அரசியல்உள்ளூர்என் கண்களில்...

தடுமாறும் அரசுக்குச் சட்டங்கள் காவல்

இலங்கையின் இன்றைய நெருக்கடியை ரம்புக்கனை கொலைகள் இன்னொரு தளத்திற்கு நகர்த்தியுள்ளன. இலங்கையில் அரச பயங்கரவாதம் புதிதல்ல. பொலிஸ் அராஜகத்தின் வரலாறு மிக நீண்டது. ஆனால் முழு இலங்கையர்களும் – செல்வந்தர்கள், உயரடுக்கினர் தவிர்த்து – பொருளாதார நெருக்கடியை அன்றாடம் எதிர்நோக்கியிருக்கையில் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. தனது வாழ்வாதாரத்துக்காகப் போராடிய மக்களை அதே வாழ்வாதாரத்துக்காகத் தொழில்புரியும் காவற்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். போராடுகின்ற மக்கள் இதே காவற்துறையினருக்கும் சேர்த்துத் தான் போராடுகிறார்கள். இந்த நெருக்கடி யாரையும் விட்டுவைக்கவில்லை. வரிசைகளில் அனைவருமே நிற்கிறோம். அப்படியிருக்கையில் அவர்களை நோக்கிக் கொலைக்கரங்கள் எவ்வாறு நீண்டன?

இக்கேள்வி பிரதானமானது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழ்மக்கள் பல்வேறு வடிவங்களில் அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். அதேவேளை சிங்கள மக்கள் இந்த அரச பயங்கரவாதத்திற்கு உட்படுவது இது முதன்முறையன்று. 1971, 1988-89 ஜேவிபி கிளர்ச்சியின் போதும் அண்மையில் 2013இல் ரதுபஸ்வெவவிலும் அரசு தன்முகத்தைக் காட்டியது. சுதந்திர இலங்கையின் முதலாவது ஜனநாயகப் படுகொலையான குடியுரிமைச்சட்டம் மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தது. இதைக் கண்டித்து நடாத்தப்பட்ட அமைதிவழிப் போராட்டத்தின்மீது அரச வன்முறை ஏவப்பட்டது. இதுவே சுதந்திர இலங்கையில் அரசும் காவல்துறையும் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதற்கான முதலாவது அறிகுறியாக இருந்தது.

இந்த ஜனநாயக மறுப்பை, அரசின் வன்முறைக் கட்டவிழ்ப்பை விமர்சிக்கவோ, கண்டிக்கவோ யாரும் தயாராக இருக்கவில்லை. இதனால் அரசவன்முறை ஆளும் அரசாங்கங்களுக்கு பயனுள்ள கருவியானது. 1956இல் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தின் மீது ஏவப்பட்ட வன்முறை இதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. காலிமுகத்திடலில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டு கவலையுற்ற சிங்கள அரசாங்க அலுவலர் ஒருவர் வீதியில் சென்றுகொண்டிருந்த பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவை இடைமறித்து தமிழ்மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தபோது அதற்கு பண்டாரநாயக்க அளித்த பதில்: ”Let them get a taste of it”.

இந்த நிகழ்வு முக்கியமான பாடமொன்றைச் சொல்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு அரசு வன்முறையைத் தொடர்ந்து ஏவிவந்த நிலையில் காலிமுகத்திடத்தில் நடைபெறும் சத்தியாக்கிரகத்தின் மீதும் வன்முறை ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற எந்தவொரு திட்டமிடலும் தமிழ்த்தரப்புகளிடம் இருக்கவில்லை. தமிழர்கள் மீது வரன்முறையற்ற வன்முறையை ஏவமுடியும் என்பதை சத்தியாக்கிரகத்தின் மீதாக வன்முறை காட்டிநின்றது. இதற்கான முழுப்பொறுப்பும் அப்போராட்டத்தை தலைமையேற்று வழிநடாத்திய எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தையே சாரும். இந்தவன்முறைக்குப் பின்னரும் 1960களிலும் இதேவகைப்பட்ட சத்தியாக்கிரகங்களை அரசு வன்முறையால் எதிர்கொண்டது. ஆனால் அதற்குத் தயாராக செல்வநாயகமோ பிற தமிழ்த்தலைவர்களோ இருக்கவில்லை.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் அரச வன்முறை 1980களில் அரச பயங்கரவாதமாக உருவெடுத்தது. ஜே.வி.பி கிளர்ச்சியும் உள்நாட்டு யுத்தமும் அதை நியாயப்படுத்த வாய்ப்புக்களை உருவாக்கின. இலங்கையில் தொடர்ச்சியாக அரசாங்கங்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வன்முறையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளன. அதன் அண்மைய உதாரணமே ரம்புக்கனை.

இதையே 1986ம் ஆண்டு தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்ட புதுவரலாறு நாமே படைப்போம் என்ற ஒலிப்பேழைக்கு எழுதிய ஒரு பாடலில் கவிஞர் முருகையன் பின்வருமாறு குறிப்பிட்டார்:
தடுமாறும் அரசுக்குச் சட்டங்கள் காவல்
தவறான விளங்கங்கள் தரநூறு பேர்கள்
சுடுமாறு உத்தரவாயின் யார்வீழ்ந்தால் என்ன
துணைநிற்கும் அதிகாரம் பிறகென்ன கவலை

இன்றைய மக்கள் போராட்டங்கள் அரசை அசைத்துள்ளன. ஆனால் அவை அதன் இலக்கை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியதாய் உள்ளது. இந்த நெடிய போராட்டத்தில் அரச வன்முறை தவிர்க்கவியலாத அம்சமாக இருக்கப் போகின்றது என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன. இதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புவது தவிர்க்கவியலாதது.

ரம்புக்கனை கொலைகளைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்த சிலர் “எங்களைப்போல் (காலிமுகத்திடல்) அமைதியாக அவர்கள் (ரம்புக்கனைப் போராட்டக்காரர்கள்) போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அதனாலேயே வன்முறையை எதிர்கொள்ள நேர்ந்தது” என்று எழுதியிருந்தார்கள். இந்த மனநிலை மிகவும் ஆபத்தானது. அரசாங்கத்தின் கதையாடலை இவர்கள் கேள்வியின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். கிடைக்கின்ற தகவல்களின்படி பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசியதையடுத்தே மக்கள் கற்களை வீசினார்கள். இதையே மாவோ, நாம் என்ன ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்றார்.

இந்தக் கருத்துக்கள் ஒரு உயர்மத்தியதர வர்க்க மனநிலையின் பிரதிபலிப்புக்கள். இந்த மனநிலையையே அரசாங்கம் வெகுவாக நம்புகிறது. குறைவற்ற எரிபொருட்களையும் தடையற்ற மின்சாரத்தையும் தட்டுப்பாடற்ற உணவுகளையும் வழங்குவதன் ஊடு இந்தப் போராட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்பவியலும் என உறுதியாக நம்புகிறது. அடித்தட்டு மக்கள் இவ்வளவு காலமும் பெருமளவில் போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. மனதார ஆதரவு கொடுத்தாலும் அவர்கள் இன்னமும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிசைகளிலேயே நிற்கிறார்கள். இதுதான் கடந்த இரண்டுவார நிலைமையாக இருந்தது. எரிபொருள் விலையதிகரிப்பையடுத்து செவ்வாய்கிழமை வீதிக்கிறங்கிய மக்களே அரசுக்கு அச்சத்தைக் காட்டினார்கள். அரசாங்கம் எதுவித தயக்கமுமின்றி உடனடியாக வன்முறையை ஏவியுள்ளது. இதன்மூலம் அரசு ஒரு வலிய செய்தியைச் சொல்ல முனைகின்றது.

அரசவன்முறையைப் பெரும்பான்மை சிங்கள சமூகம் எவ்வாறு எதிர்கொண்டுள்ளது என்பதை நோக்குவது இதன் பல்பரிமாணத் தன்மையை விளக்க உதவும். 1971 ஜே.வி.பி கலவரத்தை அரசு ஒடுக்கியபோது குத்து மதிப்பாக சுமார் 10,000பேர் கொலை செய்யப்பட்டார்கள். இதைக்கண்டித்து அப்போது கவிதை, கதை, நாடகம் என இலக்கியத்தில் பரவலாக வெளிப்பட்டது. ஆனால் இந்நிலை பின்பு தொடரவில்லை. 1988-89 காலப்பகுதியில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டமையானது மக்களிடையே ஒரு எதிர்ப்பை தோற்றுவிக்காததற்கு காரணம் ஜே.வி.பியின் பயங்கரவாதம். அரசாங்கம் ஜே.வி.பியின் பயங்கரவாதத்தை முறியடித்து விட்டது என்றே மக்கள் பார்த்தார்கள். அந்த காலத்தில் ஜே.வி.பி மிக மோசமாக நடந்து கொண்டது. அப்போது ஒரு இலட்சம்பேர் கொல்லப்பட்டடார்;கள் என்றால் அதில் காற்பங்கு ஜே.வி.பி செய்த கொலைகளாகும். ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்களின் உரிமைகளை ஆதரித்தவர்கள் போன்றோரைத்தான் அரசியல் எதிரிகள் என்று ஜே.வி.பி கொலை செய்தது. கொல்லப்பட்டவர்ளெல்லாம் அரசு ஆதரவாளர்கள் அல்ல. இவையனைத்தும் இணைந்தே அரசு நடத்திய கொலைகளுக்கான மௌன அங்கீகாரத்தை வழங்கியது என்பதையும் இங்கு நினைவூட்டல் தகும்.

இன்றைய நெருக்கடியும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டங்களும் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கின்றன. பதவிவிலகுவதில்லை என்ற முடிவில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் இயலாமையையும் அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. பாராளுமன்றச் சட்டகத்துக்குள் விளையாடவே எதிர்த்தரப்புக் கட்சிகள் விரும்புகின்றன. ஏனெனில் மக்கள் போராட்டங்களும் வெகுஜன எழுச்சிகளும் இலங்கையின் பாராளுமன்றக் கட்சிகளுக்குப் புதிது. வாக்குப்பெட்டிகளில் ஆட்சியைப் பிடித்து அதுவே புரட்சி என்று நம்பியிருந்தவை அவை. இன்றைய அரசியல் நெருக்கடி பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ள உண்மை யாதெனில் புரட்சிகர மாற்றங்களை மக்கள் விரும்பினாலும் அரசியல்வாதிகள் விரும்பவில்லை. சங்கீதக் கதிரைகளைத் தொடர்வதிலேயே அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டுச் செயற்பட ஜேவிபி எத்தனிக்கிறது. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன் பெரிய மக்கள் திரள் பேரணியை நடாத்த முடிந்திருக்கிறது. ஆனாலும் பாராளுமன்றத்திற்குள்ளான விளையாட்டில் அதன் ஆர்வம் குறையவில்லை.

ஜே.வி.பி. கற்க வேண்டிய பாடம் ஏதெனிற், பேரினவாத அரசியலை வைத்துப் பாராளுமன்ற ஆசனங்களைப் பிடிப்பதில் முதலாளியக் கட்சிகள் இரண்டும் அதனிலும் வல்லவை என்பது தான். ஆனாலும், அதனால் அந்த அரசியலை அதனாற் கைவிட இயலாதளவுக்கு அதன் பேரினவாதப் பிரசாரங்கள் மக்கள் மனதில் நிற்கின்றன. சிங்கள மக்கள் நடுவே உள்ள நேர்மையான முற்போக்குச் சக்திகளுக்கு இன்றைய நிலைமை மிகவுஞ் சாதகமானது. பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே, என்.ஜி.ஓ. உதவிகட்கும் அப்பால் ஒரு வெகுசன அரசியல் இயக்கம் கட்டி எழுப்பப்பட வேண்டிய தேவையுள்ளது. ஆனால் அதற்கான அறிகுறிகள் தென்படாமை துரதிஸ்டமே.

காலிமுகத்திடலில் மக்கள் பல்கலைக்கழகம் தொடக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தனது உரையை மாவோவின் மேற்கோள் ஒன்றுடன் மையப்படுத்தினார். இன்றைய தேவையும் அதுவே.
மக்களை நம்புங்கள், அவர்களைச் சார்ந்திருங்கள், அவர்களது முயற்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். புரட்சி என்பது மிகவும் பக்குவப்பட்டதாகவோ, அன்புடனோ, கருணையுடனோ, கட்டுப்படுத்தப்பட்டதாகவோ, பெருந்தன்மையுடையதாகவோ இருக்க முடியாது. அவ்வாறான அவசியமும் இல்லை. இந்த மகத்தான புரட்சிகர இயக்கத்தில் மக்கள் தமக்குத்தாமே கற்பித்துக் கொள்வார்களாக, சரியானது எது, தவறானது எது என்பதைப் பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்வார்களாக, சரியான வழியில் செயல்படுவதற்கும் தவறான வழியில் செயல்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வார்களாக. அதற்கு வழிகாட்டுவதாகப் புரட்சிகர அமைப்புக்கள் இயங்க வேண்டும்.”

One thought on “தடுமாறும் அரசுக்குச் சட்டங்கள் காவல்

  • தினகரன்

    சிறப்பு தோழர்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *