அரசியல்உள்ளூர்

சனிக்கிழமை: சகாப்தமா? சனியனா?

இலங்கையின் தலைவிதியை கிட்டத்தட்ட நிர்ணயிக்கவல்ல தேர்தலே எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. சிலர் தபால்மூலம் தங்கள் வாக்குகளை வழங்கிவிட்டனர். பெரும்பாலான இலங்கையர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கக் காத்திருக்கிறார்கள். இத்தருணத்தில் சில முக்கியமான விடயங்களைப் பேசியாக வேண்டும். நான்கு நன்கறியப்பட்ட வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். மொட்டுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் நாமல் ராஜபக்சவைத் தவிர்ந்த ஏனைய மூவரில் ஒருவரே ஜனாதிபதியாக வரவுள்ளார். அது உறுதி. ஆதனால் பெரும்பாலான இலங்கையரின் தெரிவு இம்மூவரில் ஒருவராகவே இருக்கப் போகிறது.

இந்த மும்முனைப் போட்டியும் குறைந்தது 5% வாக்குகளை நாமல் ராஜபக்ச பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் முதலாம் சுற்றில் அடுத்த ஜனாதிபதி தெரியப்படாமல் போவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளன. இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் யாராவது ஒரு வேட்பாளர் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இது வெற்றியாளருக்கும் அங்கீகாரத்தையும் பெரும்பான்மை ஆதரவையும் உறுதி செய்தது. ஒருவேளை இம்முறை எந்தவொரு வேட்பாளரும் இறுதியில் 50%மான வாக்குகளைப் பெறாதுவிட்டால் தெரிவாகும் ஜனாதிபதி பெரும்பான்மை இலங்கையரின் தெரிவுக்குரியவர் அல்ல. இது புதிய ஜனாதிபதிக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கும்.

தெரிவாகும் புதிய ஜனாதிபதி பாராளுமன்றைக் கலைத்து தேர்தலை அறிவிக்கப்போவது உறுதி. ஒருவேளை புதிய ஜனாதிபதியின் கட்சி பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெறத் தவறினால் அதுவொரு புதிய நெருக்கடிக்கு வழிகோலும். 2001-2004, 2015-2019 காலப்பகுதியின் இவ்வாறான கலப்பு ஆட்சியின் அனுபங்கள் நல்லனவல்ல.

மூன்று முக்கிய போட்டியாளர்கள் போட்டியில் இருந்தாலும், இரண்டு பரந்த அரசியல் திட்டங்களே பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன. ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் இலங்கையின் பாரம்பரிய அரசியல் கலாசாரத்தின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இதற்கு எதிர்வினையாகவே 2022இல் மக்கள் எழுச்சி நிகழ்ந்தது. இந்த எதிர்வினையான அரகலயவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே அனுரகுமார திசாநாயக்கவும் அவரது  தேசிய மக்கள் சக்தியும் சொல்கின்றன.

இம்முறை தேர்தலில் ஊழல் ஒரு பிரதான பேசுபொருளாக இருக்கிறது. குறிப்பாக நாட்டின் பொருளாதார நெருக்கடியில் ஊழலின் பிரதான பங்களிப்பு பற்றிய மக்களின் புரிதல் இதற்கு முக்கிய காரணம். அனுரகுமார திசாநாயக்கவின் எழுச்சியில் ஊழல் எதிர்ப்பு பிரதான பங்காற்றியுள்ளது.

இலங்கையில் பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சியின் தொடக்கத்திலிருந்து, குடிமக்களுடன் கொண்டோர் – கொடுத்தோர் உறவின் மூலம் பராமரிக்கப்படும் நமது ஜனநாயகத்தின் ஒரு அம்சமாக ஊழல் உள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் வாக்குகளுக்கு ஈடாக வாக்காளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் குறிப்பிட்ட நன்மைகளை விநியோகிக்கின்றனர். எனவே, சுதந்திரத்திற்குப் பிறகு, இலங்கை அரசு ஒரு ஜனநாயக அரசியல் கலாசாரத்தை வளர்த்தது. அங்கு ஆட்சியாளருக்கும் ஆட்சிக்கும் இடையிலான பழைய நிலப்பிரபுத்துவ பாணியிலான  உறவுகள் இல்லாமலாக்கப்பட்டு சலுகை அரசியல் கொண்டோர் – கொடுத்தோர் உறவாக மாற்றமடைந்தது.

இத்தகைய அரசியல் அமைப்பில், பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அவற்றின் அரசியல்வாதிகளும் நாட்டுக்கு நன்மை பயக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வழங்குவதை விட ஆதரவான பொருட்களை (மானியங்கள், வேலைகள், பதவி உயர்வுகள், வீடுகள் மற்றும் நிலங்கள்) விநியோகிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இந்த அமைப்பின் கீழ், தங்கள் மாவட்டங்களில் ஒரு விரிவான ஆதரவாளர் வலையமைப்பைக் கட்டியெழுப்பிய அரசியல்வாதிகளே பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவை அனுபவிக்கிறார்கள். அதேவேளை கொள்கை வகுப்பாளர்களாக எவ்வளவு திறம்பட்டவர்களாக இருந்தாலும் அல்லது ஜனநாயகத் தலைவர்களாக எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தாலும் இந்த சலுகை அரசியற் சட்டகத்துக்கு வெளியே செயற்படும் எவராலும் பாராளுமன்றத்திற்குச் செல்லுவது கிட்டத்தட்ட இயலாததாகிறது.

இந்த அரசியல் கலாசாரத்தில், இலங்கை ஜனநாயகம் ஒரு உயரடுக்கு ஜனநாயகமாக செயல்படுகிறது. இங்கு ஆளும் உயரடுக்கினர் சாதாரண குடிமக்கள் ஆட்சியில் ஈடுபடுவதற்கு இடமளிக்கவில்லை. மாறாக, தற்போதைய ஆளும் வர்க்கங்கள் தங்கள் இருப்பை நிலைநிறுத்த பெரும்பான்மையான குடிமக்களுக்கு பல்வேறு அனுசரணை திட்டங்களைப் வழங்குகிறார்கள். அனுசரணை விநியோகத்திற்கு மேலதிகமாக, உயரடுக்குகள் மக்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை அவ்வப்போது நிலைநிறுத்திக் கொள்வதற்கு இனவெறி, பல்வேறு பயங்கள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்ச்சிகளைத் தூண்டுவது போன்றவற்றிலும் ஈடுபடுகிறார்கள். இந்தச் செயன்முறையில் இனம், புவியியல் அல்லது அவர்களின் கட்சிகளின் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், பெரும்பான்மையான அரசியல்வாதிகள் இணைந்து செயற்படுகிறார்கள். இலங்கையில் நடைமுறையில் உள்ள இந்த அரசியல் அமைப்புமுறையில்,  ஜனநாயகம் என்பது அரசியல் உயரடுக்கின் ஆட்சியாக உள்ளது. விக்கிரமசிங்க மற்றும் பிரேமதாசாவைச் சுற்றி ஆதரவைத் திரட்டும் அரசியல்வாதிகள், கடந்த காலத் தவறுகளை திருத்திக் கொண்டு எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படுவதாக உறுதியளித்து இந்த அமைப்பைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். இந்த அமைப்பைத் தூக்கி எறிந்து புதிய அமைப்பைக் கட்டுவதாக திசாநாயக்க உறுதியளிக்கிறார்.

இரண்டு தென்னிலங்கை கிளர்ச்சிகள் மற்றும் மூன்று தசாப்தகால இரத்தம் தோய்ந்த யுத்தம் இருந்த போதிலும் இலங்கையின் அனுசரணை ஜனநாயகம் எழுபத்தைந்து ஆண்டுகளாக நிலைத்திருக்கிறது. இந்த நிலையை இத்தேர்தல் மாற்றுமா இல்லையா என்பது ஒரு முக்கியமான வினா.

தாராளவாத ஜனநாயகத்தின் பண்புகளில் ஒன்றே அனுசரணை அரசியல். அது  அரசியல் கட்சிகள் கொள்கைகளை ஆதரிக்கும் மற்றும் குறிப்பிட்ட நலன்களைக் கொண்ட சமூகங்கள் மற்றும் தனிநபர்களை ஈர்க்கும் வகையிலான கருத்துக்கள் வாக்குகளாக மாறும் என்று எதிர்வுகூறுகிறது. இலங்கையின் கடந்தகால அனுபவம் அதை உறுதி செய்கிறது. இத்தகைய ஒரு செயல்முறைக்கு கட்சி-வாக்காளர் உறவு முக்கியமானது. ஏனெனில் ஆட்சியில் உள்ள கட்சி தனது ஆதரவாளர்களுக்கு அனுகூலங்களை வழங்குகிறது. ஆனால் இலங்கையின் தற்போதைய நிலை மிகவும் சிக்கலானது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி பலமான வலையமைப்பைக் கொண்டதல்ல. சஜித் பிரேமதாசாவின் கட்சி இதுவரை ஆட்சிபீடம் ஏறாததால் அதனால் அனுசரணை அரசியலை உறுதிசெய்ய இயலவில்லை. குறித்த அனுசரணை அரசியலுக்கு எதிராகவே அனுரகுமார திசாநாயக்க பிரச்சாரம் செய்கிறார்.

எது எவ்வாறு இருப்பினும் வாக்காளர் வலையமைப்பு என்பது மிகவும் முக்கியமானது. இலங்கை போன்ற பின்காலனித்துவ சமூகங்களில், குடிமக்கள் தனிநபர்களின் வலையமைப்புகளாக ஒழுங்கமைக்கப்பட்ட பல பொருளாதார, சமூக மற்றும் கலாசார குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த சிக்கலான வலையமைப்புகளில், தனிநபர்கள் வெவ்வேறு நிலைகளில் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள். தேசிய அளவிலான அரசியல்வாதிகள் இந்த வலையமைப்புகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதன் மூலம் தங்கள் வாக்காளர் தளங்களை பராமரிக்கின்றனர். அந்த வலையமைப்புகளை கட்டுப்படுத்த தேசிய மட்ட அரசியல்வாதிகள் இந்த வலையமைப்புகள் மூலம் பல்வேறு அனுசரணை திட்டங்களை விநியோகிக்கின்றனர். வாக்குகளை குவிக்க அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்து தொகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிக்க பங்கை வகிக்கும் உள்ளூர் அரசியல் அரங்காடிகள் மூலம் தனிப்பட்ட வாக்காளரை சென்றடையும் வகையில் இந்த ஆதரவுத் தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எனவே, தேசிய அளவிலான அரசியல்வாதிகளின் தேர்தல் வெற்றி, வாக்காளர்களுக்கும் அரசியல்வாதிக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் உள்ளூர் அரசியல் அரங்காடிகளின் வலைப்பின்னலின் செயல்திறனைப் பொறுத்தது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இத்தகைய அனுசரணை வலையமைப்புகளின் திறமையான முகாமைத்துவத்தை வெளிப்படுத்திய சிறந்த உதாரணங்களாகும். எனவே, கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் இந்த உள்@ர் அரசியல் அரங்காடிகளை தேர்தல்களில் வெற்றி பெற வாக்காளர்களைத் திரட்டுவதற்குப் பதிலாக ஆதரவாளர் வலைப்பின்னல்களில் அணிதிரட்டுகிறார்கள். எனவே இன்னொரு வகையில் அனுசரணை அரசியல் மீள்வடிவம் பெறுகிறது. இந்த அரசியல் வடிவத்திலேயே ரணிலும் சஜித்தும் தேர்தல் பிரச்சாரங்களைச் செய்கிறார்கள்.

இதற்கு எதிரான மாற்று அரசியலை வாக்குகளாக மாற்றமுடியுமா என்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் சவால். அனுசரணை அரசியலுக்குச் சவால் விடுவதற்கு அனுசரணை அரசியலுக்கு முந்தைய தேர்தல் பிரச்சார வடிவத்தைக் அனுரகுமார கையிலெடுத்துள்ளார். வீடுவீடாகச் செல்வது, கிராமங்களில் சிறிய சிறிய கூட்டங்கள் நடாத்துவது, கிராமந்தோறும் கட்சி அலுவலகங்கள் என அவை வடிவம் கொண்டுள்ளன. இது வெற்றியளிக்குமா என்ற வினாவுக்கு அடுத்த சனிக்கிழமை பதில் கிடைக்கும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் “தமிழ் பொது வேட்பாளர்” ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். இந்தத் தெரிவு முழு மனதுடன் இடம்பெற்றதா என்ற வினாவை எழுப்பும் விதமாகத் தமிழ்க் கட்சிகளின் நடத்தை இருக்கிறது. இம்முறை தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்தியே தீருவது என்றும் அவர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு பொதுவேட்பாளராக இருப்பார் என்றும் குறித்த எண்ணக்கருவுக்கு வலுவூட்டியோர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்தபடி மக்களுக்கு நன்கறிந்த பொதுவான அரசியற்சார்பற்ற ஒரு பொதுவேட்பாளரை இவர்களால் தெரிய முடியவில்லை.

பொதுவேட்பாளராகத் தெரிவாகியுள்ளவர் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். கட்சியின் அங்கீகாரம் இல்லாமலே பொது வேட்பாளராகுவது பற்றிக் கட்சித் தலைமையில் உள்ளோரின் கருத்தைக் கேட்டுத் தான் அப்பொறுப்பை ஏற்றாரா என்பது முக்கிய கேள்வி. இக்கேள்விக்கு இன்றுவரைப் பதில் இல்லை. தமிழரசுக் கட்சியின் அனுமதியின்றிப் பொதுவேட்பாளராக உடன்படுவது தன் கட்சிக்கு எத்தகைய சங்கடத்தை ஏற்படுத்துமென அவர் அறியாமலிருக்க நியாயமில்லை. ஆனால் தமிழரசுக் கட்சி உட்பட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் எதுவும் அறஞ்சார்ந்து ஒழுக்கஞ் சார்ந்தோ செயற்பட்டவை கிடையாது.

தமிழர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது இது முதன்முறையல்ல. 1982ம் ஆண்டு தேர்தலில் குமார் பொன்னம்பலம் கிட்டத்தட்ட 3%மாக வாக்குகளைப் பெற்றார். இம்முறை நிறுத்தப்பட்டுள்ள பொதுவேட்பாளர் எவ்வளவு வாக்குகளைப் பெறப்போகிறார் என்பது தமிழ்த்தேசிய அரசியலின் வங்குரோத்தை உலகறியச் செய்யும் நற்காரியத்தைச் செய்யும்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாறு ஒரு தீர்க்கமான செய்தியைச் சொல்கிறது. 1994இல் சந்திரிகா, 2010இல் மகிந்த, 2019இல் கோத்தபாய ஆகியோரை வெல்லவைக்க மக்கள் வாக்களித்தனர். அதேபோல 2015இல் மகிந்தவைத் தோற்கடிக்க மைத்திரிபாலவுக்கு வாக்குகளை வழங்கினர். இம்முறை மக்களின் முடிவு என்ன? வாக்குகள் வெல்ல வைப்பதற்காகவா அல்லது தோற்கடிப்பதற்காகவா? யார் வென்றாலும் தோற்றாலும் ஒன்றுமட்டும் நிச்சயம் தோற்கப் போவது மக்கள் தான்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் சில முக்கியமான செய்திகளைச் சொல்கிறது. இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஜனநாயகத்தின் நிறுவனங்களாகவும் ஜனநாயக பிரதிநிதித்துவத்தின் முகவர்களாகவும் சமூக நம்பிக்கை மற்றும் சட்டபூர்வமான தன்மையை இழக்கும் கட்டத்திற்குள் நுழைந்துள்ளன. அரசியல் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறித்த பல ஆய்வுகளில், அரசியல் கட்சிகள் குறைந்த நம்பிக்கை கொண்ட பொது நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளன.  ஆண்மைய ஒரு  கணக்கெடுப்பின்படி, இலங்கையர்கள் அரசியல் கட்சிகளை நாட்டில் நம்பிக்கையற்ற ஜனநாயக நிறுவனமாக அடையாளங் காண்கிறார்கள். குறிப்பாக சிங்களவர்களிடையே அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை வியத்தகு அளவில் 13.1மூ ஆகக் குறைந்துள்ளது. கட்சி அமைப்பிலும் பொதுவாக தனிப்பட்ட கட்சிகளிலும் காணப்படும் கடுமையான ஜனநாயக குறைபாடுகள் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க முதன்மையான காரணமாகும். இதனாலேயே இம்முறை பிரதான வேட்பாளர்கள் கூட்டணிகளில் அல்லது சுயேட்சையாகக் களமிறங்கியுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையீனம் மிதக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்துள்ளது. மிதக்கும் வாக்காளர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையின் விரிவாக்கமானது தேர்தல் முடிவுகளை வடிவமைப்பதில் அவர்களின் முக்கிய பங்கை அடிக்கோடிடுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சித்தாந்தங்கள் மீதான வாக்காளர்களின் நம்பிக்கையின்மை மிதக்கும் வாக்காளர் தொகையின் கணிசமான அதிகரிப்புக்குக் காரணமாகும்.

முக்கியமானது யாதெனில், அரசியல் கட்சிகளின் அடிமட்ட பிரபலமான சமூக வேர்கள் பலவீனமடைவதற்கும் கட்சி அல்லாத வாக்காளர்களின் விரிவாக்கத்திற்கும் இடையே உண்மையில் ஒரு கூட்டு உறவு உள்ளது. கட்சி சாராத வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஜனநாயகம் குறித்த வாக்காளர்களின் அக்கறையின்மையைக் காட்டுகிறதா என்ற வினாவும் எழாமல் இல்லை. அதற்காக பதிலையும் சனிக்கிழமை எதிர்பாரக்கலாம்.

இத்தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெளியே அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நபர்களின் பாராளுமன்ற கதிரைக்கான ஒரு முன்னோட்டம். எனவே இது வெறும் ஒரு ஜனாதிபதியை மட்டும் தேர்தலல்ல.

ஒரு மாற்றம் வருவது போல ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால் அரகலயவிற்கு நடந்ததே இதற்கும் நடக்கலாம்.  இலங்கையின் அரசியல் உயரடுக்கு அரகலயவின் மூலம் சவாலுக்குட்பட்ட போது எதிர்பாராத ஒரு புதிய உயரடுக்கு கூட்டணி (ரணில்-ராஜபக்ச) விரைவாக உருவானது. பலவீனமான ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தை ஒருங்கிணைக்க இந்தப் புதிய கூட்டணி அதன் பெரும்பான்மையைப் பயன்படுத்தியது. அந்த மென்மையான “எதிர்ப்புரட்சி” அதிக வன்முறை இல்லாமல் வெற்றி பெற்றது. இந்த அனுபவம், மாற்றம் குறித்த ஏமாற்றத்திற்கு தயாராக இருக்கக் கோருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *