காலங் காலமாய்…
கரங்களிலே கல்லெடுத்துக் கொண்டபோது மனிதஇனம்
குரங்குக் கூட்டத்திலிருந்து விடை பெற்றுக் கொண்டது
காலப் போக்கில் அரிதாரம் பூசி வேண்டியபடியெல்லாம்
வேடம் பூண்டு வாழ்க்கையைக் கடத்தியது
பரிமாறிப் பரிமாற்றிப் பண்பாட்டின் மேன்மை சொல்லி
வாழ்ந்து காட்டியது மனித இனம்
தனது என்று தனியே பிரித்து வரையறை வகுத்து
உரிமை கொண்டாடினான் ஒருவன்
அவன் துரோகியாய் இனங்காணப்பட வேண்டியவன்
என்னது உன்னது இவனது அவனது
பிரிப்புக்கள் வேறுபாடுகள் தோன்றி தோற்றுவித்து
சின்னாபின்னமாகிப் போனது மனித இனம்
இப்போது மீண்டும் விழாமலிருக்க
வார்த்தைகளைப் பிடித்து நிறுத்தி
அழகாய் நாக்குகளை பிரட்டிப்பிரட்டி
வேஷமாகிப் போனது மனிதம் – வெறும்
ஓசை உற்பத்தியில் மகிழ்ந்து திளைக்கிறது இன்று