அரசியல்உலகம்

விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களங்கள்

மண்ணில் ஆடும் ஆட்டங்கள் போதாதென்று விண்ணிலும் அதற்கான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. மண்ணில் தனது ஆதிக்கத்தை இழப்போர் விண்ணிலாவது தமது ஆதிக்கத்தைத் தக்கவைக்க முனைகின்றனர். உலகம் பட்டினியில் தவிக்கையில் மிகுந்த பொருட்செலவில் விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி தொடங்கியுள்ளது. மண்ணை வெற்றி கொண்ட மனிதன் விண்ணையும் வெற்றி கொள்வான் என்ற பெருமைப் பேச்சுக்களுடன் இந்தப் போட்டி அரங்கேறுகிறது. கேள்வி யாதெனில் நாம் மண்ணை வெற்றி கொண்டோமா என்பதுதான். இன்று நாம் வாழும் பூமி நமது எதிர்கால சந்ததியினர் வாழ இயலாத இடமாக மாறியிருக்கிறதே. இதைத் தான் நாம் வெற்றி என்று கொண்டாடுகிறோமா?

இம்மாதம் 2ம் திகதி நிலவில் ஆய்வு விண்கலத்தை தரை இறக்கிய மூன்றாவது நாடு என்கிற பெருமையை சீனா அடைந்தது. இதில் முக்கியமானது யாதெனில், சீனா வழக்கமான நிலவில் பகுதியை எட்டாமல் அதன் முதுகில், அதாவது சந்திரனின் இருண்ட பக்கம் என்று அழைக்கப்படும் பகுதியில் தனது விண்கலத்தைத் தரையிறக்கி உள்ளது. இந்த பகுதியை அமெரிக்கா உட்பட எந்தவொரு நாடும் தொட்டது இல்லை. இதுவே முதல் முறை என்பதும், இது ஒரு தொழில்நுட்ப சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த 17ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “அடுத்த கட்டப் போருக்கான களம் விண்வெளியே என்பதை நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அதற்குத் தயாராகவும் இருக்கிறோம். அமெரிக்க இராணுவத்தின் ஒருபகுதியாக நாம் விண்வெளிப் பாதுகாப்புப் பிரிவையும் உருவாக்குவோம். ஆமெரிக்காவின் பாதுகாப்பே பிரதானமானது. அவ்வகையில் அடுத்தாண்டு வரவுசெலவுத்திட்டத்தில் விண்வெளி சார் ஏவுகணைப் பாதுகாப்பு வலையத் தொழிநுட்பத்தில் (space-based missile defence layer technology) பாரியளவு முதலீடு செய்வோம்” என்று அறிவித்தார்.

இவை இன்னொரு விண்வெளிப் போட்டிக்கான களத்தை உருவாக்கியுள்ளன. இப்பின்னணியில் இதன் வரலாற்றையும் சீனாவின் வளர்ச்சியையும் ஒருங்கே நோக்க வேண்டியுள்ளது. நிலவில் தரை இறங்கிய சீனாவின் சேன்ஜ் 4 விண்கலம் சீனாவின் விண்வெளி வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள பெரும் வல்லரசுகளுக்கிடையில் பறை சாற்றியுள்ளது. சீனாவின் விண்வெளி சார் வளர்ச்சி அமெரிக்காவிற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக சீனாவின் முதிர்ச்சியடைந்து வரும் அதன் விண்வெளி நிகழ்ச்சித்திட்டம் அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனக் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கப் பாதுகாப்புக் கொள்கைவகுப்பாளர்கள் தொடர்ந்து கூறிவந்துள்ளார்கள்.

விண்வெளிப்போட்டி: நினைவுகூர்தல்
இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து தொடங்கிய அமெரிக்காவும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான கெடுபிடிப்போரின் ஒரு அம்சமாக விண்வெளிப்போட்டி இருந்தது. 1950களின் இறுதிப்பகுதியில் முனைப்புப் பெற்ற இப்போட்டியானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளின் உருவாக்கத்துடன் புதிய கட்டத்தை அடைந்தது. 1957ம் ஆண்டு சோவியத் யூனியன் பூமியிலிருந்து முதலாவது விண்கலமான ஸ்புட்னிக்-1 யை விண்வெளிக்கு ஏவியது. ஆதைத் தொடர்ந்து சோவியத் யூனியன் ஸ்புட்னிக்-2 விண்கலத்தில் லைகா என்ற நாயை அனுப்பி விண்வெளியை வெற்றிகொள்வதில் புதிய சாதiனையை நிகழ்த்தியது.

இந்த விண்வெளிப் போட்டியின் புதிய காலகட்டம் 1961ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி நிகழ்ந்தது. சோவியத் யூனியனின் வொஸ்டாக் 1 விண்கலத்தில் பயணம் செய்த யூரி ககாரின் 108 நிமிடங்கள் உலகைச் சுற்றிவந்து சாதனை படைத்தார். இது விண்வெளி அறிவியலின் மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இவையனைத்தும் விண்வெளி அறிவியலில்ன சோவியத் யூனியன் முன்னோடியாகவும் முன்னிலையில் இருப்பதையும் காட்டி நின்றன. அவை இத்துடன் நிற்கவில்லை. பூமியை ஒரே நேரத்தில் இரு விண்கலங்கள் சுற்றிவரும் இணைந்த விண்வெளி முயற்சி, இரு மனிதர்கள் முதன் முதலாக ஒன்றாக விண்வெளியில் பறந்தது, விண்வெளியின் முதல் பெண்ணாக வாலென்டினா டெர்ஷ்கோவா பறந்தது, முதல் முதலில் விண்வெளிவீரர் அலெக்சி லியோநோவ் விண்வெளியில் நடந்தது என்று சோவியத்தின் சாதனைகள் தொடர்ந்தன.

யூரி ககாரின் விண்வெளிக்குப் பயணித்ததையடுத்து அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கர்கள் நிலவில் கால்பதிப்பர் என்று சூளுரைத்தார். 1959இலேயே சோவியத்தின் ஆளில்லா லூனர் 2 விண்கலம் நிலவிற்கு சென்ற முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது. 1969இல் அமெரிக்காவின் அப்பலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால் பதித்த முதல் மனிதரானார்.

இதேவேளை உண்மையில் அவ்வாறு நீல் ஆம்ஸ்ரோங் கால் பதிக்கவில்லை. விண்வெளிப் போட்டியில் அமெரிக்கா வெல்வதற்காகத் திட்டமிட்டு இவ்வாறானவொரு நாடகத்தை நிகழ்த்தியது என்று வலுவான ஆதாரங்களுடன் மாற்றுக்கருத்துக்கள் இன்றுவரை வைக்கப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கத் திரைத்துறையின் சில முக்கிய நபர்களின் உதவியுடன் நிலவு போன்றதொரு அமைப்பு உருவாக்கப்பட்டு அங்கு படம்பிடிக்கப்பட்டதே இந்த நிலவில் தரையிறங்கிய நிகழ்வு என்று கடந்த 50 வருடங்களாகச் சொல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹொலிவுட் படப்பிடிப்பாளரான மக்ஸ் கொன்ராட் தனது 81வது வயதில் வழங்கிய செவ்வியில் தான் நிலவுத் தரையிறக்கப் படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும் உலகின் மிகப்பெரிய பொய்யைக் கட்டமைத்ததில் தான் பங்கேற்றது குறித்து தான் பெருமைகொள்ளவில்லை என்றும் தான் மரணிக்கமுன் இவ்வுண்மையைப் பதிவுசெய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நிலவில் அமெரிக்காவின் தரையிறக்கம் விண்வெளிப்போட்டியில் அமெரிக்காவுக்கு வெற்றியாகக் கருதப்படுகிறது. 1970களின் இறுதிப்பகுதியில் அமெரிக்க-சோவியத் விண்வெளிப் போட்டி ஓரளவு தணிந்து முடிவுக்கு வந்தது என்று சொல்லலாம். சோவியத்தின் சரிவு 1970களின் இறுதிப்பகுதியில் தொடங்கியதுதொட்டு சோவியத்தின் விண்வெளி நிகழ்ச்சித்திட்டம் மெதுமெதுவாக அஸ்தமித்தது.

சீனாவின் விண்வெளி நிகழ்ச்சித் திட்டம்
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் அடுத்தபடியாக கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை 1950களிலேயே சீனா தயாரித்தது. இருந்தபோதும் சீனா இந்த விண்வெளிப் போட்டியில் பங்கெடுக்கவில்லை. 1970இல் தனது முதலாவது ஆளில்லா விண்கலத்தை செலுத்தியபோதும் கூட சீனாவின் விண்வெளி நிகழ்ச்சித் திட்டம் வேகம் குறைந்ததாக இருந்தது. 1978இல் சீனாவின் விண்வெளி சார் கொள்கைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சீனாவின் தலைவர் டெங் ஜியாவோபிங்: ‘ஒரு வளரும் நாடாக, சீனா நிகழ்ந்து கொண்டிருக்கும் விண்வெளி போட்டியில் பங்கேற்காது. அதற்கு பதிலாக சீனா, விண்வெளி வெளியீட்டு வாகனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களில் – தகவல்தொடர்புகள், ரிமோட் சென்சிங் மற்றும் வானியற்பியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்;’ என்றார்.

2003ம் ஆண்டே சீனா தனது முதல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்து வர்த்தக நோக்கங்களுக்காக விண்வெளியை பயன்படுத்தும் நோக்கம் குறித்தே கவனம் செலுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் சீனா தனது விண்வெளி நிகழ்ச்சித் திட்டத்தில் மெதுவாகவும் உறுதியாகவும் நிதானத்துடனும் முன்னேறியுள்ளது. இது இன்று மிகப் பெரிய ஆச்சரியமாக அதன் போட்டி நாடுகளால் பார்க்கப்படுகிறது.

இம்மாதம் நிலவில் இறங்கிய சீனாவின் சாங்-4 (Chang’e-4) விண்கலமானது இதுவரை யாரும் செல்லாத சந்திரனின் இருண்ட பக்கத்தில் தரையிறங்கியது. சந்திரனின் மறுபக்கத்தின் நெருக்கமான முதல் புகைப்படத்தை எடுத்ததற்கான புகழ் இந்த சாங்-4யை சாருகிறது. இந்த நிலவுப் பயணத்தில் முக்கியத்துவம் யாதெனில் இவ்விண்கலம், சந்திரனின் குறைந்த புவியீர்ப்பில் விதைகள் தளிர் விடுமா மற்றும் பட்டுப்புழு முட்டைகள் பொரிக்கப்படுமா என்பவற்றை ஆராயும் உயிரியல் சோதனைக் கருவிகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி ஆய்வில் சீனா அடுத்த கட்டத்துக்கு நகர்வது தெளிவாகிறது.

நிறைவாக
சீனா அறிவியல் ரீதியாக அடுத்த கட்டத்தை நோக்கி விண்வெளிப் பயணங்களை நகர்த்தியுள்ளது. நீண்டகால நோக்கில் பல முக்கிய திட்டங்களை சீனா கொண்டுள்ளது. குறிப்பாக 2022 க்குள், சீனா தனது மூன்றாவது விண்வெளி நிலையத்தை முழு செயல்பாட்டுக்கு கொண்டுவருவது, 2025இல் சந்திரனில் ஒரு கட்டிடத்திற்கான அடித்தளம் அமைக்கவும், மேலும் 2030 க்குள் மனிதர்களை அங்கு கொண்டு சேர்க்கவும், செவ்வாய்க்கு ஆய்வுக் கருவிகளை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. சீன தேசிய விண்வெளி நிர்வாகத்திற்கான வரவு-செலவுத் திட்டம் இதுவரை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனதான நாசாவை விட கணிசமானளவு குறைவானதாகவே உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. சீனா விண்வெளியை அறிவியலின் முன்னேற்றகரமான திசைவழி நோக்கி நகர்த்துகையில் அமெரிக்கா விண்வெளியை பாதுகாப்புக்கான களமாக இராணுவத்திற்குரியதாக மாற்றி வருகிறது. இதனாலேயே மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்தும் ‘விண்வெளிப்போர்’ (space wars) என்ற சொற்பதத்ததைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். இது இயலாமையின் வெளிப்பாடன்றி வேறல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *