அரசியல்உலகம்

கிரைஸ்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்

உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்பதை கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள் மீண்டும் கோடுகாட்டிச் சென்றுள்ளன. இனவாதமும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளும் கடந்த ஒரு தசாப்த காலமாக அறுவடை செய்த பாசிசத்தின் இன்னொரு பலிபீடமாக நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை நோக்க வேண்டியுள்ளது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது? உலகில் பாதுகாப்பான நாடு என்று எந்த நாட்டைச் சொல்லவியலும்? நேற்று கிரைஸ்சேர்ச்சில் நடந்தது நாளை இன்னொரு இடத்தில் நடக்காது என்ற உத்தரவாதத்தை யாரால் தரவியலுவும்? நிச்சயமின்மைகளே நிச்சயமான காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் நியூசிலாந்தின் கிரைஸ்ச்சேர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் புகுந்த ஆயுதாரி அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்களைச் சரமாரியாகச் சுட்டான். இதில் 50 பேர் உயிரிழந்தும் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளனர். நியூசிலாந்தின் வரலாற்றின் மிகப்பெரிய சூட்டுச்சம்பவமான இது முழு நியூசிலாந்தையும் உலுக்கியுள்ளது. இந்த நிகழ்வுடன் தொடர்புடைய மூன்று விடயங்கள் கவனிப்புக்குரியன. அவை இந்நிகழ்வுக்குப் புறம்பாக நாகரீகமடைந்த மனிதகுலமாக எம்மைச் சொல்லிக் கொள்ளும் நாம் அவதானிக்க வேண்டிய சில முக்கியமான எச்சரிக்கைகளைக் காட்டி நிற்கிறது.

வலது தேசியவாத எழுச்சியின் நிழலில்
இடம்பெற்ற இந்த கொலைவெறித்தாக்குதலை வெறுமனே தனிப்பட்ட ஒருவரின் திட்டமிடப்படாத கோபத்தின் விளைவு என்று சுருக்கி விட முடியாது. இது திட்டமிட்டு தெளிவாக நடத்தப்பட்ட தாக்குதல் என்ற உண்மையை நாம் விளங்க வேண்டும். இதை புத்தி பேதலித்த ஒருவரின் நடவடிக்கைiயாகச் சுருக்குவது இந்த நிகழ்வின் ஆபத்தின் ஆழத்தை முழுமையாகப் புறக்கணிக்கவே உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இத்தாக்குதலை மேற்கொண்ட நபர் இந்நிகழ்வை பேஸ்புக் மற்றும் யூடியூப்பின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பியுள்ளார். தனது செயலுக்கான 73 பக்க விளக்க உரையையும் வெளியிட்டுள்ளார். எனவே இது தற்செயல் நிகழ்வல்ல.

பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் வழித்தடத்தில் உலகெங்கும் – அதிலும் குறிப்பாக மேற்குலகில் – வலது தேசியவாத சக்திகளின் எழுச்சி நிகழ்ந்தது. இது தற்செயலாக நிகழ்ந்ததல்ல. இது நிதி மூலதனத்தின் முழுமையான ஆதரவுடன் நடந்தது. சனநாயகமும் அதன் நடைமுறைகளும் மக்கள் மத்தியில் பாரிய நம்பிக்கையீனங்களைத் தோற்றுவித்திருந்து. இந்நிலையில் நிதிமூலதனத்தையும் நவதாரளவாதத்தையும் பாதுகாக்கவும் கட்டற்ற சுரண்டலை வரைமுறையற்று நிகழ்த்தவும் சனநாயகம் இனியும் போதுமானதாக இல்லை என்பது உணரப்பட்டது. இதன் பின்புலத்திலேயே நிதிமூலதனத்தின் உதவியுடனும் நவதாராளவாதத்தின் நிகழ்ச்சிநிரலில் வலது தேசியவாத எழுச்சி முன்னிலையடைந்தது. இது ஜனரஞ்சகவாதம் என்ற முகமூடியைத் தனக்குப் பொருத்திக் கொண்டது.

இவையனைத்தும் நவ-பாசிச நிலைப்பாடுகளை உடையன. இவ்விடத்தில் பாசிசம் எவ்வாறு தன்னைத் தகவமைக்கிறது என்பதை நோக்கல் தகும். இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்ட பாசிசம் எவ்வாறு மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தது மக்களை தன்பின்னே தொடர்ச்சியாக அணிதிரட்டியது என்பதை கெயோர்கி டிமித்ரொவ் 1935ம் ஆண்டு கம்யூனிஸ அகிலத்தின் இரண்டாம் சர்வதேச மாநாட்டில் வழங்கிய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அவர் “நிதி மூலதனத்தின் அதி பிற்போக்கு, அதி பேரினவாத, அதிஏகாதிபத்திய கூறுகளின் பகிரங்க பயங்கரவாதச் சர்வாதிகாரமே ஃபாசிசம்” எனக் குறிப்பிடுகிறார். இதை விளக்கும் டிமித்ரொவ் பாசிசம் என்பது வர்க்கங் கடந்ததுமல்ல@ நிதி மூலதனத்தைப் புறந்தள்ளிய சிறு முதலாளிகளினதும் உழைப்பாளிகளினதும் அரசாங்கமுமல்ல. நிதி மூலதன அதிகாரமே ஃபாசிசம் என்கிறார். தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஆய்வறிவாளர்களதும் செயற்பாடுகளினதும் சுதந்திரத்துக்கும் எதிரான பயங்கரவாத வஞ்சத்தின் அமைப்பே ஃபாசிசம். இது அயற் கொள்கையிற், பிற தேசங்களிடம் மிருகத்தனமான வெறுப்பைத் தூண்டும் போலி நாட்டுப்பற்றின் அதிகொடிய வடிவம் என்றார்.

இன்று பாசிசம் இவ்வாறுதான் செயற்படுகிறது. வலது தேசியவாதம் நாட்டுப்பற்றையும் இனப்பற்றையும் தனக்குத் துணைக்கழைக்கிறது. அத்துடன் வெள்ளை நிறவெறியும் சேர்ந்து விடுகிறது. இவை பல்வேறு வடிவங்களில் தம்மை வெளிக்காட்டுகின்றன. தொடக்கத்தில் பாசிசம் முதலாளிய, சமூக-சனநாயகக் கட்சிகளுடன் மென்மையாகச் செயற்படும். புரட்சி வெடித்தெழலாமென ஆளும் முதலாளி வர்க்கம் அஞ்சும்போது, பாசிசம் கட்டற்ற அரசியல் ஏகபோகத்தை அடையவும் அது உதவுகிறது. தேவையாயின், பம்மாத்தான சனநாயகத்தைப் பச்சைப் பயங்கர சர்வாதிகாரத்துடன் இணைக்கவும் பாசிசத்திற்கு இயலும். பாசிசம் அதிகாரத்துக்கு வருவதென்பது ஜனநாயக ஆட்சியை (அது பெயரளவிலாயினும்) பயங்கர சர்வாதிகாரத்தாற் பிரதியிடுவதாகும்.

உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்த கடந்த பத்தாண்டுகளில் இந்த அமைப்புமுறை மீதான கோபமும் நவதாரளவாதத்தின் தோல்வியும் ஜனரஞ்சகவாதமாக வெளிப்படுகிறது. இதை அதிவலது தேசியவாதமாக மாற்றுவதன் ஊடு நிதிமூலதனம் தன்னைக் காத்துக் கொள்கிறது. இதற்கு நல்ல உதாரணம் அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் தெரிவானமையே. அமெரிக்க ஆளும் நிறுவனத்தின் மீதான கோபம் ட்ரம்பைக் கொண்டு வந்தது. ஆனால் நிதிமூலதனம் முன்பை விடப் பாதுகாப்பாக இருக்கிறது. மக்களது கோபம் நிறவெறியாகவும், இஸ்லாமிய எதிர்ப்பாகவும், குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனோநிலையாகவும் வெளிப்படுகிறது. ஆனால் மக்கள் தொடர்ந்து சுரண்டப்படுகிறார்கள். பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அனைத்துக்கும் குடியேற்றவாசிகளும் முஸ்லீம் தீவிரவாதிகளுமே காரணம் என்று நம்பவைக்கப்படுகிறார்கள்.

தீவிரவாத உருவாக்கத்தில்; இணையமும் சமூக ஊடகங்களும்
கிரைஸ்சேர்ச் தாக்குதலை மேற்கொண்ட நபர் அதை சமூக ஊடகங்களின் வழி ஒளிபரப்பியுள்ளார். அதேவேளை இது தொடர்பான தொடர்ச்சியான ஊடாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள், இவ்வகையான செயல்களுக்கு உற்சாகமூட்டல் அனைத்தும் சமூகவலைத்தளங்களின் ஊடே நடைபெறுகிறது. ஒருவரைத் தீவிர நிலைப்பாட்டின் பக்கம் கொண்டு செல்வதில் சமூக ஊடகங்களின் பங்கு பெரிது. பல மேற்குலக நாடுகளில் பிறந்து வளர்ந்து மூஸ்லீம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிற்காகப் போராடப் போனதன் பின்னணியில் சமூக ஊடகங்கள் ஆற்றிய பங்கும் வினைத்திறன் மிக்க மூளைச்சலவை வழிமுறையாக சமூக ஊடகங்கள் இருந்ததும் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

இன்று தீவிர நிலைப்பாடுகளின் அனைத்துத் தரப்பிலும் சமூக ஊடகங்கள் வலுவான கருவியாயுள்ளன. குறித்த விடயத்தை அல்லது சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் சமூக ஊடகங்கள் வினைத்திறனுடன் செயலாற்றுகின்றன. இத்தீவிர வலதுசாரி அமைப்புக்கள் தம்மை ஒருங்கமைப்பதற்கான தளமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகின்றன. இவை நாடுகள் கடந்த நிலையில் ஒழுங்கமைக்கப்படுகின்றன. கிரைஸ்சேர்ச் தாக்குதலை மேற்கொண்ட நபர் வெளியிட்டுள்ள “மாபெரும் மாற்றீடு” என்று தலைப்பிட்ட 73 பக்க அறிக்கையானது 2011 இல் நோர்வேயில் 77 பேரைக் கொலைசெய்த குடியேற்ற எதிர்ப்பு பாசிசவாதியான அன்டர்ஸ் பிரேவிக்கின் அறிக்கையை ஒத்திருந்தது. அதேவேளை இத்தாக்குதலுக்கு அன்டர்ஸ் பிரேவிக்கின் ஆசீர்வாதம் இருந்ததாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் அன்டர்ஸ் பிரேவிக்கின் தாக்குதலின் முக்கியத்துவத்தை நோக்க வேண்டும். முதன்முதலாக இணையவழி தீவிரவாதியாக மாறிய நபர் அன்டர்ஸ் பிரேவிக் ஆவார். அவரது சிந்தாந்தம் முழுமையாக இணையத்தின் வழியே உருவாக்கப்பட்டது. அவருக்கு ஆசிரியராகவோ அல்லது ஆலோசகர்களாகவோ யாரும் இருக்கவில்லை. அதேவேளை இணையத்தின் வழியே அவர் துப்பாக்கி சுடவும் குண்;டுகளை உருவாக்கவும் கற்றிருந்தார். இதே நடைமுறையே கிரைஸ்சேர்ச் தாக்குதலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே இன்னமும் தீவிரவாத நிலைப்பாடுகளை எடுக்கும் வழிமுறைகள் இணையத்தில் உள்ளன என்ற ஆபத்து கடந்த எட்டு ஆண்டுகளில் களையப்படவில்லை என்பது புலனாகிறது.

அரசாங்கங்களின் நடத்தையும் எதிர்காலமும்
இத்தாக்குதலை நடாத்திய நபர் எந்த பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கவில்லை எனவே இதை தாம் எதிர்பார்க்கவில்லை என நியூசிலாந்து பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வாறான அதிவலது தீவிரவாத பாசிசவாதிகளை மேற்குலக அரசுகள் தொடர்ந்தும் கண்டும் காணாமலேயே இருக்கின்றன. ஏனெனில் அவற்றுக்கான மறைமுக ஆதரவு அரசாங்க வட்டாரங்களில் உண்டு.

77 பேரைக் கொலைசெய்த அன்டர்ஸ் பிரேவிக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என மனநோய் மருத்துவர்கள் நீதிமன்றுக்கு அறிக்கையளித்தனர். இதை நோர்வே வைத்தியர்கள் சங்கம் ஏற்றுக் கொண்டது. இது பிரேவிக் தண்டனையில் இருந்து தப்புவதற்கான வாய்ப்புகளை உருவாக்கின. இது நோர்வேயில் மிகப்பெரிய விவாதப் பொருளானது. இருந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களது தளராத போராட்டம் பிரேவிக்கை மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படச் செய்து அவர் மனநலம் பாதிக்கப்படாதவர் என்பதை உறுதிசெய்து அவருக்கு தண்டனை வழங்கப்பட வழிசெய்தது. இது அரசாங்க மட்டங்களில் இத்தகைய இனவெறிக் கருத்துக்களுக்கான ஆதரவு இருப்பதை காட்டும் ஒரு உதாரணம் மட்டுமே.

கிரைஸ்சேர்ச் தாக்குதலை நியூசிலாந்து பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார். ஆனால் அவர் வெளிப்படையான ஆசிய எதிர்ப்பு மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிர்ப்பு என்பவற்றையே கொள்கையாகக் கொண்ட நியூசிலாந்து முதலில் (NZ First) என்ற இனவாத, ஜனரஞ்சகவாத கட்சியினை தனது பங்காளிக் கட்சியாகக் கொண்டுள்ளார். முஸ்லீம் விரோதத்தை வெளிப்படையாகப் பேசும் இக்கட்சியின் உறுப்பினர்களே தற்போதைய அரசாங்கத்தில் துணைப் பிரதமர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகிய பதவிகளில் உள்ளனர்.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கெல்லாம் நியூசிலாந்து தனது இராணுவத்தை அனுப்பியுள்ளது. ஆப்கான் தொட்டு ஈராக்கில் தொடர்ந்து அமெரிக்கா முன்னெடுத்த “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில்” நியூசிலாந்துக்கு முக்கிய பங்குண்டு. இது குறித்து அனேகர் அறியமாட்டார்கள். இன்று “அன்பையும் அமைதியையும்” போதிக்கும் நியூசிலாந்து உலகின் அவலங்களுக்கும் போர்களுக்கும் பொறுப்புச் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களுக்கு Nicky Hager எழுதிய Other people’s wars : New Zealand in Afghanistan, Iraq and the war on terror புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

உலகம் பாதுகாப்பான இடமாக இல்லை என்பதை இத்தாக்குதல்கள் காட்டி நிற்கின்றன. வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு உலகையா எமது பிள்ளைகளுக்கு நாம் விட்டுச் செல்லப்போகிறோம் என்பதை எம்மை நாமே கேட்டாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *