காஞ்சா அய்லைய்யாவின் நூல்களுக்குத் தடை: அறிவுத்துறை மீதான தாக்குதல்
மனிதகுலத்தின் வளர்ச்சியானது அறிவின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. மனித குலம் இப்போது அடைந்திருக்கின்ற வளர்ச்சி அறிவின் விரிவாலேயே சாத்தியமானது. அறிவின் பரவலும் அது சமூகத்தின் சகல மட்டங்களையும் சென்றடைந்ததே இன்று நாம் கொண்டாடும் ‘நாகரீகமான சமூகம்’ என்று நாம் மார்தட்டிக் கொள்வதன் அடிப்படை. ஆனால் இன்னமும் அறிவு மக்களுக்கு மறுக்கப்படுகிறது. உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஆண்டாண்டு காலமாய் அறிவைப் பொதுமைப்படுத்துவதற்கான போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அறிவைத் தடை செய்வது அதிகாரத்துக்கு அவசியமானது. ஏனெனில் கேள்வி கேட்பதையும், விவாதிப்பதையும், தர்க்க ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் சிந்திப்பதையும் அறிவு சாத்தியமாக்கிறது.
பேராசிரியர் காஞ்சா அய்லைய்யாவினால் எழுதப்பட்ட மூன்று நூல்களை முதுகலைமாணிப் படிப்பிற்கான அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்திலிருந்து அகற்ற டில்லிப் பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அதேவேளை அவரது இன்னொரு புத்தகத்தையும் நான்காவதாக நீக்குவதற்கு விவாதிப்பதாக பல்லைக்கழக நிர்வாகம் சொல்லியிருக்கிறது. இக்குறிப்பிட்ட நூல்களில் உள்ள கருத்துக்கள் இந்து மதத்தை அவமதிப்பதாக அமைந்திருக்கின்றன. மாணவர்கள் அதை படிப்பது பொருத்தமானதாக இருக்காது எனவே அவை நீக்கப்பட வேண்டும் என முடிவாயிருக்கின்றன.
தலித் எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான பேராசிரியர் காஞ்சா அய்லைய்யாவின் நான் ஏன் ஒரு இந்து அல்ல (Why I am not a Hindu), எருமைத் தேசியவாதம்: ஆன்மீகத் தேசியம் குறித்தவொரு விமர்சனம் (Buffalo Nationalism: A Critique of Spiritual Fascism) மற்றும் இந்து இந்தியாவிற்குப் பின்: தலித் – வெகுஜன சமூக ஆன்மிக மற்றும் அறிவியல்பூர்வப் புரட்சி பற்றிய உரையாடல் (Post-Hindu India: A Discourse in Dalit-Bahujan Socio-Spiritual and Scientific Revolution) ஆகிய மூன்றும் நீக்கப்பட்டுள்ளன. இவற்றை விட நீக்கப்பட வேண்டிய நான்காவது நூலாகப் பரிந்துரைக்கப்பட்ட காஞ்சா அய்லைய்யாவின் நூல் அரசியல் தத்துவஞானியாக கடவுள்: பார்ப்பனியத்திற்கு புத்தரின் சவால் (God as Political Philosopher: Buddha’s Challenge to Brahminism).
தடைசெய்யப்பட வேண்டிய அளவுக்கு எதைத்தான் பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா சொல்லியிருக்கிறார். டில்லிக் பல்கலைக்கழகமும் ஆளும் அதிகார வர்க்கமும் அச்சம்படும்படியாக என்ன சொல்லியிருப்பார் என்ற வினா இந்த நான்கு நூல்களையும் வாசிக்கத் தூண்டியது. அவரின் ‘நான் ஏன் இந்து அல்ல’ நூலை பத்தாண்டுகளுக்கு முன்னே வாசித்திருந்தபோது அண்மையில் அவர்மீதும் அந்நூல் மீதும் படிந்துள்ள கவனம் அதை மீண்டும் வாசிக்கத் தூண்டியது.
அதில் உள்ள விடயங்களுக்குள் செல்வதற்கு முன் அறிவு குறித்து உண்மையை அறியும் கருவியான அறிவின் பங்களிப்பு பற்றியும் சிலவற்றைக் கூறியாக வேண்டும். இன்று அறிவுத்துறை மீது விடுக்கப்படுகின்ற சவாலின் அடிப்படைகளை இதனூடு விளங்கவியலும். உண்மையைத் தீர்மானிக்கும் ஒரே அளவு கோல் அது நிரூபிக்கப்படுவதாய் இருக்க வேண்டும் என்பது தான். அதாவது உண்மை என்பது அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கக் கூடாது. இவ்வாறு உண்மையைக் கண்டறிய முற்படும் போது அவை ஆதாரங்களில் இருந்து பெறப்படல் வேண்டும் என்பது மீற முடியாத நிபந்தனையைப் பெறுகின்றது. இதற்கு விஞ்ஞான அடிப்படையும், வரலாற்றுக் கண்ணோட்டமும் அவசியமாகின்றன. மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிப் பரிமாணங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் பல்வேறு துறைகள் இன்று மேற் கூறிய வகையிலேயே விரிவடைந்து முக்கியத்துவம் பெற்றுள்ள போதும் இவற்றின் தாக்கம் நமது சமூகச் சூழலில் மிகக் குறைந்தளவாதாகவே காணப்படுகிறது. கல்வித் தேவையின் பொருட்டு புத்திஜீவிகள் மட்டத்திலே பல்வேறு அம்சங்கள் அறிந்து கொள்ளப்பட்ட போதிலும் அவை நடைமுறையில் சமூக வாழ்வுக்குப் பயன்படாதவாறு இருட்டில் விடப்படுகின்றன. இதற்கான அடிப்படை நமது சூழல் பழமைவாதத்தின மீது கொண்டுள்ள இறுக்கமான பிடிப்புத்தான் என்பது மிகையல்ல. இதை உடைத்து தனது ஆய்வுகளின் மீது மக்களை ஆராய்ந்து அதை மக்களுக்குக் கொண்டு சென்றவர் காஞ்சா அய்லைய்யா.
நமக்குச் சொல்லப்பட்டுள்ள வரலாறு மிகப்பெரிய சுமையை எம்மீது சுமத்தியிருக்கிறது. இதையே கார்ள் மார்க்ஸ் “இறந்து போன எல்லாத் தலைமுறைகளின் மரபும் உயிரோடிருக்கும் தலைமுறையின் மூளையில் ஒரு பயங்கரக் கனவாகக் கனக்கின்றது” என்றார். இதில் கவனிப்புக்குரியது யாதெனில் இவ்வாறு கூறுவதன் மூலம் மரபையும் அதன் வழிவந்த பழைமையின் மனித நேயக் கூறுகளையோ, சமூகச் சார்பு மிக்க நல்லம்சங்களையோ பழைமை எதிர்ப்பின பேரால் நிராகரிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் மரபு, பழைமை என்பவற்றை கேள்வி, நியாயங்களுக்கு அப்பால் புராண, இதிகாச இலக்கியங்கள் என்ற பெயரில் அறிவியலுக்கு நேர் எதிரான கருத்துக்களாக மனித மூளையில் திணித்து வரும் போக்கே நிராகரிக்கத்தக்கதாகும். அவை தான் இன்றைய வாழ்வியலுக்கு வழிகாட்;டுவன என்று கூறப்படும் அபத்தமே விமர்சனத்திற்குரிய சுட்டிக் காட்டலாகும்.
இதையே தனது ஆய்வுகளின் ஊடு காஞ்சா அய்லைய்யா செய்திருக்கிறார். அவரது வாழ்க்கையே போராட்டமாக இருந்திருக்கிறது. ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டத்திலுள்ள பாப்பையாபேட்டை என்கிற பாடசாலையே இல்லாத சிறிய கிராமத்தில் பிறந்தவர். சூகுருமாக்கள்’ என்றழைக்கப்படும் இடையர் சாதியைச் சேர்ந்தவராக அவர் இருந்தார். அவர் சாதியில் பிறந்த குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பினால், சரஸ்வதி அவர்களை கொன்று விடுவாள் என்ற தீவிரமான நம்பிக்கை இருந்தது. இவரது பெற்றோரும் அப்படியே நம்பினார்கள். அவரது பாட்டி அவரைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால் அவரது அம்மாவின் முயற்சியால் அவர் பள்ளிக்குச் சென்றார். தொடர்ச்சியான அவமதிப்புகளுக்கு மத்தியில் படித்து தனது சாதிய அடையாளங்களைத் தாண்டி தனது ஆய்வுப்புலமையால் உயர்ந்தவர் காஞ்சா அய்லைய்யா.
இன்று அனைத்தையும் இந்துமயமாக்கி இந்து இந்தியாவைக் கட்டமைக்கும் முயற்சிகளுக்கு அய்லைய்யாவின் நூல்கள் சவாலாக உள்ளன. எனவே அவற்றைத் தடைசெய்வதன் மூலம் அக்கருத்துக்களை முடக்க முயற்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அறிவுத்துறை மீது நடாத்தப்படும் தாக்குதல் ஆபத்தானது.
இந்துமதம் குறித்த கருத்துக்கள்
இந்து மதம் குறித்த அவரது ஆய்வுகள் முக்கியமானவை. அவர் இந்து மதம் அறிவியலுக்கெதிரானது, மனித இனத்திற்கெதிரானது, உற்பத்திக்கெதிரானது என்று வாதிடுகிறார். அதற்கு அவர் பல வாதங்களை முன்வைக்கிறார். ‘இந்து மதத்தில் கொலை செய்யும் தெய்வங்களெல்லாம்கூட இருக்கின்றன. தெய்வீகம் என்று சொல்லப்படக்கூடிய இடத்திலிருந்து வரும் நேர்மறையான அன்பைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒழுக்கத்தை அறிவுறுத்துபவையாக அவை மாறும்போது – நான் இந்த இந்து தெய்வங்களைவிட புத்தரும் இயேசுவும் அறிவுறுத்திய ஒழுக்கங்களையே பரிந்துரைக்க விரும்புவேன். ஏனெனில் பிரம்மா, இந்திரன், இராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் ஆகியவற்றை எமது அடுத்த தலைமுறைக்கு வலியுறுத்த இயலுமா’ என்று கேட்கிறார்.
‘நான் வாத்சாயனாரின் காமசூத்திரத்தைப் படிக்கும்படி பரிந்துரைக்க மாட்டேன். 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் உடலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால் என்ன மிஞ்சும். இதில் எங்காவது ஆண் பெண் சமத்துவம் பேசப்படுகிறதா, ஆணின் இன்பமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆண் பெண் உறவு என்து இயேசு கூறியதைப் போல இருக்க வேண்டும்;. புத்தரைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் அவருடைய கருத்து என்னவாக இருந்தது என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. ஆனால், ஏசு என்ன சொல்கிறார் என்றால், கடவுள் கணவனையும் மனைவியையும் சரிபாதியாக ஓருடலில் படைத்தார் என்கிறார். இதில் ஒரு நீதி இருக்கிறது. அதனால்தான் ஜரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையுள்ளது. இந்து மதத்தில், சாதியை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடக்கின்றன’.
அவரது ‘நான் ஏன் இந்து அல்ல’ நூலானது பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான பண்டைய கால போராட்டங்களைப் பின்புலமாக வைத்து, இன்றைய சமகாலத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அத்தனை விஷயங்களிலும் கடவுளர்களின் பெயரால் எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன, பார்ப்பனியம் எத்தனை கொடுமையான பங்கு வகிக்கிறது, எப்படியெல்லாம் ஆண்-பெண் உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்பதை பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையிலிருந்து இந்நூல் விளக்குகிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், பண்பாட்டு ரீதியாக, ஆன்மிக ரீதியாக, உடல் ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக எத்தனை வேறுபாடுகள். இவ்வாறு இருக்கிற போது எப்படி இந்தியாவை ஒரு ஜனநாயக நாடு என்று நாம் எவ்வாறு சொல்ல முடியும் என்று காஞ்சா அய்லைய்யா கேள்வி எழுப்புகிறார்.
இதேவேளை இவரது இந்து இந்தியாவிற்குப் பின்: தலித் – வெகுஜன சமூக ஆன்மிக மற்றும் அறிவியல்பூர்வப் புரட்சி பற்றிய உரையாடல் முக்கியமான வினாவொன்றைத் தொடுக்கிறது. பௌத்த உலகமான சீனா, அறிவியல் துறையில் உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று விட்டது. கொப்பனிக்கஸ் முதல் இன்றைய மீப்பெருந்தரவுகள் வரை கிறித்துவ உலகம் நிறையவே பங்களித்து விட்டது. இவற்றில் தேவாலயங்கள் பெரிய பங்கு வகித்தன. இஸ்லாமிய உலகத்தை எடுத்துக் கொண்டால், நபிகள்கூட அறிவியல் அறிவுடன் இருந்தவர். துணிகளைத் தைப்பது, ஆண் – பெண் உறவுகள் குறித்த கருத்தாக்கங்கள், மணற்பாங்கான பகுதிகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது போன்ற பல விஷயங்களைச் சொல்லலாம். இதுபோன்ற எதையாவது இந்து உலகம் தந்திருக்கிறதா?
கல்வி குறித்த பார்வைகள்
இவரது கல்வி குறித்த பார்வைகள் முக்கியமானவை. குறிப்பாக இவரது ‘பானையைத் திருப்புதல், நிலத்தைத் துளையிடுதல்: எங்கள் காலத்தில் உழைப்பின் மீதான மதிப்பு’ (Turning the Pot, Tilling the Land: Dignity of Labour in Our Times) என்கிற நூல் சில புதிய பார்வைகளை முன்வைக்கிறது. இவர் எழுப்புகின்ற பிரதானமான வினா, எமது கதைகள், எமது வாழ்க்கை, எமது வாழ்க்கைக்குத் தேவையானதை எமது கல்வி முறை எமக்கும் தருகிறதா என்பது தான். கல்விமுறையானது அதிகாரத்துக்கு அடிபணிதலையும் நிலமானியச் சமூகத்தின் எச்சங்களையும் எமக்குத் தருகிறதேயன்றி எமக்கான கல்வியை அல்ல என்கிறார்.
சிறுவயது முதல் சொல்லித்தரப்படும் A for Apple கதை, A for Ant என்றாக வேண்டும். B for Buffalo, C for Cattle என்றாக வேண்டும். ஊ கழச உழற நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்க வேண்டும். எமக்கு வழங்கப்பட்டுள்ளது எமக்கானது அல்ல. அப்பிள் எமது கிராமங்களில் இல்லாதவொரு பொருள். ஏமக்கு அன்னியமான ஒன்று என்கிறார்.
அவர் இன்னொரு முக்கியமான வாதத்தையும் முன்வைக்கிறார். அது ஆங்கில இலக்கியம் கற்பிக்கப்படும் முறை தொடர்பானது. Subject, object, predication என்று தான் இலக்கணம் கற்றுக் கொடுக்கின்றது. அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்றால் Rama killed Ravana இதில் இராமன் object, இராவணன் subject. செய்யும் செயல் கொல்வது இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவது. அதற்கு பதிலாக அது Farmer is tilling the land என்று மாற்றப்பட வேண்டும். Mother is cooking the food, Father is looking after the cattle என்பது Father should also cook the food and Mother should also look after the cattle என்று வரவேண்டும். அப்போதுதான் சமத்துவம் சிறுவயதிலிருந்தே விதைக்கப்படும்.
எருமைத் தேசியவாதம்
வெளியானபோதே மிகுந்த சஞ்சலத்தை உருவாக்கிய நூல் காஞ்சா அய்லைய்யாவின் எருமைத் தேசியவாதம்: ஆன்மீகத் தேசியம் குறித்தவொரு விமர்சனம். இது இதன் உள்ளடக்கத்துக்காகவன்றி அதன் தலைப்புக்காவே மிகவும் விமர்சிக்கப்பட்டது. தனிக்கட்டுரையாக எழுதத்தக்க அளவு முக்கியமான நூலாக இதைக் கொள்ளவியலும். இந்து இந்தியா முன்வைக்கும் பசுத்தேசியத்தின் அபத்தங்களை சுட்டிக்காட்டி இந்தியாவினுடையது எருமைத் தேசியம் என்று இந்நூலில் அய்லைய்யா நிறுவுகிறார்.
எருமையை ஒவ்வொரு வீட்டின் விலங்கு என்று சொல்லலாம். இந்தியாவில் பால் உற்பத்தி, எருமை மாடுகளிடமிருந்துதான் வருகிறது பசுக்களிடமிருந்து அல்ல. ஆனால் பசு தெய்வமாக்கியிருக்கிறது. கறுப்பாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக உற்பத்திக்கு உதவும் ஒரு விலங்கான எருமையை எமனுக்கு வாகனமாகவும் மாற்றி விட்டிருக்கிறார்கள். தென்னாசிய சமூகங்களில் நிலவும் நிறப்பிரிவனை இதற்கு வலுச்சேர்க்கிறது.
ஏனெனில் ஆண்கள் அழகான வெள்ளையான பெண்களைத் தான் தேடுகிறார்கள். இன்னொரு வகையில் திராவிடர்களுக்கு எதிரான ஆரிய மனப்பான்மை என்பதையும் இங்கு சுட்ட வேண்டும் என்று சொல்லும் அய்லைய்யா, நீண்டகாலமான இந்த ஆரிய ஆதிக்கத்துக்கு எதிராகத் திராவிடர்கள் போராடி வந்திருக்கிறாhகள் என்று குறிப்பிடுகிறார். எருமை திராவிடர்களையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் குறிக்கிறது. இந்த நிலப்பரப்பிற்கு சொந்தக்காரர்களைக் குறிக்கிறது என்று வாதிடுகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் தோற்றமும் தந்தை பெரியாரின் பங்களிப்பும் எவ்வாறு ஆரியமையச் சிந்தனையிலிருந்து திராவிடமையச் சிந்தனைக்கும் சமவுடமைக்கும் வழிவகுத்தது என்பதை ஆராய்வது முக்கியம் என்று அய்லைய்யா இந்நூலில் குறிப்பிடுகிறார்.
சமூகப் பாசிசம் என்ற சொல்லாடல்
இந்தியாவில் அன்னா ஹசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்பு என்ற போர்வையில் மக்கள் திரட்டப்பட்டபோது சமூகப் பாசிசம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி காஞ்சா அய்லைய்யா அழகான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இலங்கையின் இன்றைய சூழலுக்கு இது அழகாகப் பொருந்துகிறது. எனவே அதனுடன் இக்கட்டுரையை நிறைவு செய்ய எண்ணுகிறேன்.
சமூகப் பாசிசம் தனக்குத் தானே ஒரு ஒழுக்க அடிப்படையை கட்டமைத்துக் கொள்ளும் குடிமைச் சமுதாயத்தின் உண்மை நிலையாக ஆகிறது. ஊழல் எதிர்ப்புப் போருக்குத் தலைமை தாங்கும் குடிமைச் சமுதாயம், கார்பரேட் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை லஞ்சமாக கொடுப்பதை ஊழலாகப் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ அரசாங்க அதிகாரியோ லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டால் அது ஊழலாகப் பார்க்கப்படுகிறது. இது ஏனென்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் அவர்களின் கரங்களில் இருக்கின்றன. அதேவேளையில் அரசியல் மற்றும் அதிகாரப் பதவிகள் ‘பிறவிலேயே ஊழல்வாதிகளாக உள்ள’ மனிதர்களின் கரங்களுக்கு நழுவிச் செல்லுகின்றன.
சமூகப் பாசிசம் எப்போதும் மோசடித் தன்மையிலேயே வாழ்கிறது. அது சமஸ்கிருதத்தை அதன் ஆலய மொழியாகப் பயன்படுத்துகிறது. இந்தியை மைதானப் பேச்சுக்கு வைத்துக்கொள்கிறது, ஆங்கிலத்தை அதன் அலுவலக மொழியாகப் பயன்படுத்துகிறது. பாசாங்குத்தனம் அதன் உள்ளார்ந்த பண்பாட்டு இருத்தலாக இருக்கிறது. அது பொது வாழ்க்கையில் எளிமையாக இருப்பதாக நடிக்கிறது, ஆனால் அதன் உணவு மேசையில் முத்திரைப் பெயர்களுடன் கார்பரேட் சந்தை வழங்கும் அனைத்துப் பண்டங்களையும் வைத்திருக்கிறது.
இந்தியச் சூழலில் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கும் பணம் சென்று சேரும் எந்த ஒரு செயல்முறையும் ஊழல் அல்லது பொருளாதார வீணடித்தலாகக் காட்டப்படுகிறது. ஆனால் அரசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் மிகப்பெரிய லாபத்தை ஈட்டும் ஏகபோக வர்த்தகர்கள் சந்தை விலையை உயர்த்தும் போது அது ஊழலாக கருதப்படுவதில்லை.
பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுநிலையை கட்டுப்படுத்தி, சூழ்ச்சித் திறம் மேற்கொண்டுவந்த பாரதமாதாவின் தோற்றத்தில் தேசம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் பிறர் அதைக் கண்டாலே நடுங்கச் செய்கிற வகையில் அந்தத் தோற்றம் ஒவ்வொரு நிமிடமும், 24ஓ7, காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாசிசம் இப்பொழுது அனைத்து வசதிகளும் நிறைந்த வீடுகளில் வாழ்கிறது, ஜனநாயகம் கொட்டடிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
ஒரு தேசம் ஒழுக்க நம்பிக்கையின் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிற போது சமூக பாசிசம் தோன்றுகிறது. அது குடிமைச் சமுதாயத்தின் அடுக்குகளில் தன்னை உருவாக்கிக்கொண்டு அரசியல் அதிகாரத்தின் வாயிலை ஆக்கிரமித்துக் கொள்வதை நோக்கி நகர்கிறது. இது ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகளில் நிகழ்ந்தது. சமூக பாசிசம் வெற்றிகரமாகத் தோன்றிய அனைத்து நாடுகளிலும் அது தனக்கான ஒரு உயர்ந்த ஒழுக்க அடித்தளத்தை வலியுறுத்தும் நடுத்தர வர்க்கத்திடமிருந்துதான் பரவியது. அந்த உயர்ந்த ஒழுக்க அடித்தளம் பொதுவாக ஊழல்மறுப்பு கோட்பாட்டைச் சுற்றிதான் நிறுவப்படுகிறது.