ருவாண்டா: இனப்படுகொலையின் 25 ஆண்டுகள்
உலக வரலாற்றில் சில நிகழ்வுகள் என்றென்றைக்கும் நிலைக்கும். அவை என்றென்றும் பேசப்படும். அந்நிகழ்வுகள் ஏன் நடந்தது என்று சொல்லப்படும் கதைகளுக்கும் சொல்லப்படாத கதைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி என்றுமே நிரப்பப்படாது. ஒரு வரலாற்றின் வெற்றியும் இன்னொன்றின் தோல்வியும் இவ்வாறுதான் தீர்மானிக்கப்படுகின்றன. இடைவெளி நிரப்படுவதற்காய் காத்துக் கிடக்கிறது. அதையே வரலாறும் எதிர்பார்த்திருக்கிறது.
இன்றைக்குச் சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் கிழக்காபிரிக்க நாடான ருவாண்டாவில் ஒரு இனப்படுகொலை தொடங்கியது. 100 நாட்களில் எட்டு இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைகள் கடமையில் ஈடுபட்ட போதே இந்த அவலம் நடந்தேறியது. முழு உலகமுமே வேடிக்கை பார்த்தது. இன்றுவரை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்தேறிய மிகமோசமான இனப்படுகொலை இதுவாகும். இக்கட்டுரை மூன்று விடயங்களை ஆராய விளைகிறது. முதலாவது இனப்படுகொலை தொடர்பில் சொல்லப்பட்ட கதைகளும் சொல்லப்படாத கதைகளும் எவை என்பது. இரண்டாவது ருவாண்டா எவ்வாறு அமெரிக்காவினதும் மேற்குலகினதும் தலையீடுகளுக்கு வாய்ப்பாக அமைந்தது என்பது. நிறைவாக இனப்படுகொலையைத் தொடர்ந்த நல்லிணக்கச் செயற்பாடுகளும் இன்றைய ருவாண்டாவின் நிலை பற்றியது.
1994 ருவாண்டா: கதையும் காரணமும்
ருவாண்டாவின் ஹூட்டு மற்றும் டுக்சி இனக்குழுக்களுக்கிடையிலான முரண்பாடு நிண்டகாலமாக நிலவிவந்தது. மிக நீண்டகாலமாக டுக்சி அரசாட்சியின் கீழ் ருவாண்டா ஆளப்பட்டு வந்தது. டுக்சி முடியாட்சியானது கொலனி ஆட்சியாளர்களின் தேவைகளை நிறைவுசெய்தமையால் கொலனி ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் தொடர்ந்து நிலைத்து வந்தது. முதலில் ஜேர்மனி, பிரெஞ்சு ஆகியோரின் சேவகனாகவும் காலப்போக்கில் பெல்ஜியத்தின் ஆளுகைக்குட்பட்டும் செயற்பட்ட டுக்சி முடியாட்சியில் ஹூட்டு இனக்குழுக்களுக்கெதிரான செயற்பாடுகள் நடந்தேறின. ருவாண்டாவின் சனத்தொகையில் 85%மானவர்கள் ஹூட்டுக்கள், 14%மானவர்களே டுக்சிக்களாவர். 1959இல் ருவாண்டாவில் காலனியாதிக்கத்துக்கும் டுக்சி முடியாட்சிக்கும் எதிராகத் தொடங்கிய புரட்சி 1961 இல் பெல்ஜியர்களை நாட்டை விட்டு விரட்டியதோடு ஜனநாயகத் தேர்தல்கள் நடாத்தப்பட்டு ருவாண்டா சுதந்திரக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. தேர்தல்களில் வெற்றிபெற்ற ஹூட்டுக்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். 1962இல் ருவாண்டா விடுதலையடைந்தது. சிறுபான்மை டுக்சிகள் நாட்டை விட்டோடி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
1990ம் ஆண்டு அண்டைநாடான உகாண்டாவில் குடிகொண்டிருந்த டுக்சிக்கள் ‘ருவாண்டா தேசப்பற்று முன்னணி’ என்றவொரு அமைப்பை போல் ககாமி மற்றும் பிரெட் ருவிக்யேமா ஆகியோர் உருவாக்கினர். உகாண்டாவில் இருந்து கொண்டு ருவாண்டா மீது தாக்குதல் நடாத்தினர். ருவாண்டாவைக் கைப்பற்றும் இவர்களது முதலாவது முயற்சி ருவாண்ட இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இதில் ருவிக்யேமா கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து இவ்வமைப்புக்குத் தலைமையேற்க அமெரிக்காவில் வசித்துவந்த போல் ககாமி உகாண்டாவிற்கு வந்தார். ககாமி உகாண்டா இராணுவத்தில் பணியாற்றியவர். அமெரிக்க இராணுவக் கல்லூரியில் பயின்றவர். ககாமிக்குக்கும் அவரது தேசப்பற்று முன்னணிக்கும் அமெரிக்க ஆதரவு இருந்தது. ருவாண்டாப் படைகளுக்கு பிரெஞ்சு இராணுவ உதவி இருந்தது. சோவியத் யூனியனின் உடைவோடு முடிவுக்கு வந்த கெடுபிடிப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் முதல் முரண்பாடு ருவாண்டாவிலேயே அரங்கேறியது.
ருவாண்டா முன்னாள் பிரெஞ்சுக் காலனியாக இருந்தது. ஆதை அண்டிய நாடுகளிலும் பிரெஞ்சே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. 1990ம் ஆண்டு தேசப்பற்று முன்னணியின் ருவாண்டா அரசுக்கெதிரான செயற்பாடுகளை பிரான்ஸ் சந்தேகக் கண்கொண்டு பார்த்தது. அந்நாள் பிரெஞ்ச் அதிபர் பிரெஞ்சுவா மித்திரோன் ஆங்கில-டுக்சி பிரதேசமொன்றை உருவாக்க முனையும் ஆபத்தாக தேசப்பற்று முன்னணியின் செயற்பாடுகளைக் கருதினார்.
ஹூட்டு இனத்தவரான ருவாண்டாவின் ஜனாதிபதி ஜூவனால் ஹபியரிமானாவுக்கு பிரான்ஸின் முழுமையான ஆதரவு இருந்தது. ருவாண்டா அரசுக்கும் டுக்சிப் போராளி அமைப்பான ருவாண்டா தேசப்பற்று முன்னணிக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை 1993 ஆகஸ்ட் மாதத்தில் தன்சானியாவின் அரூசா நகரில் உடன்படிக்கை கைச்சாத்தானது. இதன்படி சமாதானத்தை பேணுவதற்கு ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகள் ருவாண்டாவில் நிலைகொண்டன.
1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹூட்டு இனத்தவர்களான ருவாண்ட ஜனாதிபதி ஜூவனால் ஹபியரிமானா மற்றும் புரூண்டி ஜனாதிபதி சிப்ரியோன் டரியரோ ஆகியோர் பயணம் செய்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு இருவரும் மரணமடைந்தனர். நீண்டகால டுக்சி சிறுபான்மை இனத்தவரின் ஆட்சியை அவ்வாண்டு தொடக்கத்திலேயே டரியரோ தேர்தல்களில் வென்று முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார்.
ஹூட்டு இனத்தின் அடையாளங்களாக இருந்த இருவரின் மரணம் ருவாண்டாவில் பெரும்பான்மை ஹூட்டு இனத்தவரிடையே அளவுகடந்த கோபத்தை உண்டாக்கியது. அதேவேளை சமாதான உடன்படிக்கை நடைமுறையில் இருந்தபோதும் இரு இனக்குழுக்களிடையிலான முரண்பாடு தொடர்ச்சியாகக் கூர்மையடைந்து வந்தது. இரு ஜனாதிபதிகளின் மரணம் இனப்படுகொலைக்கு வித்தாக அமைந்தது. அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திய ருவாண்ட இராணுவம் ஆட்சியதிகாரத்தைக் கையிலெடுத்து டுக்சி இனத்தவர்களுக்கெதிரான வன்முறையைத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கிவந்த தேசப்பற்று முன்னணி இராணுவத்திற்கெதிரான போரைத் தொடங்கி 100 நாட்களில் தலைநகர் கிகாலியைக் கைப்பற்றி இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து தேசப்பற்று முன்னணியின் தலைவராக இருந்த போல் ககாமி ஜனாதிபதியானார். இன்றுவரை அவர் ஜனாதிபதியாகத் திகழ்கிறார். இவை எமக்குச் சொல்லப்பட்டுள்ள கதைகள்.
எமக்குச் சொல்லப்படாத கதைகள் சில உண்டு. விமானத்தைச் சுட்டுவீழ்த்தியது ககாமியின் படைகளே. அவர்களுக்கு விமானத்தைச் சுட்டுவீழ்த்தும் சாம் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியிருந்தது. இச்சம்பவம் சமாதான உடன்படிக்கை நடைமுறையில் இருந்தபோதே நிகழ்ந்தது. அரசாங்கத்தில் இருந்த ஹூட்டுகளிலேயே சமாதானத்தை விரும்புவரான கொல்லப்பட்ட ஹபியரிமானா இருந்தார். அவர் எக்காரணம் கொண்டு டுக்சிக்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தக்கூடாது என்று விரும்பினார். ஆனால் கடும்போக்கு ஹூட்டுக்கள் அவரைக் கடுமையான எதிர்த்தனர். ஹபியரிமானாவைக் கொலைசெய்வதன் மூலம் வன்முறை வெடிக்கும் என அறிந்தே கெகாமியின் படைகன் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினர். அவர்கள் தாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குரிய வழியாகவே இதைக் கண்டனர்.
அதேவேளை ககாமியின் தேசப்பற்று முன்னணியினரால் ஏராளமான ஹ_ட்டுக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தேசப்பற்று முன்னணியினரின் முன்னேற்றைக் கண்டு தன்சானியாவுக்குத் தப்பியோட முயன்ற ஹூட்டுக்கள் 250,000 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதைவிட இன்னும் பலர் அண்டை நாடான கொங்கோவில் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை எந்தக் குற்றங்களுக்காகவும் ககாமி விசாரிக்கப்படவில்லை. ருவாண்டா தேசப்பற்று முன்னணியின் போர்க்குற்றங்களை அறிய யூடி ரேவர் எழுதிய In Praise of Blood: The Crimes of the Rwandan Patriotic Front நூலை வாசிக்க வேண்டுகிறேன்.
1994ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்’ (International Criminal Tribunal for Rwanda) ககாமியையோ ஏனைய தேசப்பற்று முன்னணியின் படைவீரர்களையோ குற்றவாளியாகக் காணவில்லை. இன்றும் ருவாண்டாவின் சர்வாதிகாரியாக ககாமி வலம் வருகிறார். அவருக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது. இவை ருவாண்டாவின் இனப்படுகொலை குறித்துப் பேசப்படும்போது பேசப்படாத விடயங்கள்.
கெடுபிடிப்போருக்குப் பின்னரான மேற்குலகின் விளையாட்டுக்களம்
ருவாண்டாவில் அரசாங்கத்திலும் இராணுவத்திலும் இருந்த ஹூட்டு கடும்போக்குவாதிகளுக்கும் பிரான்சுக்கும் நல்ல உறவு இருந்தது. இயற்கை வளங்களும் கிழக்கு ஆபிரிக்காவின் கேந்திர முக்கியத்துவமான நாடு ஆகிய காரணங்கள் மேற்குலகு ருவாண்டாவைக் குறிவைக்கக் காரணமானது. டுக்சிகளை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் என்றென்றைக்கும் அமெரிக்க நலன்களை ருவாண்டாவில் பேண முடியும் என அமெரிக்கா கணக்குப் போட்டது. ஆமெரிக்க ஆதரவு இன்றி சிறுபான்மை டுக்சிக்களால் ஆட்சியில் நிலைக்க முடியாது என்பதை அமெரிக்கா அறியும். இதனாலேயே டுக்சிக்களுக்கான ஆதரவை அமெரிக்கா வழங்கியது. ருவாண்டாவில் வன்முறை ஏற்படுவதே டுக்சிக்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான வழி என்று அமெரிக்கா நினைத்தது. அதற்கான வழிகளை வகுக்கத் தொடங்கியது.
இதேகாலப்பகுதியில் ஐ.நா. அமைதிகாக்கும் படைக்குத் தலைமைதாங்கிய ரோமியோ டிலெயருக்கு 1994 ஜனவரியில் கடும்போக்குவாத ஹூட்டுக்கள் டுக்சிக்களுக்கு எதிரான வன்முறைக்குத் தயாராவதாகத் தகவல் கிடைக்கிறது. அத்தகவல் உண்மையானது என்பதை அவரது உளவுப்பிரிவு உறுதிசெய்கிறதது. உடனடியாக இதுகுறித்து அவர் தனது தலைமையகத்துக்குத் தகவல் அனுப்புகிறார். முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டால் இதைத் தடுத்து நிறுத்த முடியும். தனது இராணுவத்தின் உதவியால் இதைச் செய்யலாம். ஆதற்கு அனுமதி அளிக்கக் கோரினார். இவருக்கு பதிலளித்த ஐ.நா. அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான கொபி அனான் ‘எக்காரணம் கொண்டு இராணுவத்தைக் கூடாரங்களில் இருந்து வெளியே அனுப்ப வேண்டாம். உள்நாட்டு விவகாரங்களில் நாம் தலையிடத்தேவையில்லை’ எனப் பதில் அனுப்புகிறார். டிலெயர் அனானுக்கு பிரச்சனையின் தீவிரத்தை விளக்க முனையும் போது தான் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுடன் பேசியதாகவும் அமெரிக்கா இவ்விடத்தில் ஐ.நா. அமைதிகாக்கும் படையின் தலையீட்டை எதிர்ப்பதாகவும் எனவே அமைதிகாக்கும்படியும் கேட்டுக் கொண்டார். இவை அனைத்தையும் தனது நூலில் டிலெயர் குறிப்பிடுகிறார். ருவாண்டா எவ்வாறு மேற்குநாடுகளின் அதிகாரப் போட்டியின் களமானது என்பதையும் ஐ.நா. எவ்வாறு செயலற்று இருந்தது என்பதையும் விளங்கிக் கொள்ள டிலெயரின் Shake Hands with the Devil: The Failure of Humanity in Rwanda நூலை வாசிப்பது முக்கியமானது.
ருவாண்டாப் படுகொலைகள் சர்வதேச சமூகத்தின் இயலாத தன்மையை வெளிக்காட்டின. நடந்தேறிய கொலைகளையும் அதைப் பக்கங் சார்ந்து நடத்தி வைத்த மேற்குலக நாடுகளின் ஆதிக்க வெறியையும் செய்வதறியாது உலகமே விக்கித்து நின்றது. அமெரிக்கா இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி உலக நாடுகளில் தான் தலையிடுவதற்கு வாய்ப்பான ‘காக்கும் கடப்பாடு’ (Responsibiltiy to Protect – R2P) என்று கருத்துருவாக்கத்தைச் செய்தது. இதுவே ஈராக் முதல் லிபியா நாடுகளில் தலையிடக் காரணமாக அமைந்தது.
நிறைவாக
இன்று 25 ஆண்டுகள் கழித்தும் அமைதி திரும்பவில்லை. பொருளாதார ரீதியான கணிசமான வளர்ச்சியை ருவாண்டா கண்டுள்ளது. ஆனால் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கமோ சுமூகமான நிலையோ ஏற்படவில்லை. டுக்சி சிறுபான்மையினரே நாட்டை ஆட்சி செய்கிறார்கள். கொலையாளிகள் என்ற பெயர் இன்னமும் ஹூட்டுக்களை வதைக்கிறது. கொல்லப்பட்டவர்கள் என்று டுக்சிகள் மீதான இரக்கம் அதிகாரமாகவும் அடாவடியாகவும் மாறியுள்ளது. ஹூட்டுக்கள் இன்னமும் புறக்கணிக்கப்படுகிறார்கள். அமெரிக்கா ஆதரவுடன் ககாமி இன்னமும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார். நல்லிணக்கம் பேச்சளவிலேயே உள்ளது.