இலங்கைத் தமிழ் இலக்கியம்
சமகால ஈழத் தமிழிலக்கியத்தின் தொடக்கங்கள் பற்றிக் கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. எனினும் அதனுடைய முக்கியமான திருப்புமுனை அது தன்னை ஈழத்துத் தமிழ் இலக்கியமென்று தெளிவாக அடையாளங் காட்டியமையாகும்.
ஈழத் தமிழ் இலக்கியம் சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தினளவில் நவீனத்துவத்தை உள்வாங்கத் தொடங்கி விட்டது. தமிழ் மொழியின் நவீனத்துவம் நோக்கிய பெயர்வு, அதற்கு முன்னரே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மிஷனரிமாரின் கல்வி முயற்சிகளின் தொடர்ச்சியாக நிகழ்ந்தது எனலாம். ஆறுமுக நாவலர் அதன் முக்கியமானதொரு கருவியாகச் செயற்பட்டார். எனினுந், தமிழ்ப் புலமை மரபு மொழியிலும் அதை விடத் தீவிரமாகப் பேசுபொருளிலும் புதியன புகுதலை விரும்பாததாகவே இருந்தது என்பதை இங்கு சுட்டல் தகும்.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் சார்ந்து வெளியான நூல்களில் தேசிய கலை இலக்கியப் பேரவை 1997ம் ஆண்டு வெளியிட்ட பேராசிரியர் சி. தில்லைநாதன் எழுதிய “இலங்கைத் தமிழ் இலக்கியம்” முக்கியமானது. இலங்கையின் முக்கியமான தமிழ்ப் படைப்பாளிகள் படைப்புக்கள் சார்ந்தும் பிறவும் என பேராசிரியர் தில்லைநாதன் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பாக இப்புத்தகம் உள்ளது.
ஈழத்துப் பூதந்தேவனார், ஈழத்தில் நடந்த இலக்கியச் சர்ச்சைகள், தட்சிண கைலாச புராணம், உரைநடை வளர்ச்சி, சிறுகதை வளர்ச்சி என இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் இயங்குபரப்பின் பல்வேறுபட்ட அம்சங்களையும் இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது.
இதில் அடங்கியுள்ள கட்டுரைகளில் முன்னுரையாக எழுதப்பட்டுள்ள ‘இலங்கைத் தமிழ் இலக்கியம் – ஒரு குறிப்பு’ என்ற கட்டுரை இலங்கைத் தமிழ் இலக்கியம் தொடர்பிலான குறுக்கு வெட்டுப்பரப்பைத் தருகிறது. ‘ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் – ஒரு பொது மதிப்பீடு’ என்ற கட்டுரையும் ‘மலையகமும் தமிழ் இலக்கியமும்’ என்ற கட்டுரையும் அவதானத்துக்குரியவை.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் வழித் தடங்களைக் கோடிட்டுக் காட்டும் ஒரு புத்தகம் என்றவகையில் தமிழ் இலக்கியச் சூழலில் இது வாசிக்கப் பயனுள்ளது.