அரசியல்உள்ளூர்என் கண்களில்...

பாராளுமன்றத் தேர்தல்-4: சாதியமும் பிரதிநிதித்துவ தெரிவும்

இலங்கையில் தேர்தலுக்கும் சாதிக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்புண்டு. இது பொதுவெளியில் பேசப்படாத விடயமாக இருந்தபோதும் இலங்கையின் சமூகங்களில் பிரதிநிதித்துவத் தெரிவில் சாதியத்தின் பங்கு பெரிது. வேட்பாளர் தெரிவில் அரசியல் கட்சிகளும் வாக்காளர் தெரிவில் மக்களும் இதில் தமது பங்கை வகிக்கிறார்கள். இலங்கைச் சமூகம் குறித்த பகுப்பாய்வில் ஈடுபட்ட ஆய்வாளரும் சாதி என்ற வகையை தவறவிட்டதில்லை. இலங்கை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டோர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் சாதி ஒரு “மிக முக்கியமான” விடயமாகக் கருதப்படுகிறது. இன்றுவரை, இலங்கை அரசியல் மற்றும் சமூகம் குறித் ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்களால் கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கின் சக்திவாய்ந்த வகுப்பாக சாதி கருதப்படுகிறது. சாதி பற்றிய அறிவார்ந்த வர்ணனையை அவர்கள் சுருக்கிச் சொல்வதற்கு இரண்டு மொழியாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒன்று, ‘சாதி சமூக அடுக்கு’ மற்றையது, ‘சாதி ஒரு சித்தாந்தம்’. முந்தையது சாதியை ஒரு புறநிலை வகையாக அங்கீகரிக்கிறது, பிந்தையது சாதியை அகநிலை வகையாகக் கருதுகிறது. இருப்பினும், பெரும்பாலான அறிஞர்கள் புறநிலை மற்றும் அகநிலை ஆகிய இரண்டிலும் சாதி இருப்பதை அங்கீகரிக்கின்றனர்.

தேர்தல் அரசியலில் சாதியின் வகிபாகம் குறித்த ஆய்வுகள் மிகச் சிலவே. அதுவும் சிங்கள சமூகத்தை மையப்படுத்திய ஆய்வுகளே. இலங்கையின் ஏனைய சமூகங்களில் நிலவும் தேர்தல் அரசியலுக்கும் சாதிக்குமிடையிலான உறவு விரிவான ஆய்வுக்குட்பட்டதல்ல. சிங்கள வாக்காளர்களில், சாதி என்பது மிக முக்கியமான பிளவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வர்க்கம், இனம், மதம் அல்லது கல்வி போன்ற சமூக அடுக்குகளைப் போலன்றி, சிங்கள சமூகத்தில் சாதி என்பது தடைசெய்யப்பட்ட ஒரு விடயப் பரப்பாகும். ஜொனதன் ஸ்பென்சர் சிங்கள சமூகத்தில் சாதியத்தின் விசித்திரமான நிகழ்வை பின்வருமாறு விளக்க முயன்றார்: “சாதி என்பது குடி அல்லது பகை போன்றது, எப்பொழுதும் உள்ளது ஆனால் கிட்டத்தட்ட ஒருபோதும் காணப்படவில்லை. இது அன்றாட வாழ்க்கையின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ளது”.

கடந்த காலத்தில் நிலப்பிரபுத்துவ முறையின் கீழ் சிங்கள சமூகத்தை ஒரு படிநிலை ஒழுங்கில் ஒழுங்கமைக்க சாதி பயன்படுத்தப்பட்டது, மேலும் அது சமூக குழுக்களிடையே “பெருமை” அல்லது “பகைமை”க்கான சாத்தியமான ஆதாரமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அது பெரும்பாலும் “பெருமை” அல்லது “பகைமை”க்கான ஆதாரமாக மாறும். எனவே, அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலனுக்காக அரசியல் ரீதியில் கட்டமைக்கப்படும் வரைதான் சாதி அரசியல் ரீதியாக பலனளிக்கும். அரசியல்வாதிகள் சில சமயங்களில் தனிப்பட்ட நலன்களைப் பயன்படுத்தி வெவ்வேறு சாதிக் குழுக்களுக்குள் எப்படி ஊடுருவிச் செல்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது. எனினும் சிங்கள அரசியலில் சாதியை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இருந்தபோதிலும், கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, சாதியைத் தவிர வேறு எதையும் குறிக்காத சொற்களஞ்சியம் மூலம், சிங்கள அரசியல் உரையாடலில் சாதி பரவலாகத் தெரிகிறது. அரசியல்வாதிகளால் பொதுப் பேச்சுக்களில் சாதி ஒரு கலாசார காரணியாக பிரபலமாக குறிப்பிடப்படுகிறது.

தேர்தல் காலங்களில் சிங்கள சமூகத்தில் சாதி எவ்வாறு செலுத்துகிறது என்பதை பிரதீப் பீரிஸ் பின்வரும் உதாரணத்தின் மூலம் எடுத்துக்காட்டுகிறார்: 2010 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இரண்டு கண்டி ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டம் முழுவதிலும் உள்ள கொவிகம வாக்காளர்களிடம், அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரைக் குறிப்பிட்டு, பட்டாவுக்கு (பத்கம சாதியைச் சேர்ந்த நபர்களை இழிவுபடுத்தும் குறிப்பு) வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். இதேவேளை, குறிப்பிட்ட பத்கம சாதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தான் ஒரு பட்டா என்றும், எனவே மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த பத்கம சமூகமும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார். சாதி விரோதம் என்பது சாதிகளுக்கிடையேயான மோதலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் மக்கள் ஒரு சாதிக்குள் மேலும் படிநிலை வேறுபாடுகளை அடையாளம் காட்டுகின்றனர்.  எடுத்துக்காட்டாக, கொவிகம சாதி மேலும் ராடலா, கோவி மற்றும் பட்டி என பிரிக்கப்பட்டுள்ளது. துராவே சமூகம் மேலும் ஹீன் துராவே மற்றும் மஹா துராவே என பிரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஏற்கனவே வலியுறுத்தப்பட்டபடி, சாதியானது அரசியல் ரீதியாக கட்டமைக்கப்படும் போதுதான் சிங்கள வாக்காளர்கள் மத்தியில் ஒரு பயனுள்ள அரசியல் பிளவாக மாறுகிறது.

1956ல் தொடங்கிய இருகட்சிப் போட்டியின் பின்னணியில் அடிமட்டத் தலைமையின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தும் போது கட்சிகள் ஆதிக்கம் செலுத்த முயன்ற முக்கிய வகைகளில் சாதியும் ஒன்றாகும். இரண்டு பெரும் கட்சிகளும் ஒவ்வொரு ஊரிலும் செல்வாக்குள் சாதியினரை தமது உறுப்பினராக்கி தேர்தல் அரசியலில் இலாபம் தேட முயன்றனர். பல சாதிகளைக் கொண்ட கிராமங்களில் இக்கட்சிகள் அந்தந்த சாதிக் குழுக்களின் அடிமட்டத் தலைவர்களை உள்ளடக்கியது அல்லது வெவ்வேறு சாதிக் குழுக்களில் இருந்தும் தலைவர்களைக் கண்டறிந்து அந்த சமூகங்களைத் தங்கள் கட்சி அமைப்பு வலையமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஒவ்வொரு முக்கிய சாதிக் குழுவிலிருந்தும் அடிமட்டத் தலைவர்களைச் சேர்ப்பது, அந்தச் சாதிச் சமூகங்களின் நலன்களைப் பிரதிபலிப்பதற்காகக் கட்சி அமைப்பால் நோக்கப்படவில்லை, மாறாக அவர்களும் மற்ற சாதிக் குழுக்களுடன் (படிநிலையில் உயர்ந்தவர்கள்) ஒரு வாக்காளர்களுக்குச் சமமானவர்கள் என்ற உறுதியை வழங்குவதற்கான ஒரு செயற்பாடாக நோக்கப்பட்டது. இதனால் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதிக் குழுவின் அடிமட்டத் தலைவர்கள் தங்கள் சொந்த சாதி சமூகத்திற்கும் வாக்காளர் அமைப்பாளருக்கும் இடையில் இடைத்தரகராக மாறுகிறார்கள், அங்கு வாக்காளர்கள் ஆதரவிற்காக தங்கள் வாக்குகளை ஒப்படைக்கிறார்கள்.

வரலாற்று ரீதியாக இருண்டு பெரிய கட்சிகளினதும் நோக்கம் அதிக வாக்குகளைப் பெறுவதே. ஒட்டுமொத்த வாக்காளர்களைப் பின்தொடர்வதற்குப் பதிலாக குறிப்பிட்ட சமூகக் குழுக்களின் நலன்களை மேலும் மேம்படுத்துவதனூடு தமக்கான ஆதரவுத் தளத்தை அவர்கள் பெருக்கிக் கொள்கிறார்கள். எனவே, கட்சி அமைப்பின் வலையமைப்பு முக்கியமாக சமூகத்தின் பல்வேறு நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிப்பவர்களைக் காட்டிலும், அதிக வாக்குகளைப் பெறுவதற்கான மிக உயர்ந்த திறனை வெளிப்படுத்தும் நபர்களால் நிறுவப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட குழுவின் குறிப்பிட்ட நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், கட்சி அமைப்பாளர், அவர் வாக்கு சேகரிக்கும் திறன் இல்லாதவரை அந்த நபர் மீது அக்கறை காட்டமாட்டார்.

இதை இருகட்சி அரசியலின் வழி விளக்கலாம். ஐ.தே.கவின் ஆரம்ப நாட்களில், கட்சி அமைப்பு முக்கியமாக பணக்கார நிலப்பிரபுத்துவ வாக்காளர்களில் மீது ஏன் தங்கியிருந்தது என்பதை இது விளக்குகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏழைகள் மற்றும் சமூக ரீதியில் ஒதுக்கப்பட்டவர்களின் கட்சி என்ற பிரபலமான சொல்லாட்சிகள் இருந்தபோதிலும், அதே மரபை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பின்பற்றியது. ஸ்ரீ.ல.சு.க வறியவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்ற போதிலும், கட்சியின் ஆரம்ப நாட்களில் கூட, அடிமட்டத் தலைமையானது இடைநிலை வகுப்பினரிடமிருந்து பெறப்பட்டது. ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களிடமிருந்து அல்ல. ஜனநாயகத்தின் விரிவாக்கத்திற்கு சமாந்தரமாக, ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியும் தமது பாரம்பரிய தலைமைத்துவ தளங்களுக்கு அப்பால் அடிமட்ட தலைமைத்துவத்தை அடைந்ததன் மூலம் எல்லைகளை விரிவுபடுத்தின. கட்சி எல்லைகளின் இந்த விரிவாக்கங்கள் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க.வின் போட்டியின் விளைவானவை.

ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க இடையேயான இரு கட்சிப் போட்டியின் ஆரம்ப கட்டங்களில், தமது எல்லையை விரிவுபடுத்துவதே பிரதான உத்தியாக இருந்தது. இந்தச் சூழலில், இரு கட்சிகளும் தங்கள் பாரம்பரியக் குழுவிற்கு அப்பால் புதிய அடிமட்டத் தலைவர்களைத் தேட வேண்டியிருந்தது, அவர்கள் அதிக வாக்குகளைப் பெறுவதில் ஒப்பீட்டு நன்மைகளை வழங்க முடியும். எனவே, பொருளாதார மூலதனத்தை வைத்திருக்கும் உயரடுக்கினரைக் கவனத்தில் கொள்வதற்குப் பதிலாக, இரு கட்சிகளும் பாரம்பரிய எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்காக பல்வேறு சமூகக் குழுக்களிடையே உயர்ந்த அந்தஸ்தை அனுபவிக்கும் நபர்களைத் தேடத் தொடங்கின. இச்சூழலில், கட்சிகளும் அவற்றின் அமைப்பாளர்களும் உள்@ர் அரசியல் நடிகர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள், வாக்காளர்களுக்குள் உள்ள பல சமூகப் பிளவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்பட்டனர். இந்த பிளவுகளில் மதம், இனம், சமூக வர்க்கம் மற்றும் மிக முக்கியமாக சாதி ஆகியவை அடங்கும்.

சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களின் சாதிய அடையாளங்கள் எமக்கு சுவாரசியமான ஒன்றை கூறுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது நவீன நற்பண்புகள் – செயல்திறன், தகுதி, தொழில்முறை மற்றும் பலவற்றில் – மீது கவனம் செலுத்தப்பட்ட போதிலும், முந்தைய பாராளுமன்றங்களுடன் ஒப்பிடும்போது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாதி அமைப்பு மாறவில்லை. சமூக விஞ்ஞானிகள் சங்கம் நடத்திய ஆய்வில், சுதந்திரத்திற்கு முந்தைய சட்டமன்றங்களின் சாதி அமைப்பிலும் தற்போதைய பாராளுமன்றத்திலும் அடையாளம் காணக்கூடிய வேறுபாடு இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

சிங்கள சாதி அமைப்பு ஒரு தலைகீழான முக்கோணமாக சிறப்பாக விவரிக்கப்படுகிறது, அங்கு “படிநிலையில் அதிகமானால், அதிக எண்கள்” மற்றும் “படிநிலையில் குறைவாக, எண்கள் குறைவாக இருக்கும்”. எனவே, ஜனநாயகத்தின் அறிமுகமானது இலங்கையில் கீழ் சாதி குழுக்களின் விடுதலை அபிலாஷைகளுக்கு நேரடியாக பங்களிக்கவில்லை. பாராளுமன்ற ஆசனங்கள் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டு, எளிய பெரும்பான்மை முறையிலிருந்து விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத அடிப்படையில், எண்ணிக்கையில் சிறிய குழுக்களுக்குச் சாதகமாக இருக்கும் விருப்பு வாக்கு முறைக்கு தேர்தல் முறை மாறிய போதிலும் படிநிலையில் கீழே உள்ள சாதியினரின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை.

“உயர்ந்ததாக” கருதப்படும் கொவிகம சாதி இன்றும் எண்ணிக்கை அடிப்படையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அது பாராளுமன்றத்தில் அதிக பிரதிநிதித்துவத்தை தொடர்ந்து பெறுகிறது. “2020 தேர்தல் முடிவுகள், இலங்கைத் தேர்தல் அரசியலில் சாதியின் தொடர்ச்சியான முக்கியத்துவத்திற்கும், பழமைவாத, தாராளவாத, தேசியவாத அல்லது தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களின் கீழ் உயிர்வாழும் அதன் திறனைக் காட்டுகிறது” என்று சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் ஆய்வு கூறுகிறது.

இலங்கையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தனியொரு சாதியினரிடம் பிரத்தியேகமாக முறையிடுவதில்லை. மாறாக உள்ர் மட்டத்தில் உள்ள சாதி இயக்கவியலுக்கு ஏற்ப அதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு தலைமையை உருவாக்குகிறது. அவர்கள் தங்கள் வாக்காளர்களைத் திரட்டி, சிறு கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்து தங்கள் வாக்குகளைப் பெருக்குகிறார்கள். இந்தக் கட்சிகள் தங்கள் சாத்தியமான வாக்காளர்களின் எண்ணற்ற அடையாளங்களையும் பொருள் தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த முன்வருகின்றன. தேசிய அளவில், இந்த முக்கிய கட்சிகள் ஆதரவளிப்பதாக உறுதியளிக்கின்றன, அதே நேரத்தில் அவர்களின் உள்ளூர் அணிதிரட்டுபவர்கள் அத்தகைய ஆதரவின் பலன்களை சாதியைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களுக்கு அனுப்பும் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.

மிகவும் போட்டி நிறைந்த தேர்தலில் சாதி அடையாளம் மட்டுமே தேர்தல் வெற்றியை உறுதி செய்யாது என்றாலும், சாதி இயக்கவியலை உணராமல் எந்த வேட்பாளரும் வெற்றியைப் பெற முடியாது. சாதியின் தொடர்ச்சியான சாயல், அரசியல் கட்சிகள் தேசிய அளவில் சாதி-நடுநிலையாகத் தோன்றும் அதே வேளையில், தங்கள் உள்ளூர் அரசியல்வாதிகளை சாதி அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைக் கவனிக்க வைக்கும் நிலையை அடையத் தொடங்கியுள்ளது.

1931இல் சர்வச வாக்குரிமையோடு தொடங்கி இன்றும் நடைமுறையில் இருக்கும் ஆதரவு மற்றும் வலையமைப்பு அரசியல், தேசிய அரசியல்வாதிகளை சாதி குழுக்களுடன் இணைக்கிறது. சாதியின் இந்த வகையான அரசியல்மயமாக்கல், சம்பந்தப்பட்ட சாதிக் குழுவின் நலன்களை தனித்தனியாக பிரதிநிதித்துவப்படுத்துவதில் பயனடையவில்லை. ஆனால் பொருட்கள் மற்றும் சேவைகளை சம்பந்தப்பட்ட குழுவின் அணுகலைப் பாதுகாப்பதில் பேரம் பேசும் கருவியாக செயல்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் சாதிய அடிப்படையிலான வேறுபாடு ஆரம்பத்தில் சாதி அமைப்புக்கு அடித்தளமிட்ட பொருளாதாரக் கட்டமைப்புகள் இல்லாத போதிலும் சிங்களவர்களிடையே சாதி அடிப்படையிலான வேறுபாட்டை நிலைநிறுத்துவதை ஊக்குவிப்பதில் ஜனநாயகத்தின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளும் கட்சிப் போட்டிகளும் நாட்டில் சாதியப் பேச்சுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன. இதன் விளைவாக, ஜனநாயகத்தின் சமத்துவ வாக்குறுதி இருந்தபோதிலும் சாதி அடிப்படையிலான வேறுபாடு நிலைத்திருக்கிறது. சாதியானது அரசியலைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாற்றிக்கொண்டது. ஆகவே, ஜனநாயகத்தின் “ஒரு நபர், ஒரு வாக்கு” என்ற கருத்தாக்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் சமன்படுத்தும் விளைவு, சமூகத்தில் உள்ள ஒவ்வொரு “குழுவும்” எவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதைப் பொறுத்து மாற்றியமைக்கப்படுகிறது. இது சாதி அடிப்படையிலான வேறுபாடு தீவிரமடைவதற்கு வழிவகுத்தது. இலங்கை அனுபவம் சொல்கிற செய்தி யாதெனில்,  அரசியல் கட்டமைப்பானது சாதி அடையாளத்தை எவ்வாறு கவனிக்கிறது என்பது மட்டுமல்ல, தனிப்பட்ட சாதிக் குழுக்களே அத்தகைய அடையாளம் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று கோருகின்றன. எனவே, சாதியின் அறிவாற்றல் பிடிப்பு மற்றும் பிரிக்கப்பட்ட சமூக-பொருளாதார அமைப்பில் உள்ள அத்தகைய பற்றுறுதியின் பொருள் வெளிப்பாடு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட “பழக்கம்” இலங்கையின் அரசியல் வெளியைத் தீர்மானிக்கிறது.

இம்முறை தேர்தல் மிகவும் சுவாரசியமானது. மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து புதிய ஜனாதிபதியைத் தேர்ந்துள்ள நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தமது சாதிய விருப்புகளைத் தவிர்த்து தமது தெரிவுகளை மக்கள் மேற்கொள்ளப் போகிறார்களா? அல்லது மாற்றத்தை ஒருபுறம் வைத்துவிட்டு தங்கள் தனிநலம் நோக்கிய தெரிவுக்கு முக்கியத்துவம் வழங்கப் போகிறார்களா? மறுபுறம் மாற்றத்தைக் கோரும் அரசியல் கட்சிகள் சாதி கடந்த நிலையில் தமது வேட்பாளர் தெரிவுகளை மேற்கொண்டுள்ளனவா? அல்லது அதிகார ஆசையில் அதே பழைய பாணியைப் பின்பற்றுகின்றனவா? இவை முக்கியமாக வினாக்கள். மாற்றம் என்பது எதுவரை என்பதை மக்களே தேர்தலில் அனைவருக்கும் உணர்த்துவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *