தேர்தல் முடிவுகளும் தமிழ்த்தேசியமும்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியூட்டியுள்ளன. குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய வாக்குகளோடு ஆறில் மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமையானது, ஈழத்தமிழர் அரசியலில் ஒரு திருப்பமே. ஆனால் இத்திருப்பத்தை வெறுமனே தமிழ்த்தேசியத்தின் தோல்வியாகவோ, முடிவாகவோ கொண்டுவிட முடியாது. அவ்வாறு கொண்டு விடவும் கூடாது. தேர்தலின் பின்னர் ஒருசாரார், யாழ்ப்பாண மக்கள் தமிழ்த்தேசியத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டார்கள் என்று கருத்துப்பட பேசியும் எழுதியும் வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் புலம்பெயர்ந்து வாழ்வோர். அவர்களால் இந்த முடிவுகளை ஜீரணிக்க முடியவில்லை. இன்னொரு சாரார், தமிழ்த்தேசியம் தோல்வியடைந்துவிட்டது, மக்கள் மாறிவிட்டார்கள் என்ற கருத்துக்களை முன்வைப்பதையும் காணக்கிடைக்கின்றது. இவ்விரண்டுமே முழுமையானதோ, சரியானதோ அல்ல.
தேர்தல் ஜனநாயகம், மக்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இலங்கை போன்ற நாட்டில் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளையும் தமது தெரிவின் பலன்களை அனுபவிப்பதற்குமான வாய்ப்பையும் எப்போதும் தொடர்ச்சியாகப் பெறுவதில்லை. “இலங்கையர்கள் பொறுமையாக இருந்து மாற்றத்தை வாக்கின் வழி நிகழ்த்துபவர்கள்” என்று அறியப்பட்டவர்கள். இது சிங்கள சமூகத்திற்குப் பொருந்தும். அதேவகையில் ஈழத்தமிழ்ச் சமூகமும் அவ்வாறான ஒரு மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. எனவே முதலில் மக்களின் வாக்குத் தெரிவுகளை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று மக்களின் தெரிவைக் குறை சொல்கின்றவர்கள், நீண்டகாலமாக தமிழ்மக்கள் பயனற்ற, ஊழல்நிறைந்த, வினைத்திறனற்ற அரசியல்வாதிகளைத் தொடர்ச்சியாகப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் என்பதை கடந்தகாலங்களில் விமர்சிக்கவில்லை. தங்களுக்கு உவப்பில்லாதவர்களை மக்கள் தெரியும் போது கடுங்கோபத்துடன் கருத்துரைப்பவர்கள், போரின் பின்னரான பதினைந்து ஆண்டுகளில் மக்கள் மேற்கொண்ட பிரதிநிதித்துவத் தெரிவுகள் குறித்து வாய்திறக்காதவர்கள். ஏனெனில் தமிழ்த்தேசியத்தின் பெயரால் எவரும் தெரியப்படலாம் என்ற சீரழிந்த மனநிலை.
“தமிழ்த்தேசியம்” நல்லதொரு அரசியல் வியாபாரப் பண்டமாகவுள்ளது. குடுகுடுப்பைக்காரன் “நல்லகாலம் பிறக்குது” என்று சொல்வதை நம்பும் அப்பாவிகள் போல தமிழ் மக்களும் தமிழ்த்தேசியக் குடுகுடுப்பைக்காரரது வாக்குறுதிகளை நம்பி தொடர்ந்து வாக்களித்து வந்திருக்கிறார்கள். இந்தக் குடுகுடுப்பைக்காரின் நலன் தனிநபர் சார்ந்ததேயன்றி மக்கள் சார்ந்ததல்ல என்பதை அவர்களின் நடத்தைகள் தொடர்ச்சியாக உணர்த்தி வந்தபோதும் மக்கள் தொடர்ந்தும் வாக்களித்துள்ளனர். அப்போதெல்லாம் இந்தக் குடுகுடுப்பைக்காரருக்கு ஆதரவாகத் தமிழ்த்தேசியத்தை விலைபேசியோரே இன்று மக்கள் மீது அவதூறு பொழிகின்றனர்.
தமிழ்த்தேசியம் இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது என்பது உண்மை. இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து இன்று பிரிந்து நிற்கின்ற கட்சிகள், கூட்டணிகள், புதிதாக முளைத்த கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் என எல்லாமே தாம் தமிழ்த்தேசியத்தின் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்கின்றன. ஆனால் யாராலும் தமிழ்த் தேசியம் என்றால் என்ன, அதன் அடிப்படை நிலைப்பாடுகள் என்ன, அதன் செல்திசை என்ன, அதற்கான வேலைத்திட்டம் என்ன போன்ற கேள்விகளுக்கான தெளிவான, நடைமுறைச்சாத்தியமான பதில்களை இன்றுவரை முன்வைக்க முடியவில்லை. ஈழத்தமிழர் அரசியலில் “தமிழ்த்தேசியம்” என்பது வெறும் பெயர்க்கவர்ச்சியாக உள்ளதேயன்றி ஆழமான உள்ளீடுள்ள ஒன்றாக இல்லை. அதற்கு சமகாலத்தவரை மட்டும் குற்றஞ்சொல்ல இயலாது. தமிழ்த்தேசியத்தின் வரலாற்று வளர்ச்சியே குறைபாடானது. ஈழத்தமிழர் அனைவரையும் ஒன்றிணைக்காத, சாதிய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளைக் களைந்த ஒன்றாகத் தமிழ்த் தேசியம் வளர்ச்சியடையவில்லை. இன்றும் அந்நிலை இல்லை. இலங்கையில் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தவிர்க்கவியலாமல் தமிழரைத் தேசியத்தின் கீழ் ஒருங்கிணைத்ததேயன்றி, கருத்தியில் ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் அது அனைவருக்கானதாக இல்லை.
போரின் பின்னராக காலப்பகுதியில் தமிழ்த்தேசியத்தின் பெயரால் மக்கள் தொடர்ந்து ஏய்க்கப்பட்டு வந்துள்ளனர். இந்தியா, சர்வதேச சமூகம், சர்வசே விசாரணை, தீபாவளிக்குத் தீர்வு என்று ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு புதிய பொய் உற்பத்தியானது. அது தமிழ்த்தேசியத்தின் பெயரால் விற்பனையானது. இவ்வாறு குடுகுடுப்பைக்காரர்கள் கொடுத்த கயிற்றை தமிழ்மக்கள் தொடர்ந்து பற்றி வந்துள்ளனர். இம்முறை குடுகுடுப்பைக்காரரின் யோக்கியம் அப்பட்டமாகத் தெரிந்தது. அந்நிலையில் மக்கள் பிறதெரிவுகளை நோக்கி நகர்ந்துள்ளனர். தமிழ்த்தேசியத்தின் பெயரால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட அயற்சி, புதிய ஜனாதிபதியும் அதனோடு சேர்ந்த தேசிய மக்கள் சக்தி மீதான கவர்ச்சி என்பன மக்களின் தெரிவிற்கான காரணங்கள். காலங்கள் மாறுகின்றன. வடபுலத்தில் புதிய தலைமுறையினர் வாக்காளராயுள்ளனர், அவர்களின் பார்வைகள் வேறுபடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பகரமான சக்தியாக நோக்குகிறார்கள். இவையும் தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துவதற்கான காரணிகளாகும்.
தமிழ்த்தேசியவாதம் முற்போக்கான திசைவழியில் வளர்ச்சியடையவில்லை. அதன் வளர்ச்சிப்போக்கில் அது குறுகியதாகியன்றி அனைவருக்கானதாகவும் முற்போக்கானதாகவும் அமையவில்லை. குறுகிய தமிழ்த் தேசியவாதம் தன்னை நிலைநிறுத்தப் பல்வேறு தந்திரோபாங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. இன, மொழி உணர்வுகளை வெறித்தனமான உணர்ச்சிகளாக விருத்தி செய்வது அவற்றுள் அடிப்படையான ஒரு உபாயமாக அமைந்தது எனலாம். இன்னொன்று தனக்கும் தன்னால் எதிரியாகக் கொள்ளப்படும் சமூகத்திற்குமிடையிலான வேறுபாடுகளை மிகைப்படுத்துவதுடன் பொதுவான பண்புகளைக் குறைத்துக் கூறுவது அல்லது மறுப்பதாகும். இது நம் தமிழ்த் தேசியவாதத்தின் நடத்தைக் கோளாறு மட்டுமல்ல. ஒவ்வொரு குறுகிய தேசியவாதத்தின் உள்ளும் இவ்வாறான போக்குக்களை நாம் காணலாம். இப் போக்குக்கள் மக்களைத் தனித் தனிச் சமூகங்களாகப் பிரிப்பதுடன் பகையை மூட்டுகிற காரியங்களாகவும் விருத்தி பெறுகின்றன. சமூகங்களிடையே நட்புணர்வு போன்றதே பகையுணர்வும். ஒன்றின் நட்புணர்வு மற்றதன் நட்புணர்வால் ஊட்டம் பெறுவது போல, ஒன்றின் பகையுணர்வு மற்றதன் பகையுணர்வுக்கு ஊட்டமளிக்கிறது. அதன் விளைவாக, ஒன்றுபடக் கூடிய வாய்ப்பை அதிகளவிற் கொண்ட சமூகங்கள் பிரிந்தும் பிளவுபட்டும் நிற்கின்றன. ஈற்றில் நன்மையடைவோர் எச் சமூகத்து மக்களும் அல்லர். குறுகிய தமிழ்த் தேசியவாதத்தின் தவறான அணுகுமுறை தமிழரைப் பிற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்த உதவியுள்ளது.
போரின் பின்னரான காலப்பகுதியில் தமிழரின் உரிமைகள் வெல்வது தொடர்பில் முற்போக்கான சிங்கள சக்திகள் மீது வைத்த நம்பிக்கையை விட தமிழ்த்தேசியவாதம் இந்தியாவின் மீதும் சர்வதேசம் மீதும் வைத்த நம்பிக்கை அதிகம். இனப்பிரச்சனைக்கான நிரந்தத் தீர்வு இலங்கையின் பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்பின்றி சாத்தியமில்லை. இந்தியாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை மீது அரசியல் தீர்வொன்றைத் திணிக்கவியலாது. இது எமக்கு விளங்கியிருக்க வேண்டும். விளங்காவிடினும் 13ம் திருத்தத்தின் வரலாறு எமக்கு அதை இடித்துரைத்திருக்கிறது. ஆனாலும் இன்னமும் சகோதர சமூகங்களுடனான உறவை வெறுப்புணர்வுடனேயே குறுகிய தமிழ்த்தேசியம் அணுகுகிறது.
இதுவரை காலமும் முன்னெடுக்கப் பட்ட போராட்டங்கள் நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தை முற்றாக நிராகரித்தும் பிற தேசிய இனங்களின் தேவைகள் பற்றிய அக்கறை யின்றியும் முன்னெடுக்கப்பட்டன. ஒரு வகையில், இவை ஒரு அதிகார மனப்பான்மையுடன், ஒரு ஆண்ட பரம்பரைத் திமிருடன், பெரும்பான்மை இனமொன்றுக்கு உரியதான கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டன. “தனித் தமிழ் ஈழம் என்பது தமிழரின் உரிமை, அதை மற்ற அனைவரும் ஏற்றே தீரவேண்டும்” என்ற மனப்பான்மை உருவாகி வளர்ந்ததற்குரிய காரணங்களைத் தமிழ் மேட்டுக்குடி அரசியலில் காணலாம். தமிழ் மக்களின் விடுதலை அவ்விதமான மேட்டிமைத்தனத்தில் இருந்தும் தமிழரைப் பிற சமூகங்களிலிருந்தும் விலக்கி வைக்கும் போக்குகளிலிருந்தும் விடுபட வேண்டும்.
ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண்பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என்பதை இனியாவது நாம் உணரவேண்டும். தேசியத்தினுட் செயற்பாடும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாத போது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் தேசிய இன அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்த்தேசியத்தின் அவசியத்தை வலியுறுத்துவோரும், ஈழத்தமிழருக்கான ஒரே அரசியல் திசைமார்க்கம் தமிழ்த்தேசியமே என்போரும், தமிழ்த்தேசியம் மூலமே தமிழரது விடுதலைப் போராட்டத்தை சாத்தியமாக்க முடியும் என்று சொல்வோரும் பதில் சொல்ல வேண்டிய சில வினாக்கள் உள்ளன.
- தமிழ்த் தேசிய இனம், தமிழ்த் தேசம் என்பவற்றைப் பற்றிய நமது வரலாற்று விளக்கங்கள் நம்பகமானவையா?
- தமிழ்த் தேசிய இனத்தை அடையாளப்படுத்தும் பண்புகள் எவை?
- தமிழ்த் தேசியம் மலையகத் தமிழருக்கு என்ன தீர்வை வேண்டுகிறது?
- முஸ்லிம்கள் பற்றித் தமிழ்த் தேசிய நிலைப்பாடென்ன?
- தமிழ் மக்ளின் ஒற்றுமை பற்றிப் பேசும் தலைமைகள் அதற்காக என்ன செய்துள்ளன?
- சத்தியாக்கிரகம் முதல் ஆயுதப் போராட்டம் வரை தோற்றதன் அடிப்படைக் காரணமென்ன?
- சிங்கள மக்கள் அனைவரையும் எதிரிகளாகக் கருதுவதால் யாருக்கு நன்மை?
- இலங்கையிற் “சர்வதேசத்தின்” நோக்கமென்ன? சர்வதேச ஆதரவைத் தொடர்ந்தும் நம்ப இயலுமா?
- சர்வதேச விசாரணைகள் நடந்தாலும் அவை சாதிக்கப் போவதென்ன?
- போராற் பாதிக்கப்பட்டோரின் மீட்சிக்குத் தமிழ்த் தேசியத் தலைமைகளின் திட்டமென்ன?
- இதுவரை இருந்துவந்த தமிழ்த் தேசியம் யாருடைய நலன் பற்றியது?
- விடாது தொடர்ந்தும் தோற்ற தமிழ்த் தேசியத்துக்கு மாற்று உண்டா?
- தமிழ்த் தேசியத்தின் இலக்கு இனி எதுவாக வேண்டும்?
இந்த வினாக்களுக்குத் தெளிவான விடைகளை நாம் நேர்மையான முறையில் வந்தடைய வேண்டும். இதுவே ஆக்கமான திசைவழியில் ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறிகளுக்கான நியாயமான சாத்தியமான வழிமுறைகளைத் தேடுவதற்கு வாய்ப்பளிக்கும். அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?