சமூகமாக வாழுதல் என்னும் சவால்
பல மொழி பேசுபவர்களையும், வெவ்வேறு மதங்களை உடையோரையும், வேறுபட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தோரையும் கொண்ட பன்மைச் சமூகமே இலங்கைச் சமூகம். ‘சேர்ந்து வாழுதல்’ என்பதே இலங்கை மக்களின் தாரகமந்திரமாக இருக்கிறது. இச்சமூகம் தொடர்ச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ள போதும் சமூகமாகச் சேர்ந்து வாழுதல் என்பது நடைபெற்று வந்துள்ளது. மூன்று தசாப்தகாலப் போர் இனக்குழுக்களிடையே அச்சத்தையும், ஐயத்தையும் உருவாக்கிய போதும் மக்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள்.
இலங்கையையே ஆட்டக் காணச் செய்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் மக்கள் இணைந்து ஒன்றாக வாழ்தலில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. ஒரு சிலரின் நடத்தை அவர்கள் சார்ந்த முழுச் சமூகத்தையும் பாதிக்கின்றது. ஏனெனில் குறித்தவொரு நபரோ நபர்களோ செய்கிற காரியம் குறித்த நபரால் செய்யப்பட்ட தனிப்பட்ட செயலாகப் பார்க்கப்படுவதில்லை, மாறாக அவர்களை அடையாளப்படுத்தும் சமூகம் சார்ந்த செயலாகப் பார்க்கப்படுகிறது. இதனால் சில தனிமனிதர்களின் நடத்தைக்கு முழுச்சமூகமும் விலை கொடுக்க வேண்டியும் பதில் சொல்ல வேண்டியும் ஏற்படுகிறது.
இவ்வாரம் வெடித்த குண்டுகள் பாரபட்சம் பார்க்கவில்லை. சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், இந்துக்கள், கிறீஸ்தவர்கள், வெளிநாட்டவர்கள் என அனைவரையும் கொன்று தீர்த்துள்ளது. அதேபோல காயம்பட்டவர்களுக்கு மேலதிக இரத்தம் தேவைப்பட்ட போது எல்லோரும் வேறுபாடு இன்றி இரத்ததானம் செய்தார்கள். இலங்கையர்களின் உண்மையான குணம் அத்தருணத்தில் வெளிப்பட்டது. கருணையும், அன்பும் பிறருக்கு உதவும் குணமும் எமது சமூகத்தில் உட்பொதிந்திருக்கும் உள்ளாந்த பண்புகள். இந்தப் பண்புகள் எம்மை ஆளட்டும். எமது சமூகத்தை ஆளட்டும்.
நடைபெற்றுள்ள நிகழ்வுகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியன. அதற்குப் பொறுப்பாணவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இவை ஒரு மொத்த சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியாக பரிணாமம் அடைவதை அனுமதிக்கக் கூடாது. நடைபெற்ற சம்பங்களுக்கு அரசும் அதைச் சார்ந்தோரும் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் இருக்கின்றன. அக்கேள்விகளை சமூகமாக நாம் அரசிடம் கேட்போம். உணர்ச்சிகரப் பேச்சுக்கள் மூலம் பிரச்சனைகள் மடைமாற்றப்படுவதைத் தடுப்போம்.
இலங்கை மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. இலங்கையின் போருக்குப் பிந்தைய சமூகம் என்ற சூழல் மிகக்கொடுமையான முறையில் மீள்ஒழுங்குபடுத்தப்பட்டு இருக்கிறது. அவசகரகால நிலைப் பிரகடனமும் ஊரடங்கும் நாம் கடந்துவந்த மோசமான கடந்தகாலத்தின் துயர நினைவுகளை மீள் உயிர்ப்பிக்கின்றன.
போருக்குப் பிந்தைய இலங்கைச் சமூகம் வலுவிழந்த ஜனநாயகத்திற்கும் மென்மையான சர்வாதிகாரத்திற்கும் இடையே தொடர்ச்சியாக ஊசலாடிக் கொண்டே வந்துள்ளது. 2015ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஜனநாயகத்தை வழிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அது நடக்கவில்லை. 2015க்கு முந்தைய ஆட்சி நிறுவனமயப்படுத்தி தக்கவைக்க ஜனநாயக மறுப்பு இன்னமும் பல தளங்களில் நடைமுறையில் இருக்கிறது. இது அரசாங்கம் தொடந்தும் ஜனநாயகமாதலுக்கு உள்ளாகாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டது.
அரசாங்கத்தின் உயரடுக்குகளில் உள்ள நபர்கள் மாற்றப்படுவதற்கு வெளியே பாரிய மாற்றங்களை நாம் காணவில்லை. ஜனநாயகமாதலுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்ற நிலையிலேயே அண்மைய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இவை எமது ஜனநாயகத்துக்கான கோரிக்கைளுக்கு பலத்த அடியாகியுள்ளன. இது இலங்கையை மீண்டும் ஏதேச்சாதிகாரப் பாதையில் அழைத்துச் செல்லும் ஆபத்தை தன்னுள் அடக்கியுள்ளது.
இந்த ஆபத்தை இலங்கையர்கள் உணர வேண்டும். கருத்துரிமையின் மீதான அரச கட்டுப்பாடு, சனநாயகம் நெருக்கடிக்குள்ளாகும் போது அதிகமாகிறது. ஒரு அரசு சனநாயகத் தோற்றத்தைக் காட்டிக்கொண்டு கருத்துரிமையைக் கட்டுப்படுத்துவது கடினம். எனவே, நாட்டில் பாதுகாப்புக்கு மிரட்டல் என்பது அத்தகைய கட்டுப்பாடுகட்கு அத்தியாவசியமான ஒரு முன் நிபந்தனையாகிறது. பாதுகாப்பின் பேரால் எமது அடிப்படை உரிமைகள் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை தனியே ஒரு இனக்குழுவாலோ அல்லது சிறிய மக்கள் தொகையாலோ உறுதி செய்யவியலாது.
நூம் எல்லோரும் சமூகமாகச் சேர்ந்து வாழவேண்டும். எமக்கான பிரச்சனைகளுக்கு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அண்மைய நிகழ்வுகள் சமூகமாக வாழுதல் என்ற சவாலை எழுப்பியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மக்கள் பிரிக்கப்படுவது ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் அவர்களது அரசியலுக்கும் வாய்ப்பானதே ஒழிய மக்களுக்கு வாய்ப்பானதில்லை.
மக்கள் சமூகமாக வாழுதலே எமது ஜனநாயக உரிமைகளைத் தக்க வைப்பதற்கும் மீட்பதற்குமான முதற்படி. நாம் எமது எதிர்காலத்தை ஜனநாயகத்தை நோக்கி நகர்த்தப்போகிறோமா அல்லது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தப்போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டும். அனைத்து அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக வேறுபாடின்றிக் குரல் கொடுப்போம், போராடுவோம், சமூகமாய் வாழ்வோம்.
இதற்கான குரல் முன்பெப்போதையும் தவிர இப்போது ஓங்கி ஒலிக்க வேண்டியுள்ளது. இக்குரல் ஜனநாயகத்துக்கான குரல், மக்கள் தங்கள் உரிமைகளைத் தக்கவைப்பதற்கான குரல். பழிவாங்கும் மனோநிலையும் பிரிக்கப்பட்ட சமூகங்களும் ஜனநாயகத்தின் எதிரிகள். அவை பாதுகாப்பின் பேரால் எமது உரிமைகளை அடகுவைக்கின்றன. இப்போது குரல் கொடுக்கத் தவறின் பின்னர் குரல் கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமலே போகலாம். இங்கு பலர் பட்டுவேட்டி பற்றிய கனாவில் இருக்கிறார்கள், கட்டியிருந்த கோவணம் களவாடப்படுவதை அறியாமல்.