யூலியன் அசான்ஜ் கைது: சுயநலனில் பற்றவைத்த தீ
உண்மையும் பொய்யும் கறுப்பு வெள்ளைக் காகிதங்கள் போல் தெளிவாக இருப்பதில்லை. எமக்கு சொல்லப்படுவதெல்லாம் உண்மையுமல்ல, சொல்லப்படாததெல்லாம் பொய்களும் அல்ல. உண்மை எனப்படுவதே கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறத்திலேயே காட்சியளிக்கிறது. அந்த நிறத்தின் கருமையின் அளவு உண்மையின் அளவையும் பொய்யின் அளவையும் ஊகிக்க உதவும். அவ்வளவே.
விக்கிலீக்ஸ் நிறுவகர் யூலியன் அசான்ஜ் கடந்தவாரம் பிரித்தானியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது உலகளாவிய ரீதியில் கருத்துரிமைப் போராளிகளிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக அசான்ஜ் சட்டவிரோதமாகக் கைதாவதற்கு அஞ்சி பிரித்தானியாவில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் தங்கியிருந்தார். அவருக்கான புகலிடத்தை ஈக்குவடோர் வழங்கியிருந்த நிலையில் அவரது வாழ்வு தூதரகத்திலேயே கடந்தது. கடந்த வாரம் அவருக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை ஈக்குவடோர் இரத்துச் செய்ததைத் தொடர்ந்து அவர் பிரித்தானியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு நடந்து வருகிறது.
யூலியன் அசான்ஜ் ஒருபக்கம் கொண்டாடப்படும் போற்றப்படும் ஒருவராகத் திகழ்கின்ற அதேநேரம் அரசாங்கங்கள் இவரை மாபெரும் குற்றம் இழைத்த ஒருவராக வர்ணித்து அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றன. அப்படி என்ன செய்தார் அசான்ஜ்.
விக்கிலீக்ஸ் உலகை அதிரவைத்த கதை
2006ம் ஆண்டு இரகசியத் தகவல்கள், கசியவிடப்பட்ட செய்திகள் ஆகியவற்றை பொதுவெளியில் வெளியிடுவதற்காக ஐஸ்லாந்தில் உருவாக்கப்பட்ட தன்னார்வ நிறுவனமே விக்கிலீக்ஸ் ஆகும். இதன் உருவாக்குனரே அவுஸ்ரேலியப் பிரஜையான யூலியன் அசான்ஜ். 2010ம் ஆண்டு ஆப்கான் யுத்தம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு விக்கிலீக்ஸ் அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து விக்கிலீக்ஸ் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அமெரிக்கத் தூதரகங்களால் அனுப்பப்படுகின்ற ‘கேபிள்கள்’ எனும் ‘தந்திச் செய்திகளைப்’ பகிரங்கப்படுத்தியது. இத் தந்திச் செய்திகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்ததன் மூலம், உலகத் தலைவர்களின் கொலை, சதி வேலைகள் உட்பட்ட சகல தீச்செயல்களையும் அமெரிக்கா எவ்வாறு செய்தது என விக்கிலீக்ஸ் உலகுக்கு அறிவித்தது.
இந்தக் கேபிள்கள், இராஜதந்திர நடைமுறைகள் எவ்வாறு நடக்கின்றன. தூதரகங்கள் என்ன செய்கின்றன. ஒருநாட்டின் உள்விவகாரங்களில் எவ்வாறு நாடுகள் தலையிடுகின்றன போன்றவற்றை பொதுவெளிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா ‘இராஜதந்திர நடவடிக்கைகள்’ என்பதன் பெயரால் எதையெல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் செய்து வந்திருக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்தது.
இதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்த எட்வேட் ஸ்னோடன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவராண்மையின் (National Security Agency) ‘ப்ரிஸ்ம்’ என்னும் இரகசிய உளவு நடவடிக்கை குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆதாரத்தோடு வெளியிட விக்கிலீக்சும் அசான்ஜேயும் துணை நின்றனர். அதன் மூலம் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், முக்கிய தொழிலதிபர்கள், பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்ற முக்கியஸ்தர்களின் கணினியிலிருந்து தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவராண்மைமை திருடியது அம்பலப்படுத்தப்பட்டது.
ஸ்னோடன் வெளியிட்ட ஆவணங்களும் சொன்ன செய்திகளும் மிக முக்கியமான செய்தியொன்றை விட்டுச் சென்றுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்களும் ஏனையவும் நாம் அன்றாடம் பாவிக்கும் கணிணி, கைத்தொலைபேசி, தொலைக்காட்சி என்பவற்றின் ஊடு எம்மைத் தினந்தினம் கண்காணிக்கின்றன. எனது அனுமதியின்றி நாம் வேவுபார்க்கப்படுகிறோம். நவீன தொழிநுட்ப வளர்ச்சி என்பதன் பெயரால் நவீன கணிணிகள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் என்பன எம்மைக் கண்காணிக்கும் கருவிகளாயுள்ளன.
நம்மைப் கண்காணிக்க கூகிள் போன்ற தேடுபொறிகளும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களும் எவ்வாறு உதவுகின்றன என்பதை ஸ்னோடன், அசான்ஜ் ஆகியோர் ஆதாராங்களுடன் நிறுவியுள்ளனர். நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல உலகம் பாதுகாப்பானது இல்லை என்பதை இவர்கள் நிறுவியுள்ளார்கள். அதேவேளை உலகம் எவ்வாறு ஆபத்தானதாக மாறியுள்ளது என்பதையும் அந்தரங்கம் என்றவொன்று இல்லை என்பதையும் வெட்டவெளிச்சமாக்கி முக்கியமான சமூகக் கடமையை விக்கிலீக்ஸ் ஆற்றியிருக்கிறது.
இதன் பின்னணியிலேயே யூலியன் அசான்ஜ், பின்லாடன் போன்ற பயங்கரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டார். அப்போதைய அமெரிக்க உள்துறைச் செயலராயிருந்த ஹிலரி கிளிண்டன், அமெரிக்கத் தேச நலனுக்கு எதிராக இராணுவ இரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை அசான்ஜ் இழைத்துள்ளதால் அவரைத் தண்டிக்க வேண்டும் எனக் கோரினார்.
தனது நாட்டின் இரு பெண்களை வன்புணர்ச்சிக்குட்படுத்தினார் என்று குற்றஞ் சாட்டிய சுவீடன் அசான்;ஜைத் தேடியது. அவருக்கெதிரான சர்வதேச பிடிவிராந்தை பிறப்பித்தது. இக்குற்றங்களைத் தொடர்ச்சியாக அவர் மறுத்து வருகிறார். இக்காலப்பகுதியில் பிரித்தானியாவில் வசித்துவந்த அசான்ஜ் மீது வழக்குப் பதியப்பட்டது. குறித்த வழக்கில் பிணை வழங்கப்பட்ட நிலையில் தான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதை அறிந்துகொண்ட அசான்ஜ் பிரித்தானியாவில் உள்ள ஈக்குவடோரியத் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார்.
அசான்ஜை துரும்புச்சீட்டாக்கிய ஈக்குவடோர்
யூன் 2012ம் ஆண்டுமுதல் பிரித்தானியாவில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் வசித்து வந்த அசான்ஜ் மிகுந்த நெருக்கடிகளுக்குள் இருந்து வந்தார். அவருடைய அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாயும் அவர் ஏதேச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபையின் ஏதேச்சையான சிறைவைப்புப் பணிக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது
ஆனால் இத்தீர்ப்பை ஏற்கமறுத்த பிரித்தானியா அசான்ஜ் கைதுசெய்யப்படுவது தொடர்பில் தொடர்ச்சியாக பணியாற்றுவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் கடந்தவாரம் பிரித்தானியாவில் உள்ள ஈக்குவடோர் தூதுவர் தூதரகத்துக்குள் பிரித்தானியப் பொலிசாரை அனுமதித்து அசான்ஜ் கைதை சாத்தியமாக்கினார். இது அசான்ஜ்ஜின் ஆதரவாளர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஈக்குவடோர் தூதரக அதிகாரிகளுக்கும் அசான்ஜ்சுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்துள்ளன. ஈக்குவடோர் அசான்ஜை வெளியேற்றவேண்டும் என்ற கோரிக்கையும் அழுத்தமும் அமெரிக்காவிடம் இருந்தும் பிரித்தானியாவிடமிருந்தும் தொடர்ச்சியாக இருந்து வந்தது. ஆனால் அசான்ஜ்க்கு அரசியல் தஞ்சம் வழங்கிய அப்போதைய ஈக்குவடோரிய ஜனாதிபதி ரபேல் கொரேயா அசான்ஜ்ஜைப் பாதுகாப்பதில் குறியாக இருந்தார்.
அசான்ஜ்ஜின் அரசியல் தஞ்சத்தை இரத்துச் செய்து அவரை கைதுசெய்ய அனுமதித்த தற்போதைய ஈக்குவடோரிய ஜனாதிபதி லெனின் மரீனோவின் செயல் ஆச்சரியத்தைத் தந்ததாலும் இப்போது வெளியாகிற செய்திகள் இது நீண்டகாலத் திட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைக் காட்டுகின்றன.
2017ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரதிநிதிகள் ஈக்குவடோர் ஜனாதிபதியைத் சந்தித்திருக்கிறார்கள். அச்சந்திப்பில் அசான்ஜ் தொடர்பில் பேசப்பட்டது. அசான்ஜை அமெரிக்காவிடம் கையளிக்க ஈக்குவடோர் தயாராக இருப்பதாகவும் அதற்கு பதிலீடாக அமெரிக்க-ஈக்குவடோர் இராஜதந்திர உறவு பலப்பட வேண்டும் என்றும் அமெரிக்க உதவிகள் ஈக்குவடோருக்க வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மரீனோ கோரியிருக்கிறார். இத்தகவல்கள் அமெரிக்கத் தேர்தல்களில் வெளியார் தலையீடு குறித்து ஆராயும் ரோபேர்ட் முல்லர் விசாரணையில் வெளிவந்தன. முல்லர் விசாரணையின் முழுமையான அறிக்கை இன்று வெளியாகிறது.
கடந்த இரண்டாண்டுகளில் ஈக்குவடோரின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இடதுசாரியாக அறியப்பட்ட லெனின் மரீனோ தீவிரவலதுசாரி போல் கொள்கை முடிவுகளை மேற்கொண்டுள்ளார். முன்னைய ஜனாதிபதி ஈக்குவடோரில் இருந்த அமெரிக்கத் தளங்களை அகற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிச்சலான செயலை செய்திருந்தார். அவரது வழித்தடத்தில் பதவிக்கு வந்த மரீனோ அமெரிக்க இராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி, அமெரிக்க இராணுவத்திற்கு உதவி, தென்னமிரிக்க இடதுசாரி அரசுகளுக்கு எதிரான கூட்டு என எதிர்த்திசையில் பயணிக்கிறார்.
ஈக்குவடோர் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) நிதி உதவி கோரியிருந்த நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முக்கிய பேசுபொருளாக இருந்தது ‘யூலியன் அசான்ஜ் தான்;’ என்று செய்திகள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் விதமாக இப்பேச்சுவார்த்தைகள் தொடங்கிய சில காலத்தில் ஈக்குவடோரியத் தூதரகத்தில் யூலியன் அசான்ஜ்சுக்கு வழங்கப்பட்டிருந்த இணையவசதிகள் துண்டிக்கப்பட்டன. அவருக்கும் வெளியுலகுக்கும் இடையிலான தொடர்பாடல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஈக்குவடோருக்கு விஜயம் செய்தார். இதைத் தொடர்ந்து முன்னாள் வெனசுவேல ஜனாதிபதி சாவேஸினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கான பொலிவாரிய மாற்று (அல்பா) அமைப்பில் இருந்து ஈக்குவடோர் வெளியேறியது. இவ்வாண்டு பெப்பரவரி மாதம் சர்வதேச நாணய நிதியம் 4.2 பில்லியன் கடனை ஈக்குவடோருக்கு வழங்கியது. இது குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் நீயூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ‘சர்வதேச நாணய நிதியத்திடம் அசான்ஜை ஈக்குவடோர் விற்றுவிட்டது’ என்று எழுதியது.
கடந்த மார்ச் மாதம் INA Papers என்கிற பெயரில் ஈக்குவடோர் ஜனாதிபதி லெனின் மரீனோ குறித்த தகவல்கள் கசியவிடப்பட்டன. இதில் அவரது ஊழல், ஒப்பந்தங்களைப் சட்டவிரோதமாக தனது சகோதரருக்கு வழங்கியது, அசான்ஜை உளவு பார்த்தது என ஏராளமான விடயங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இது மரீனோவுக்கு எதிரான ஊழல் விசாரணைக்கு வழிவகுத்தது. இவற்றைக் கசியவிட்டது விக்கிலீக்ஸ் என்று மரீனோ குற்றஞ் சாட்டினார். ஆனால் அசான்ஜை தூதரகத்துக்குள்ளேயே ஈக்குவடோர் உளவு பார்த்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்தகவல்கள் யாருக்கு வழங்கப்பட்டன என்ற தகவல் இன்னமும் தெரியவில்லை.
இந்தப் பின்னணியிலேயே அசான்ஜ் தூதரதகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஈக்குவடோரில் மிகுந்த விமர்சனத்துக்குரியலான மரீனோ மாறியிருந்த நிலையில் அவருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுள்ளதால் திசைதிருப்பும் உத்தியாகவும் அமெரிக்க, சர்வதேச நிதிநிறுவன அலுவலர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காகவும் அசான்ஜைக் கைவிட்டுள்ளார் மரீனோ.
வேட்டையாடப்படும் விக்கிலீக்ஸ்
நீண்டகாலமாகவே விக்கிலீக்ஸிற்கு ஆதரவாகச் செயற்படுவர்கள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வந்துள்ளனர். அமெரிக்காவும் ஏனைய அரசுகளும் ஏதாவது ஒரு வகையில் விக்கிலீக்ஸை முடக்கிவிட தொடர்ந்து முயன்று வந்துள்ளது. அவ்வகையில் கருத்துருமையின் சின்னமாக விக்லீக்ஸ் மாறியுள்ளது.
அசான்ஜின் நெருங்கிய நண்பரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான ஆர்யென் காம்புயிஸ் (Arjien Kamphuis) கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் நோர்வேயில் காணாமல் போனார். நெதர்லாந்து நாட்டவரான ஆர்யென் விடுமுறைக்காக நோர்வேயில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போனார். இதுவரை அவர்குறித்த எதுவித தகவலும் கிடைக்கவில்லை.
இதேபோல அசான்ஜின் இன்னொரு நண்பரான ஒலே பினி ஈக்குவடோரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுவீட நாட்டு கணிணி வல்லுரான ஓலே ஈக்குவடோரிய ஜனாதிபதியை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.
அதிகாரத்துக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து வந்தவண்ணமே உள்ளன. அன்று அடிமைகளின் விடுதலைக்குக் குரல்கொடுத்த ஸ்பார்ட்டகஸ் முதல் ஸ்னோடன் வரை மனிதகுலத்தின் விடுதலைக்கான குரல்கள் வரலாறெங்கும் ஒலித்து வந்துள்ளன. சில கைதுகளோ காணாமல் செய்தல்களோ அக்குரல்களை அடக்காது. அடக்கப்படும் ஒவ்வொரு குரலுக்கும் துணையாக ஆயிரம் குரல்கள் எழும்.