டிஜிட்டல் உலகில் நூலகங்களும் ஆவணக்காப்பகங்களும்
வரலாற்றைத் தீர்மானிப்பதில் எழுதுவதில் ஆவணங்களின் பங்கு பிரதானமானது. அவ்வகையில் நூலகங்களும் ஆவணக்காப்பகங்களும் பிரதானமானவை. இல்லாவிட்டால் வரலாறெங்கும் நூலகங்கள் குறிவைத்து எரிக்கப்பட்டிருக்கமாட்டாது. மிக அண்மையில் வெளியான Libraries and Archives in the Digital Age (டிஜிட்டல் உலகில் நூலகங்களும் ஆவணக்காப்பகங்களும்) என்ற புத்தகம் நவீன டிஜிட்டல் உலகில் ஆவணப்படுத்தலின் எதிர்காலம் குறித்த கேள்விகள் ஆராய்கிறது.
இந்தப் புத்தகத்தின் அடித்தளம் இரண்டு அடிப்படைகளில் அமைகிறது. ஓன்று, தொழிநுட்பத்தினதும் தகவல் தொடர்பாடலினதும் வளர்ச்சி தகவல்களை பல்வேறு வழிகளில் பரிமாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதை ஆவணப்படுத்துவது எதைத் தவிர்ப்பது என்பது மிகப்பெரிய சவால். அதீத தகவற்திரட்சி (Information overload) இதற்குப் பிரதான காரணமாகிறது. இரண்டு, இன்று ஆவணப்படுத்தும் தொழிநுட்பம் வளர்ந்துள்ள நிலையில் எவற்றை மின்வழி ஆவணமாக்குவது எதை தொடர்ந்தும் நூல் வடிவில் வைத்திருப்பது என்பது இன்னொரு கேள்வியாகிறது. இந்த முடிவை நூலகர்களும் ஆவணக் காப்பகர்களும் எவ்வாறு எட்டுகிறார்கள். இது அறிவாராய்ச்சியில் மற்றும் நன்னெறி சார் வினாக்களையும் எழுப்புகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தக் கேள்விகளை நடைமுறைசார் அடிப்படையில் செயற்பாட்டாளர்களின் அனுபங்களின் ஊடு இந்தப் புத்தகம் ஆராய்கிறது. பெறுவழி (Access), பாதுகாத்தலும் சமூகமும் (Preservation and Community), ஆவணமாக்கலின் அரசியல் (Archival Politics), டிஜிட்டல் நடைமுறைகள்(Digital Practice) ஆகிய நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப்புத்தகம் வலியுறுத்திச் செல்கின்ற இன்னொரு பிரதானமான செய்தி, எவ்வாறு அறிவைப் பரவலாக்குவது, எவ்வாறு அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வது. பொருளாதார விதிகளுக்கு அப்பாற்பட்டு எவ்வாறு அறிவையும் தகவல்களையும் எவ்வாறு பொதுமைப்படுத்துவது போன்ற வினாக்களுக்கான பதிலையும் புதிய சாத்தியங்களையும் இது காட்டிச் செல்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு: https://www.palgrave.com/gp/book/9783030333720