கனவு துரத்தும் வாழ்வு: காதற் கனவு
பச்சை வயற்பரப்பில் தலையுயர்த்தும் வரம்புகளில்
கடற்கரையின் ஓரத்துப் பரந்த மணல் வெளியதனில்
என் வீட்டில் நிற்கும் பனை வடலி ஓரத்தில்
உன் வீட்டில் விரிந்து நிற்கும் மாமரத்தின் விழு நிழலில்
காற்று மட்டும் இருவரையும் உரசிக் கடந்திட்ட
அந்தப் பொழுதுகளை மீள நினைக்கின்றேன்
காதல் ததும்பும் அந்தக்
கட்டிளமைப் பருவத்தில்
கோடு தாண்டி வந்தெங்கள்
உறவுக்குக் கோடு கிழித்தாய் – நீ
கோடு தாண்டி வந்தாய்
என்பதற்காய் மட்டும் – நான்
எங்கள் உறவில்
கோடு கடப்பதில்லை என்று முடிவெடுத்தேன்
ஊரில் இன்று நீயுமில்லை
நானுமில்லை – அதைவிடவும்
இன்று
நாமிருந்த ஊருமில்லை
நகரப் பெருவெளியின்
பிரம்மாண்டத்தில்
அதன் அவசரத்தில்
எங்கள் காதல்
இன்னமும் உயிர்ப்புடன்
இருக்கிறதா என்றென்னை
நான் கேட்டுக்கொள்கிறேன்
காலை 8 மணி தொட்டு
மாலை 5 மணிவரையும்
வேலைக்கு நான் போவேன்
மதியம் 1 மணி தொட்டு
இரவு மணி 10 வரை
பணிநேரம் உன்னுடையது
கண்கள் சொருகி – எனது
முதலாஞ் சாமம் அரைவாசி முடிகையில்
வீடு திரும்புகிறாய் நீ
கண்ணயர்ந்து
உனது இரண்டாஞ் சாமம்
தொடங்குகையில்
வேலைக்குக் கிளம்புகிறேன் நான்
உனது உணவு வேளையும்
எனது உணவு வேளையும் வேறு
உனது பொழுதுபோக்கு நேரங்களும்
எனது பொழுதுபோக்கு நேரங்களும் வேறு
உனது இரவு எனது பகல்
எனது இரவு உனது பகல்
சனிக்கிழமைகளில் பலசோலி எனக்கு
காலை புறப்பட்டு மாலையே வீடு மீள்வேன்
எனக்காய் மதிய உணவு சமைத்து
வழிமேல் விழி வைத்து வரும்வரை
சலிப்பில்லாமல் காத்திருப்பாய்
வீடு திரும்புகையில்
தெருவோரக் கடையில்
மதிய உணவை உண்டுவிட்டதாக
எந்தவித குற்றவுணவுமற்று
நான் சொல்வேன்
சமைத்துவைத்துக் காத்திருப்பதாக நீ சொல்ல
யார் காத்திருக்கச் சொன்னதாக நான் சொல்ல
கடைச் சாப்பாடு உடம்புக்கு ஆகாது என்று நீ இடித்துரைக்க
பதில் இல்லாமல் தடுமாறித்;
தப்பிப்பதற்காய்
உனது சமையலிலும் கடைச்சாப்பாடு பிழையில்லை என்று
பதிலுரைத்து சண்டைக்கு வழி சமைப்பேன்
இந்தச் சண்டையில் நன்மையடைபவன்
விரைவுணவுக் கடைக்காரன் தான்
எங்கள் இரவுணவு யாரோ ஒரு
விரைவுணவுக் கடைக்காரன் உபயம்
ஞாயிற்றுக்கிழமையில் முன்தூங்கி பின்னெழும்
பழக்கமெனக்குண்டு – நீ
முன்னெழுந்து
வீட்டு வேலைகள் முடித்து
என் பங்கு வேலைகளை
எனக்கு நினைவூட்டுவதற்காய்
என்னை எழுப்புவாய்
சினத்தபடி கண்விழிப்பேன் நான்
ஆனால்
அன்றைய நாளே எனக்கு விடியாது
எங்கள் ஒவ்வொரு கிழமையும்
இவ்வாறே கழியும்
வீட்டில் உணவுசமைத்து
ஆற அமர இருந்து
கதைபேசிக் கதைபேசிக்
உணவுண்ட தருணங்கள்
அரியன
அதற்காய்
ஏங்கும் தருணங்கள் அதிகம்
பல சமயம்;
விடுமுறை எடுத்து வெளியே
செல்ல முடிவெடுப்போம்
எங்கே செல்வதென்று
நீள உரையாடி – இறுதியில்
எனக்கு விடுமுறை கிடைத்தால்
உனக்குக் கிடைக்காது
உனக்கு விடுமுறை கிடைத்தால்
எனக்குக் கிடைக்காது
விடுமுறை பற்றிய நீண்ட உரையாடலே
பல சமயங்களில் எங்கள்
விடுமுறையாகிறது
“எனக்காக ஒரு நாளேனும் நீங்கள்
விடுமுறை எடுத்ததுண்டா” – என
நீ கரித்துக் கொட்டுகிறாய்
***
வாழ்க்கைச் சக்கரத்தை
சுழற்றிச் சுழற்றி முன்னெம்பி
நானும் ஓடுகிறேன்
நீயும் ஒடுகிறாய்
கையில் உள்ள பணத்தால் பயனேது
நீயும் மகிழ்வாயில்லை
நானும் மகிழ்வாயில்லை
ஊர் மீள்வதே ஒரே வழி என
முடிவு செய்தபோது
ஊரே இல்லாமல் போய்விட்டது.
பச்சை வயல்வெளிகளும்
என் வீட்டுப் பனை வடலி வளர்ந்தும்
உன் வீட்டு மாமரம் மேலும் சடைத்தும்
நிற்கின்றன
போரின் துயரவடுக்களைத் தாங்கியபடி
ஆனால்
என் அப்புவோ ஆச்சியோ
உன் மாமனோ மாமியோ
எங்கள் பள்ளித் தோழர்களோ
யாருமில்லை
ஊர் மட்டும்
பார ஊர்திகளைச் சுமக்கும்
பெருவீதிகளைச் சுமந்தபடி
அவர்களது வார்த்தைகளில்
“அபிவிருத்தி” காணும்
ஆச்சியும் அப்புவும்
மாமாவும் மாமியும்
பனிபொழியும் கனத்த பொழுதுகளில்
வீட்டுக்குள் இருந்தபடி
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பள்ளித் தோழர்கள்
புலம்பெயர் வாழ்வில்
18 மணிநேரம் ஓடி ஓடி உழைக்கிறார்கள்
மாடாய்த் தேய்கிறார்கள்
ஊர் திரும்பவும் முடியாது
புலம்பெயரவும் விரும்பாது
திரிசங்கு நிலையில்
வாழ்க்கை
***
நீண்ட உறக்கத்தின் முடிவில்
கண்விழித்து எழுந்தபோது
கண்டுகொண்டேன் – கண்டது
கனவென்று
இப்படியொரு வாழ்க்கை எனக்கு
அமையுமோவென்று அஞ்சிக்
கண்ட கனவை அப்பாவிடம் சொன்னேன்
அப்பா சொன்னார்:
“நடுஉச்சியில நல்லா தேசிக்காய் தேய்ச்சுக்குளி
எல்லாஞ் சரியாகும்” என்று
ஆனால் நான் இன்னமும்
கனவுகளை அஞ்சுகிறேன்
சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தால் மாதந்தோறும் நடாத்தப்படுகின்ற பாடிப்பறை நிகழ்வின் 25வது நிகழ்வு இரண்டாம் ஆண்டுப் பாடிப்பறையில் 19-09-2013 அன்று வாசிக்கப்பட்ட கவிதை