மண்ணில் தொலைந்த மனது தேடி
நடந்து முடிந்தவைகளைத் திரும்பிப் பார்த்தலைச் சாத்தியமாக்குபவை நடந்துமுடிந்தவை பற்றிய பதிவுகளே. ஈழத்தமிழ்ச் சூழலில் இது பதிவுகள் அழியும் காலம். ஆதலால் முன்னெப்போதையும் விட பதிவுகள் பற்றிய அறிதல் தேவையானதாகிறது.
1980களிலும் 1990களிலும் யாழ்ப்பாணச் சூழலை எழுத்துக்களின் ஊடு தரிசிப்பது அலாதியானது. அதிலும் அதை இலக்கிய வடிவங்களின் ஊடு காணக்கிடைக்கும் போது அது தரும் அனுபவம் வித்தியாசமானது. அக்காலத்தை தம் எழுத்துக்களின் ஊடு தந்தவர்கள் ஊழிக்காலத்தை உளியில் செதுக்கியவர்கள்.
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடான கவிஞர் சடாகோபனின் “மண்ணில் தொலைந்த மனது தேடி” என்ற கவிதைத் தொகுதி இவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
யாழ்ப்பாண மண்ணின் போர்க்கால அல்லல்கள் பற்றிய ஒரு பதிவான இக்கவிதைத் தொகுதி அரச அடக்குமுறைகளுக்கும் அதிகார அடக்குமுறைக்கும் எதிராக ஓங்கி ஒலிக்கும் ஒரு குரலின் வெளிப்பாடு எனலாம்.
புதிய இளந்தலைமுறையினர் தங்கள் அண்ணன்மார் அக்காமார் வாழ்ந்த காலத்தைத் தரிசிக்க விரும்பின் இத்தொகுதியில் உள்ள கவிதைகளை வாசிக்கலாம். இக்கவிதைகளில் காணக்கிடைக்கின்ற இயற்கைச் சூழல் பற்றிய அவதானமும் பதிவும் முக்கியமானவை. ‘பச்சை வயற்பரப்பில் பால் நிலவு இறங்கிவந்து இச்சை தீர்த்துக் கொள்ளும் இன்பப் பொழுதுகளில்’ போன்ற வரிகள் தொகுதிக்கு பலம் சேர்க்கின்றன.
யாழ் மண்ணின் பண்பாட்டுக் கூறுகளை தன் கவிவரிகளின் ஊடு தலைமுறை தாண்டி தக்கவைக்கும் முயற்சியை இக்கவிதைகளில் காணலாம். துமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறையினரின் வாழ்க்கையை வாழ்வியல் சூழலை அக்காலத்தின் நெருக்கடிகளை தன் அனுபங்களின் ஊடும் அவதானங்கள் மூலமும் கவிவரிகளில் தந்துள்ளார் கவிஞர் சடாகோபன்.
சில படைப்புகளின் பெறுமதி அவை வெளியிடப்படும் காலத்திற்கு பலகாலம் பின்னே உணரப்படுகிறது. இத்தொகுதி வெளியிடப்பட்டு ஒரு தசாப்தத்துக்கு மேலாகிறது. ஆனால் கவிதைகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அவ்வகையில் காலத்தின் கையில் கரைந்து போகாத, ஒரு காலத்தின் பிரதிபலிப்பாக இப்புத்தகம் மிளிர்கிறது.