பௌத்த பெண்ணியம்: ஆணதிகாரச் சமூகத்திற்கெதிராக கோபத்தை நிலைமாற்றல்
முறையான ஒழுங்கமைந்த சிந்தனைப் போக்குகளே மேற்குலக தத்துவார்த்த மரபின் நடைமுறையாக இருந்தது. இதிலிருந்து முரண்பட்ட போக்குகளைக் கொண்ட தத்துவங்களே இச்செல்நெறியில் கலகத்தை உருவாக்குபவை. அவ்வகையில் பெண்ணியமும் பௌத்தமும் முக்கியமானவை. பௌத்தம் முதலில் தேரவாதம், மகாயானம் என இரு பிரிவுகளாகவும் பின்னர் அவை உபபிரிவுகளாகவும் பிரிந்தன. அதேபோன்றே பெண்ணியமும் ஒருபடித்தான சிந்தனைப்போக்கு அல்ல. இவ்விரண்டும் தனித்தனியே செயற்பட்டு வந்துள்ளன. இரண்டும் இணைந்து எவ்வாறு ஆணதிகாரத்திற்கு எதிராக போராட முடியும் என்பதை ஆராயும் நூலே “பௌத்த பெண்ணியம்: ஆணதிகாரச் சமூகத்திற்கெதிராக கோபத்தை நிலைமாற்றல்” (Buddhist Feminism: Transforming Anger against Patriarchy).
பெண்ணியம் பௌத்தத்திலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியது என்ன என்பதையும் பௌத்தம் பெண்ணியத்தில் இருந்து கற்றுக் கொள்ளக்கூடியது என்ன என்பதையும் இருவழிப்பாதையாக ஆராய் இந்நூல் முனைகிறது. மேற்குலகத் தத்துவப்போக்கில் கோபம் என்பது ஏன் பிரதான பேசுபொருளாக இன்றி அடக்கிவாசிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்ற வினாவுடன் தொடங்குகின்ற இந்நூல் அதிலிருந்து பௌத்தத்தில் உள்ள கோபம் சார் சிந்தனைக் தொட்டு பெண்ணியத்தில் கோபம் சார் சிந்தனைகளைப் பேசுகிறது. பெண்ணியம் முன்வைக்கும் ஆணாதிகாரச் சமூகத்திற்கெதிரான கோபத்தை எவ்வாறு பயனுறுதி வாய்ந்த செயல்படுத்துவது என்ற வினாவுடன் இந்நூல் தொடர்கிறது. பௌத்தம், பௌத்த கோட்பாடுகள், பௌத்த நடைமுறை ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளியை பெண்ணிய நோக்கில் விரிவாகப் பேசும் இந்நூல் பெண்களுக்கு என்று தனியான ஒரு மகாசங்கத்தின் தேவை குறித்தும் பேசுகிறது. சிந்தனைக்குரிய பல வாதங்களை முன்வைக்கும் இந்நூல் தத்துவம் சார்ந்தும் பெண்ணியம், பௌத்தம் சார்ந்தும் இயங்குவோர், வாசிப்போர் கணிப்பில் எடுக்க வேண்டியதொன்றாகும்.
மேலதிக தகவல்களுக்கு: https://www.palgrave.com/gp/book/9783030511616