பன்மொழித்துவமும் அரசியலும்
அரசியலும் பன்மொழித்துவத்துக்கும் நிறையவே தொடர்புண்டு. பல்லின, பல்மொழி பேசுகிற சமூகங்கள் வாழுகின்ற நாடுகளில் இதன் அரசியற்பரிமாணம் மிகப்பெரியது. அவ்வகையில் அண்மையில் வெளிவந்துள்ள Multilingualism and Politics: Revisiting Multilingual Citizenship (பன்மொழித்துவமும் அரசியலும்: பன்மொழித்துவ குடியுரிமையை மீள்பார்வையிடல்) என்ற நூல் இந்த ஆய்வுப்பரப்புக் குறித்த சில முக்கியமான செய்திகளைச் சொல்கிறது.
இந்நூல் இவ்விடயங்களை இரண்டு கோணங்களில் அலவுகிறது. முதலாவது அரசியலில் பன்மொழித்துவம், அதன் செல்வாக்கு செல்நெறி ஆகியன. இரண்டாவது பன்மொழித்துவத்தின் அரசியல் பற்றியது. தத்துவார்த்தத் தளத்திலும் நடைமுறையியலிலும் நின்று இந்த ஆய்வுப்பரப்பபை இந்த நூல் நோக்குகிறது. குறிப்பாக தேசிய அடையாளம், சிறுபான்மை மொழிசார் கொள்கைகள், அரசியல் விவாதங்கள் மற்றும் உரையாடல்களின் மொழிமாற்றம் அதன் அரசியல் போன்றவற்றை பல நாட்டு உதாரணங்களுடன் ஆராய்கிறது.
பன்மொழி யதார்த்தத்துக்கும் தனிமொழிக் கோட்பாட்டுருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான பதட்டநிலை நிலவிவருகிறது. குறிப்பாக ஜனநாயகம் நிலைபெற்றுள்ள சமூகங்களில் இந்தப்பொதுவெளிகள் தொடர்ச்சியாக சவாலுக்குட்பட்டதாகவே இருக்கின்றன.
கல்வியில் தொடக்கி அன்றாட உரையாடல், சமூகவெளி, அரசியற்களம் என அனைத்துத் தளத்திலும் மொழி எவ்வளவு முக்கியம் பெறுகிறது என்பதையும் பல்மொழிச் சமூகங்கள் கவனம் குவிக்க வேண்டிய விடயங்களையும் இந்த நூல் தொட்டுக் காட்டுகின்றது. மொழியிலும் அரசியலும் இவை இரண்டும் இணையும் புள்ளியிலும் ஆர்வமுள்ளளோர் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
மேலதிக தகவல்களுக்கு: https://www.palgrave.com/gb/book/9783030407001