ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகொள்ளும்?
வரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைக்கப்படுபவர்களும் எதற்காக நினைக்கப்படுகிறார்கள் என்பதிலேயே குறித்த நபர்களின் சமூகப் பெறுமானம் தங்கியுள்ளது. வரலாற்றில் இடம்பெறுவோர் எல்லாம் நினைக்கப்படுவதில்லை. வரலாறு ஒருவரை எதற்காக எவ்வாறு நினைவில் வைத்திருக்கிறது என்பதே இருப்பின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. நினைப்பதும் மறப்பதும் காலத்தின் வழுவல. நினையாமல் இருப்பதும் மறக்காமல் நினைப்பதும் அவரவர் வாழ்ந்த காலத்தைக் கட்டியங்கூறும் உரைகற்கள்.
இம்மாதம் ஆபிரிக்காவின் இரண்டு ஆளுமைகள் மரணமடைந்துள்ளார்கள். ஒருவரை உலகறியும் மற்றவரை உலகறியாது. ஒருவரை ஊடகங்கள் கொண்டாடும் மற்றவர் அவ்வாறு கொண்டாடப்பட்டவர் அல்ல. இரண்டாமவரின் மரணம் கூட ஊடகவெளியை நிரப்பவில்லை. முதலாமவர் ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த கொபி அனான் மற்றவர் மார்ச்சியப் பொருளியல் அறிஞர் சமீர் அமீன். இருவரும் உலக அரசியல் அரங்கில் முக்கிய பங்காற்றியவர்கள். அவர்களது பணிக்காக உலகால் நினைக்கபடுவார்கள். ஆனால் இருவரையும் வரலாறு எவ்வாறு நினைவுகொள்ளும் என்பதை இக்கட்டுரை நோக்க விளைகிறது.
சமீர் அமீன்: சமகால முதலாளித்துவத்தின் உள்வெடிப்பு
1931ம் ஆண்டு எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் பிறந்த சமீர் அமீன் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றவர். மார்க்சியப் பொருளாதார அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய முன்னோடியான ஆய்வுகளை மேற்கொண்டவர். ஜரோப்பிய மையவாத பொருளியல் நோக்குகளுக்கு மாறாக மூன்றாமுலக நாடுகளின் விசேட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்தவர். தான் வாழ்நாள் முழுவதிலும் ஆபிரிக்காவில் வாழ்ந்த சமீர் அமீன் வெறும் ஆய்வாளராக மட்டும் திகழவில்லை. மாறாக செயற்பாட்டாளராகப் போராளியாக தன் வாழ்நாள் முழுவதும் பங்காற்றியவர்.
அவரது முதலாவது நூலான ‘உலகளவிலான மூலதன திரட்டு’ (Accumulation on a World Scale) அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளர விடாமல் ஏகபோக முதலாளித்துவமாகச் சுரண்டுவதை சான்றாதாரங்களுடன் நிறுவினார். ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து வன்முறையின் மூலமாகவும் பிற வழிகளிரும் கொள்ளையடிக்கப்பட்ட சுரண்டப்பட்ட செல்வமே வளர்ச்சி அடைந்த நாடுகளின் மூலதன திரட்சியாக அந்நாடுகளின் செல்வமாக இருப்பதோடு அதுவே மேற்குலக நாடுகளை இன்னமும் வளர்ச்சியடைந்த நாடுகளாக வைத்திருக்கிறது என்றார்.
வளர்ச்சியடைந்து வரும் இந்த நெருக்கடியில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவேண்டுமாயின் வளர்ச்சியடைந்த நாடுகள் முன்வைக்கும் திட்டங்கள், நிர்ப்பந்தங்கள், நிபந்தனைகளுடன் கூடிய கடன்கள் ஆகியவற்றைப் பெறுவதில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
1990ம் ஆண்டு சோவியத் யூனியனின் மறைவையடுத்து அமெரிக்க தலைமையிலான ஒருமைய உலகம் தோற்றம் பெற்றபோது அது குறித்த தனது பார்வையை 1992இல் ‘குழப்பங்களின் பேரரசு’ (Empire of Chaos) என்ற தனது நூலின் மூலம் முன்வைத்தார். அதில்; உருவாகியுள்ள புதிய உலகப் படிநிலையில் கடுமையான ஏற்றத்தாழ்வும், உத்தரவாதமில்லாத தொழில்களும், அதனால் உத்தரவாதமில்லாத தொழிலாளர்களின் வாழ்க்கையும் ஏற்படும் என்றும் விவசாயத்தின் அழிவும் அதன் விளைவாக உலக நாடுகளின் அரசியலில் அபாயகரமான மாற்றங்களும் ஏற்படும் முன்னறிவித்தார்.
அடிப்படையில் இஸ்லாமியராக இருந்தாலும் இஸ்லாமிய அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இஸ்லாமிய அரசியல் ஏகாதிபத்தியங்களுக்கே சேவை செய்கிறது என்றும் அது ஏற்றத்தாழ்வையும் வறுமையும் சுரண்டல் அமைப்பையும் வளர்க்கிறது என்று விமர்சித்தார். இஸ்லாமிய அரசியில் மக்கள் மையப்பட்டதாக இல்லாமல் வெறுமனே மதவாதத்தின் அடிப்படையில் தன்னைக் கட்டமைப்பதாகவும் அதனால் அதன அடிப்படைவாத அம்சங்கள் மனிதநேயத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிரானவை என்றும் வாதிட்டார்.
2008இல் உலக எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு அவர் வெளியிட்ட சமகால முதலாளியத்தின் உள்வெடிப்பு (The Implosion of Contemporary Capitalism) என்ற நூலாக இன்று நாம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்வுகூறியது. பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய மொத்த உலக அமைப்பும் நிலையற்றதாக இருக்கும். அது முன்னதைக் காட்டிலிம் இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கும் அமைப்பாகத் திகழும் என்றார். இவ்வமைப்பில் நிதி மூலதனவே ஆதிக்கம் செலுத்தும். நிதி மூலதனத்தின் ஏற்றுமதியும் இறக்குமதியும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் இங்கு யாருக்கும் உத்தரவாதமில்லாத தொழிலும் வாழ்க்கையும் அச்சுறுத்துகிறது. நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திலிருந்து யாரும் தப்பித்து ஓட முடியாது. மக்கள் போராடி அதனைத் வீழ்த்தினாலே ஒழிய வேறெதுவும் செய்யவியலாது என அவர் அந்நூலை நிறைவு செய்கிறார்.
இதன் தொடர்ச்சியாக அவர் இன்று முன் எப்போதும் இல்லாதளவுக்கு மூலதனத் திரட்சி இடம்பெற்றுள்ள பின்னணியில் நிதி மூலதனத்தைக் கட்டுபடுத்துபவர்களிடையே உள்ள போட்டியானது உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு மிகவும் அபாயகரமான எதிர்காலத்தை கொண்டிருக்கிறது என்று எச்சரித்தார். உலகின் மிகவும் அதிகாரம் கொண்ட பல்தேசிய நிறுவனங்களின் இலாபவெறிக்கு மூன்றாம் உலகின் அப்பாவி மக்கள் வரைமுறையின்றிப் பலியாவார்கள் என்றார்.
கடந்தாண்டு ஒரு நேர்காணலில் சமீர் அமீன் இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார். முதலாவது சந்தைகளுடன் கூடிய முதலாளித்துப் பொருளாதாரம் உள்ளது, ஆனால் சந்தைகள் என்பவை மூலதனக் குவிப்பு என்ற நியதிக்கு கட்டுப்பட்டவையாகும். சந்தையானது, தன்னுடைய ஒரு துணைப்பொருளாக மூலதனக் குவிப்பை உற்பத்தி செய்வதில்லை மாறாக மூலதனக் குவிப்பு – தான் சந்தைக்கு ஆணையிடவும், அதனை கட்டுப்படுத்தவும் செய்கிறது. இதனை விளங்கிக் கொள்வது மூலதனக் குவிப்பையும் அதற்கு சந்தைகள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை விளங்கவும் உதவும் என்றார்.
இரண்டாவது சமூகப் பிரச்சினைகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஜனநாயகம் ஆபத்தானது. தேர்தல்கள் கிட்டத்தட்ட நியாயமாக நடக்கும் தேர்தல்கள், சில அடிப்படையான அரசியல் உரிமைகள் ஆகியவற்றின் மூலம் வரையறை செய்யப்படுகிறது. ஜனநாயகமானது சமுதாய முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் அக்கறையோ கவனமோ காட்டப்படுவதில்லை. உண்மையில் நாம் விரும்புவது சமுதாய முன்னேற்றத்துடன் இணைந்த ஒரு சமுதாய ஜனநாயகமாக்கலையே. நூம் விரும்பும் ஜனநாயகம் நிச்சயமாக சமுதாய முன்னேற்றத்திலிருந்து துண்டிக்கப்பட்டதல்ல. உணவுக்கான உரிமை, உறைவிடத்திற்கான உரிமை, வேலை பெறுவதற்கான உரிமை, கல்விக்கான உரிமை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்கான உரிமை ஆகிய சமுதாய உரிமைகளுக்கு முழு முக்கியத்துவம் அளிப்பதற்கான பணியுடன் இணைந்த சமுதாய ஜனநாயகமாக்கலையே நாம் விரும்புகிறோம். இதன் அர்த்தம் இந்த உரிமைகளை அரசியல்யாப்பு ரீதியாகப் பெற்றுவிடுவது என்பது மட்டுமல்ல, அந்த உரிமைகளை செயல்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்க வேண்டும் என்பதாகும்;. இவை இரண்டும் இன்று எம்முன்னுள்ள சவால்கள் என சமீர் அமீன் கூறினார்.
வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் மீட்சிக்காகவும் சாதாரண மக்களின் வாழ்வுக்காகவும் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்ததோடு போராட்டங்களில் பங்குகொண்டு உத்வேகம் அளித்த ஒருவராகவும் ஆபிரிக்காவின் தலைசிறந்த பொருளியலாளராகவும் வரலாறு சமீர் அமீனை நினைவு கொள்ளும்
கொபி அனான்: மண்டையோடுகள் குவிந்து கிடக்கின்றன
1938ம் ஆண்டு கானாவில் பிறந்த கொபி அனான் பத்து ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாகப் பணியாற்றியவர். நீண்டகாலம் ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் செயலாளர் நாயகமாகத் தெரிவான முதலாவது ஐ.நாவின் ஊழியர் கொபி அனான் ஆவார்.
அனானுக்கு முன்னர் ஐ.நாவின் செயலாளர் நாயகமாக விளங்கிய பூட்ரஸ் பூட்ரஸ் காலி 1992ம் ஆண்டு அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான திணைக்களத்தை (Department of Peacekeeping Operations) உருவாக்கினார். அதன் முதற் துணைத்தலைவராகவும் 1993இல் அதன் தலைவராகவும் கொபி அனான் நியமிக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை.
முதலாவது 1994ம் ஆண்டு ருவாண்டாவில் ஐ.நா அமைதி காக்கும் படைகள் நிலைகொண்டிருந்த போது அவர்களின் கண்முன்னே இனப்படுகொலை நடந்தேறியது. 100 நாட்கள் நடந்த வெறியாட்டத்தில் பத்து இலட்சம் ருவாண்டர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஐ.நாவின் அமைதி காக்கும் படைகளுக்குத் தலைமைதாங்கிய கனடிய நாட்டு இராணுவ ஜெனரல் ரோமியோ டிலெயர் இவ்வாறனதொரு பயங்கரம் நிகழவிருப்பதை உணர்ந்து இதைத் தடுப்பதற்கு தனது படைகளைப் பயன்படுத்த அனுமதிக்கும்படியும் இதன் மூலம் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவியலும் எனவும் தனது தலைமையகமான ஐ.நாவின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான திணைக்களத்திற்கு அவசரமான செய்தியொன்றை அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த இதன் தலைவரான கொபி அனான் ஐ.நா அமைதி காக்கவே வந்துள்ளது. எதுநடந்தாலும் ஐ.நாவின் படைகள் தங்கள் முகாமை விட்டு வெளியே வரக் கூடாது. நடக்கிறது நடக்கட்டும் என டிலெயருக்குப் பதிலளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த டிலெயர் மாபெரும் பேரவலத்தை ஐ.நாவால் தடுக்கவியலும். அதற்கு அனுமதிக்கும்படி கெஞ்சினார். ஆனால் அதற்கான அனுமதியைக் கொடுக்க கொபி அனான் மறுத்துவிட்டார். இறுதியில் கொலைவெறியாட்டத்தை ஒரு பார்வையாளராக ஐ.நாவின் நீலத் தொப்பிக்காரர்கள் இருந்தார்கள். இப்படுகொலைகளின் 10வது ஆண்டு நிறைவு நினைவில் பங்கேற்ற கொபி அனான் மலர்வளையம் வைத்து அதை நினைவுகூர்ந்து கொண்டார். பத்து இலட்சம் ருவாண்டர்களின் மண்டையோடுகள் எங்கள் உயிர்களை ஐ.நா ஏன் காக்கவில்லை என்ற கேள்விகளுடன் குவிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது 1993இல் சோமாலியாவில் உள்நாட்டு நெருக்கடியில் அமைதிகாக்கப் புறப்பட்ட ஐ.நாவின் படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து அங்குள்ள போராட்டக் குழுக்களுடன் போரில் ஈடுபட்டன. இது மொகடீசூ யுத்தம் என அறியப்படுகிறது. இதில் அமெரிக்கப் படைகள் மிக மோசமான தோல்வியைத் தழுவின. ஒருமைய அமெரிக்க தலைமையிலான உலக ஒழுங்கில் அமெரிக்க சந்தித்த மிக மோசமான இராணுவத் தோல்வியாக இது கொள்ளப்படுகிறது. ஐ.நாவின் வரலாற்றில் கொரியப் போருக்குப் பின்னர் ஐ.நாவின் இராணுவம் நேரடியாகப் போரில் ஈடுபட்டது சோமாலியாவிலேயே. இதன் விளைவால் சோமாலியாவில் ஐ.நாவின் அமைதிகாக்கும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. இதற்கான பொறுப்பாளி கொபி அனானே.
மூன்றாவது யூகொஸ்லாவிய பிரிவினையின் போது ஏற்பட்ட பொஸ்னிய யுத்தத்தில் அமைதி காக்கும் பணியில் ஐ.நா ஈடுபட்டிருந்தது. இவ்யுத்தத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ பொஸ்னியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இதனை அப்போதைய ஐ.நாவின் செயலாளர் நாயகம் பூட்ரஸ் பூட்ரஸ் காலி வன்மையாகக் கண்டித்தார். அவர் ஐ.நாவின் அனுமதியை நேட்டோவிற்குத் தொடர்ச்சியாக வழங்க மறுத்து வந்தார். இந்நிலையில் காலி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த காலப்பகுதியைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவும் நேட்டோவும் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவே ஐ.நா அமைதிகாக்கும் படைகளுக்குப் பொறுப்பான கொபி அனான் பொஸ்னியா மீதான நேட்டோவின் விமானத் தாக்குதல்களுக்கு அனுமதியளிக்கக் கோரியது. ஆனான் நேட்டோவின் தாக்குதலுக்கு தனது அனுமதியை அளித்ததோடு களத்தில் இருந்த ஐ.நாவின் படைகளை தாக்குதலுக்கு வசதியாக விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அனானின் இந்நடவடிக்கையை காலி வன்மையாகக் கண்டித்தார். ஆனால் இச்செயல் அனானை அமெரிக்காவின் விருப்பத்திற்குரியவராக மாற்றியது. 1996ம் ஆண்டு எதுவித போட்டியாளர்களும் இன்றி ஏகமனதாக இரண்டாவது தடவையாக செயலாளர் நாயகமாக பூட்ரஸ் பூட்ரஸ் காலி நியமிக்கப்படவிருந்தார். பொதுவில் தெரிவாகும் செயலாளர் நாயகத்திற்கு நான்கு ஆண்டுகள் கொண்ட இருதடவைகள் பதவி வகிக்க அனுமதிக்கப்படும். இந்நிலையில் அவரது மீள்தெரிவிற்கு ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 15 வாக்குகளில் 14வாக்குகளை பூட்ரஸ் பூட்ரஸ் காலி பெற்றார். அமெரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்ததோடு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது. இதைத் தொடர்ந்து இது தொடர்பில் இடம்பெற்ற நான்கு பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் எதுவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தன. அமெரிக்கா காலியை மீண்டும் செயலாளர் நாயகமாக நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்தது. இறுதியில் பூட்ரஸ் பூட்ரஸ் காலி தான் போட்டியிடுவதில்லை என அறிவித்தார். இதைத் தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் கொபி அனான் அமெரிக்காவினால் நிறுத்தப்பட்டார். இவருக்குப் போட்டியாக ஜவரி கோஸ்டின் இராஜதந்திரி அமரா எஸ்ஸி நிறுத்தப்பட்டார். முதலாம் சுற்று வாக்கெடுப்பில் எஸ்ஸியை விட ஒருவாக்கு அதிகம் பெற்று அனான் முன்னிலையடைந்தார். அதன் பின் நடந்த வாக்கெடுப்பில் எஸ்ஸிக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின. இதையடுத்து அனானை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பில் பிரான்ஸ் அனானுக்கு எதிராக வீட்டோவைப் பயன்படுத்தியது. நான்கு தடவைகள் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் பிரான்ஸ் தனது வீட்டோவைப் பயன்படுத்தி அனானின் தெரிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இறுதியாக பலநாடுகளின் வேண்டுகோளிற்கிணங்க பிரான்ஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையால் அனான் தெரிவானார்.
இவ்வாறு பதவிக்கு வந்த அனானின் காலத்திலேயே ஆப்கான், ஈராக் யுத்தங்கள் நடந்தன. இவரது தலைமையில் இருந்த ஐ.நா வாளாவிருந்தது. இவரது காலப்பகுதியின் போது காக்கும் கடப்பாடு (Responsibility to Protect) என்ற கருத்துருவாக்கம் கோட்பாட்டுருவாக்கம் பெற்றது. இதனைப் பயன்படுத்தியே அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் லிபியாவின் மீது போர்தொடுத்தன. காக்கும் கடப்பாடு என்பது நாட்டின் மக்களை பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடு ஆகும். அரசு அக் கடப்பாட்டிற் தவறுகிறபோதுஇ கடப்பாடு சர்வதேச சமூகத்தின் கைகட்குப் போகிறது. பாரிய அநியாயங்களிலிருந்து மக்களைக் காக்கும் கடப்பாடு சர்வதேச சமூகத்தினுடையதாகிறது. கடப்பாடு இவ்வாறு சர்வதேசத்திடம் பாரப்படுவதற்குக் காரணம் அது நீதியானதும் சரியானதும் என்ற வாதத்தின் அடிப்படையிலாகும். காக்கும் கடப்பாடு என்பது அடிப்படையில் தடுப்பு (Prevention) என்பதையே பிரதானமானதாகக் கொண்டுள்ளது. ஆனால் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களைக் காக்க முடியாதபோது பொருளாதார, அரசியல், ராஜதந்திர, சட்டரீதியான, இராணுவரீதியான நடவடிக்கைகட்கும் அது வழி வகுக்கிறது. இன்னொரு வகையில் அமெரிக்காவின் தலையீடுகளுக்கு வாய்ப்பான ஒன்றான காக்கும் கடப்பாடு தோற்றம் பெற்றது.
இனி கொபி அனானை எவ்வாறு வரலாறு நினைவுகூரும் என்ற வினாவுக்கு வருவோம். கெடுபிடிப்போருக்குப் பின்னரான இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அவலங்களுக்கும் ஐ.நாவின் இயலாமைக்கும் சாட்சியாகவும் காரணியாகவும் கொபி அனான் இருக்கிறார். 21ம் நூற்றாண்டில் சர்வதேச சட்டம், உண்மை, நியாயம் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியதோடு அனைத்தையும் கேலிக்குள்ளாக்கிய அமெரிக்காவின் ஈராக் மீதான ஆக்கிரமிப்பையும் போரையும் அனுமதித்த பெருமை அனானையே சேரும். மோத்தத்தில் இரத்தம் தோய்ந்த கைகளுடன் அனான் விடைபெறுகிறார். வரலாறும் அவரை அவ்வாறே நினைவு கூறும்.