மாறும் காலநிலையில் நாட்காட்டிகளின் எதிர்காலம்
நோர்வே பெர்கன் பல்கலைக்கழகத்தின் காலநிலைமாற்றம் மற்றும் சக்தி நிலைமாற்றத்துக்கான நிலையம் (Centre for Climate and Energy Transformation -CET) கடந்த செப்டம்பர் மாதம் 5ம் திகதி மாறும் காலநிலைகளில் நாட்காட்டிகளின் பாவனை பற்றிய உரையாடல் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது.
இதில் பிரதான உரையை நிகழ்த்திய ஆய்வாளரான ஸ்கொட் பிரீமர் (Scott Bremer) காலநிலை மாற்றங்கள் நாட்காட்டிகளின் பாவனை குறித்த புதிய கேள்விகளை உருவாக்கியுள்ளன என்பதை உதாரணங்கனுடன் விளக்கினார்.
குறிப்பாக விவசாயிகள் நாட்காட்டிகளின் அடிப்படையிலேயே பயிர் செய்கிறார்கள். இதை அவர்கள் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறார்கள். ஆனால் இப்போது காலங்கள் வேகமாக மாறி வருகின்றன. முன்பு மழை பெய்த காலத்தில் இப்போது மழை பெய்வதில்லை. முன்புபோல ஒருசீராகக் காலநிலை இல்லை. திட்டமிடவோ முன்கூட்டியே எதிர்வுகூறவோ இயலாத நிலையில் இருக்கிறார்கள்.
இப்பிரச்சனை தனியே விவசாயிகளுக்கு உரியதல்ல. கோடை விடுமுறை என்பதே மேற்குலக நாடுகளில் கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் முன்புபோல் கோடையை நாட்காட்டியின் அடிப்படையில் வகுக்க முடிவதில்லை.
நியூசிலாந்தில் பாடசாலைகளின் விடுமுறைக்காலத்தை மாற்றும் கோரிக்கை வலுப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களின் விளைவால் இப்போது பாடசாலைக் காலம் மிகுந்த வெப்பநிலை உள்ளதாக இருக்கிறது. இதற்கு உகந்தனவாய் பாடசாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் அதிக வெப்பநிலையால் அவதிப்படுவதோடு வகுப்புகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாறியுள்ள காலநிலைக்கேற்ப பாடசாலைக் கோடை விடுமுறையை மாற்றும்படி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் கோருகிறார்கள்.
இது மிகப் பெரிய பொருளாதார மற்றும் நிர்வாகச் சிக்கலை உருவாக்கியுள்ளது. சுற்றுலாத்துறையினரின் நாட்காட்டியின் அடிப்படையிலேயே செயற்படுவதால் இப்போது உள்ள நாட்காட்டியை மாற்றுவது அவர்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கருதுகிறார்கள். இதேவேளை பிள்ளைகளுக்கு கோடை விடுமுறை வழங்கும் போது அக்காலப்பகுதியில் பெற்றோருக்கும் விடுமுறை அவசியமாகிறது. எனவே நாட்டின் முழுச் செயற்பாடுகளுமே புதிய நாட்காட்டி முறைக்கு உட்படல் வேண்டும். இது சவாலானது.
இக்கருத்தரங்கு புதிய திசைவழிகளைக் கோடு காட்டியது.
இந்நிகழ்வு பற்றிய குறிப்புரைக்கு: https://www.uib.no/en/cet/119691/co-production-seasonal-representations-adaptive-institutions-can-we-change-ideas-seasons
இவ்வாய்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: https://www.uib.no/en/hf/117222/how-live-rapid-seasonal-change