அரசியல்உலகம்

பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்

ஜனநாயகம் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம். தேர்தல் அதன் அளவுகோலாயுள்ளது. தேர்தல்களின் மூலம் தெரியப்படும் தலைவர்களை நாம் ஜனநாயகத்தின் பகுதியாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால் தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகளுக்கான பெறுமதி அதிகம். ஆனால் தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தின் அளவுகோலாக முடியுமா என்ற கேள்வி நெடுங்காலமாக வினவப்பட்டு வந்துள்ளது. புகழ்பெற்றவர்கள் தங்கள் புகழை அரசியல் முதலீடாக்கிறார்கள். அது அவர்களுக்கு அரசியலில் வலிய கருவியாயுள்ளது. இதேவேளை பல மூன்றாமுலக நாடுகளில் ஜனநாயகத்தின் தீர்மானகரமான சக்தியாக இராணுவம் விளங்குகிறது. அவர்களுக்கு ஜனநாயகம் என்ற போர்வை வசதியாக உள்ளது. அது அனைத்தையும் மூடிமறைப்பதற்கு உதவுகிறது.

கடந்த வாரம் இடம்பெற்ற பாகிஸ்தானின் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான இம்ரான் கான் பிரதமராகத் தெரிவாகவுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரரின் அரசியல் பயணமும் அதில் அவர் கண்டுள்ள உச்ச வெற்றியும் எங்கும் போற்றப்படுகிறது. பாரம்பரிய அரசியற் கட்சிசாராத புதியவரின் வெற்றி தென்னாசியாவின் திருப்பு முனையாகப் பார்க்கப்படுகிறது. ஊழலிலும் செயலின்மையிலும் ஊறிப்போன தென்னாசிய நாடுகளின் அரசியற் பண்பாட்டின் புதிய போக்காக இம்ரான் கானின் வெற்றி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவ்விடயம் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியது.

பாகிஸ்தானுக்கு 1992ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ணத்தைப் பெற்றுத் தந்தவர் என்ற பெருமை இம்ரான் கானைச் சேரும். புல நல்ல கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை இளமையிலேயே கண்டு அவர்களுக்கு வாய்ப்பளித்து பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உலகப்புகழ்பெற்ற பல வீரர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற புகழுக்கும் அவர் உரியவர். தனது அன்னையின் நினைவாக அவர் கட்டிய புற்றுநோய் வைத்தியசாலை சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒருவராக அவரை பாகிஸ்தான் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

1996ம் ஆண்டு அவர் நீதிக்கான பாகிஸ்தான் இயக்கம் (தெஹ்ரிக் இ இன்சாப்) என்ற கட்சியைத் தொடங்கினார். வலதுசாரி, இடதுசாரி எனச் சாராத நடுநிலையான  மத்திய தன்மையுள்ள ஜனநாயகத்திற்கும் நீதிக்கும் போராடும் கட்சி எனத் தனது கட்சியை இம்ரான் கான் அறிவித்தார். பாகிஸ்தான் அரசியலில் 22 வருடகாலமான ஒரு முக்கியமான நபராக அவர் விளங்கியிருக்கிறார். பாகிஸ்தானின் இரண்டு பாரம்பரியக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் செல்வாக்குச் செலுத்திய அரசியற்களத்தில் இம்ரான் கானின் வெற்றியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் வெற்றியைக் மதிக்க இயலாமைக்கு வலுவான காரணங்கள் உண்டு.

சிலகாலம் முன்பு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ‘பனாமா லீக்ஸ்’ மூலம் வெளியான சொத்துப்பதுக்கலில் ஈடுபட்டதை நீதிமன்றம் உறுதிசெய்ததன் மூலம் 2017 இல் அவரைப் பதவியில் இருந்து நீக்கியது. இவ்வாண்டு அவர் தனது வாழ்நாளில் தேர்தல்களில் போட்டியிடமுடியாதபடி நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் அவரது பாகிஸ்தான் மூஸ்லீம் லீக் கட்சி மிகுந்த பின்னடைவை தேர்தலில் எதிர்நோக்கியது. அதேவேளை பெனாசீர் பூட்டோவின் மரணத்தைத் தொடர்ந்து வலுவிழந்த கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி தட்டுத் தடுமாறிய நிலையிலேயே தேர்தலைச் சந்தித்தது. இவை இம்ரான் கானின் கட்சிக்கு மிகவும் வாய்ப்பாகின.

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம், தேர்தல்கள் முழுமையான சுதந்திரமானவையல்ல என்ற சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கை. தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் நடந்துள்ளன என்று இரண்டு பெரிய கட்சிகளினதும் குற்றச்சாட்டுகள் என்பன இம்ரான் கானின் வெற்றியை கேள்விக் குறியாக்கியுள்ளன. ஆட்சியில் இருந்த நாவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியே தேர்தலில் குழறுபடிகள் நடந்துள்ளன என்று சொன்னால் இக்குழறுபடிகளை நிகழ்த்தியது யார் என்பதே இங்கு கேள்வி.

இதற்கிடையில் இம்ரான் கானின் கட்சிக்கு தனித்து ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே பிற சிறிய கட்சிகளின் தயவுடனேயே அவர் தனது 5 ஆண்டு கால ஆட்சியை நடாத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார். தேர்தல் குளறுபடிகளை இம்ரான் கானின் கட்சிதான் செய்தது என்றால் ஏன் அவர்களால் அறுதிப் பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாமல் போனது என்ற வினாவும் எழுகிறது.

உண்மையில் இக்குளறுபடிகளைச் செய்த அந்த சக்தி இம்ரான் கானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறாத வண்ணமும் பார்த்துக் கொண்டது என்பது தான் உண்மை. இந்தத் தேர்தலின் தீர்மானகரமான சக்தியாக பாகிஸ்தான் இராணுவம் விளங்குகிறது. சுதந்திரத்துக்கு பிந்தைய பாகிஸ்தான் ஜனநாயகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவே பாகிஸ்தான் அரசியலின் அச்சாணியாக இருக்கிறது. இவ்வுண்மை இத்தேர்தலில் மீண்டுமொருமுறை நிறுவப்பட்டுள்ளது.

1947ம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரமடைந்ததில் இருந்து இராணுவம் தொகையிலும் செல்வாக்கிலும் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் காஷ்மீர் தொடர்பில் இந்தியாவுடனும் துராந்த் எல்லைக்கோடு தொடர்பில்  ஆப்கானிஸ்தானுடனும் இருந்த முறுகல் நிலை, இந்தியாவில் இருந்து பிரிந்து உருவாகிய புதிய தேசத்தின் இனங்களுக்கிடையிலான பதற்றம் என்பன பாகிஸ்தானில் நிச்சயமின்மையை உருவாக்கின. இதேவேளை அரசியல் முறையில் ஏற்பட்ட குறைவிருத்தி பாகிஸ்தானை ஜனநாயக விழுமியங்களை முழுமையாக உள்வாங்கிய நாடாக பரிணமிக்க வாய்ப்பு வழங்கவில்லை.

1950களில் வீச்சுப்பெற்ற கெடுபிடிப்போரில் அமெரிக்காவின் பக்கத்தை பாகிஸ்தான் நாடியமையானது இராணுவத்தின் கரங்களைப் பலப்படுத்தியது. தென்னாசியாவில் கம்யூனிசம் பரவுவதைத் தடுக்கும் பணியில் அமெரிக்காவின் அடியாளாக பாகிஸ்தான் விளங்கியது. 1954இல் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இராணுவ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. அதைத் தொடர்ந்து சியாட்டோ (Southeast Asia Treaty Organization –  SEATO) மற்றும் சென்டோ (Central Treaty Organization – CENTO) ஆகியவற்றில் இணைந்ததோடு சோவியத் யூனியனுக்கு எதிரான இராணுவக் கூட்டில் பங்கெடுத்தது. இந்தியாவுக்கு எதிரான தனது இராணுவப் பாதுகாப்புக்கு அமெரிக்காவுடனான கூட்டு பயனளிக்கும் என பாகிஸ்தான் எதிர்பார்த்தது. இக்காலப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் செல்வாக்கு மிக்கதாயும் அரசியல் வாழ்வின் தவிர்க்கவியலாதாயும் மாறத் தொடங்கியது. பாகிஸ்தான் எதிர்பார்த்ததற்கு மாறாக 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் இந்தியாவுடனான போரில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து இருநாட்டு உறவுகளில் விரிசல் விழுந்தபோதும் ஆப்கானில் உள்ள சோவியத் படைகளை வெளியேற்ற தலிபான்களுக்கு உதவ அமெரிக்கா பாகிஸ்தானை நாடியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஏராளமான பணமும் இராணுவ உதவிகளும் பாகிஸ்தானுக்கு வழங்கியது. சோவியத் யூனியனுக்கு எதிரான ‘புனிதப் போருக்கான’ ஆள் மற்றும் ஆயத உதவிக் களமாக பாகிஸ்தான் மாறியது.

கெடுபிடிப்போர் காலத்தில் பல அமெரிக்க இராணுவ, புலனாய்வுத் தளங்கள் பாகிஸ்தானில் இருந்தன. 1960ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் அமெரிக்கத் தளத்தில் இருந்து புறப்பட்ட U-2 வேவுபார்க்கும் விமானம் சோவியத் யூனியால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சோவியத் யூனியன் மீது உளவுபார்ப்பதற்கு அமெரிக்கா பாகிஸ்தானைப் பயன்படுத்துவது அம்பலப்பட்டது. இன்றுவரை பல இராணுவத் தளங்களையும் விமானத் தளங்களையும் அமெரிக்கா பாகிஸ்தானில் பயன்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல்களை அடுத்து ஆப்கானிஸ்தான் மீதான போருக்கான பிரதான இராணுவத் தளமாக பாகிஸ்தான் பயன்படுத்தப்பட்டது. இன்றும் அவற்றில் பல அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறன.

பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாகவும் வினைத்திறன் அற்றவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். இதனால் இராணுவம் நம்பிக்கை வாய்ந்தாக இருக்கிறது. அதேவேளை பாகிஸ்தான் என்ற நாட்டின் மீது பற்றும் அக்கறையும் உடையவர்களாக மக்கள் இராணுவத்தைப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக 1947 முதல் 1958 வரையான சுதந்திரத்தின் பின்னரான முதல் 12 ஆண்டுகளில் நிலையான ஆட்சியை அரசியல்வாதிகளால் வழங்க முடியவில்லை. குறிப்பாக முகம்மது அலி ஜின்னா 1948ம் ஆண்டு மரணமடைந்ததன் பின்னர் தொடர்ச்சியான ஆட்சி மாற்றங்கள் நிலையற்ற அரசாங்கத்துக்கு வழிசெய்தன.

இவற்றின் விளைவாக இராணுவத் தளபதியாக இருந்த அயூப் கான் இராணுவச்சதியின் மூலம் 1958ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினார். 1971ம் ஆண்டு வங்கதேசப் பிரிவினையின் பின்னரே பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் இதைத் தொடர்ந்த ஆட்சி வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1977ம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஷியா-உல்-ஹக் இரத்தஞ் சிந்தா இராணுவச் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 1988இல் விமான விபத்தில் அவர் கொல்லப்படும் வரை இராணுவ ஆட்சி நீடித்தது. 1999ம் ஆண்டு இராணுவத் தளபதி பேர்வேஸ் முசாரப் இராணுவச்சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 2008ம் ஆண்டு அவர் விலகும்வரை பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியே இருந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னரான 70 வருட காலப்பகுதியில் இராணுவ ஆட்சி அரைவாசிக்காலம் நிகழ்ந்துள்ளது. இது பாகிஸ்தானின் அரச கட்டமைப்பில் இராணுவத்தின் செல்வாக்கை தவிர்க்கவியலாததாக்கியுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் இராணுவ ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியில் ஆட்சியில் இருந்தவர்கள் பெரிதாக எதையும் சாதித்துவிடாத போதும் அரசியல்வாதிகளின் இயலாமையும் ஊழலும் இராணுவத்திற்கான மதிப்பை பாகிஸ்தான் சமூகத்தில் தக்கவைத்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தானில் இயற்கை அனர்த்தங்கள் நிகழும் போது இராணுவத்தின் வினைத்திறன் மிக்க செயலாற்றுகை இராணுவத்தின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. அதேபோல ஒழுங்கான, நம்பிக்கையான, நாட்டுப்பற்றுக்கொண்டவர்களாக இராணுத்தினர் மீதான படிமம் அவர்களுக்கு உதவுகிறது.

இதிலே கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இராணுவத்தை அரசியல்மயப்படுத்தி அரசியல் அலுவல்களுக்கு பயன்படுத்தியதன் மூலம் அவர்கள் சிவில் அலுவல்களுக்குள் உட்படுத்திய தவறை அரசியல்வாதிகள் தான் செய்தார்கள். இனத்துவ மத கிளர்ச்சிகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலக அதை இராணுவத்தை பயன்படுத்தி அடக்கியதன் ஊடு அரசியல்வாழ்வில் இராணுவத்தைப் பங்காளியாக்கினர். குறிப்பாக 1971ம் ஆண்டு பெங்கால் கிளர்ச்சியின் போதும் 1973முதல் 1978 வரை நீடித்த பலூக்கிஸ்தான் கிளர்;சியின் போதும் இராணுவம் பயன்படுத்தப்பட்டது. பலூக்கிஸ்தான் கிளர்ச்சியை அடக்க எந்த இராணுவத்தை சுல்பிகார் அலி பூட்டோ பயன்படுத்தினாரோ அதே இராணுவமே அவரைப் பதவியில் இருந்து அகற்றித் தூக்கிலிட்டது.

பாகிஸ்தானின் மூன்று இராணுவச்சதிகளின் போதும் அமெரிக்காவின் கரங்கள் உள்ளன. குறிப்பாக சுல்பிகார் அலி பூட்டோவின் சோசலிச நடைமுறைகள் தென்னாசியாவில் சோசலிசம் துளிர்விடுவதற்கான வாய்ப்பை வழங்கிவிடும் என அமெரிக்கா அஞ்சியது. அவரது ஆட்சிக்கெதிராகத் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களும் இராணுவச் சதியும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.ஐ.ஏ) மேற்பார்வையில் இடம்பெற்றன என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இராணுவத்தளபதி ஷியா-உல்-ஹக் நடைமுறைப்படுத்திய இஸ்லாமியமயமாக்கல் கொள்கையானது பாகிஸ்தானில் மதவாத சக்திகளின் கைகளை வலுவூட்டியதோடு இஸ்லாமிய தீவிர தேசியவாதம் வளர்வதற்கும் வழியமைத்ததுடன் இராணுவத்துடன் அது நெருங்கிய தொடர்பைப் பேணவும் வழிகோலியது. 1988ம் ஆண்டு இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகம் நோக்கிய நகர்வு நிகழ்ந்த காலப்பகுதியில் ஆட்சிபீடம் ஏறி பெனாசீர் பூட்டோ இராணுவத்துடன் உடன்பட்டுச் செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் மறுத்த ஒவ்வொரு தடவையும் அவர் பல்வேறு சதிகளின் விளைவால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இக்காலத்தில் நவாஸ் ஷெரீப் பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு எதிரான இ

இதேவேளை முன்னாள் இராணுவ சர்வாதிகாரி ஷியா-உல்-ஹக்கின் ஆதரவாளரான நவாஸ் ஷெரீப் பெனாசீரின் ஆட்சியை இராணுவத்தின் உதவியுடன் கவிழ்ப்பதில் தொடர்ந்து பங்களித்திருக்கிறார்;. அவர் இராணுவ உளவுத்துறை எந்திரத்தின் அரசியல் சூழ்ச்சிகளின் உதவியுடன் 1990களில் இரண்டு முறை அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் இறுதியில் அவரையே இராணுவத்தளபதி முசாரப் இராணுவச்சதி மூலம் பதவியில் இருந்து அகற்றினார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

முசாரப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுவான ஆதரங்களுடன் நீருபிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெனாசீர் பூட்டோவின் கொலைக்குக் காரணமானவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையிலும் முசாரப் நாட்டை விட்டு வெளியேற 2016ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் அனுமதித்தார். இது பாகிஸ்தான் இராணுவத்தின் செல்வாக்குக்கு இன்னொரு சான்று.

இருந்தபோதும் நவாஸ் ஷெரீப்புக்கும் இராணுவத்திற்கும் உறவு சுமூகமாக இருக்கவில்லை. இதனாலேயே கடந்தாண்டு நீதிமன்றின் உதவியுடன் அவர் பதவி நீக்கப்பட்டார். இப்பின்னணியிலேயே இம்ரான் கானின் அரசியலை நோக்க வேண்டியுள்ளது. ஊழலுக்கு எதிரான போராளி, நீதிக்கான போராளி என தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய இம்ரான் கான் காலப்போக்கில் வலதுசாரித் தன்மையுடைய கட்சியாக தனது கட்சியை மாற்றினார். ஷரியாச் சட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்தல், இஸ்லாமிய நல்லாட்சியை நிறுவுதல் என இஸ்லாமியக் கடுங்கோட்பாட்டுவாத கருத்துக்களை முன்வைப்பதன் ஊடு தன்னை ஒரு நல்ல இஸ்லாமியனாகக் காட்டிக் கொண்டார்.

நவாஸ் ஷெரீப்புக்கும் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பதாகையின் கீழ் ஷெரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்திற்கும் அவருக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகளின் விதிமுறைகளுக்கு தனது முழு ஆதரவை இம்ரான் கான் வழங்கினார்.

அவர் பாகிஸ்தானின் ஆழ்ந்த “மதவாத எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் அஹ்மத்திய சிறுபான்மையினருக்கு எதிரான அரசு பாகுபாடு ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் இஸ்லாமிய வலதுசாரியை அவர் ஆதரித்ததுடன் இராணுவத்துடன் இணைந்து செயல்படும் தகுதிபடைத்த ஒரு பொதுமக்கள் தலைவராக தன்னை காட்டிக்கொண்டார்.

New York Timesக்கு மே மாதம் அவர் அளித்த பேட்டியில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஒருவேளை, “ஒரு ஜனநாயக அரசாங்கம்” “தார்மீக அதிகாரத்தை கொண்டிருக்காத பட்சத்தில், சரீர ரீதியிலான அதிகாரத்தை கொண்டவர்கள் தங்களது ஆளுமையை நிலைநாட்டுகின்றனர்.” என்று கூறி, ஷெரீப் அரசாங்கம் மீதான இராணுவத்தின் பயமுறுத்தல்களை நியாயப்படுத்தினார். தன்னுடன் இராணுவத்தை எடுத்துச் செல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார். எனவே இராணுவத்தின் ஆசீர்வாதத்துடன் அவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேவேளை அவருக்கான அறுதிப்பெரும்பான்மையை மறுத்ததன் ஊடு அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இராணுவம் இலகுவாக வழிசெய்துள்ளது.

இன்னொரு வகையில் பார்ப்பதானால் பாகிஸ்தான் இறுதியில் தங்களுக்கான ‘நரேந்திர மோடியைத்’ தெரிந்திருக்கிறார்கள். பொய்களால் கட்டமைக்கப்பட்ட படிமங்களினதும் மக்கள் செல்வாக்கினதும் கலவையாக இம்ரான் கான் திகழ்கிறார்;. குறிப்பாக 9ஃ11க்குப் பின்னர் அரசியலை அவதானிக்கத் தொடங்கிய பாகிஸ்தான் இளந்தலைமுறையின் புதிய தலைவருக்கான தேடல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

இம்ரான் கானின் பிம்பம் இரண்டு முக்கியமான தலைவர்களின் வழியில் உருவாக்கப்பட்டது. ஒன்று முசாராப்பின் துடுக்குத்தனம் இவரிடமும் இருப்பதாகக் காட்டப்படும் பிம்பம். அவரது வாக்காளர்கள் அவரை இன்னொரு அயதுல்லா கொமோனியாகப் பார்க்கிறார்கள். ஊழல் செய்பவர்களை பொதுவிடத்தில் தூக்கிலிடக்கூடிய தன்மை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உண்டு. அவரின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியில் உள்ள இளையோர் ஒழுக்கமில்லாத வன்முறைத்தன்மையுள்ள குழுவினரான வலம் வருகிறார்கள். எனவே இம்ரான் கான் அதிதீவிரத் தேசியவாத தீவிரப் பழமைவாத தலைமைத்துவத்தின் நவீன வடிவமாக தன்னை வெளிப்படுத்துகிறார்.

இந்தியாவில் நரேந்திர மோடி, இஸ்ரேலில் பென்சமின் நெத்தன்யாகூ, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் வரிசையில் கிளறிவிடப்பட்டுள்ள தேசியவாத ஆன்மாவின் அடுத்த பிரதிநிதியாக இம்ரான் கான் உருவாகிறார். அதை  பாகிஸ்தான் இராணுவம் தேர்தல்களின் ஊடாக ஜனநாயக ரீதியாக நிறுவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *