அரசியல்உள்ளூர்என் கண்களில்...

பாராளுமன்றத் தேர்தல்-5: சமூக அசைவியக்கத்தின் பிரதிபலிப்புகள்

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்களில் சமூக அசைவியக்கங்கள் முக்கிய பங்கை வகித்து வந்திருக்கின்றன. இலங்கையில் பிரதான அரசியல் கட்சிகளிடையே தேர்தல் ஜனநாயகத்தில் இனரீதியான செயற்பாடுகள் இன்றியமையாத நடைமுறையாகும். இடதுசாரிகளைத் தவிர, இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தொடக்கத்தில் இருந்து இனவாத அரசியல் பார்வைகளை முன்வைத்துள்ளன. அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஐ.தே.கவும் ஸ்ரீ.ல.சு.கவும் மொழி, மதம், குறிப்பாக பௌத்தம் ஆகிய கருப்பொருள்களில் முழுமையாக ஒத்துப்போகின்றன. எனவே இரு கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பொதுவான எதிர்க்கட்சியை உருவாக்கியுள்ளன. 1980களின் முற்பகுதியில் நிகழ்ந்த இனவன்முறைகளின் தீவிரமும் அதற்குப் பின்னரான செயல்களும் அரசியல் கட்சிகள் இனத்தை மட்டுமன்றி, இனப் இனத்துவேசத்தை வெளிவெளியாகப் பயன்படுத்துவதற்கான ஒரு காரணத்தை வழங்கியது.

1980களுக்கு முன் இனவாதமென்பது, இன ரீதியாக ஒரே மாதிரியான சிங்கள வாக்காளர்களில் கட்சி-வாக்காளர் உறவுகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் வேறு சமூகக் காரணிகள் தேர்தல் அரசியலில் செல்வாக்குச் செலுத்தின. 1943 இடைக்காலத் தேர்தலில் தனது கத்தோலிக்க எதிர்ப்பாளரான ஈ.டபிள்யூ. பெரேராவுக்கு எதிராக ஜே.ஆர்.ஜெயவர்தன, பௌத்த விகாரைகளின் உதவியுடன் பௌத்த வாக்குகளை வெற்றிகரமாகத் திரட்டினார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவும் 1956 தேர்தலில் ஜே. ஆர். ஜெயவர்த்தனவுக்கு எதிராக வாக்குகளைத் திரட்டுவதற்காக பௌத்த விகாரைகளை அணுகினார். விகாரைகள் தேர்தல் அரசியலில் முக்கிய செல்வாக்குச் செலுத்தும் பணியைச் செய்தன. இதே பணியைக் காலப்போக்கில் தேவாலயங்களும், பள்ளிவாசால்களும் செய்யத் தொடங்கியதோடு தேர்தல் அரசியிலில் மதம் தவிர்க்கவியலாத இடத்தைப் பெற்றது. இதில் கோவில்கள் மட்டும் விதிவிலக்காக இருந்தன.

சமகால இலங்கையில் அரசியலிலும் அதிகாரப் போட்டியிலும் மதம் எந்தளவுக்கு முக்கிய காரணியாக மாறியுள்ளது? இலங்கையின் அரசியலுடன் மதங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன? இவை இரண்டும் முக்கியமான கேள்விகள்.

சிங்கள தேசியவாத சித்தாந்தம் பௌத்த பிக்குகள் மற்றும் கொலனித்துவத்துவத்திற்குப் பிந்தைய அரசியல் பற்றிய சிங்கள பௌத்த பார்வையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பௌத்தம் இலங்கையில் மிகவும் அரசியல்மயப்படுத்தப்பட்ட மதமாகும். சிங்களத் தேசியவாதிகள் பௌத்தத்தை ஒரு மதமாக தங்கள் சித்தாந்தங்கள் மற்றும் அரசியல் பார்வைகளுக்குள் சுவீகரித்து இணைத்துள்ளனர். இலங்கையின் பௌத்த சமூகத்தில் அதிகாரத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தொகுதியாக பௌத்த மதகுருமார்கள் உள்ளனர். அவர்கள் சங்கம் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் 40,000 பேர் உள்ளனர். அதிகாரம் மற்றும் நிர்வாகத்தின் மிகவும் பரவலாக்கப்பட்ட கட்டமைப்பில் அவை சாதி அடிப்படையிலான ‘பிரிவுகளாக” ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்க திருச்சபையில் ஒரு பேராயர் அல்லது போப்பாண்டவர் இருப்பது போன்ற ஒரு தலைவர் என்று யாரும் இல்லை. ஒவ்வொரு பிரிவுக்கும் அதன் சொந்த ‘உச்ச தலைவர்’ அல்லது மகாநாயக்கர் இருக்கிறார். நிறுவன அடிப்படையில், சங்க சமூகம் நிலப்பிரபுத்துவம் என்று விவரிக்கக்கூடிய மரபுகள் மற்றும் நடைமுறைகளுடன் தொடர்கிறது. சங்கத்தின் அரசியல் அதிகாரம் தற்போது மூன்று நிலைகளில் காணப்படுகிறது. முதலாவதாக, அவர்கள் சிங்கள தேசியவாத சித்தாந்தத்தின் முன்னணி உச்சரிப்பாளர்களாகவும் பிரபலப்படுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். இன முரண்பாடுகளின் பின்னணியில், அரசியல்வாதிகள் தேசியவாத சித்தாந்தத்தை தேர்தல் நோக்கங்களுக்காகவும், ஆட்சிகளுக்கு மக்கள் ஆதரவை திரட்டவும் பயன்படுத்துகின்றனர். இரண்டாவதாக, அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரங்களிலும், வாக்கு தரகர்களாகவும் சங்கத்தினரின் தீவிரப் பங்கேற்பை நாடுகின்றனர். உள்ளூர் சமூகங்களில் பௌத்த பிக்குகள் வகிக்கும் தலைமைப் பதவிகளின் பின்னணியில், அவர்கள் தனிப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பயனுள்ள வாக்கு தரகர்களாக இருந்து வருகின்றனர். மூன்றாவதாக, பௌத்த பிக்குகள் அரசியல் கட்சி வேட்பாளர்களாக பொது அலுவலகங்களில் போட்டியிடத் தொடங்கியுள்ளனர்.

ஏப்ரல் 2004 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தீவிர தேசியவாத சிங்கள அரசியல் கட்சியான ஜாதிக ஹெல உறுமய 120 பௌத்த பிக்குகளை நாடாளுமன்ற வேட்பாளர்களாக நிறுத்தியது. அதில் பத்து பேர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றனர். இதற்கு முதல் 1994இல், இடதுசாரி அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பௌத்த பிக்கு இருந்தார். எவ்வாறாயினும், பத்து பௌத்த பிக்குகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டமை அசாதாரணமான மற்றும் பரபரப்பான அரசியல் வளர்ச்சியாக மாறியது. அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்ததன் பின்னணியில் சிங்கள தேசியவாத அரசியலின் மீள் எழுச்சியே இந்த அபிவிருத்திக்கான பின்னணியாகும் என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.

இதில் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில், ஜாதிக ஹெல உறுமய துறவிகள் நடுத்தர வர்க்க பௌத்தர்களின் செறிவு கொண்ட நகர்ப்புற வாக்காளர்களிடமிருந்தே தங்கள் வாக்குகளில் அதிக பங்கைப் பெற்றனர். பொதுவாக சிங்கள தேசியவாதத்தின் மையப்பகுதி என வர்ணிக்கப்படும் தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் கிராமப்புற மாவட்டங்களில், ஜாதிக ஹெல உறுமய ஐந்து சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது. இவ்வாறாக, பௌத்த பிக்குகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக உருவெடுத்ததை, நகர்ப்புற, நடுத்தர வர்க்கத் தொகுதிகள் மத்தியில் போர்க்குணமிக்க சிங்கள தேசியவாதம் பரவியதன் வெளிப்பாடாகவே குறிப்பிடலாம். இந்த வகையிலேயே அதைத் தொடர்ந்த தேர்தல்களிலும் வாக்களிப்பு நிகழ்கிறது.

அரசியல் ரீதியாக செயல்படும் பௌத்த துறவிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அரசியல் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பாளர்களாகவும் பழமைவாதத்தை நிலைநிறுத்தும் சக்தியாகவும் உள்ளனர். அவர்கள் சிங்கள பௌத்த வாக்காளர்களில் சிறுபான்மையினரை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அவர்கள் சிங்கள அரசியல் பார்வையின் கடும்போக்கு, தீவிரவாத பதிப்பின் பேச்சாளர்களாக இருப்பதன் மூலம் அரசியல் செயல்பாட்டில் ஒரு மூலோபாய இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். பாராளுமன்றத்தில் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களை உறுதி செய்வதற்கும், ஊடகங்களை அணுகுவதற்கும் மற்றும் முக்கிய அரசியல் அரங்காடிகளிடையே அதிகாரத்திற்கான போட்டியில் திட்டவட்டமான பேரம் பேசும் ஆற்றலுக்கும் போதுமான வாக்குகளை இது உறுதி செய்கிறது. மிதவாத துறவிகள் மற்றும் புத்திஜீவிகளால் வெளிப்படுத்தப்படுகின்ற மிதவாத சிங்கள-பௌத்த அரசியல் பார்வைகள் உள்ளன. ஆனால் அவர்கள் அரசியல் அரங்காடிகளாக மாறவில்லை. இதனால் அரசியலிலும் சமூகத்திலும் அவர்களால் செல்வாக்குச் செலுத்த இயலவில்லை.

இனம், மதம், பொருளாதார அசமத்துவம் போன்ற சமூக பிளவுகள் கிராம உயரடுக்குகளும் அரசியல் அரங்காடிகளும் எழுச்சி பெறவும் அரசியல் அதிகாரத்திற்காக போட்டியிடவும் கற்பனையான களங்களை வழங்குகின்றன. அதேபோல், இந்த பிளவுகள் கட்சிகள் தேர்தல்களில் வாக்குகளை குவிக்கும் திறனை அதிகரிக்க திறமையான கட்சி வலையமைப்பை வடிவமைப்பதில் நுட்பத்தை அடைய உதவுகின்றன. கூடுதலாக, இந்த கற்பனையான களங்கள் எதிர்கால தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக “கொண்டோர்-கொடுத்தோர்” உறவானது ~வாக்காளர்-கட்சி| உறவாகி, கட்சிக்கு ஆதரவானோருக்கு பலன்களை விநியோகிப்பதற்கான அடிப்படையை வழங்குகின்றன. இதற்கு இலங்கையில் மாற்றமடைந்த தேர்தல் முறையும் பங்களித்துள்ளது.

டொனமோர், சோல்பரி மற்றும் முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ், 1931 முதல் 1978 வரை, தேர்தல்கள் தொகுதி அடிப்படையிலான, எளிமையான பிரதிநிதித்துவத் தெரிவு முறையின் அடிப்படையில் நடத்தப்பட்டன. அம்பலாங்கொடை-பலப்பிட்டி, கொழும்பு-மத்திய, கொழும்பு-தெற்கு, நுவரெலியா-மஸ்கெலியா மற்றும் பலாங்கொடை போன்ற சில பல் அங்கத்துவத் தொகுதிகளைத் தவிர, பிற தொகுதிகள் அனைத்தும் ஒற்றை அங்கத்துவ ஆசனங்களாக இருந்தன. இந்த அமைப்பின் கீழ் கட்சி அமைப்பும் தேர்தல் போட்டியும் ஒப்பீட்டளவில் எளிமையானதாக இருந்தது. வெற்றிபெற, வேட்பாளர் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களிலும் அதிக வாக்குகளைப் பெற வேண்டும். இந்த தேர்தல் முறையின் கீழ், குறிப்பிட்ட தொகுதியில் வெற்றியீட்டிய அரசியல்வாதி, தனது வாக்காளர்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். இந்தத் தேர்தல் முறையில் வாக்காளர், கட்சி மற்றும் அரசியல்வாதி இடையேயான உறவு எளிமையானதும் நேரடியானதுமாக இருந்தது. ஆனால் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையானது சிக்கலானது. இந்த முறையானது “கொண்டோர்-கொடுத்தோர்” உறவு என்ற அரசியல் முறையின் நிலைப்புக்கும் இருப்புக்கும் காரணமானது.

இலங்கையின் அரசியல் செயல்பாட்டில் கொண்டோர்-கொடுத்தோர் உறவுகளின் இருப்பை விளங்குவதும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நோக்குவதும் அரச-சமூக உறவுகளின் கட்டமைப்பில் இலங்கையில் அரசியல் அதிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதது. 1930களில் தோன்றிய சமூகநலக் கொள்கை ஆட்சியானது, சர்வசன வாக்குரிமையுடன் இணைக்கப்பட்ட பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் விரிவாக்கத்துடன் இப்போதும் கூட இருக்கும் கொண்டோர்-கொடுத்தோர் உறவுகளுக்கு பெருமளவில் பங்களித்துள்ளது. பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் உருவான உபரியின் மூலம் ஆரம்ப ஆண்டுகளில் ஆதரவளிக்கப்பட்ட நலன்புரி ஆட்சியானது, சுதந்திரத்திற்குப் பின்னரான உடனடி தசாப்தங்களில் சுகாதாரம், கல்வி, உணவு, சமூக உட்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் அனைத்து குடிமக்களுக்கும் அரச ஆதரவை வழங்கியது. இது இறுதியில் குடிமக்களிடையே அரசைப் பற்றிய ஒரு சமூகப் பார்வையை உருவாக்கியது. சமூக நலனின் உச்ச நிறுவனமாக அரசு உள்ளது. இது ஆளும் உயரடுக்கினருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குடிமக்களுக்கும் இடையே ஒரு “சமூக ஒப்பந்தம்” போன்ற ஒன்றையும் அமைத்தது.

இந்த கொண்டோர்-கொடுத்தோர் சமூக ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும், மீண்டும் உறுதிப்படுத்தவும், அரசியல் வகுப்பினருக்கும், குடிமக்களுக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் வழக்கமான இடத்தை வழங்கியுள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும், இரண்டு பிரதான கட்சிகளும் போட்டி மனப்பான்மையுடன், வாக்காளர்களுக்கு பொதுவாக உணவு மற்றும் விவசாய மானியங்கள், ஏழைகளுக்கு நிவாரணம், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், பொதுத்துறை வேலைவாய்ப்பு, இலவசக் கல்வி உள்ளிட்ட நலன்புரி நடவடிக்கைகளை உறுதியளித்துள்ளன. கிராமப்புற சமூகத்தில் இவ்வகைப்பட்ட சமூகநல முதலீடுகளை முன்மொழிவதனூடு வாக்குகளைப் பெற அவை முனைந்துள்ளன.

கொண்டோர்-கொடுத்தோர் அரசியல்முறையானது உருவாக்கிய அரசியல் வாடிக்கையாளர்வாதம் எதிர்மறையானதா, தவிர்க்கக்கூடியதா அல்லது அவசியமா? என்பது இலங்கையின் அரசியல் விவாதங்களில், அரசியல் வாடிக்கையாளர் பிரச்சினையில் இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உருவாகியுள்ளன. முதலாவது, எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகள், சுயாதீன ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் அரசியல் வாடிக்கையாளரானது நல்லாட்சியின் நலனுக்கு எதிரானது, அது அரசியல் ஊழலை நிலைநிறுத்துகிறது, எனவே அது அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இரண்டாவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையின் நடைமுறை நன்மைகளையும் பலனளிக்கும் விளைவுகளையும் மதிக்கிறார்கள். அணுகுமுறைகளின் இந்த துருவமுனைப்பில், அரசியல் ஊழலின் ஒரு வடிவமாக அரசியல் வாடிக்கையாளர்வாதம் என்பது ஒரு சுழற்சி செயல்முறையாக மாறியுள்ளது. குறிப்பாக இந்தக் கொண்டோர்-கொடுத்தோர் முறையை எதிர்க்கும் அரசியல் கட்சியானது ஆட்சிக்கு வந்தவுடன் அதேமுறையை அதைவிட வீரியமாகச் செயற்படுத்துவதே இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டுகால அனுபவமாகும். இதிலிருந்து வேறுபட்ட ஒரு அரசியல் கலாசாரத்தை நோக்கி நகர இலங்கையர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை தேர்தல்களின் வழி மக்கள் முடிவுசெய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *