பிரேசில்: சர்வாதிகாரியை மக்கள் தெரியும் போது
ஜனநாயகம் பற்றி இப்போது அதிகம் பேசப்படுகிறது. ஜனநாயகத்தின் அவசியம் பற்றியும் அதன் நடைமுறைகள் ஒழுங்காகச் செயற்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் பற்றியும் நிறையவே பேசப்படுகிறது. இலங்கையின் அண்மைய நிகழ்வுகள் ஜனநாயகம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. ஜனநாயக வழிமுறைகளின் மூலம் ஜனநாயக மறுப்பாளர்களை மக்கள் தெரிவுசெய்வது உலகெங்கும் நடைபெறுகிறது. இதை இன்னொரு வகையில் ஜனநாயகம் சர்வாதிகரிகளைத் தெரிவு செய்கிறது. ஆதரிக்கிறது, ஊட்டி வளர்க்கிறது. எல்லாம் ஜனநாயகத்தின் பெயரிலேயே நடந்தேறுகிறது. நீண்டகாலமான சர்வாதிகாரத்தின் கொடுமைகளை அனுபவித்த மக்கள் எவ்வாறு மீண்டும் சர்வாதிகாரியாக தன்னை நிலைநிறுத்துவேன் என்று சொல்பவரைத் தேர்ததலில் வெற்றி பெறச் செய்கிறார்கள் என்பது புரியாத வினா. ஒரு சமூகம் கூட்டுத் தற்கொலையை எவ்வாறு விரும்பித் தெரிகிறது.
இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடும் வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் முக்கியமானதுமான பிரேசில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்துள்ளது. தீவிர வலதுசாரியான ஜயர் போல்சொனாரே 55மூ வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகியிருக்கிறார். இவரது தேர்தல் பரப்புரையும் இவரது தெரிவும் இலத்தீன் அமெரிக்காவிலும் அதற்கு வெளியிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி டிவ்மா ரூசெவ் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரேசில் தொடர்ச்சியான நெருக்கடியில் சிக்கியது. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாரிய சிக்கலை எதிர்கொண்டது. 1990களில் இருந்து ஆட்சியில் இருந்த தொழிற்கட்சியின் சமூகநலத் திட்டங்கள் வெட்டப்பட்டு புதிதாக ஜனாதிபதியாகத் தெரிவான மைக்கல் ட்ரீமர் நவதாராளவாதத் திட்டங்களை துரித கதியில் நடைமுறைப்படுத்தினார். இதனால் மக்களின் அதிருப்தி ஒருபுறமும் பொருளாதாரச் சரிவு மறுபுறமாகவும் நடந்தேறியது.
இதன் பின்னணியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இவ்வாண்டு தொடக்கத்தில் தொடங்கிய வேளை முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். பிரேசிலின் மிகவும் பிரபலமான அரசியற்தலைவரான இவருக்கு அமோக ஆதரவு இருந்தது. இலத்தீன் அமெரிக்காவில் 1990-2000 காலப்பகுதியில் வீசிய இளஞ்சிவப்பு அலையின் முக்கிய புள்ளியாக லூலா இருந்தவர். சாதாரண மக்களின் பிரதிநிதியாக அவர் அறியப்பட்டார்.
லூலாவின் மீள்வருகை அவரது வெற்றியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியிருந்த வேளை அவருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவ்வழக்கு துரித கதியில் விசாரிக்கப்பட்டு அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். கடந்த செப்டெம்பர் மாதம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு அவர் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அவரது வழக்கு விசாரணையும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும் நீதியான முறையில் நடைபெறவில்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக் கொண்டது. இது தொழிற்கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை குழிதோண்டிப் புதைத்தது.
தீவிர வலதுசாரியின் வருகை
ஜயர் போல்சொனாரேவின் வெற்றி என்பது எதிர்பார்க்கப்பட்ட போதும் அவரது பிரச்சாரமும் அதற்கெதிரான எதிர்வினைகளும் பிரேசில் இனி எதிர்கொள்ளப்போகும் சவால்களைக் குறித்து நிற்கின்றன. அனைத்து வகைகளிலும் நெருக்கடியில் உள்ள பிரேசிலிய சமூகத்திடம் “ஊழலை ஒழிப்பேன், பிரேசிலில் நிலவிவரும் அதிகப்படியான குற்றங்களை குறைக்க பாடுபடுவேன்” என்ற வாக்குறுதிகளை முன்வைத்தே அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். அவரது தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல் தான் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையைச் சரிசெய்தால் பிரேசிலியத் தெருக்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பன பிரதான பேசுபொருளாகின.
1955ம் பிறந்த போல்சொனாரே இராணுவத்தில் இருந்தவர். குறிப்பாக இராணுவ சர்வாதிகாரி ஆட்சிக்காலத்தில் இராணுவத்தில் சில முக்கிய கடமைகளைச் செய்தவர். இராணுவ சர்வாதிகார ஆட்சி நிறைவடைந்த அடுத்த ஆண்டு இராணுவ வீரர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று கட்டுரை எழுதியதன் மூலம் கவனம் பெற்றவர். புpன்னர் அரசியிலில் குறித்த அவர் கடந்த 27 ஆண்டுகளாக பிரேசிலியப் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளார். இவர் நன்கறியப்பட்ட ஒருவரல்ல. ஆனால் தொடர்ச்சியாக இராணுவ ரீதியான அங்கீகாரத்தைக் கோரி நின்றவர்.
போல்சொனாரே தனது தேர்தல் பிரச்சாரங்களில் தன்னைச் சுற்றி எப்போதுமே முன்னாள் ரனுவத்தினரை வைத்திருந்தார். இராணுவத்தின் பெருமைகளை அவர் சுட்டிப் பேசினார். தனது பேச்சுக்களில் பிரேசில் ராணுவ ஆட்சிக் காலக்கட்டத்தை நினைவு கூர்ந்தார். அவை எவ்வாறு பயனுள்ளவையாகவும் முக்கியமானவையாகவும் இருந்தன என்பதை சிலாகித்தார். வெளிப்படையாகவே இராணுவ சர்வாதிகாரமே நாட்டை முன்னேற்றுவதற்கான வழி என்றும் சொன்னார். தனது பாட்டனார் நாசி வீரனாக இராணுவத்தில் கடமையாற்றியவர் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொண்டார்.
அவரின் தேர்தல் பிரசாரத்தில் மையமாக இருந்தது, பிரேசில் மக்களின் பாதுகாப்புதான். தன்னை கடும்போக்காளராக காட்டிக் கொண்ட அவர், பிரேசில் வீதிகளை பாதுகாப்பேன் என்றார். இராணுவத்தினரை வீதிக்கு இறக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்த உறுதியளித்தார். அதுபோல, தனது அரசாங்கம் துப்பாக்கிகள் எடுத்து செல்வது தொடர்பான சட்டங்களை இலகுவாக்கும் என்றும் அறிவித்தார்.
போல்சொனாரேவின் தேர்தல் களமே இராணுவத்தைச் சார்ந்திருந்தது. அவருக்கு இராணுவத்தின் உயரடுக்குகளின் முழுமையான ஆதரவு உண்டு. இதனால் தான் இவரின் துணை ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் இராணுவ வீரரான ஜெனரல் அந்தோனியோ ஹமில்டன் முராரோ தெரியப்பட்டார். இருவரும் தாங்கள் தேர்தலில் வெற்றியடையாவிட்டால் இராணுவச் சதி அரங்கேறுவது உறுதி என்று பல பிரச்சார மேடைகளில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். அதேவேளை ஒருவேளை தேர்தலில் தோல்வியடைந்தால் அம்முடிவை தாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என்றும் அதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்று எனக்குத் தெரியும் என்றும் சொல்லியிருக்கிறார். இவை பிரேசில் அரசியலில் இராணுவத்தின் மீள்வருகையை உறுதிப்படுத்துகிறது.
1964 முதல் 1985 வரையான 21 ஆண்டுகள் பிரேசிலில் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இலத்தீன் அமெரிக்காவில் இராணுவ சர்வாதிகாரங்கள் தோன்றி நிலைபெறுவதற்கான களத்தை பிரேசிலில் 1964 நடந்த இராணுவப் புரட்சியும் அதைத் தொடர்ந்த சர்வாதிகார ஆட்சியும் வழங்கின. இக்காலப்பகுதியில் 50,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இக்காலப்பகுதியில் சித்திரவதை என்பது வெளிப்படையானதாகவும் அரச அங்கீகாரம் உள்ளதாகவும் மாறியிருந்தது. இதை நினைவுகூரும் அடையாள நினைவுச்சின்னம் இப்போதும் பிரேசிலில் உண்டு. 2014ம் ஆண்டு இராணுவ ஆட்சிக்காலக் கொடுமைகளைக் கண்டறிய உருவாக்கப்பட்ட பிரேசிலிய தேசிய உண்மையறியும் ஆணைக்குழு ‘இவ்வகையான கொடூரமான சித்திரவதைகளை வழங்கும் முறைகள் பற்றி அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பயிற்சியளித்தார்கள்’ என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியது.
இதேவேளை பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை குறைப்பேன் என்று போல்சொனாரே கூறியிருக்கிறார். எனவே நிதிமூலதனமும் பல்தேசியக் கம்பெனிகளும் விரும்பியதை அவர் நிறைவேற்றுவார் என்பதை நாம் எதிர் நோக்கலாம். அதேபோல பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன் என்றும் இது அமேசான் பகுதியில் பிரேசிலின் இறையாண்மையை இந்த ஒப்பந்தம் சமரசம் செய்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சம் யாதெனில் பெருந்தேசியவாத வெள்ளை நிறவெறியை வெளிப்படையான முறையில் தெரியப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் இராணுவ சர்வாதிகாரம் பற்றி கருத்துரைத்த போல்சொனாரே அவ்வாட்சியின் ஒரே தவறு யாதெனில் ‘கொலை செய்வதற்குப் பதிலாக சித்திரவதை செய்ததுதான்’ என்றார். அவர் கம்யூனிஸ்டுகளை சித்திரவதைக்குப் பதிலாக இராணுவ ஆட்சி கொலை செய்திருந்தால் பிரேசில் நன்றாக இருந்திருக்கும் என்றார்.
ஒப்பீட்டளவில் சிறிய, பழமைவாதக் கட்சியான சமூக தாரளவாதக்; கட்சியைச் சேர்ந்தவரான இவர் சமூக ஊடகங்களில் உள்ள பிரேசில் அரசியல் வாதிகளிலேயே மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அவரை டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் 1.05 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.
பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மிகவும் பிற்போக்கான கருத்துக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார். இது மிகப்பெரிய எதிர்வலைகளை உருவாக்கியது. இவரது கருத்துக்களை எதிர்த்து பல பெண்கள் ஒன்று சேர்ந்து பெருகிவரும் இவரது செல்வாக்கை மட்டுப்படுத்தும் வகையில் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் இவருக்கு எதிராக #EleNao (#NotHim) என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்திப் பிரசாரம் செய்ததையும் இங்கு நினைவுகூரல் வேண்டும்.
கறுப்பினத்தவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படக் கூடாது. ஓரினச் செயற்கையாளர்கள் சமூகத்திற்குக் கேடு, கருக்கலைப்பு கொலைக்குச் சமனானது எனவே அனுமதிக்கக் கூடாது போன்ற கிறீஸ்தவ மைய அடிப்படைவாதக் கருத்துகளை அவர் வெளியிட்டவர். இதன் காரணமாக கிறீஸ்தவ மத அடிப்படையாளர்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது.
போல்சொனாரே தனது தேர்தல் பிரச்சாரத்தில் சரி நடைமுறையிலும் சரி பல விதங்களில் ட்ரம்பை ஒத்துள்ளார். அவரின் தேர்தல் சுலோகம் ‘எல்லாவற்றும் முன்னே பிரேசில், அனைவருக்கும் மேல் கடவுள்’ (Brazil before everything, and God above all) என்பதாகும் இது ட்ரம்பின் அமெரிக்கா முதல் சுலோகத்தை நினைவுறுத்துகிறது. அதேபோல் தான் ஏற்கனவே உள்ள அரசியல் ஒழுங்கை (சிஸ்டத்தை) மாற்றுவேன் என்று ட்ரம்பை வழிமொழிந்துள்ளார். இதனால் இவர் தென்னமெரிக்காவின் ட்ரம்ப் என அழைக்கப்படுகிறார்.
இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் உலகின் ஜந்து மிகப்பெரிய நாடுகளில் மூன்றில் வலது தீவிர தேசியவாதத் தலைவர்கள் பதவியில் உள்ளார்கள். அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவில் நரேந்திர மோடி இப்போது பிரேசிலில் ஜயர் போல்சொனாரே. எனவே உலகின் அதிவலது நோக்கிய திருப்பம் உலகளாவி வருகிறது.
அண்மைய நிகழ்வுகள் இரண்டு செய்திகளைச் சொல்கின்றன. முதலாவது நவதாரளவாதம் நெருக்கடிகளை எதிர்நோக்கும் போது தன்னைத் தக்கவைக்க தனது ஜனநாயக முகமூடிகளை கழற்றி எறிந்துவிட்டு வலது தீவிரவாதத்தையும், சர்வாதிகாரத்தையும் கையில் எடுக்கிறது. இரண்டாவது அரசியல் அறம் நியாயம் என்பன அதன் பயன்பாட்டை இழந்து காலமாகி விட்ட போதும் ஜனநாயகத்தின் பேரால் வெறும் பெயரளவில் அது நிலைத்திருந்தது. இப்போது அதுவும் காலாவதியாகிப் போய்விட்டது.
கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்கு
2015ம் ஆண்டு முதல் பிரேசிலில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சில 1985இல் பிரேசிலில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர் பிரேசிலில் நடந்த மிகபாரிய ஆர்ப்பாட்டம் ஆகும். குறிப்பாகக 2015 இல் பேருந்துக்கட்டண அதிகரிப்பை எதிர்த்துத் தொடங்கிய போராட்டங்களில் காலப்போக்கில் கல்வியிலும் சுகாதாரத்திலும் மேலதிகமாக நிதிகளைச் செலவழிக்குமாறும் இவ்விரு துறைகளின் தரத்தை மேம்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததோடு விளையாட்டு நிகழ்வுகளுக்கு தேவையற்ற பெருந்தொகையான பணத்தை செலவழிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் மாறியது.
பிரேசில் 1990களின் பின்னர் பொருளாதார அற்புதங்களாகக் கருதப்பட்டது. மிகையான பொருளாதார வளர்ச்சியும் உலக அரங்கில் முக்கியமான பொருளாதார சக்திகளாக மாறியமை என்பன வெற்றி அற்புதக் கதைகளாகவும் ஏனைய மூன்றாமுலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகவும் காட்டப்பட்டன. வளரும் பொருளாதார நாடுகளுக்கு மாதிரியாகக் கருதப்பட்ட டீசுஐஊளுஇல் முதன்மையான இடத்தை பிரேசில் பெற்றது.
பிரேசிலின் பொருளாதார வளர்ச்சியும் உலக அரங்கில் அதன் இடமும் “பிரேசிலின் அற்புதம்” என்று புகழப்பட்டு பல மூன்றாமுலக நாடுகளுக்கு வளர்ச்சிக்கான மாதிரியாகக் காட்டப்பட்டது. ஆனால் பிரேசில் செய்தது 50 பில்லியனர்களையும் 1500 மில்லியனர்களையும் உருவாக்கியது மட்டுமே என்ற உண்மை மறைக்கப்பட்டது.
2015ம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பிரேசில் உலகின் முக்கியமான நாடுகளில் ஒன்றாகத் தன்னைத் தக்கவைக்கவும் உலக அரங்கில் தனது பெயரைப் பிரபலமாக்கவும் உதைபந்தாட்ட உலகக்கிண்ணத்தையும் ஒலிம்பிக்கையும் நடாத்தியது. அதற்கான அளவுக்கதிகமான பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால் பொருளாதாரத்தை மீட்க இயலவில்லை.
இந்த தேர்தல் பிரேசிலின் வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் சூழப்பட்டிருக்கிற காலப்பகுதியில் நடந்துள்ளது. பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி; 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் மிகப் பெரியளவில் வீழ்ச்சி அடைந்தது. வேலைவாய்ப்பும் நடுத்தர வருமானமும் 2027 இல் தான் அவற்றின் 2013 இலிருந்த மட்டங்களுக்கு திரும்புமென முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளர். இப்பின்னணியிலேயே பிரேசிலை நோக்க வேண்டியுள்ளது.
இத் தேர்தல் முடிவை பிரேசிலிற்கு வெளியே இருந்து நோக்கும் ஒருவருக்கு இவ்வளவு மோசமான ஒருவரை எவ்வாறு மக்கள் தேர்வு செய்கிறார்கள் என்ற வினா எழக்கூடும். இதே வினா டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தேர்வானவுடனும் பலருக்கு எழுந்திருக்கும். 2008ம் ஆண்டு உருவான பொருளாதார நெருக்கடியின் மாற்றமடைந்த வெளிப்பாடே இது. பொருளாதார வல்லுனர்கள் நெருக்கடி முடிந்துவிட்டது என்று வாதிட்டாலும் நடைமுறையில் அதன் இருப்பையும் இயக்கத்தையும் கடந்த சில ஆண்டுகளில் நாம் அவதானித்துள்ளோம். ஒருபுறம் பொருளாதார நெருக்கடி நிதி மூலதனத்திற்கு மிகுந்த சவாலைக் கொடுத்துள்ளது. தாரண்மைவாத ஜனநாயக அடிப்படையில் நவதாரளவாதம் இனியும் இயங்கவியலாது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே அவர்கள் தராண்மைவாத ஜனநாயகத்தைக் கைகழுவி விட்டு விட்டார்கள். மறுபுறம் பொருளாதார நெருக்கடி உருவாக்கிய நிலைமைகள் பாரம்பரிய அரச கட்டுமானங்களின் குறைபாடு எனவே பாரம்பரிய அரசியல் தலைமைகளுக்கு மாற்றான புதிய தலைமைகளை மக்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அதை முற்போக்குச் சக்திகள் பயன்படுத்துவதை விட அதிவலது அரசியற்சக்திகள் வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றன. ஏனெனில் எந்தக் கும்பல் தராண்மைவாத ஜனநாயகத்தைக் கைகழுவி விட்டதோ அந்தக் கும்பல் இந்த அதிவலது அரசியற்சக்திகளுக்கு தங்கள் ஆதரவை வழங்குகிறார்கள். இதனாலேயே போல்சொனாரே பொருளாதாரத்தில் அரசின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். போல்சொனாரே மக்களால் தெரியப்பட்டார். ஆனால் மக்களுக்காகத் தெரியப்படவில்லை.
வரலாற்றில் ஒவ்வொரு சொல்லுக்கும் குறிப்பாக கோட்பாடு சார்ந்த சொற்களுக்கான வாழ்காலம் ஒன்று உண்டு. அந்த வகையில் ‘ஜனநாயகம்’ என்ற சொல் கோட்பாடாகவும், சொல்லாகவும் காலாவதியாகி வருகிறது. அதன் முடிவு பொருளாதார நெருக்கடியின் விளைவால் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. கேள்வி யாதெனில் ஜனநாயகத்தின் காலவவதி ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை எது நிரப்பும் என்பதுதான். அது அடுத்த அரை நூற்றாண்டுக்கு உலக அரசியில் அரங்கின் செல்நெறியில் செல்வாக்குச் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.