அரசியல்உலகம்உள்ளூர்

கொவிட் வைரஸ் கதையாடல்-3: 2020 பெருந்தொற்றின் ஆண்டு

ஒவ்வோர் ஆண்டைப் போலவும் இவ்வாண்டும் கடந்து போகிறது என்று சொல்லிவிட முடியாத வகையில், 2020இல் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

2020 ஆண்டு, எமக்குக் கற்றுத்தந்த பாடங்கள் எவை என்பதை நாம் சிந்தித்தாக வேண்டும். மனிதகுலம் தனது தவறுகளில் இருந்து, தன்னைத் திருத்திக் கொண்டதன் விளைவாலே முன்னேறியிருக்கிறது. அவ்வகையில், இந்தப் பெருந்தொற்றும் அதனோடு இணைந்த செயல்களும் மனிதர்களுக்கு சில முக்கியமான பாடங்களை விட்டுச் செல்கின்றன. அது குறித்து, ஆழமாகச் சிந்திப்பது எதிர்காலம் குறித்த முடிவுகளுக்குப் பயனுள்ளது.

இவ்வாண்டு, எமக்கு விட்டுச்செல்லும் முதலாவதும் பிரதானதுமான பாடம் யாதெனில், அரசுகளுக்கு மக்களா அல்லது, அதிகாரவர்க்கத்தின் நலன்களா என்ற கேள்வி எழும்போது, மக்கள் என்றுமே முன்னிலை பெறுவதில்லை.

இப்பெருந்தொற்றைக் கையாளுவதில் அரசுகளின் நடத்தை, இதையே உறுதி செய்துள்ளது. இது, அரசுகள் யாருக்கானவை என்று தொடர்ந்து கேட்கப்பட்டு வந்த வினாவுக்கான விடையைப் பகர்ந்துள்ளது. அனைத்து நாடுகளும், இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த இயலாமல் திணறுகின்றன. இது பாரிய சமூகப் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்ற போதும், நாடுகள் மீண்டும் முழுமையான முடக்கத்தை நடைமுறைப்படுத்தத் தயங்கின. அவை வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பது, அதற்கான பிரதான காரணியாக இருந்தது; இன்னமும் இருக்கிறது. அரசுகளும் சரி, அரசியலும் சரி மக்களை மையப்படுத்தியதாக இயங்கவில்லை.

இரண்டாவது பாடம், அரசுகள் இந்தப் பெருந்தொற்றை மட்டுமல்ல, இனிவரும் எந்தவொரு பெருந்தொற்றையும் கையாளுவதற்குத் தயாராக இல்லை. இந்தப் பெருந்தொற்று ஏற்பட்டது முதல், அரசுகளினதும் சர்வதேச அமைப்புகளினதும் நடத்தை, இதை எடுத்துக் காட்டியுள்ளது. தடுப்பூசியே இதைத் தடுப்பதற்கான வழி என்று முடிவுசெய்யப்பட்டே, கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் இந்தவார நிகழ்வுகள், தடுப்பூசி மட்டுமே தீர்வாகாது என்பதை உணர்த்தி நிற்கின்றன.

மூன்றாவது, ஜனநாயகம் மிகுந்த சவாலுக்கு உட்பட்டுள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதானால், ஜனநாயகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தல் என்பது, அனைத்திலும் பிரதானமானதாக அமைந்துவிட்ட நிலையில், ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள் கூடப் புறக்கணிக்கப்பட்டன; மீறப்பட்டன. பெருந்தொற்றுப் போன்ற பாரிய நெருக்கடிகள், ஜனநாயகத்துக்கு மிகவும் சவாலானவை.

இவ்விடயத்தில், இரண்டாம் உலகப் போரையடுத்து நடைபெற்ற மாற்றங்களை, இங்கு நினைவுபடுத்தல் தகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் உருவான ஆட்சிகள்,  ஜனநாயக ஆட்சிகளாக மாறவில்லை. மாறாக, ஆட்சி மாற்றங்களில் 75%மானவை சர்வாதிகாரத்தன்மையான ஆட்சிகளாகவே உருவாக்கின. இவ்வாறு உருவான புதிய சர்வாதிகார ஆட்சிகள் நிலைபெற்றன.

மாறாக, தோன்றிய ஜனநாயக ஆட்சிகள் நீண்டகாலம் நிலைக்கவில்லை. அதேபோல, பெரும் நெருக்கடிகளுக்குப் பிந்திய ஆட்சி மாற்றங்களில் ஜனநாயகப் பண்புடைய ஆட்சிகள் நீண்டகாலம் நிலைக்கவில்லை. அதேவேளை, சர்வாதிகாரமாக உருவான ஆட்சிகள், நீண்டகாலம் நிலைத்துள்ளன. இந்தப் பெருந்தொற்றும், அதேவகையிலான ஒரு பாதையை நோக்கி நகர்வதை, எம்மால் இனங்காண முடிகிறது.

நான்காவது, சமூக அசைவியக்கத்தின் அடையாளமாக இந்தப் பெருந்தொற்று மாறியுள்ளது. இந்நிலையில், இதை மையப்படுத்தி நடைபெறும் அரசியல் கதையாடல்கள் சிக்கலானவையாயுள்ளன. இப்பெருந்தொற்றை அடிப்படையாகவும் வாய்ப்பாகவும் கொண்ட அடையாள அரசியல் ஒருபுறம், ஆதிக்க சக்திகளை வலுப்படுத்துவதற்கு உதவுவதைக் காண்கிறோம்.

மறுபுறம், இது  குறிப்பிட்ட அடையாளங்களுக்குள் தன்னைச் சுருக்கி, சமூக விடுதலைக்கும் சமூக நீதிக்கும் ஊறு விளைவிப்பதையும் காணலாம். மொத்தத்தில், பெருந்தொற்றை மையப்படுத்திய அரசியல் தன்னைத் தனிமைப்படுத்தியுள்ளது.

இந்த நான்கின் அடிப்படையிலும், நாம் விளங்கிக் கொள்வது யாதெனில், தேசியவாதமும் இனவாதமும் மதவாதமும், பெருந்தொற்றைக் கையாள இயலாத அரசுகளுக்கான, என்றும் பயனுள்ள கருவிகளாகும்.

அதேவேளை, பெருந்தொற்றின் இரண்டாவது அலை, தவிர்க்கவியலாமல் பாசிச நகர்வுகளை நோக்கி, அரசுகளைத் தள்ளுகின்றன; இன்னமும் தள்ளும். மதம்சார்ந்த தேசியமும் தேச அடையாளமும் தேசப்பற்றும், அத்தேசிய அடையாளமற்ற சக சமூகத்தினரைப் பகையாகக் காட்டலும், பெருந்தொற்றின் பின்னரான பாசிசத்தின் தேவைகளாயுள்ளன. இதைத் திசைதிருப்பல்கள் ஊடாக, அரசுகள் மெதுமெதுவாகச் சாதிக்கின்றன.

கடந்துபோகும் இவ்வாண்டைத் திரும்பிப் பார்க்கையில், இரண்டு பிரதான கேள்விகளை இங்கு எழுப்புதல் தகும். இவை இரண்டும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருந்தொற்றோடு தொடர்புடையவை.

1.அமெரிக்காவில் ஒரு கொலையுடன் தொடங்கி, உலகெங்கும் பரந்து விரிந்த Black Lives Matter போராட்டங்கள், இன்று எந்தக் கட்டத்தில் நிற்கின்றன. கறுப்பின மக்களின் வாழ்வில், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா?

2. இவ்வாண்டு தொடக்கத்தில், அவுஸ்‌ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மூன்று மில்லியன் விலங்குகள் இறந்தன. ஊலகெங்கும் வரட்சி அதிகரித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாதளவு காலநிலைசார் அனர்த்தங்களை இவ்வாண்டு உலகம் சந்தித்தது. ஆனால், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தக் காத்திரமான நடவடிக்கைகளை மனிதகுலம் எடுத்துள்ளதா?

இவ்விரு கேள்விகளும் கொவிட்-19 நோயின் பெருந்தொற்றும், மனிதகுலத்தின் நடத்தைசார் கோலங்களைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. ஜனநாயகத்தின் நெருக்கடி, பொருளாதாரப் பின்னடைவுகள், ஆட்சியியல் சவால்கள் என, அரசுகள் பல முனைகளில் சிக்கலில் உள்ளன.

கண்ணுக்குத் தெரியாத எதிரியைக் கைகாட்ட இயலாததால், கண்ணுக்குத் தெரிந்த எதிரியை உருவாக்கும் முனைப்பில் பல அரசாங்கங்கள் இறங்கியுள்ளன.

இன்று தேசியவாதம், நிறவெறி, இனஒதுக்கல் என்பன முதன்மையான அரசியல் ஆயுதங்களாகி உள்ளதன் பின்னணி இதுவே. ஒவ்வொரு நாடும் நாட்டுக்குள்ளே உள்ள எதிரிகளைச் சமாளிக்க இயலாமல், திசைதிருப்பலில் ஈடுபட்டுள்ளன. ஒரு கோட்டைச் சிறிய கோடாகக் காட்ட வேண்டுமாயின், அதற்கருகில் அதனிலும் பெரிய கோட்டைக் கீறுவது போதுமானது. அனேகமான நாடுகளின் அரசியல் தலைமைகள், இதையே செய்து கொண்டிருக்கின்றன.

நிச்சயமின்மையின் நிச்சயம், அரசியல் வெளியைத் தாண்டி, சமூகக் பண்பாட்டுப் பொருளாதார வெளிகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இன்னொரு புறம், அரசியல் ரீதியான வங்குரோத்து நிலையைச் சமாளிக்க, இப்பெருந்தொற்று வாய்ப்பாயுள்ளது. கருத்துச் சுதந்திரம், உரிமைகள் ஆகியன காவுகொடுக்கப்பட்டுள்ளன.

இனி என்ன செய்வது என்ற கேள்வி எம் அனைவரிடம் உண்டு. இதற்கான விடையையும் கடந்து போகும் இவ்வாண்டையும் கவிஞர் சி. சிவசேகரத்தின் ‘ஊடரங்கு’ என்ற கவிதை அழகாகச் சொல்கிறது.

உங்கள் நன்மைக்காகவே யாதையுஞ் செய்வதாக
ஒவ்வொரு அரசாங்கமுஞ் சொல்கிறது.
கொள்கையும் நடைமுறையும் தம்முள் முரண்படினும்
அரசாங்கங்கள் மாறிக் கொள்கையும் நடைமுறையும் மாறினும் எவர் உம்மை ஆளினும்
அவர் உமக்கு எதைச் செய்யினும்
அரசாங்கம் அதை உங்கள் நன்மைக்காகவே
செய்வதென எல்லா மொழிகளிலும் எல்லாச்
செய்தியேடுகளும் சொல்வன.
வானொலியும் அதையே
தொலைக்காட்சியும் அதையே
இணையத் தளங்களும் அதையே தவறாமற் சொல்வன.
அந்நியரிடமிருந்து உம்மைக் காக்கவும்
பயங்கரவாதிகளிடமிருந்தும்
பிரிவினைவாதிகளிடமிருந்தும்
ஆர்ப்ப்பாட்டக்காரரிடமிருந்தும்
உம்மைக் காக்கவும்
அரசாங்கம் ஊரடங்கைப் பிறப்பிக்கிறது.
இம்முறை உம்மிடமிருந்து உம்மைக் காக்க
அரசாங்கம் ஊரடங்கைப் பிறப்பித்தது.
நடுநடுவே உம்மைச் சிறை நீக்கி அவிழ்த்து
விடுகையில் வாயையும் மூக்கையும் மூடி உரையாடவும்
ஒவ்வொரு கதவையும் தாண்டுகையில்
மறுப்பின்றிச் சவர்க்காரத்திலும் சனிற்றைசரிலும் கைகளை
நனைக்கவும் தவறாது உடல் வெப்பத்தைச் சோதிக்கவும்
பயின்றுள்ளீர்.
தடுக்கி விழுந்தாலும் பிறர் மேல் முட்டாமல்
ஆறடி இடைவெளி விலகி நிற்கவும் நடக்கவும்
நன்றே பழகியுள்ளீர்.
வைரஸ் தொற்று நாட்டை நீங்கினும்
வைரஸ் அச்சம் நீங்காமல்
செய்தியேடுகளும் வானொலியும்
தொலைக்காட்சியும்
இணையத் தளங்களும் சேர்ந்து கவனிப்பன.
வேலை நிறுத்தங்களையும்ஆர்ப்பாட்டங்களையும்
சாலை மறியல்களையும் சத்தியாக்கிரகத்தையும்
நிறுத்த இனித் துப்பாக்கி தேவையில்லை
வைரஸும் தேவையில்லை
வைரஸ் அச்சம் போதும்.
கொரோனா தொற்றின் பயனாக மரிப்போர் பலரல்ல
எனவும் தொற்றின் பெயரால் நடப்பன தொற்றினுங்
கொடியன எனவும் நன்கறிவீர். எனினும்
சுற்றாடல் பற்றி அரசியல் உரிமைகள் பற்றி
குறைந்தபட்ச ஊதியம் பற்றி
ஏறும் விலைவாசிகளும் வாழ்க்கைச் செலவும் பற்றி
நீவிர் உரத்துப் பேசின்
இவ் வைரஸினுங் கொடிய இன்னொன்று வரலாம்.
அது வைரஸாக இருக்கத் தேவையில்லை.
எனவே மோனங் காப்பீராயின்
உம்மைத் தற்காத்தோர் ஆவீர்.
ஊரடங்கு சாதித்தது ஏதெனக் கேளாதீர்.
அதன் நன்மையை அனுபவித்தோர்
அதை விரும்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *