பாராளுமன்றத் தேர்தல்-2: கூட்டணி அரசியல்
இலங்கையைப் பொறுத்தவரை தேர்தல்களும் கூட்டணிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணிகள் சமகால இலங்கை அரசியலின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். தேசிய மக்கள் சக்தி இன்னும் வலுவான கூட்டணியை அமைத்திருந்தால் ஜனாதிபதித் தேர்தலில் 50%க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். இதேசவாலை ஜனாதிபதி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் எதிர்நோக்குவார். அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது இலகுலானதல்ல. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கேனும் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதிக்கு ஏற்படலாம். இதை விளங்கிக் கொள்ள இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் முறையை விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கையின் கூட்டணி அரசியல் பற்றிய தெளிவான பார்வையானது, இலங்கையில் தேர்தல் இயக்கவியல் மற்றும் அரசாங்கத்தை உருவாக்கும் அரசியல் பற்றிய புரிதலுக்கு முக்கியமானது.
1948இல் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கை அரசாங்கங்கள் பெரும்பாலும் கூட்டணிகளே. 1947 இல் – சுதந்திரத்திற்கு ஒரு வருடம் முன்பு – உருவாக்கப்பட்ட முதல் பாராளுமன்ற அரசாங்கம், ஒரு உள்-இன மற்றும் உட்கட்சி கூட்டணியாகவே இருந்தது. அந்தக் கூட்டணி 1948ல் சரிந்தது. பின்னர் 1956ல் சிங்கள தேசியவாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அந்த அரசாங்கம் 1960 வரை நீடித்தது.
1956 ஆம் ஆண்டு கூட்டணியின் பிரதான பங்காளியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீலசுக) மீண்டும் 1964 இல் இரண்டு இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணியில் சேர்ந்தது. மார்ச் 1965 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஏழு கட்சிகளின் மற்றொரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. மூன்று வருட கூட்டணிப் பரிசோதனையின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அந்தக் கூட்டணி 1970 வரை ஆட்சியில் இருந்தது. 1970ல் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி (லசசக), மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (கக) ஆகியவை வெற்றிக் கூட்டணியை அமைத்தபோது மீண்டும் ஒரு கூட்டணி அரசாங்கம் உருவானது. 1970ல் இருந்து எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி 1977ல் மீண்டும் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. 1994, 2000, 2001, 2005, 2010, 2015, 2021 தேர்தல்களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட அரசாங்கங்களும் கூட்டணிகள்தான். இவ்வாறு, சுதந்திரத்திற்குப் பிந்தைய முழு வரலாற்றிலும் இலங்கையில் அரசாங்க உருவாக்கம், இரண்டு நிர்வாகங்கள் மட்டுமே – 1952-6 ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) அரசாங்கம் மற்றும் 1960-4 ஸ்ரீலசுக அரசாங்கம் ஒரு கூட்டணியின் தன்மையை எடுக்கவில்லை.
சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் ஒழுங்கின் தொடக்கத்திலிருந்தே இலங்கையில் கட்சி அரசியல் மற்றும் அரசாங்க உருவாக்கத்தின் தொடர்ச்சியான அம்சமாக கூட்டணிகள் உள்ளன. இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் சமூகக் கூட்டணிகளின் தன்மையை உருவாக்கியுள்ளன. உதாரணமாக, 1946 இல் ஐதேக பல தனித்துவமான நிறுவனங்களின் அரசியல் ஒன்றியமாக உருவாக்கப்பட்டது. அது கொலனித்துவ காலத்தின் பிற்பகுதியில், குறிப்பாக கொலனித்துவ இலங்கைக்கு (அப்போது சிலோன்) சர்வசன வாக்குரிமை மற்றும் வரையறுக்கப்பட்ட ஜனநாயகம் வழங்கப்பட்ட பின்னர் ஏற்படுத்தப்பட்ட அரசியற் கட்சியாகும். இலங்கை தேசிய காங்கிரஸ், சிங்கள மகாசபை (சிங்களப் பேரவை), அகில இலங்கை முஸ்லீம் லீக் மற்றும் அகில இலங்கை மூர்ஸ் சங்கம் ஆகியன ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்க ஒன்றிணைந்த அமைப்புக்களில் அடங்கும். ஒரு சிங்களவர் – டி.எஸ். சேனநாயக்கா, கட்சியின் தலைவராக இருந்தார், ஒரு தமிழர் மற்றும் ஒரு முஸ்லீம் இரண்டு துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வர்க்க அடிப்படையில், ஐதேக அதன் உருவாக்கத்தின் போது, கொழும்பை தளமாகக் கொண்ட வணிக மற்றும் நில உடைமை உயரடுக்குகள், கிராமிய பிரபுத்துவம் மற்றும் விவசாயிகள், பௌத்த மற்றும் கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களின் சமூகக் குழுக்களின் ஒரு தளர்வான கூட்டணியாக இருந்தது.
ஸ்ரீலசுக 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டது. 1956 இல் பிரதமரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா புதிய கட்சிக்கு தலைமை தாங்கினார். ஸ்ரீலசுக ஆரம்பத்தில் ஐதேகவை விட குறைவான இன வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. அதன் ஆரம்ப பன்முகத்தன்மை சிங்கள சமூகத்தில் அதன் வர்க்க மற்றும் சாதி அடிப்படையிலான ஆதரவுடன் அடிப்படையாக இணைக்கப்பட்டது. அதன் தலைமையின் அடிப்படை மற்றும் அதன் தொகுதிகள் சிங்கள-பௌத்தர்களாக இருந்தன. எனவே ஸ்ரீலசுக அதன் வரலாற்றின் பெரும்பகுதிக்கு பல இன அரசியல் கூட்டணியாக இருக்கவில்லை. ஸ்ரீலசுக 1956 இல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டணிக்குள் நுழைந்தபோது, அதன் தன்மையானது சிங்களவர்களின் சமூகத் தொகுதிகளின் பரந்த தொகுப்பின் அடிப்படையில் ஒற்றை இன மற்றும் ஒற்றைக் கலாசார (முதன்மையாக சிங்கள இனம் மற்றும் பௌத்த மதம்) அரசியல் உருவாக்கமாக இருந்தது. சமூகம். வர்க்க அடிப்படையில், அவர்கள் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர், சிறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகள், இடைநிலை கிராமப்புற உயரடுக்கு, தொழிலாள வர்க்கம், பௌத்த மதகுருமார்களின் கீழ் அடுக்குகள் மற்றும் சம்பளக்காரர்கள் அடங்கிய சிங்கள சமூகத்தின் இடைநிலை மற்றும் கீழ்நிலை அடுக்குகளாக அவை விவரிக்கப்படலாம். இக்கூட்டணியை உருவாக்கிய கட்சிகள் ஸ்ரீலசுக புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சி மற்றும் சிங்கள மொழி முன்னணி. 1950களின் முற்பகுதியில் தோன்றிய பல சிங்கள தேசியவாத அமைப்புகளால் இக்கூட்டணி தீவிரமாக ஆதரிக்கப்பட்டது.
1960களில் இருந்து அரசியல் கட்சி அமைப்பு இரண்டு பிரதான கட்சிகளைச் சுற்றி துருவப்படுத்தத் தொடங்கிய பின்னரும் கூட, இலங்கையின் அரசியல் கட்சிகளின் சமூகக் கூட்டணித் தன்மை மறைந்துவிடவில்லை. பாராளுமன்றத் தேர்தல்கள் நகர்ப்புற அடிப்படையிலான உயரடுக்கு அரசியல் வர்க்கங்களுக்கு வெகுஜனங்களுடன், குறிப்பாக கிராமப்புற விவசாயிகளுடன் தொடர்புகளை உருவாக்குவதற்கு ஒரு பயனுள்ள வழிமுறையை வழங்கியுள்ளன. 1930 களின் நடுப்பகுதியில் இருந்து சுமார் 50 ஆண்டுகளாக இருந்த சமூக நல அமைப்பு, தந்தைவழி முறையில் பொது வளங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம், கீழ்நிலை சமூக வர்க்கங்களுடன் தங்கள் கொண்டோர் – கொடுத்தோர் உறவைத் தக்கவைத்துக்கொள்ள அரசியல் வர்க்கங்களுக்கு உதவியது. ஒவ்வொரு பாராளுமன்ற அல்லது ஜனாதிபதித் தேர்தலிலும், வாக்காளர்களுக்கு பாரிய சமூக நலப் பொறுப்புகளை வழங்குவதில் அரசியல் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுள்ளன. உணவு மற்றும் பிற நுகர்வோர் மானியங்கள், பொது வேலைவாய்ப்பு திட்டங்கள், சம்பள உயர்வு, விவசாயிகளுக்கு அரசு வங்கிகள் வழங்கிய பாரிய விவசாயக் கடன்களை ரத்து செய்தல் மற்றும் ஏழை மற்றும் வேலையற்றோருக்கான சமூக நலன்கள் ஆகியவை பெரும்பாலும் அந்த உறுதிமொழிகளில் அடங்கும்.
தற்போது இலங்கையின் தேர்தல் அரசியலின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், விகிதாசாரத் தேர்தல் முறைமையானது கூட்டணி அரசாங்கங்களை அவசியமாகவும் தவிர்க்க முடியாததாகவும் ஆக்கியுள்ளது. ஏனென்றால், இலங்கையில் உள்ள எந்தவொரு பெரிய கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை, குறைந்தபட்சம் 113 ஆசனங்களைப் பெறுவதற்கு தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறைமை அனுமதிப்பதில்லை. இது நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு “துருவப்படுத்தப்பட்ட பன்மைத்துவத்தை” தொடர்ச்சியான அரசாங்கங்களுக்கு வழங்கி வந்துள்ளது. இதன் முக்கிய குணாதிசயம் யாதெனில் பல சிறிய கட்சிகள், நிரந்தர அரசியல் விசுவாசம் இல்லாமல், இரண்டு பிரதான கட்சிகளான ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கும் சுதந்திரமும் அரசியல் வங்குரோத்து நிலையும் ஏற்பட்டுள்ளமை.
துண்டு துண்டான பன்மைத்துவ அரசியலில், அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக, பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முன்னர் கூட்டணிகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 1950 களில் இருந்து 1970 கள் வரை, இடது மற்றும் சிறிய சிங்கள தேசியவாத கட்சிகள் ஸ்ரீலசுகக்கு கூட்டணி பங்காளித்துவங்களை வழங்கின. 1980 களின் பிற்பகுதியிலிருந்து விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், தமிழ் மற்றும் முஸ்லிம் இனக் கட்சிகள் முக்கிய சிங்கள அரசியல் கட்சிகளுக்கு சாத்தியமான கூட்டணி பங்காளிகளாக மாறுவதன் மூலம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. தேர்தல் பேரத்தின் இந்த பரிமாணத்தின் முக்கியத்துவத்தை நன்கறிந்த கட்சிகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் அடங்கும். இந்த இரண்டு கட்சிகளும் ஒரு வித்தியாசமான பேரம் பேசும் உத்தியை உருவாக்கியுள்ளன. அவர்கள் ஏதாவது ஒரு முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்கள், ஆனால் தேர்தலுக்குப் பிறகு அந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் சுதந்திரத்தை, மற்றக் கூட்டணி புதிய அரசாங்கத்தை அமைத்தால் அதில் இணைந்து கொள்வார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இவ்விரு கட்சிகளும் அதன் வழிவந்தவர்களும், தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தை அமைக்கும் எந்தவொரு கூட்டணியின் பங்காளிகளாகவும் இருக்கும் வகையில் ஒரு நெகிழ்வான கூட்டணி மூலோபாயத்தை உருவாக்கியுள்ளன.
மலையக, முஸ்லீம் சிறுபான்மையினரின் கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் சிறுபான்மை நலன்கள் பேணப்படும் என்ற வாதத்தின் அடிப்படையிலேயே இந்த மூலோபாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்கட்சியாகவே இருந்துள்ளன. அவர்கள் கூட்டணி அரசாங்கங்களில் பங்காளிகளாக இருந்தபோதும், பிரதான சிங்களக் கட்சிகளுடனான ஒத்துழைப்பு பலனளிக்கவில்லை. ஆனால் மலையக, முஸ்லீம் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் கட்சிகளின் கண்ணோட்டத்தில், கூட்டணி அரசாங்கங்களில் இணைவது அவர்களின் சமூகங்களுக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு வலையைப் பெறுவதற்கு ஒப்பானது.
இந்தக் கூட்டணிப் போக்கு, குறிப்பாக சிறுபான்மை அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவளிக்கும் அரசியலின் மையத்தன்மையோடும் இணைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை இன அரசியல் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஒரு ஆழமான வேரூன்றிய அனுசரணை அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது. சிறுபான்மை அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர் வலைப்பின்னல்களை நிலைநிறுத்துவதற்காக செல்வாக்கு மிக்க அமைச்சரவை பதவிகளைப் பெறுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதற்காக அவர்களுக்கு நிரந்தர அரசியல் நண்பர்களோ எதிரிகளோ இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில், இந்த அனுசரணை அரசியலுடன் கூட்டணி பேரம் பேசுவது சில சிங்கள தேசியவாதிகள் மத்தியில் கோபத்தை கிளப்பியுள்ளது. இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் அரச அலுவலகங்களை ஒதுக்குவதில் சிறுபான்மையினரின் அழுத்தத்திற்கு அடிபணிவதாக அவர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்றனர். சிங்கள தேசியவாத பத்திரிகைகளில், இந்த நடைமுறை தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளை ‘ஏலத்தில் விடும்’ ஒரு பயிற்சியாக கண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாத நிலையில், இந்தப் போக்கு தொடரும். உண்மையில், தற்போதுள்ள தேர்தல முறை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது, துல்லியமாக அது கூட்டணி அரசாங்கங்களை தவிர்க்க முடியாததாக ஆக்கியுள்ளது. இந்தத் தேர்தல் முறையை விமர்சிப்பவர்கள், விகிதாரத் தேர்தல் முறையானது, பெரிய அரசியல் கட்சிகளை சிறு, சிறு சிறுபான்மைக் கட்சிகளின் கைதிகளாக ஆக்கியதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். கலப்புத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கான முன்மொழிவுகள் உள்ளன. எவ்வாறாயினும், தேர்தல் முறையை மாற்றியமைக்க சிறுபான்மை இனக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போதைய தேர்தல் முறையில் பயனடைந்த சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள், தேர்தல் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன. இந்நிலையில், இலங்கையில் கூட்டணி அரசியல் தொடர்ந்து நீடிக்கும்.
இந்தப் பின்புலத்திலேயே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலையும் நோக்க வேண்டும். கூட்டுக்களும் கூட்டணிகளும் எவ்வாறு உருப்பெருகின்றன என்பதை இலங்கையர்கள் தேர்தல் காலங்களில் அன்றாடம் காண்கிறார்கள். ஆறுகடக்கும் வரைக் கூட அண்ணன் தம்பி இல்லை என்பதை பட்டவர்த்தமாகக் நிரூபிக்கிறார்கள் அரசியல்வாதிகள். ஓரிடத்தில் கூட்டு, இன்னோரிடத்தில் தனித்து. ஒரிடத்தில் ஒரு சின்னம், இன்னோரிடத்தில் வேறொரு சின்னம் என அவலமாய் கூட்டணி அரசியல் அரங்கேறுகிறது. ஜனாதிபதி எதிர்பார்;க்கும் அறுதிப் பெரும்பான்மையை அவர் பெறாவிட்டால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு அவர் உடன்பட்டாக வேண்டும். கள்ளர்களோடு கூட்டுவைத்துக் கள்ளர்களைப் பிடிப்பது, கூடுவிட்டுக் கூடுபாயும் கலையை விடக் கடினமானது.