கோடாகோகமவைக் கண்டு அஞ்சுவோர் யார்?
காலிமுகத்திடலில் போராட்டங்கள் தொடங்கி ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் அதன்மீது வன்முறை ஏவப்பட்டது. அதை மக்கள் எதிர்த்து வெற்றிகண்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டி ஏரியூட்டப்பட்டு சிதைக்கப்பட்ட கோடாகோகமவை மீள உருவாக்கி வலுபடுத்தியிருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீதான அரச வன்முறையைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் விரிவானதும் ஆழமானதுமான பார்வையை வேண்டுவன. அதேவேளை கடந்த சில நாட்களில் கோடாகோகமவைக் கண்டு அஞ்சுவோர் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல தங்களை சமூகவலைத்தளங்களின் ஊடு அம்பலப்படுத்திக் கொண்டனர். இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் கோடாகோகமவைக் கண்டு அஞ்சுகின்றன. ஏன் என்ற வினாவோடு தொடங்குவோம்.
சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை வரலாற்றில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் பாற்பட்டு பரந்துபட்ட மக்கள் எழுச்சிக்கு என்றவொரு வரலாறு கிடையாது. 1980இல் பதவியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஏவிய வன்முறை இலங்கையின் தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றை முடிவுக்குக்குக் கொண்டு வந்தது. 2012இல் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டம் 100 நாட்கள் நீடித்தாலும் வெற்றியளிக்கவில்லை. இந்தப் பின்புலத்திலேயே தன்னெழுச்சியான காலிமுகத்திடல் போராட்டத்தை நோக்க வேண்டும். இப்போராட்டம் தொழிற்சங்கப் போராட்டங்கள் போல துறைசார் கோரிக்கைகளாகவன்றி அன்றி ஜனாதிபதியையும் ராஜபக்ஷக்களையும் வீட்டுக்குப் போகக் கோருகிறது. எனவே அரசியல்வாதிகளால் வாக்குறதிகளை வழங்கி தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது போல செய்யவியலாது. இது அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் புதிய சவாலாகும்.
இது தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் என்றவகையில் அரசியற் சாயமொன்றையோ இனத்துவ மத அடையாளத்தையோ இதன்மீது வலிந்து திணிக்க முடியவில்லை. இந்தப் போராட்டம் செய்த பணிகளுள் முக்கியமானது மக்களுக்கு அரசியலறிவு ஊட்டியமையாகும். மக்கள் வாக்களிப்பதற்கு அப்பால் அரசியலைப் பற்றிப் பேசவும் சிந்திக்கவும் வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது. இனத்துவ மத மொழி அடையாளங்கள் எம்மைத் தொடர்ச்சியாகப் பிரிக்கின்றன என்ற உண்மை மெதுமெதுவாக மக்களுக்கு குறிப்பாக இளந்தலைமுறையினருக்குச் சென்று சேர்ந்தது. புதிய அரசியற் பண்பாடு ஒன்றை நோக்கிய முதலாவது அடியை அடுத்த தலைமுறையினர் எடுத்து வைத்துள்ளனர். இது யாருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதல்ல.
இந்தப் போராட்டத்தின் இன்னொரு விளைவு யாதெனில் இது மெதுமெதுவாக கிராமப்புறங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. இதன்மூலம் பரந்துபட்ட அரசியல் விழிப்புணர்வை நோக்கிய இயக்கமாக இது விரிவடைவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருந்தது. இந்த வெளியை அரசியற்கட்சிகள் கைப்பற்ற பகீரதப்பிரயத்தனத்தில் இறங்கின. குறிப்பாக அரசியல் வறுமையில் திளைக்கின்ற சஜித் பிரேமதாசாவின் ஆதரவாளர்கள் இதை தனது அரசியல் இலாபத்திற்கானதாய் மாற்ற எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அதேவேளை இந்தப் போராட்டத்தைக் கொழும்புக்குள் முடக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மட்டுமன்றி எதிர்கட்சியும் எடுத்தது.
இந்நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை காட்சிகள் அரங்கேறின. காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது வன்முறை ஏவப்பட்டபோது அருகில் கட்டுமானப் பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக உதவிக்கு வந்தார்கள். சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் ஏராளமான பொதுமக்கள் போராட்டக்காரர்களுக்காக காலிமுகத்திடலுக்கு வந்தார்கள். வன்முறையை ஏவியர்களைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இது ஒரு செய்தியை உறுதியாகச் சொன்னது. இத்தாக்குதலை மக்கள் இலங்கையர்களின் மனச்சாட்சி மீதான தாக்குதலாகப் பார்த்தார்கள். வன்முறையாளர்கள் மீது தாக்குதல் நடாத்திய பொதுமக்கள் பொதுவில் எதிரொலித்த வினா யாதெனில் ‘எங்கள் பிள்ளைகள் இரவுபகலாக அங்கு கஷ்டப்படுகிறார்கள், அவர்களைத் தாக்க ஊரிலிருந்து புறப்பட்டு வந்தாயா” என்பதே. இது பல பொதுமக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் மனதார போராட்டத்திற்கு ஆதரவை வழங்கியிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.
இது இலங்கையின் பாராளுமன்ற அரசியல் பண்பாட்டுக்கு அச்சமூட்டுகிறது. பிரதான அரசியற்கட்சிகளைக் கதிகலங்க வைத்துள்ளது. ஒருமாதகாலமாக எதையும் செய்யவியலாதாக இருக்கின்ற பாராளுமன்றத்தை கேள்விக்குட்படுத்துகிறது. போராட்டக்காரர்களால் உருவான “டீல் அரசியல்” என்ற சொற்பதம் இன்று அரசியல்வாதிகள் அனைவரையும் வேட்டையாடுகிறது. பிரதமர் பதவி விலகி 48 மணிநேரம் ஆகியபின்னரும் ஒரு தற்காலிக அரசாங்கத்தை அமைக்கத் துப்பற்ற அரசியலைக் காறி உமிழ்கிறது. எனவே இதிலிருந்து தற்காக்க சஜித்தின் ஆதரவாளர்கள் ஒருபுறமும் அரசாங்க ஆதரவாளர்கள் மறுபுறமுமாக காலிமுகத்திடல் போராட்டங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள்.
சஜித் ஆதரவாளர்கள் இப்போராட்டத்தை ஜே.வி.பி கபளீகரம் செய்துவிட்டது, நாம் ஆதரவு தரமாட்டோம் என்கிறார்கள். அவர்களது ஆதரவின்றியே இப்போராட்டம் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக நடந்தேறுகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. அதேவேளை இது வெளிநாட்டுத் தமிழரின் (டயஸ்போரா) சதி என்ற பழைய பொய்யை அரசாங்க ஆதரவாளர்கள் திரும்பச் சொல்கிறார்கள். இரண்டு தரப்பும் களநிலைமைகளை விளங்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பல ஆண்டுகளாக, ஆட்சியதிகாரத்தில் இருக்கின்றவர்கள் தொடர்ச்சியாக அதிகாரத்தை துஷ்பிரயோகத்தை ஒரு வழிமுறையாக வரன்முறையின்றிச் செய்து வந்ததை மக்கள் சகித்துள்ளார்கள். மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகள் இச்செயல்களில் ஈடுபடுவதோடு பொதுமக்கள் மீதான நம்பிக்கையை அவமதிக்கும் வெட்கக்கேடான செயற்படுவதையும் சகித்து வந்துள்ளனர். இதை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அரச அலுவலர்களும் செய்துள்ளார்கள்.
மக்கள் ஊழல்நிறைந்த பொறுப்பற்ற அரசியலானது முடிவுக்கு வரவேண்டும் என்று கோருகிறார்கள். ஆதை அனைத்து அரசியல்வாதிகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதோடு அதை சாத்தியமாக்க கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைக் கோருகிறார்கள்.
அதேவேளை பொறுப்புக்கூறல் முதன்முறையாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது செய்த செயல்களுக்கும் ஈட்டிய சொத்துக்கு மட்டுமன்றி மக்கள் கோருமிடத்து பதவி விலக்கும் அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தப் புதிய அரசியற் கற்பனையானது முற்போக்கானது மட்டுமன்றி புதிய அரசியற் பண்பாட்டுக்கு அடித்தளமாகவும் அமையக்கூடியது.
இந்தப் போராட்டக்களம் குடிமக்களின் நேரடியான பங்கேற்பிற்கான வாய்ப்பையும் திறந்த கலந்துரையாடல்களுக்கான வழிவகைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தலைவரால் கட்டுப்படுத்தப்பட்டு தனிமனிதனை மையப்படுத்திய படிநிலை நிறுவனமயமாக்கலைக் கொண்ட ஊழலுக்கு ஆளாகும் பாராளுமன்ற அரசியல் வழக்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. இது தவிர்க்கவியலாமல் பாராளுமன்ற அரசியலை மையப்படுத்திய அரசியற்கட்சிகளை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
அரசியல் அலுவல்களில் குடிமக்களின் தொடர்ச்சியான பங்கேற்பும் விமர்சனமுமே ஜனநாயகத்தை மக்கள் மயப்பட்டதாகவும் ஆரோக்கியமானதாகவும் தக்கவைக்க உதவும். இல்லாவிடின் பழைய சாக்கடைச் சுழலில் என்றென்றும் உழன்றுகொண்டிருக்க வேண்டியிருக்கும்.
இரண்டு வெவ்வேறுபட்ட அரசியற் பண்பாடுகளுக்கிடையிலான மோதல் இப்போது அரங்கேறுகிறது. ஓன்று இன்றைய பாராளுமன்ற மைய அரசியல் கட்சிகளால் செயற்பாட்டில் உள்ள வாக்கு அரசியல். மற்றையது இந்த கோடாகோகம உருவாக்கியுள்ள மக்களின் சுறுசுறுப்பான பங்கேற்புடனான அரசியல். இவை இரண்டும் சமகாலத்தில் இணைந்து செயற்படுவது மிகவும் சிரமமானது.
கடந்த அரைநூற்றாண்டுகால அரசியலின் மையம் என்பது மூன்று விடயங்களில் மையங்கொண்டது. அதிகாரத் துஷ்பிரயோகம் – ஊழலும் செல்வஞ் சேர்த்தலும் – வாடிக்கையாளர் அரசியல் (clientelistic politics). இந்த நச்சுச்சுழலை தற்போது நடைமுறையில் உள்ள அரசியற் கட்டமைப்பு தக்கவைக்கிறது. இதிலிருந்து விடுபடுவதற்கான முதலாவது அடியே இப்போது நடக்கின்ற போராட்டங்களும் அதைச் சூழும் உரையாடல்களும்.
இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியிலும்; நீட்சியிலுமே இலங்கை ஐனநாயகத்தின் எதிர்காலத்தின் ஒருபகுதி தங்கியுள்ளது. அதற்கு இப்போராட்டமானது இன்னும் வினைத்திறனுடன் செயலாற்ற வேண்டியுள்ளது. இக்கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது இலங்கை ஒரு இராணுவமையச் சர்வாதிகாரத்தின் வாசலில் நிற்பது போன்ற தோற்றமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுரை வாசிக்கப்படும்போது அது தோற்றமயக்கமாகவே இருக்கக் கடவது. இல்லாதுபோயின் சர்வாதிகாரத்திற்கெதிரான நீண்ட போராட்டத்தின் குறிகாட்டிய மாறுவதற்கான வலிமையை கோடாகோகம கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
ஐனநாயகத்துக்கான நீண்ட போராட்டத்தில் கோடாகோகம தன்னைப் பங்காளியாக்க விரும்பினால் சில விடயங்கள் குறித்த தீர்க்கமான முடிவுகளுக்கு வந்தாக வேண்டும். இப்போதுவரை சொல்லப்படுகின்ற “அரசியலற்ற அரசியல்” என்பது முரண்நகை என்பதை அவர்கள் உணரவேண்டும். இரண்டாவது இப்போராட்டம் தொடர்ந்து வளர்வதோடல்லாமல் நிலைமாற்றத்தைக் காணவேண்டும். இலங்கையின் இன்றைய பல்பரிமாண நெருக்கடிக்கு தாராண்மைவாத ஜனநாயக விழுமியங்களின் ஊடு தீர்வைக்கண்டுவிட இயலுமா. எல்லாவற்றிலும் மேலாக இது ஒரு சமூக இயக்கமாக வெற்றி கண்டிருக்கிறதா என்ற வினாவை விமர்சனபூர்வமாக அணுக வேண்டும். வெற்றிகண்டிருக்கிறதாயின் அத்தியாவசியப் பொருட்களுக்கான மக்களின் கோரிக்கைகளை சமூக இயக்கத்தின் பகுதியாகக் கொள்ளவியலுமா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கப்போவது மக்களே. முற்றுமுழுதான கட்டமைப்பு மாற்றத்திற்காக இலங்கையர்களை முழுமையாகத் திரட்டுவதற்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. அந்த நீண்டபயணத்திற்கு நாம் தயாராக இருக்கிறோமா. ஏனெனில் ஜனநாயகத்திற்கான நீண்ட பயணத்தில் ஒருபொழுது கண்ணயர்ந்தாலும் ஃபாசிசம் என்னும் கொடுந்தண்டனை எம்மை வந்து சேரும்.