அரசியல்உள்ளூர்என் கண்களில்...

புதிய ஜனாதிபதியும் பழைய இலங்கையும்

இக்கட்டுரை எழுதப்படும் போது இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்வாகியிருக்கவில்லை. ஆனால் நீங்கள் இக்கட்டுரையை வாசிக்கும் போது இலங்கைக்கான அடுத்த ஜனாதிபதி தேர்வாகியிருப்பார். ஜனாதிபதி புதிதானாலும் இலங்கை என்னமோ பழையதுதான். தெரிவாகிற ஜனாதிபதி யாராகினும் இலங்கையை குறுகிய காலத்தில் மாற்றுவதற்கான மந்திரக்கோல் எதுவுமில்லை. தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானாவை என்பதை உணர அதிககாலம் எடாது. அவை பொய் வாக்குறுதிகள் என்பதை அறிந்துதான் இலங்கையர்கள் அவர்கட்கு வாக்களித்தார்கள் என்பதுதான் உண்மை. அரசியல் தொடர்பில் ஒரு சூதாடி மனநிலை அனைவரிடமும் உண்டு. அந்த சூதாடி மனநிலை தான் இலங்கை போன்ற ஊழல் நிறைந்த “தெரிந்தவர்கள்” பயன்பெறுகின்ற அரசியல் கலாசாரம் உடைய நாட்டின் சாபக்கேடு.

யார் ஜனாதிபதியாக வரினும் சில பிரதான சவால்களை அவர்கள் எதிர்நோக்கப் போகிறார்கள். இந்தச் சவால்களை அவர்கள் எதிர்கொள்ளும் விதமே இலங்கை எவ்வளவு விரைவில் இன்னொரு அரகலயவைப் பார்க்கப் போகிறது என்பதைத் தீர்மானிக்கும். இன்றைய இலங்கையின் களநிலவரம் தவிர்க்கவியலாமல் இன்னொரு ஆண்டுக்குள் இன்னொரு அரகலயவை உருவாக்குவதற்கான அனைத்துக் காரணிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அது உருக்கொள்வதும் சிதைந்தழிவதும் அடுத்த ஆட்சியாளரின் கையிலேயே உள்ளது. தெரிவாகும் ஜனாதிபதி பல்பரிமாண நெருக்கடி மிகுந்த நாட்டையே பொறுப்பேற்கிறார்;. அரகலயவிற்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு வழமைக்குத் திரும்பியது போல ஒரு தோற்றம் ஏற்பட்டாலும் உண்மை அதுவல்ல.

புதிய ஜனாதிபதி எதிர்கொள்ளவுள்ள சவால்களில் பிரதானமானது இலங்கையின் பொருளாதாரம் பற்றியதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது என்ற தோற்றமயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இலங்கையர்கள் எத்தகைய பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு இலங்கையரும் அறிவார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, பணவீக்கம், கொள்வனவுத் திறனின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், சமூகநலத் திட்டங்களில் நிகழ்ந்துள்ள வெட்டு ஆகியன சாதாரண இலங்கை மக்களை வெகுவாகப் பாதித்துள்ளன. மேலதிகமாக கல்வி, சுகாதாரம், போக்;குவரத்து, மின்சாரம் ஆகிய துறைகளில் நிகழ்ந்துள்ள கட்டமைப்பு மாற்றங்களின் துர்விளைவுகளை மக்கள் அனுபவிக்கிறார்கள். இதை எவ்வாறு சரிசெய்வது என்பதே புதிய ஜனாதிபதியின் முன்னாள் உள்ள பிரதானமான கேள்வியாகும்.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ம் ஆண்டு 94 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து 2022இல் 76 பில்லியனாகக் குறைந்துள்ளது. 2018ம் ஆண்டு நிலைக்கு மீள்வதற்கு குறைந்தது இன்னும் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்பதே கணிப்பாகும். இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலையிலேயே இருக்கும் என்பது உறுதி. எனவே புதிய ஜனாதிபதி எந்த மாயஜாலத்தை செய்ய நினைத்தாலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொருளாதார மேம்பாடு என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை. இதை ஏற்றுக்கொள்ள இலங்கையர்கள் தயாராக இருக்கிறார்களா?

தேர்தல் பிரச்சாரங்களில் பொருளாதாரம் பற்றி எல்லோரும் பேசினார்கள். ஆனாhல் அதை நடைமுறைச்சாத்தியமாக்க வேண்டிய கடமை வெற்றி பெற்றவரையே சாருகிறது. எனவே புதிய ஜனாதிபதி அவரது பொருளாதார வாக்குறுகளை நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இயல்பானது. அது இயலாமல் போகிற போது ஏமாற்றப்பட்ட மனநிலை ஏற்படும். இது எதை நோக்கி இலங்கையர்களைத் தள்ளும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தேர்தல்களில் மட்டுமே ஆட்சியாளர்களை மாற்றிப் பழக்கப்பட்ட இலங்கைச் சமூகத்திற்குப் போராட்டம் மூலமும் ஆட்சியாளர்களை அகற்றலாம், மக்கள் வீதியில் இறங்கிப் போராடினால் மாற்றம் சாத்தியம் என்பதை இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அரகலய நிரூபித்துள்ளது. எனவே தேர்தல்களுக்குப் பிறம்பான ஆட்சி மாற்றங்களும் சாத்தியம் என்பதை இலங்கையர் அறிவர். இது புதிய ஜனாதிபதிக்குச் சவாலானதாகும். கொடுத்த வாக்குறுதிகளுக்கும் செயல்முறைக்கும் இடையிலான அதிகரிக்கும் இடைவெளி மக்களை அதிருப்தியடையச் செய்யும். இது மீண்டுமொரு முறை போராடத் தூண்டும். அதற்கு வினையூக்கிகளாகச் செயற்பட அரசியல் எதிரிகள், அந்நிய நாடுகள், சிவில் சமூகம் எனப் பலவும் தயாராக இருக்கின்றன.

இச்சவாலை எவ்வாறு கையாளுவது என்பதை புதிய ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும். காலப்போக்கில் ஆட்சிக்கெதிரான மக்களின் எதிர்ப்பு இரண்டு விதங்களில் வெளிப்படலாம். ஓன்றில் சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் கொள்ளை, தீயிடல், பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் போன்றனவாக அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்து அரகலய போல விரிவடையலாம். இதை எவ்வாறு கையாள்வது என்பது முக்கியமானது. இது இலங்கையின் ஜனநாயகத்தின் எதிர்காலத்துடன் பின்னிப் பிணைந்த வினாவாகும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட அந்நியக் கடன் நெருக்கடி புதிய ஆட்சியாளர்களின் மேல் தொங்குகின்ற கத்தியாகும். ஜ.எம்.எவ்விடம் கடனைப் பெற்றுக்கொண்டு ஒரு குறுகியகால அவகாசத்தை இலங்கை பெற்றாலும் இலங்கை தன் கடன் வழங்குனர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியின் உடனடிச் சவால்களில் இது பிரதானமானது.

இலங்கையின் அந்நியச் செலாவணி குறித்து; இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, நாட்டின் பிரதான கடனாளர் குழுக்களுக்கான கடன் சேவையை இடைநிறுத்துவதன் மூலம், வருடாந்த வட்டி மற்றும் முதிர்வு கடன் கொடுப்பனவுகள் அதே வட்டி விகிதத்தில் பிரதான கடன் பங்குடன் சேர்க்கப்படும் என்று இலங்கை உறுதியளித்துள்ளது. அதன்படி, இலங்கை அந்நியக் கடன் எதையும் வாங்காமல் இருந்தாலும், அதன் அந்நியக் கடன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 பில்லியன் டாலர்கள் உயர்கிறது. 2023 இறுதி வரை நிலுவைத் தொகையாகக் குவிக்கப்பட்ட அத்தகைய கடனின் மதிப்பு 6.6 பில்லியன் டாலர்கள். இந்த கடனை கூடிய விரைவில் மறுசீரமைப்பதாக இலங்கை உறுதியளித்தது, ஆனால் இதுவரையிலான முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளது. எனவே இதனை உடனடியாக மறுசீரமைக்கச் சொல்லி கடன் வழங்குனர்கள் புதிய ஜனாதிபதியிடம் கோருவர்.

இரண்டாவது, 2022 இல் பல இறக்குமதி பொருட்களின் மீதான கட்டுப்பாடு பல கட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, 2023 இல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டவற்றின் பெருமதி 17 பில்லியன் டாலர்களாகும். ஆனால் இக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் குறைந்தபட்சம் நாட்டிற்கான சாதாரண இறக்குமதி அளவு சுமார்  22 பில்லியன்  டாலர்களாகும். இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது மேலதிகமாக 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கைக்கு ஆண்டொன்றுக்குத் தேவைப்படும்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை என்று இப்போது சிலாகிக்கப்படுவதை மேற்சொன்ன இரண்டின் அடிப்படையிலுமே நோக்க வேண்டும். இலங்கை கடன்களை மீளச் செலுத்தவும், இறக்குமதித் தடையை நீக்கவும் தொடங்கும் பட்சத்தில் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்த நிலைக்கு இலங்கை மீண்டும் திரும்பும். இந்த உண்மையை எந்தவொரு வேட்பாளரும் சொல்லவுமில்லை.

ஜ.எம்.எவ்வுடன் உடன்பட்ட விடயங்களை புதிய ஜனாதிபதி செயல்படுத்தப் போகிறாரா அல்லது தமிழ்த் திரைப்பட வசனம் போல “கள்ள ஆட்டம் ஆடுகிறீர்கள், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், முதல்லேயிருந்து திரும்பவும்” என்று ஜ.எம்.எவ்விடம் சொல்லப் போகிறார்களா? இரண்டாவதைச் சொல்வதற்கான அரசியல் தைரியம் பிரதான வேட்பாளர்கள் யாருக்கும் கிடையாது என்பதைத் தேர்தல் பிரச்சாரங்களிலேயே கண்டோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சில உறுதிமொழிகளை அளித்தே ஜ.எம்.எவ்விடம் கடன் பெற்றது. அவ்வாறான உறுதிமொழிகளில் புதிய ஜனாதிபதிக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும் ஐந்து அம்சங்களின்  சிக்கல் தன்மையை மேலோட்டமாகப் பார்க்கலாம். முதலாவது, 2027 ஆம் ஆண்டிற்குள் அரசாங்க வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 15% ஆக அதிகரிப்பதாகும். தற்போதைய நிலை இது 11% ஆக உள்ளது, மேலும் புதிய ஜனாதிபதி வேகமாக இயங்கி வரி வலையை வேகமாக விரிவாக்குவதன் மூலம் விகிதத்தை 15% ஆக உயர்த்த வேண்டும். ஒரு பக்கம், சொத்து வரி போன்ற புதிய வரிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். மக்களுக்கான புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அனைவரும் வரிசெலுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.  அனைத்து பிரதான வேட்பாளர்களும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் வரி விகிதங்களைக் குறைப்பதாக உறுதியளித்துள்ளர். இந்நிலையில் இந்த இலக்கை அடைவது சாத்தியமற்றது. அடைய முயன்றால் மக்கள் எதிர்ப்பு நிச்சயமானது.

இரண்டாவது, 2027 ஆம் ஆண்டிற்குள் வறுமைக்குள் இருப்போர் தொகையை மக்கள் தொகையில் 15% க்கும் குறைவான நிலைக்குக் கொண்டுவருவதாகும். உலக வங்கியின் அறிக்கையின்படி இலங்கையில் 26%மானவர்கள் வறுமைக் கோட்டுக்குள் இருக்கிறார்கள். நாளொன்றுக்கான வாங்கும் திறனை 3.65 டொலர்கள் என்ற குறிகாட்டியையே இது பயன்படுத்துகிறது. ஆனால் சர்வதேச வறுமைக் குறிகாட்டியான 6.85 டொலர்கள் என்ற குறிகாட்டியைப் பயன்படுத்தினால் இலங்கையில் வறுமைக் கோட்டிற்குள் இருப்போர் 67%மாக உயர்கிறது. ஆக பொருளாதாரம் மேம்படத் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மேலதிகமான இலங்கையர்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்களாக மாறியபடியே இருப்பார்கள்.

மூன்றாவது, அரசாங்கத்தின் மொத்த நிதித் தேவை, அதாவது வரவு மற்றும் செலவினங்களுக்கு இடையே உள்ள பட்ஜெட்டில் உள்ள இடைவெளி, முதிர்வுக் கடனை மேலும் கடன் வாங்குவதன் மூலம் திருப்பிச் செலுத்த முடியாது என்று கருதாமல், 2032 ஆம் ஆண்டளவில் 13% ஆகக் குறைக்கப்பட வேண்டும். கடன் நிறுத்தத்துடன், 2024 இல் முன்மொழியப்பட்ட பட்ஜெட்டின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24% மாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடன் நிறுத்தம் இல்லாமல் இதைக் கணக்கிட்டால் அது 33% ஆக உயரும்.

நான்காவது, 2032 ஆம் ஆண்டுக்குள் அரசின் கடனுக்கும் மொத்த உள்ளநாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதத்திற்கு 95%க்குக் கீழே கொண்டு வருவதே ஒரு குறிக்கோள். இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் கடன் இடைநிறுத்தம் ஆகியவற்றுடன் தற்போதைய கடன் நிலை 2023 இன் இறுதியில் சுமார் 119% ஆகும். இருப்பினும், அவ்வாண்டு மட்டும் செலுத்தவேண்டிய வெளிநாட்டுக் கடனாக 6.6 பில்லியன் டாலர்கள் நிலுவையில் இருக்கிறது.  இது 2023 இன் இறுதியில் கடன் பங்குகளில் சேர்க்கப்படும் போது, விகிதம் 127% ஆக உயரும். கடன் வழங்குபவர்கள் இந்த நிலுவைகளை தள்ளுபடி செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால், புதிய ஜனாதிபதி இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கு அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். துற்போதைய நிலைமையில் எந்தக் கடன் வழங்குனர்களும் நிலுவைகளைத் தள்ளுபடி செய்யத் தயாராக இல்லை.

ஐந்தாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%க்கும் குறைவான இருப்புத் தொகையின் நடப்புக் கணக்கில் பற்றாக்குறையைப் பராமரிப்பதாகும். தற்போது, இது 2% உபரியாக உள்ளது, ஆனால் கடன் இடைநிறுத்தம் இல்லாத சூழ்நிலையில், இது 5% பற்றாக்குறையாக மாற்றப்படும். இது புதிய ஜனாதிபதிக்கு கடினமான தொடக்கமாகும்.

பொருளாதாரப் பிரச்சனைக்கு அடுத்தபடியான உடனடிப் பிரச்சனை இலங்கையில் புரையோடிப்போயுள்ள ஊழலை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியதே. இலங்கையில் ஊழலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 2005ம் ஆண்டு மகிந்த இராஜபக்ச ஜனாதிபதியானதன் பின்புலத்தில் ஊழல் மெதுமெதுவாக நிறுவனமயத் தொடங்கியது. போரில் அவரது அரசு அடைந்த வெற்றி ஊழலுக்கான சமூக அங்கீகாரத்தைக் கொடுத்தது. ராஜபக்சவின் பத்தாண்டுகால ஆட்சியில் ஊழல் அரச நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் சகல மட்டங்களிலும் புற்றுநோய் போல் பரவியது. 2015இல் அதிகாரத்துக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஒருபுறம் ஊழலில் ஈடுபட்டது, மறுபுறம் அதனது ஊழல் எதிர்ப்பு முனைப்புகளுக்கு உள்ளிருந்தே எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா பெருந்தொற்று, அதையடுத்த பொருளாதார நெருக்கடி ஆகியன இன்று ஊழலை மிகச்சாதாரணமானதாக ஆக்கிவிட்டன. இலஞ்சம் கேட்பது அரச அலுவலகங்களில் வெளிப்படையானதாகவும் இயல்பானதாகவும் மாறிவிட்டது. இந்தப் பின்புலத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது இலகுவல்ல.

பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினரின் கரங்கள் கறைபடிந்தவை. பாராளுமன்றக் கதிரைகளில் இருந்து தின்று கொழுத்தவர்களே இன்று பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். எனவே ஆட்சிக்கு வந்ததும் தனது கூட்டாளிகளின் நலன்களைப் பேணுவதை புதிய ஜனாதிபதி செய்தாக வேண்டும். ஊழல் பேர்வழிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதானே ஊழலை ஒழிப்பேன் என்று செய்த தேர்தல் பிரச்சாரம் ஒரு முரண்நகை.

அரசியல் ரீதியாக புதிய ஜனாதிபதியின் எதிர்காலம் என்பது ஜனாதிபதித் தேர்தலை அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற, உள்@ராட்சி தேர்தல்களின் முடிவில் தங்கியுள்ளது. புதிய ஜனாதிபதியின் ஆதரவு சக்திகள் பாராளுமன்றில் பெரும்பான்மை பெறாதுவிடின் நிர்வாகரீதியான சவால்களை தொடர்ச்சியாக ஜனாதிபதி எதிர்நோக்குவார். இது எவ்வளவு குழப்பகரமானது என்பதற்கு இலங்கையின் 2001-2004 கால அனுபவம் நல்ல சான்று.

அடுத்த தேர்தல்கள் புதிய ஜனாதிபதியின் யோக்கிதையை மக்களுக்குக் காட்டிவிடும். ஏனெனில் புதிய ஜனாதிபதியின் கூட்டாளிகள் அரசவளங்களை தமது தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்த முனைவர். அதைத் தடுக்கும் திராணி புதிய ஜனாதிபதிக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கான பதில் விரைவிலேயே கிடைத்துவிடும்.

நிறைவாக இரண்டு விடயங்களைச் சொல்லவியலும். முதலாவது, யார் வென்றாலும், வெற்றி பெற்றவர் இலங்கையர் அனைவரையும் ஏய்ப்பார். அது எம்கண்முன்னே நடக்கும். அதற்கும் அவரது ஆதரவாளர்கள், நியாயங்களையும் சாக்குப் போக்குகளையும் சொல்வர். இரண்டாவது, ஜனாதிபதி புதிதாகினும் நாடு பழையது தான் என்பதை மக்கள் உணர கனகாலம் எடாது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *