட்சியும் ஏகாதிபத்திய விரோதமானதாகவோ சோவியத் யூனியனையோ சீனாவையோ நோக்கிச் சய்வதாகவோ அமையாமலிருப்பதை உறுதிப்படுத்த ஐரோப்பியக் கொலனிய எசமானர்களும் அமெரிக்காவும் ஒற்றுமைப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் பின், முன்னாட் கொலனிகளிலும் அரைக் கொலனிகளிலும் ஆட்சிகள் மாற்றப்பட்டுள்ளன, தலைவர்கள் கொல்லப் பட்டுள்ளனர், நாடுகள் தாக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் சீனா சோஷலிசத்தைக் கைகழுவியதையும் அடுத்து இப் போக்கு மேலும் உக்கிரமானது.
தேசியப் பிரச்சனையைப் பற்றிய அமெரிக்கக் கொள்கை என்றுமே உறுதியாக இருந்ததில்லை. ஏனெனில், அது, சம்பந்தப்பட்ட தேசத்தினதோ தேசிய இனத்தினதோ நலன்களின் அடிப்படையிலானதல்ல. மாறாக, அது அமெரிக்காவின் உலக மேலாதிக்க வேட்கையின் அடிப்படையிலானது. முன்னுக்குப்பின் முரணான அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எரித்திரியா பற்றிய நிலைப்பாடு மிகச் சிறப்பான உதாரணமாகும். 1945இல் எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டு ஐ.நா. தீர்மானமொன்றின் அடிப்படையில் 1952இல் சமஷ்டியாக்கப்பட்டு மீண்டும் 1962இல் இணைக்கப்பட்ட எரித்திரியாவின் கிளர்ச்சியாளர்கட்கான அமெரிக்க ஆதரவு கவனத்துக்குரியது. அமெரிக்கா வும் மேற்குலகும் 1962இல் தொடங்கிய எரித்திரியப் போராட்டத்துக்கு 1977 வரை பகையாயிருந்தனர். சோவியத் ஒன்றியத்துக்குச் சார்பானவரான மெங்கிற்ஸ{ ஹெய்லே மரியம் 1977இல் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்பு, அமெரிக்கா எரித்திரியப் போராட்டத்தை ஆதரிக்க முடிவெடுத்தது. அதே வேளை, சோவியத் ஒன்றியம், கட்சி மாறி, எதியோப்பியாவில் தனது புதிய கூட்டாளியை ஆதரித்தது. அதே ஆண்டில் சோமாலியா எதியோப்பியாவின் ஒகடான் பிரதேசத்தை ஆக்கிரமித்ததையும் அமெரிக்கா ஆதரித்தது. இம் முயற்சி சோவியத், கியூபா ராணுவக் குறுக்கீட்டால் முறியடிக்கப்பட்டது. 1991இல் மெங்கிற்ஸ{ ஆட்சி கவிழ்ந்தது. அதே ஆண்டு எரித்திரியா நிறுவிய ஒரு இடைக்கால அரசாங்கம், 1993இல் ஒரு சர்வசன வாக்கெடுப்பால் வரன்முறையாக்கப்பட்டது. மெங்கிற்ஸ{வுக்குப் பிந்திய எதியோப்பியாவில் ஒரு புதிய கூட்டாளி அதிகாரத்தைக் கைப்பற்றியது முதலாக, அமெரிக்கா, எதியோப்பிய-எரித்திரியத் தகராறுகளில் எதியோப்பியாவின் தரப்பிலேயே இருந்து வருகிறது. அது மட்டுமல்லாது, சோமாலியாவில் தனது பிடியை நழுவவிட்ட பின்பு, அங்கு தனது போர்களை நடத்த அமெரிக்கா எதியோப்பியாவைப் பயன்படுத்துகிறது. இதேபோல நிகழ்வுகள் ஏராளம் உள்ளன.
இவை எமக்குச் சொல்லிச் செல்வது யாதெனில் சுயநிர்ணய உரிமை என்பது கண்முடித்தனமாகவோ, தேச, தேசிய இனக் கூறுகளின்மேல் அல்லது இனக்குழுக்களின் மேல் அழுத்திச் சுமக்க வைக்கும் ஒன்றல்ல. ஒரு தேசிய இனக்கூற்றின் சுயநிர்ணய உரிமை என்பது, அதன் இருப்பும் உய்வும் அடையாளமும் அச்சுறுத்தப் படும்போது மட்டுமே, சுயநிர்ணய உரிமைக்கு அல்லது பிரிவினைக்கான போராட்டம் உருப்பெறுகிறது. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனக்கூறு;றுக்குரிய போராட்டம் சிக்கலானதும் தொடர் வளர்ச்சியுறுவதுமாகும். எந்த இரு போராட்டங்களும் ஒரே மாதிரி அமையமுடியாது. பல சந்தர்ப்ப் சூழ்நிலைகளில், இலங்கை உள்ளிட்ட நாடுகளில், மேலாண்மை உள்நோக்கத்தில் வழிநடத்தும் அந்நிய தலையீடுகளின் அரசியற் பின்விளைவுகள் மென்மேலும் சிக்கலான நிலைமைகட்கே வழி செய்துள்ளன.