தமிழில் தரிப்புக்குறிகள்
தரிப்புக்குறிகள் தமிழ்மொழிக்குரியதல்ல. ஆனால் இன்று தமிழ்மொழியின் எழுத்துச் செயற்பாட்டில் தவிர்க்கவியலாத இடத்தை தரிப்புக்குறிகள் பெற்றுள்ளன. பழந்தமிழுக்குத் தரிப்புக் குறிகள் தேவைப்படவில்லை. இன்றுந் தரிப்புக் குறிகளின் துணையின்றித் தெளிவாகத் தமிழில் எழுத முடியும். ஆயினும் தரிப்புக் குறிகளின் துணையின்றித் தமிழில் எழுதப்படும் எல்லா விஷயங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது.
தமிழ் அயலிலிருந்து பல விஷயங்களைச் சுவீகரித்துள்ளது. இவற்றின் விளைவாக அதன் ஆற்றல் மிகவும் அதிகரித்தது. சிக்கலான புதிய வாக்கிய அமைப்புக்கள் தமிழிற் சாத்தியமாயின. சிக்கலான புதிய வாக்கிய அமைப்புக்கள் கருத்துக் குழப்பத்திற்குக் காரணமாக இடமேற்பட்டது. இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்கத் தரிப்புக்குறிகள் தமிழுக்கும் அவசியமாயின. இத் தரிப்புக்குறிகள் தமிழர் தமிழுக்காகத் தோற்றுவித்தனவல்ல. நவீனத்துவம் தமிழுக்கு அறிமுகஞ் செய்த பலவற்றைப் போன்று தரிப்புக்குறிகளும் ஆங்கில வாயிலாகவே தமிழை வந்தடைந்தன.
சி.சிவசேகரம் எழுதிய “தமிழில் தரிப்புக்குறிகளின் பயன்பாடு” என்ற நூல் தமிழில் தரிப்புக்குறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குகிறது.
ஆங்கில மூலம் நாமறிந்த தரிப்புக்குறிகளை ஆங்கில நடைமுறையையொட்டியே பயன்படுத்த முற்பட்டோம். ஆங்கில எழுத்திற் தரிப்புக்குறிகள் எவ்வாறு பயன்படக் கூடும் என்பதற்குத் தெளிவான வழிகாட்டல்கள் உண்டு. பெருவாரியான ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வழிகாட்டல்கள் குறிப்பிடத்தக்க ஒருமையுடன் பயன்படுகின்றன. இவ்வகையில் தமிழில் தரிப்புக்குறிகளைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை வழிகாட்டியாக இந்நூல் இருக்கிறது.
தமிழில் எழுதும் அனைவருக்கும் தமிழ் மொழிக்கு அந்நியமான தரிப்புக்குறிகளை எங்கே எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்திருப்பது அவசியம். குறிப்பாக சிறுவர்கள், பாடசாலை மாணவர்களிடையே இது தொடர்பிலான தெளிவு ஏற்படுத்தப்படுகிறபோது தமிழ் வளமான மொழியாக நின்று நிலைக்கும்.
ஒருமொழி சமுதாய வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கத் தவறும் போது மரணத்தை எதிர்நோக்குகிறது. தமிழ்மொழியும் அதற்கு விலக்கல்ல. அதேவேளை ஐயந்திரிபற்ற மொழிப்பாவனை மொழியின் நின்றுநிலைப்பிற்கு பிரதானமானது. ஆவ்வகையில் தமிழை மொழியாகப் பயன்படுத்தும் அனைவரும் வாசித்துப் பயன்பெறவேண்டிய நூலிது.